first review completed

யாழ்நூல்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
Line 107: Line 107:
* [https://desamaedeivam.wordpress.com/2015/03/25/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BF/ விபுலானந்தர் வரலாறு]
* [https://desamaedeivam.wordpress.com/2015/03/25/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BF/ விபுலானந்தர் வரலாறு]


{{Standardised}}
{{first review completed}}


[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 16:50, 19 April 2022

யாழ்நூல் மூன்றாம் பதிப்பு

யாழ்நூல் (1947) விபுலானந்த அடிகள் எழுதிய இசைநூல். தொல்தமிழ் நூல்களில் குறிப்பிடப்பட்டு இன்று வழக்கொழிந்துள்ள இசைக்கருவியான யாழ் தமிழ் இசையின் அடிப்படைக் கருவி என வகுத்துக் கொண்டு, வெவ்வேறு நூல்குறிப்புகளில் இருந்து யாழின் வடிவத்தை உருவாக்கி, அதன் இசையிலக்கணங்களையும் வகுத்துரைக்கும் நூல். கலைக்களஞ்சியத்தன்மை கொண்ட பெரிய நூல் இது.

உருவாக்கம்

யாழ்நூல் இரண்டாம் பதிப்பு

விபுலானந்த அடிகள் (சுவாமி விபுலானந்தர்) தஞ்சை ஆபிரகாம் பண்டிதர், எஸ்.இராமநாதன், கு.கோதண்டபாணி,அ.இராகவன், வரகுண பாண்டியன், குடந்தை சுந்தரேசனார் ஆகியோருடன் இணைத்து பார்க்கப்படும் இசைநிபுணர். தொல்காப்பியர் பண்ணிசைக்கருவியாக யாழையே குறிப்பிடுகிறார்.சங்க இலக்கியங்களிலும் பிற்கால பக்தியிலக்கியங்களிலும் யாழ் தமிழிசையின் முதன்மைக் கருவியாகக் குறிப்பிடப்படுகிறது. அந்த யாழ் எங்கும் புழக்கத்தில் இல்லை. அது என்னவாயிற்று என்று தேடிய விபுலானந்த அடிகள் தன் தமிழ், ஆங்கிலம், சம்ஸ்கிருத அறிவு, இசையறிவு மற்றும் கணித அறிவைக்கொண்டு இந்நூலை எழுதினார். இதற்காக 14 ஆண்டுகள் ஆய்வுசெய்தார்.

விபுலானந்தர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறைக்குத் தலைவராக இருந்த காலத்தில், கர்நாடக இசையின் அமைப்பு, நுணுக்கங்கள் ஆகியவை பற்றி கற்றார். 1936-ல் சென்னைப் பல்கலைக் கழகத்தில் நிகழ்ந்த உரையில் யாழ் எனும் கருவியே தமிழ்ப்பண்ணிசையின் அடிப்படை வாத்தியம் என்றும், அதைக்கொண்டே தமிழிசையை புரிந்துகொள்ள முடியும் என்றும் முதல்முறையாக விளக்கினார். இலங்கைப் பல்கலைக் கழகத்தில் பணியாற்றிய போது ஆய்வை முடித்தார்

ஆய்வுக் காலத்தில், கரந்தை தமிழ்ச் சங்கம் வெளியிட்ட தமிழ்ப் பொழில் இதழிலிலும், மதுரை நான்காம் தமிழ்ச்சங்கம் வெளியிட்டு வந்த செந்தமிழ் இதழிலும் இவ்வாய்வுடன் தொடர்புள்ள பல கட்டுரைகள் வெளிவந்தன. திருச்சிராப்பள்ளி, சென்னை ஆகிய இடங்களில் உள்ள வானொலி நிலையங்களில் இது தொடர்பான விபுலானந்தரின் பேச்சுக்கள் இடம்பெற்றன.

அரங்கேற்றம்

யாழ்நூல் அரங்கேற்றம்

விபுலானந்தர் யாழ்நூல் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் ஆதரவுடன் திருக்கொள்ளம்பூதூர் வில்வாரண்யேசுவரர் கோயிலில் திருஞானசம்பந்தரின் சந்நிதானத்தில் இசை விற்பன்னர்கள், கற்றோர்கள், மற்றோர்கள் முன்னிலையில் தேவாரப்பண்களைத் தாமே அமைத்து 1947-ஆம் ஆண்டு ஆனித் திங்களில் அரங்கேற்றினார்.

