under review

சுவாமி சித்பவானந்தர்

From Tamil Wiki
சித்பவானந்தர்
சித்பவானந்தர்
சித்பவானந்தர்
சித்பவானந்தர் வாழ்க்கை வரலாறு
சித்பவானந்தர் வாழ்க்கை வரலாறு
சித்பவானந்தர்
சித்பவானந்தர்

சுவாமி சித்பவானந்தர் (மார்ச் 11, 1896 - நவம்பர் 16, 1985) ராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தர் மரபில் வந்த நவவேதாந்தக் கொள்கை கொண்ட துறவி. விவேகானந்தரின் மரபின்படி தமிழகத்தில் ஆன்மிகப் பணிகளுடன் கல்விப் பணிகளையும் சேவைப் பணிகளையும் இணைத்து முன்னெடுத்தார். பகவத்கீதை உரை, திருவாசகம் உரை போன்ற புகழ்பெற்ற ஆன்மிக நூல்களை எழுதினார். சொற்பொழிவுகள், அந்தர்யோகம் என்னும் ஆன்மிக வகுப்புகள் வழியாக வேதாந்தத்தைக் கற்பித்தார். திருப்பராய்த்துறை (திருச்சி) ராமகிருஷ்ண தபோவனத்தை நிறுவினார்.

பிறப்பு, கல்வி

சித்பவானந்தர் முதுமையில்

சின்னு (அ) சின்னச்சாமி என்ற இயற்பெயர் கொண்ட சுவாமி சித்பவானந்தர் இன்றைய கோவை மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சியை அடுத்த செங்குட்டைப்பாளையத்தில், கவுண்டர் சாதியில் பவளக் கூட்டத்தை சேர்ந்த பெரியண்ணக் கவுண்டர் - நஞ்சம்மை இணையருக்கு மார்ச் 11, 1896-ல் ஏழாவது மகனாக பிறந்தார். சுவாமி சித்பவானந்தருடன் காமாட்சி, சிதம்பரம், ரத்தின சபாபதி, சிவகாமி, சுந்தரம், செல்லம்மாள் என்று உடன்பிறந்தவர்கள் அறுவர்.

சுவாமி சித்பவானந்தர் ஆத்துப்பொள்ளாச்சி கிராமப்பள்ளியில் ஆரம்பக்கல்வியும், பொள்ளாச்சியில் உள்ள நகராட்சி பள்ளியில் நடுநிலைக்கல்வியும் கற்றார். சுவாமி சித்பவானந்தர் 1912-1918 வரை அப்போதைய கோவையில், ஸ்டேன்ஸ் உயர்நிலை பள்ளியில் (Stanes European High School) ஆறு ஆண்டுகள் உயர்நிலை கற்றார். 1919-ல் சீனியர் கேம்ப்ரிட்ஜ் தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். இவர் ஏழாவது ரேங்க் பெற்ற செய்தி ஸ்டேன்ஸ் பள்ளி ஆண்டு மலரில் வெளியானது.

சுவாமி சித்பவானந்தர் 1920-ல் சென்னை மாநிலக் கல்லூரியில் இண்டர் மீடியட்(F.A) வகுப்பில் கணிதம், விஞ்ஞானத்தை பாடமாக தேர்ந்தெடுத்து படித்தார். பின்னர் அங்கேயே பி.ஏ தத்துவப்பாடத்தில் (B.A Philosophy) சேர்ந்து பட்டப்படிப்பை 1923-ல் முடித்தார்.

சுவாமி சித்பவானந்தரின் விடுதித்தோழராக கோவை தி.சு அவினாசிலிங்க செட்டியாரும், சுவாமி ஆகமானந்தர் என்று அழைக்கபடும் கிருஷ்ணன் நம்பி அவர்களும் இருந்தனர்.

தனிவாழ்க்கை

சுவாமி சித்பவானந்தரின் குடும்பம் ஆரம்ப காலங்களில் வேளாண் தொழிலில் ஈடுபட்டு வந்தது. பின்னர் பி.கே.பி அண்டு சன்ஸ் என்ற பெயரில் பொள்ளாச்சி டாக்டர் அன்சாரி தெருவில் நிலக்கடலை, நல்லெண்ணெய், பருத்தி ஆகியவற்றின் மொத்த வியாபாரமும், தன வணிகமும் செய்துவந்தனர்.

