first review completed

சு. வேணுகோபால்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
Line 70: Line 70:
* [https://www.jeyamohan.in/23366/ சு. வேணுகோபாலுக்கு பாஷா பரிஷத் விருது - ஜெயமோகன்.இன்]
* [https://www.jeyamohan.in/23366/ சு. வேணுகோபாலுக்கு பாஷா பரிஷத் விருது - ஜெயமோகன்.இன்]
* [https://kanali.in/%e0%ae%86%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%be%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%bf-%e0%ae%95%e0%af%8a%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%9f-%e0%ae%ae%e0%ae%b1%e0%ae%a8%e0%af%8d/?fbclid=IwAR3iCx-6FD53H1CrBiau4Fi9p4geo7d-gx6qTzqmHWLvYyjkRbrSapKE9ns ஆர். சூடாமனி கொண்டாட மறந்த தேவதை - சு. வேணுகோபால்]
* [https://kanali.in/%e0%ae%86%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%be%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%bf-%e0%ae%95%e0%af%8a%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%9f-%e0%ae%ae%e0%ae%b1%e0%ae%a8%e0%af%8d/?fbclid=IwAR3iCx-6FD53H1CrBiau4Fi9p4geo7d-gx6qTzqmHWLvYyjkRbrSapKE9ns ஆர். சூடாமனி கொண்டாட மறந்த தேவதை - சு. வேணுகோபால்]
{{Standardised}}
{{first review completed}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 09:21, 12 May 2022

சு. வேணுகோபால்

சு. வேணுகோபால் (பிறப்பு: மே 20, 1967) நவீனத் தமிழிலக்கிய எழுத்தாளர். சிறுகதை, குறுநாவல், நாவல், விமர்சனக் கட்டுரை எழுதி வருகிறார். வாழ்வின் விசித்திரங்களையும், அதன் மாயங்களையும் புனைவின் மொழியில் யதார்த்த தளத்தில் வைத்து சொல்ல நினைக்கும் படைப்பாளி. விவசாயப் பின்னணியில் வளர்ந்த சு. வேணுகோபாலின் புனைவுலகு நேரடியான மனித வாழ்க்கையால் ஆனது.

பிறப்பு, கல்வி

Venugopal.jpg
Venugopal2.jpg

சு. வேணுகோபால் தேனி மாவட்டம் (முன்னால் மதுரை மாவட்டம்) போடிநாயக்கனூர் அருகே உள்ள போடி. அம்மாபட்டியில் பிறந்தார். இவரது பள்ளி சான்றிதழ் படி மே 20,1967 அன்று பிறந்தார். தந்தை ந. சுருளிவேல், தாய் பொன்னுத்தாயி. சு. வேணுகோபாலின் குடும்பம் அம்மாப்பட்டியில் பத்து தலைமுறைக்கு மேல் விவசாயப் பின்புலம் கொண்டது. சு. வேணுகோபாலுடன் பிறந்தவர்கள் ஏழு பேர், மூவர் சிறு வயதிலேயே தவறிவிட்டனர். ஐவரில் மூத்தவர் அக்கா, மூன்று அண்ணன்கள்.

சு. வேணுகோபால் தன் ஆரம்பப் பள்ளியை அம்மாபட்டி ஊராட்சி ஒன்றிய இளையோர் ஆதாரப் பள்ளியில் பயின்றார். ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை போடிநாயக்கனூர் மெயினில் உள்ள சில்லமரத்துப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்றார். மேல்நிலைக் கல்வியை போடிநாயக்கனூர் திருமலாபுரம் நாட்டார் மேல்நிலைப் பள்ளியில் கற்றார். 1989-ஆம் ஆண்டு தமிழ் இலக்கியத்தில் இளங்கலை பட்டத்தை மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பெற்றார். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முதுகலை (எம்.ஏ, எம். ஃபில்) பட்டம் பெற்றார்.

தனி வாழ்க்கை

Su.ve2.jpg

சு. வேணுகோபால்-பிருந்தா திருமணம் நவம்பர் 30,1998 அன்று நடந்தது. இரண்டு மகன்கள் நித்தின், நிகில் இருவரும் பொறியியல் படிக்கின்றனர். மனைவி பிருந்தா வணிகவியல் துறையில் பேராசிரியாக உள்ளார்.