முதல் நாள் விழாவில் அறிஞர்கள் சூழ்ந்து வர விபுலானந்தரை தெற்குக் கோபுர வாயிலின் வழியாகத் திருக்கோயிலுக்கு அழைத்து வந்தார்கள். விபுலானந்தர் தான் ஆராய்ந்து கண்டுபிடித்த வரைபடத்துடன் விளக்கிய பின்னர் தான் தயாரித்த முளரியாழ், சுருதி வீணை, பாரிஜாத வீணை, சதுர்த்தண்டி வீணைகளைத் தாங்கிச் சிலர் சென்றார்கள். நாச்சியார் முன்னிலையில் விபுலானந்தர் இயற்றிய 'நாச்சியார் நான்மணிமாலை' வித்துவான் ஔவை துரைசாமியால் படிக்கப்பட்டு அரங்கேறியது. சங்கீதபூஷணம் க.பெ. சிவானந்தம் பிள்ளை விபுலானந்தர் உருவாக்கிய யாழ்களை மீட்டி இன்னிசை மீட்டினார்.

இரண்டாம் நாள் விழாவில் நாவலர் சோமசுந்தர பாரதியார், 'குமரன்' ஆசிரியர் சொ. முருகப்பா, தமிழ்ப்பேராசிரியர் தெ. பொ. மீனாட்சி சுந்தரம் பிள்ளை, சென்னைப் பல்கலைக்கழக சாம்பமூர்த்தி ஐயர், இசைப் பேராசிரியர் சுவாமிநாத பிள்ளை, கரந்தைக் கவியரசு அ. வேங்கடாசலம் பிள்ளை, அறிஞர் தி. சு. அவிநாசிலிங்கம் செட்டியார், ரா. பி. சேதுப்பிள்ளை, சுவாமி சித்பவானந்தர், மற்றும் பலர் ஆய்வுரை நிகழ்த்தினார்கள். பின்னர்ச் சுவாமி விபுலானந்தர் யாழ் பற்றிய தகவல்களை எடுத்துவிளக்கினார். வித்துவான் வெள்ளைவாரணனார் யாழ்நூலின் பெருமைகளை எடுத்து விளக்கினார். பின்னர் யாழ்நூல் அரங்கேற்றப்பட்டது.

பதிப்புகள்

1947-ல் இந்நூல் கரந்தை தமிழ்ச்சங்கம் சார்பில் கோனூர் ஜமீன்தார் பெ.ராம.ராம.சித.சிதம்பரம் செட்டியார் நிதியுதவியுடன் கரந்தை தமிழ்ச்சங்கத் தலைவர் ஆ.யா.அருளானந்தசாமி நாடாரால் வெளியிடப்பட்டது. இந்நூலின் முதல் பதிப்புக்கு 1947-ல் நீ.கந்தசாமி முன்னுரை வழங்கியிருக்கிறார்.

இரண்டாம் பதிப்பு 1974-ல் கரந்தை தமிழ்ச்சங்க தலைவர் செ.பெத்தண்ணனால் தமிழறிஞர் வெள்ளைவாரணனார் பாயிரத்துடன் வெளியிடப்பட்டது.

மூன்றாம் பதிப்பு 2003-ல் கனடாவின் மறுமொழி ஊடக வலையம் அமைப்பால் அதன் நிறுவனர் த.சிவதாசனால் வெளியிடப்பட்டது. இசைநிபுணர் நா.மம்முது இந்த மூன்றாம் பதிப்புக்கு விரிவான முன்னுரை எழுதியிருக்கிறார்.

சிறப்புப் பாயிரம்

யாழ்நூல் அரங்கேற்றம்

இந்நூலுக்கு புலவர் வெள்ளைவாரணனார் அளித்த சிறப்புப் பாயிரம் இவ்வாறு தொடங்குகிறது.

உலகமெலாம் களிகூர ஒளிதமிழின் இயல் வளர

இலகு தமிழிசை வழக்கே எம்மருங்கும் வளர்ந்தோங்க

புலவர் உளமகிழ்கூர யாழ்நூல் செய் புலவர்பிரான்

மலரடி என் சென்னியினும் மனத்தகத்தும் மலர்ந்துளவால்

தொடர்ந்து 42-செய்யுள்களால் அமைந்த நீண்ட சிறப்புப் பாயிரம்

வாழி தமிழர் வளர்புகழால் ஞாலமெலாம்

ஏழிசைதேர் யாழ்நூல் இசைபரப்பி - வாழியரோ

வித்தகனார் எங்கள் விபுலானந்தர் பெயர்கொள்

அந்தனார் தாள் எம் அரண்

என முடிவடைகிறது. வெள்ளைவாரணனார் விபுலானந்தரின் மாணவரும்கூட

உள்ளடக்கம்

யாழ்நூல் ஏழு பகுதிகளாக அமைந்துள்ளது

  • பாயிரவியல்
  • யாழ் உறுப்பியல்
  • இசை நரம்பியல்
  • பாலைத்திரிபியல்
  • பண்ணியல்
  • தேவார இயல்
  • ஒழிபியல்
பாயிர இயல்