நன்றி- தபோவனம் வலைதளம்
துறவு

சித்பவானந்தர் சென்னையில் கல்வி பயிலும்போது 1920-ல் சுவாமி சிவானந்தர் லண்டன் செல்லும் வழியில் சென்னை வந்து தங்கியிருந்தார். அவருடைய சொற்பொழிவுகளால் விவேகானந்தரின் வேதாந்தப் பார்வையை சித்பவானந்தர் அறிமுகம் செய்துகொண்டார். மயிலாப்பூர் ராமகிருஷ்ண மடத்தின் துறவிகளின் அறிமுகம் பெற்றார். 1923-ல் சுவாமி அகிலானந்தருடன் பூரிக்கும் கல்கத்தாவுக்கும் சென்றார். பேலூர் மடத்தில் சிவானந்த மகராஜ் இவருக்கு பிரம்மச்சர்ய தீட்சை அளித்து 'திரயம்பக சைதன்யர்' என்று பெயர் சூட்டினார். அப்பெயருடன் இந்தியா முழுவதும் ஆன்மிகப்பயணம் மேற்கொண்டார்.

26 ஜூன் 1926-ல் சிவானந்தர் அவர் ஊட்டியில் தொடங்கிய ராமகிருஷ்ண மடத்தில் சுவாமி சிவானந்தர் இவருக்கு சன்னியாச தீட்சை அளித்து 'சுவாமி சித்பவானந்தர்'என்று பெயர் சூட்டினார்.

ஆன்மிகப்பணிகள்

மெய்யியல்

சித்பவானந்தர் ராமகிருஷ்ண பரமஹம்சரின் தரிசனத்தை ஒட்டி விவேகானந்தர் உருவாக்கிய நவவேதாந்தம் என்னும் ஆன்மிக மரபைச் சேர்ந்தவர். அத்வைதம் சார்ந்த பார்வையை முன்வைத்தார். தமிழ்ச் சைவமரபை அத்வைதத்தின் அடிப்படையான தரிசனத்துடன் விரிவான தத்துவப்பார்வையுடன் இணைப்பவை சித்பவானந்தர் எழுதிய பகவத்கீதை உரை, திருவாசகம் உரை, தாயுமானவர் உரை போன்ற நூல்கள். ஆன்மிக தத்துவத்தில் அவருடைய முதன்மைப் பங்களிப்பு இந்த இணைப்புதான்.

ஊட்டி ராமகிருஷ்ண மடம்

சித்பவானந்தர் சிவானந்தர் ஊட்டியில் தொடங்கிய ராமகிருஷ்ண மடத்தின் பொறுப்பாளராக 1930 முதல் 1940 வரை பத்தாண்டுகள் பணியாற்றினார். 1936 ல் ராமகிருஷ்ண பரமஹம்சர் நூற்றாண்டு விழாவை ஊட்டி ராமகிருஷ்ண மடத்தில் விரிவாகக் கொண்டாடினார். ஊட்டியில் சித்பவானந்தர் பொறுப்பில் இருந்தபோது மகாத்மா காந்தி நாராயணகுரு ஆகியோர் ஊட்டி ராமகிருஷ்ண மடத்திற்கு வந்தார்கள். 1937 ல் மடத்தின் துறவிகளுடன் கைலாயப் பயணம் மேற்கொண்டார்.

திருப்பராய்த்துறை ராமகிருஷ்ண தபோவனம்

சித்பவானந்தர் 24 மே 1940-ல் திருச்சி அருகே திருப்பராய்த்துறை தாருகாவனேஸ்வரர் ஆலய குடமுழுக்கில் கலந்து கொண்டார். ராமநாதன் செட்டியார், கானாடுகாத்தான் அருணாச்சல செட்டியார் அவர்களின் வேண்டுகோளின்படி திருப்பராய்த்துறையிலே தங்கினார். அங்கே கல்விப்பணிகளில் ஈடுபட்டார். 1943-ல் திருப்பராய்த்துறையில் ராமகிருஷ்ண தபோவனத்தை தொடங்கினார். கல்வி, ஆன்மிகப் பணிகளை ஒருங்கிணைத்து நடத்தினார்

அந்தர்யோகம்

சுவாமி சித்பவானந்தர் திருச்சி ராமகிருஷ்ண தபோவனத்தில் மாதந்தோறும் 3 நாட்கள் அந்தர்யோகம் என்ற வகுப்பை ஒருங்கிணைக்க ஆரம்பித்தார். மூன்று நாட்கள் சேர்ந்து தங்கி ஆன்மிக வகுப்புகளில் கலந்துகொள்வதுடன் கூட்டு உழைப்பும் தியானப்பயிற்சியும் கொண்டவை இவை. பின்னர் இந்த வகுப்புகள் குற்றாலம், கன்யாகுமரி, பாபநாசம், சுருளி அருவி அருகே என பல இடங்களில் ஒருங்கிணைக்கப்பட்டன.