சு. வேணுகோபால் எம். ஃபில் முடித்ததும் (1992) ஓராண்டு கோடைக்கானலில் உள்ள செயிண்ட் பீட்டர் மேல்நிலைப் பள்ளியில் வேலை செய்தார். பின் ஊருக்குத் திரும்பி ஒன்பது வருடம் அம்மாபட்டியில் விவசாயத்தைக் கவனித்து வந்தார். 2000-ஆம் ஆண்டு மதுரை தியாகராசர் கல்லூரியில் மீண்டும் வேலைக்குச் சேர்ந்தார். சுய நிதிக் கல்லூரியில் வேலை செய்த காரணத்தினால் தன் பணியில் பல்வேறு கல்லூரிக்குக் மாறினார். கோவை சி.பி.எம் கல்லூரியில் இரண்டு வருடம், மதுரை அமெரிக்கன் கல்லூரியில் ஐந்து வருடம், பொள்ளாச்சி ஸ்ரீ சரஸ்வதி தியாகராசர் கல்லூரியில் ஆறு வருடம் எனப் பணியாற்றினார். தற்போது கோவை குமரகுரு பன்முக கலை அறிவியல் கல்லூரியில் நான்கு ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறார். அம்மாபட்டியில் அண்ணன்களுடன் சேர்ந்து விவசாயத்தையும் பார்த்துக் கொள்கிறார்.

இலக்கிய வாழ்க்கை

Venugopal1.jpg
Su.ve1.jpg

சு. வேணுகோபால் உயர்நிலைப் பள்ளி நாட்களில் கண்ணதாசன் பாடல் வரிகளால் ஈர்க்கப்பட்டு அவரைப் போல் பாடல் வரிகள் எழுத முயற்சித்தார். அதிலிருந்து எழுத்தின் மேல் ஆர்வம் தோற்றிக் கொள்ள, பன்னிரெண்டாம் வகுப்பு விடுமுறை நாட்களில் ஒரு தலித் இளைஞனின் வாழ்க்கை தத்தளிப்பைப் பற்றி ஒரு சிறுகதை எழுதினார்.பின் கல்லூரி முதல் ஆண்டில் கல்லூரிக்கு ஜெயகாந்தன் வருகை தந்ததை ஒட்டி அவரின் நாவல்கள், குறுநாவல்களை வாசித்தார். அவரின் எழுத்தின் மேலும், நேரில் சந்தித்த ஜெயகாந்தன் என்னும் ஆளுமையின் மேலும் வந்த ஈர்ப்பு சு. வேணுகோபாலை நவீன இலக்கியம் நோக்கித் திருப்பியது. ஜெயகாந்தனின் வருகைக்கு பின் தொடர்ந்து நவீன இலக்கியம் வாசிக்கத் தொடங்கினார். புதுமைப்பித்தன் தொடங்கி, சுந்தர ராமசாமி வரை அனைவரையும் இளங்கலை கல்லூரி நாட்களிலேயே வாசித்து முடித்தார்.

எம்.ஃபில் இறுதி ஆண்டில் மதுரையில் சுந்தர ராமசாமிக்கு மூன்று நாள் கருத்தரங்கு ஒன்றை ஏற்பாடு செய்தார். அதில் வண்ணதாசன், ஜெயமோகன், நா. ஜெயபாஸ்கரன் ஆகியோர் கலந்துக் கொண்டு சுந்தர ராமசாமியின் படைப்புகள் பற்றி பேசினர்.

தொடர்ந்து தமிழ் இலக்கிய வாசிப்பும், செயல்பாடும் சு. வேணுகோபாலை நாவல் எழுதத் தூண்டியது. 1994-ஆம் ஆண்டு அவரது முதல் நாவலான நுண்வெளி கிரகணங்களை எழுதி முடித்தார். இந்நாவல் சுஜாதா ஏற்பாடு செய்த 1995-ஆம் ஆண்டின் குமுதம் ஏர் இந்தியா விருதைப் பெற்றது. இதில் நடுவராக இருந்து நுண்வெளி கிரகணங்கள் நாவலைத் தேர்வு செய்த கோவை ஞானி பின்னாளில் சு. வேணுகோபாலின் குருவாகவும், நண்பராகவும் ஆனார். கோவை ஞானி வழி எஸ்.என். நாகராஜனிடம் சு. வேணுகோபாலுக்கு நட்பு ஏற்பட்டது.

அந்நாவலை தொலைக்காட்சித் தொடராக எடுக்க முயற்சி செய்த பாவை சந்திரனுடன் நெருங்கிய நட்பு ஏற்பட்டது. பின்னாளில் சு. வேணுகோபாலின் பல குறுநாவல்கள், சிறுகதைகள் பிரசுரமாக உதவினார். நுண்வெளி கிரகணங்கள் நாவல் இரண்டு, மூன்று பிரசுரங்கள் பதிப்பிக்க முன்வந்து பதிப்பிக்காமல் விட்டதால் வெளிவர தாமதமாகி 1997-ஆம் ஆண்டு வெளிவந்தது.

"வெண்ணிலை"(சிறுகதைத் தொகுப்பு) மற்றும் " கூந்தப்பனை" அவரது குறிப்பிடத்தக்க படைப்புகள்.