இசை நரம்புகளின் பெயரும் முறையும், இசை நரம்புகளின் ஓசைகளும் அவற்றுக்குப் பிற்காலத்தார் வழங்கிய பெயர்களும், இயற்கை இசையும் பண்ணப்பட்ட இசையும் பேசப்படுகிறது. யாழின் பகுதி; யாழ்க்கருவியின் தெய்வ நலம், அது தமிழ் நாட்டிலிருந்து பிற நாடுகளுக்குப் பரவிய வரன்முறை போன்ற தலைப்புக்களில் ஆய்வு விளக்கங்கள் தரப்படுகின்றன. ஏழு சுவரவரிசைகளை வகுத்துரைக்கிறது. (உழை, இழி,விளரி,தாரம்,குரல்,துத்தம், கைக்கிளை)

யாழ் உறுப்பியல்

ஐந்து வகை யாழ்கள் பற்றியும் அவற்றின் அமைப்பு பற்றியும் ஆராய்கிறார். (வில்யாழ், பேரியாழ், சீறியாழ், செங்கோட்டுயாழ், சகோட யாழ்)

பாலைத்திரிபியல்

தொல்காப்பியரின் கூற்றில் இருந்து யாழில் பிறக்கும் பெரும்பாலை மற்றும் கிளைபண்களை ஆய்வுசெய்கிறார்.அவற்றை ஐவகை நிலங்களுடன் தொடர்பு படுத்தும் பகுதி இது.

பண்ணியல்

ஏழு பெரும்பாலைகளுக்கு நிகரான இன்றைய பண்கள் அல்லது இராகங்களைச் சொல்கிறார்.

  • செம்பாலை - நிலம் முல்லை - அரிகாம்போதி
  • படுமலைப்பாலை - நிலம் குறிஞ்சி - நடபைரவி
  • செவ்வழிப்பாலை - நிலம் நெய்தல் - இரு மத்திமைத் தோடி
  • அரும்பாலை - நிலம் பாலை - சங்கராபரணம்
  • கோடிப்பாலை - நிலம் மருதம் - கரகரப்ரியா
  • விளரிப்பாலை - நிலல் நெய்தல் - தோடி
  • மேற்செம்பாலை - நிலம் மருதம் - கல்யாணி
தேவார இயல்

பழந்தமிழ் இசை பிற்கால பண்ணிசையாக ஆனதை ஆராயும் பகுதி

ஒழிபியல்

தொகுப்புக் கூற்று. இதில் பண்களை கணிதமுறைப்படி வகுக்கிறார்.

பண்பாட்டு இடம்

நா.மம்முது இந்நூலின் சிறப்பை இவ்வாறு தொகுத்துச் சொல்கிறார்.

  • யாழ் எனும் பழங்கருவியை மீட்டுக் கொண்டு வந்தது
  • ஏழுபெரும்பாலைகளுக்கு இணையாக இன்றுள்ள ராகங்களை காட்டியது
  • குரல் திரிபு முறையில் பண்ணுப்பெயர்ப்பு முறைகளை சிலம்பின் வழிநின்று நெறியாகக் கூறியது
  • தேவார இசை ஆய்வு
  • இசைக்கணித ஆய்வு

பதினாறாம்நூற்றாண்டு முதல் தமிழிசை தன் மரபுடனான தொடர்பை இழந்து வெவ்வேறு இசைமரபுகளுடன் கலந்து கர்நாடக இசையாக மாறி நீடிக்கிறது. இன்னொரு பக்கம் பண்ணிசை தேவார இசையாக தேக்கமுற்றது. கர்நாடக இசை என்பது தமிழிசையின் மருவிய வடிவமே என்றும், தமிழிசையே இந்தியாவின் தொன்மையான இசை என்றும் தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் போன்றவர்கள் கூறினர். இசைமரபுகள் அறுந்துவிட்ட நிலையில் முழுக்கமுழுக்க இலக்கியச் சான்றுகள் மற்றும் கணிதமுறைகளைக் கொண்டே அக்கொள்கையை நிறுவினர். அவ்வாறு தமிழிசையின் அடிப்படைகளை அமைத்த பெருநூல்களில் ஒன்று யாழ்நூல். இது தொல்காப்பியம் பேசும் பழந்தமிழ் இசைமரபை இலக்கியச்சான்றுகள் வழியாகவே உய்த்துணர்ந்து வெவ்வேறு அகச்சான்றுகள், தர்க்கமுறைகள் வழியாக இன்றுள்ள இசையுடன் பொருத்தி ஒரு நீண்ட இசைமரபை முழுமையாக உருவாக்கிக் காட்டுகிறது. ஆகவே தமிழ்ப்பண்பாட்டாய்வின் பெரும்சாதனைகளில் ஒன்று என்று கருதப்படுகிறது.

உசாத்துணை



🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.