சொற்பொழிவுகள்

சித்பவானந்தர் சுமார் 7000 சொற்பொழிவுகளுக்கு மேல் நடத்தியிருக்கிறார் எனப்படுகிறது. தமிழகம் எங்கும் பயணம் செய்து வேதாந்தச் சொற்பொழிவுகளை நடத்தினார்.

இதழியல்

சுவாமி சித்பவானந்தர் 1926 முதல் 1930 வரை சென்னை ராமகிருஷ்ண மடத்தின் ஸ்ரீ இராமகிருஷ்ண விஜயம் இதழின் ஆசிரியராக பணி புரிந்தார். ஆன்மிகச் செய்திகளை பொதுவாசகர்களுக்காகச் சொல்லும் இதழ் அது.

சுவாமி சித்பவானந்தர் 1950-ல் தர்மசக்கரம் என்ற இதழைத் தொடங்கினார். இறுதிவரை அதை நடத்திவந்தார். வேதாந்த விவாதங்களுக்கான இதழ் அது.

கல்விப்பணி

சுவாமி சித்பவானந்தர் 1940-ல் திருப்பராய்த்துறை தாருகாவனேஸ்வரர் ஆலயத்தில் உள்ள நூறுகால் மண்டபத்தில் சிறுவர், சிறுமியர்களுக்கு ஆரம்ப பள்ளி ஒன்றை தொடங்கினார்.

சுவாமி சித்பவானந்தர் 1943-ல் திருப்பராய்த்துறையில் ஒரு தபோவனம், குருகுல முறையில் ஒரு நடு நிலைப்பள்ளி, சுவாமி விவேகானந்தர் மாணவர் விடுதி ஆகியவற்றை தொடங்கினார். பின்னர் 1947-ல் இப்பள்ளி உயர்நிலைப்பள்ளியாக உயர்த்தப்பட்டு, புதிய கட்டிடத்துடன் அன்றைய தமிழகத்தின் முதல்வரான ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாரால் திறந்து வைக்கப்பட்டது.

ராமநாதபுரத்தில் உள்ள தாயுமான சுவாமிகள் கோவில் 1978-ல் சித்பவானந்தரின் தபோவனத்தின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 1981-ல் ராமநாதபுரம் முகுந்தராவ் சத்திரம் சித்பவானந்தரிடம் ஒப்படைக்கப்பட்டது.

வ.வே.சு ஐயர் தொடங்கிய பாபநாசத்தில் உள்ள பரத்வாஜ ஆஸ்ரமம் சுவாமி சித்பவானந்தரிடம் 1984-ல் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் இதே ஆண்டில் சேலம் சாரதா சமிதி நிறுவப்பட்டது.

திருப்பராய்த்துறை ராமகிருஷ்ண தபோவனத்தின் கிளைகள் திருவேடகம், சிற்றச்சாவடி, குற்றாலம், சேரன்மாதேவி, கரூர், பண்ணைக்காடு, ராமநாதபுரம், ராமேஸ்வரம், திருநெல்வேலி ஆகிய ஊர்களில் உள்ளன. தபோவனத்தின் கட்டுப்பாட்டில் 64 பள்ளிகளும் ஏழு கல்லூரிகளும் சமூகக்கல்லூரிகளும் உள்ளன.

எழுத்துப்பணிகள்

சித்பவானந்தர் தமிழில் மிகப்புகழ்பெற்ற ஆன்மிக எழுத்தாளராகத் திகழ்ந்தார். தன் வாழ்நாள் முழுக்க தொடர்ச்சியாக எழுதிக்கொண்டே இருந்தார். லலிதா சகஸ்ரநாமம் போன்ற நூல்களுக்கு விளக்கங்கள் எழுதினார். விவேகானந்தர், ராமகிருஷ்ண பரமஹம்சர் போன்றவர்களின் வாழ்க்கை வரலாற்றையும் அறவுரைகளையும் தொகுத்து எழுதினார். பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான நாடகங்களையும் எழுதினார்.