சு. வேணுகோபால் தன் எழுத்தின் இலக்கிய முன்னோடிகளாக புதுமைப்பித்தன், தி. ஜானகிராமன், கு. அழகிரிசாமி, சுந்தர ராமசாமி நால்வரையும் குறிப்பிடுகிறார். தி. ஜானகிராமன் ஆதர்சமாகக் கருதிறார். “சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன் எழுத்து நடையின் பாதிப்பு என்னிடம் இல்லாவிட்டாலும் அவர்கள் நான் எழுதக் காரணமானவர்கள். நான் எழுத்தாளன் என என்னைக் கர்வம் கொள்ளச் செய்தவர்கள். அந்த வகையில் அவர்கள் என் முன்னோடி” என்கிறார் சு. வேணுகோபால்.

இலக்கிய இடம்

Su venugopal.jpg

சு. வேணுகோபால் யதார்த்த தளத்தில் மனித வாழ்க்கையின் நேரடிப் பார்வையை எழுதியவர். ஜெயமோகன் சு. வேணுகோபாலின் எழுத்துலகை, “உப்பு கசியும் உயிர்நிலம் போன்றது அவரது புனைவுவெளி” என்கிறார். மேலும் அவர் ”மனித உயிர்ப்போராட்டத்தின் வேகத்தையும் வலியையும் இத்தனை உக்கிரமாக நேரடியாகச் சொன்ன சமகாலத்துப் படைப்பாளி பிறிதெவரும் இல்லை” என்கிறார்.

ஜெயமோகன் சு. வேணுகோபாலின் புனைவை மதிப்பிடும் போது, “மனிதமன இயக்கத்தில் உள்ள வக்கிரங்களைக் காண வேணுகோபாலால் எளிதில் முடிகிறது. இந்த முக்கியமான அம்சமே அவரை சமகால எழுத்தாளர்களிலிருந்து வேறுபடுத்துகிறது. வேணுகோபால் வெறுமே உத்திக்காகவோ, புதுமைக்காகவோ கதை சொல்வதில்லை. மனித மனசெயல்பாட்டின் புரிந்துகொள்ளமுடியாத ஆழமே அவருக்கு எப்போதுமே இலக்காக உள்ளது. மனிதமனத்தின் உச்சங்களைவிட சரிவுகளில்தான் அவரது கவனம் மேலும் குவிகிறது. சமகாலத்து தமிழ் வாழ்வின் பலஅவலக் கூறுகளை சதையைப் பிய்த்துப் போடுவதுபோன்ற மூர்க்கத்துடன் தன் கதைகளில் அவர் எடுத்து முன் வைத்திருக்கிறார்” என்கிறார்.

விருதுகள்

  • 2012 ஆம் ஆண்டின் யுவ புரஸ்கார் – பாரதிய பாஷா பரிஷத் விருது (மேற்கு வங்கம்)
  • நுண்வெளி கிரகணங்கள் நாவலுக்காக குமுதம் ஏர் இந்தியா விருது (1995).
  • கூந்தப்பனை நாவலுக்கு கு. அழகிரிசாமி நினைவு விருது பெற்றார்.
  • வெண்ணிலை சிறுகதைத் தொகுப்பிற்கு கேரளா பண்பாட்டுக் கழகம் கிடைத்தது.
  • வெண்ணிலை சிறுகதைத் தொகுப்பிற்கு தமிழ்நாடு அரசு விருது (2006 – 2007).
  • ப. சிதம்பரம் உருவாக்கிய எழுத்து அமைப்பின் சார்பாக 2017 ஆண்டின் சிறந்த நாவலாக வலசை நாவல் விருது பெற்றது.

நூல்கள்

நாவல்கள்
  • நுண்வெளி கிரகணங்கள் (1997, வேர்கள் இலக்கிய அமைப்பு, 2017 தமிழினி)
  • ஆட்டம் (2013, நாவல்)
  • நிலமென்னும் நல்லாள் (2013, நாவல்)
  • வலசை (2017, எழுத்து பிரசுரம், 2019 தமிழினி)
குறுநாவல் தொகுப்ப
  • கூந்தப்பனை (2001, தமிழினி)
  • திசையெல்லாம் நெருஞ்சி (2008, தமிழினி)
  • பால்கனிகள் (2013, தமிழினி)
சிறுகதைத் தொகுப்பு
  • பூமிக்குள் ஓடுகிறது நதி (2000, தமிழினி)
  • களவு போகும் புரவிகள் (2001, தமிழினி)
  • வெண்ணிலை (2006, தமிழினி)
  • தாயுமானவள் (2020, தமிழினி)
  • ஒரு துளி துயரம் (2008, தமிழினி, தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைத் தொகுப்பு)
  • ஒருமால் கட்டு ( 2018, சிறுவானி வாசகர் வட்டம், தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைத் தொகுப்பு)
  • உயிர்ச்சுனை (2019, தியாகு நூலகம், தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைத் தொகுப்பு)
விமர்சனக் கட்டுரைத் தொகுப்பு
  • தமிழ் சிறுகதை பெருவெளி (2018, தியாகு நூலகம், கட்டுரைத் தொகுப்பு)

வெளி இணைப்புகள்


🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.