சித்பவானந்தரின் முதன்மையான படைப்பு பகவத் கீதைக்கு அவர் எழுதிய உரை. ராமகிருஷ்ண பரமஹம்சரின் குட்டிக்கதைகளை மேற்கோளாகக் காட்டி, உபநிடதங்களின் சமானமான வரிகளை சுட்டிக்காட்டி, எளிமையாக விளக்கப்பட்ட அந்நூல் தமிழகத்தில் மிக அதிகமாக விற்கப்பட்டதும், வாசிக்கப்பட்டதுமான நூல்களில் ஒன்று. சித்பவானந்தரின் திருவாசக உரை, தாயுமானவர் பாடல்களுக்கான உரை ஆகியவையும் முக்கியமானவை.

மறைவு

சுவாமி சித்பவானந்தர் தமது 87-வது வயதில் நவம்பர் 16, 1985-ல் திருச்சியை அடுத்த திருப்பராய்த்துறையில் மறைந்தார்.

பங்களிப்பு

சித்பவானந்தர் நவீனத் தமிழகத்தின் ஆன்மிக வரலாற்றிலும், கல்வி வரலாற்றிலும் பெரும் பங்களிப்பாற்றிய முன்னோடி.

  • நவீனத்தமிழகத்தின் சிற்பிகளில் ஒருவர் என்றே சொல்லத்தக்கவர். தமிழகம் முழுக்க அவர் தொடங்கி நடத்திய கல்விநிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. பெண் கல்வியிலும் முன்னோடியான பங்களிப்பை அவை ஆற்றி வருகின்றன.
  • சித்பவானந்தர் தமிழகத்தில் அத்வைத தரிசனத்தை ஆசாரவாதம் சார்ந்த பழமைநோக்கு இல்லாமல், நவீன அறவியல் சார்ந்த பார்வையுடன் முன்வைத்த நவவேதாந்திகளில் முதன்மையானவர். விவேகானந்தரின் இயக்கத்தை தமிழ்ச் சூழலுக்கு அறிமுகம் செய்தும் மூலநூல்களுக்கு புதியமொழியில் நவீனநோக்குடன் உரைகள் எழுதியும் அத்வைத வேதாந்தத்தைப் பரப்பினார்.
  • தமிழ்ச்சைவ மரபுக்கும் அத்வைத தரிசனத்திற்கும் இடையே தர்க்கபூர்வமான ஒருங்கிணைப்பை உருவாக்குபவை சித்பவானந்தர் திருவாசகம், தாயுமானவர் பாடல்களுக்கு எழுதிய உரைகள். தமிழ் மெய்யியல் சிந்தனையில் அவ்வகையில் சித்பவானந்தர் ஒரு தொடக்கப்புள்ளி.

நூல்கள்

மெய்யியல்
  1. ஸ்ரீமத் பகவத் கீதை (தமிழ், ஆங்கிலம் மற்றும் தெலுங்கு மொழிகளில்)
  2. திருவாசகம் - விளக்கம்
  3. தாயுமான சுவாமிகள் பாடல்கள் தொகுப்பும்-குறிப்பும்
    1. பரசிவவணக்கம்
    2. சின்மயானந்த குரு
    3. மெளனகுரு வணக்கம்
    4. ஆனந்தமான பரம்
    5. சுகவாரி
    6. கருணாகரக் கடவுள்
    7. எங்கும் நிறைகின்ற பொருள்
    8. பராபரக் கண்ணி
    9. பைங்கிளிக் கண்ணி
    10. பரிபூரணானந்தம்
    11. Thus Speaks Taumana swamigal
  4. ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் - விளக்கம்
  5. விவேகானந்தரின் கர்மயோக விளக்கம்
  6. விவேகானந்தரின் ஞானயோக விளக்கம்
  7. விவேகானந்தரின் ராஜயோக விளக்கம்
  8. விவேகானந்தரின் பக்தியோக விளக்கம்
  9. ராமாயணம் - வால்மீகியை தழுவி தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது.
  10. மகாபாரதம் - வியாசரை தழுவி தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது.
  11. அனுஷ்டான வேதாந்தம்
வாழ்க்கை வரலாறு
  1. ஸ்ரீ ராமகிருஷ்ண சரிதம்
  2. ஸ்ரீ சாரதா தேவியாரது சரிதம்
  3. ஸ்ரீ விவேகானந்த ஜீவிதம்
  4. சகோதரி நிவேதிதை
  5. உலகுக்கு உயிர் கொடுத்த உத்தமன்
  6. அறம் வளர்த்த நம்பி
  7. Reminiscences of Master Mahasaya
தத்துவார்த்த நூல்கள்
  1. ஐயம் தெளிதல் - மூன்று தொகுதிகள்
  2. சந்தேகம் தெளிதல் - மூன்றூ தொகுதிகள்
  3. அருள் விருந்து - மூன்று தொகுதிகள்
  4. ஸ்ரீ பரமஹம்சரின் ஆப்தமொழி
  5. ஸ்ரீ பரமஹம்சரின் பெருமை
  6. பரமஹம்சர் புகட்டிய பெருநெறி விளக்கம் - இரண்டு தொகுதிகள்
  7. Ramakrishna Lives Vedanta
  8. The Man Making Message of Swami Vivekananda
  9. விவேகானந்த விவரணம்
  10. தினசரி தியானம்
  11. Hinduism Hosts Christianity
  12. கடவுளர் உருவங்கள்
  13. காயத்ரீ
நாடகங்கள்
  1. பார்வதி, லட்சுமி, சரஸ்வதி கர்வபங்கம்
  2. ஏகலைவன் குருபக்தி
  3. விபீஷணர் சரணாகதி
  4. மார்க்கண்டேயன்
  5. பாதுகா பட்டாபிஷேகம்
  6. விரத வீரர் பீஷ்மர்
  7. தான வீரன் கர்ணன்
  8. பாண்டவர் கவுரவர் பெருமை
  9. தபோபலன்
  10. தவப்புதல்வர்கள்
  11. வாலி மோக்ஷம்
  12. ஹரிச்சந்திரன்
கல்வி
  1. The Indian National Education
  2. மாணவருக்கு ஒரு சொல்
  3. கல்வி
அரசியல்
  1. எதிர்கால இந்தியா
யாத்திரை நூல்
  1. திருக்கயிலாயகிரி யாத்திரை
மற்ற நூல்கள்
  1. மலைவளர்காதலி
  2. தாயுமானவசுவாமி வரலாறு
  3. தாயுமானவர் ஆலயத்தின் தத்துவ அமைப்பு
  4. The Garland of Paraparam
  5. அருள்மூவர் நூல்கள்
  6. ஸ்ரீ ராமகிருஷ்ண உபதேச மஞ்சரி
  7. தமிழகத்தில் சுவாமி விவேகானந்தர்
  8. சுவாமி விவேகானந்தர்
  9. விவேகானந்த உபநிஷதம்
  10. Ramakrishna Lives Vedantha
  11. கணபதி
  12. முருகக் கடவுள்
  13. சிவதத்துவம், சக்தி தத்துவம், விஷ்ணு தத்துவம்
  14. சூரிய நாராயணன்
  15. வர்ணாச்ரம தர்மம்
  16. சந்நியாசி கீதம்
  17. நோய்க்கு இடம் கொடேல்
  18. மாணவர்க்கு ஒரு சொல்
  19. குழந்தைகளின் களிக்கூடம்
  20. ஆசிரியன்
  21. மாணாக்கன்
  22. எதிர்கால இந்தியா
  23. கண்ணன் என்னும் கடவுள்
  24. நவதிருப்பதிகளும் ஆழ்வார்களின் ஆலய வழிபாடு
  25. சைவன் யார்?
  26. ஈசன் எங்கும் நிறைந்துள்ளான்
  27. செத்தவர்கள் நம்மோடு பேசுகிறார்களா?
  28. கர்மகாண்டம் எது? ஞான காண்டம் எது?
  29. தவழ்கின்ற தெய்வம்
  30. தெய்வீக மகிமைகள்
  31. உலகை உய்வித்த உத்தமன்
  32. அறம் வளர்த்த நம்பி
  33. ஞான ரதம்
  34. சந்நியாசி
  35. தேவ ரகசியம் (முதலிய கதைகள்)
  36. இராவண தத்துவம்
  37. மனிதனது நிஜ சொரூபம்
  38. ஹிந்து மதமும் கிறிஸ்துவ மதமும்
ஆங்கிலம்
  1. Sri Lalithambika Sahasranama Stotram
  2. Siva Sahasranama Stotram
  3. Sri Vishnu Sahasranama Stotram
  4. Facts of Brahman
  5. The Indian National Education
  6. Daily Divine Digest
  7. Mind and Spirituality
  8. Key to Higher Life
  9. My Dear Students - A Counsel
  10. The Nursery School
  11. The Teacher
  12. The Student
  13. The School
  14. Sri Krshna - The Manifest Divinity
  15. Tirukkural
  16. Bible in the Life of Vedanta

உசாத்துணை


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 13-Jun-2025, 22:38:43 IST