under review

இரா. இளவரசு: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
(; Added info on Finalised date)
Line 87: Line 87:
* [https://www.hindutamil.in/news/opinion/columns/131346-.html இளவரசு எனும் தமிழியக்கம்; இந்து தமிழ் திசை கட்டுரை]  
* [https://www.hindutamil.in/news/opinion/columns/131346-.html இளவரசு எனும் தமிழியக்கம்; இந்து தமிழ் திசை கட்டுரை]  
{{Finalised}}
{{Finalised}}
{{Fndt|05-Aug-2024, 11:15:48 IST}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 01:04, 6 August 2024

பேராசிரியர், முனைவர் இரா. இளவரசு

இரா. இளவரசு (இரா. பிச்சை) (ஜூன் 12, 1939 - ஜனவரி 23, 2015) கவிஞர், எழுத்தாளர், ஆய்வாளர், கட்டுரையாளர். தனித்தமிழ் ஆர்வலர். தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றினார். ’தமிழியக்கம்’ என்னும் அமைப்பை உருவாக்கினார். தமிழக அரசின் ‘பாவேந்தர் பாரதிதாசன்’ விருது பெற்றார். பாரதிதாசனின் நூல்வடிவம் பெறாத ஆக்கங்களைத் தனித்தொகுப்பாக வெளியிட்டார்.

முனைவர் இரா. இளவரசு

பிறப்பு, கல்வி

இரா. பிச்சை என்னும் இயற்பெயர் கொண்ட இரா. இளவரசு, ஜூன் 12, 1939 அன்று, மு. இராமசாமி - அருக்காணி இணையருக்கு திருச்சி மாவட்டத்தில் உள்ள ராமநாதபுரம் என்ற சிற்றூரில் பிறந்தார். தொடக்கக்கல்வியை உள்ளூரில் கற்றார். பூவாளூர் அரசுப் பள்ளியில் நடுநிலைக் கல்வி பயின்றார். லால்குடி உயர்நிலைப்பள்ளியில் பள்ளி இறுதி வகுப்புப் பயின்றார். திருச்சி தேசியக் கல்லூரியில் புதுமுக வகுப்பு கற்றார். திருச்சி தூய வளனார் கல்லூரியில் பொருளியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார். காரைக்குடி அழகப்பா கல்லூரியில் முதுகத் தமிழ் பயின்றார். ’பெருங்கதையின் மொழியமைப்பு' என்ற தலைப்பில், கேரளப் பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார்.

தனி வாழ்க்கை

இரா. இளவரசு, மணமானவர். மனைவி வேலம்மாள், சென்னை காயிதே மில்லத் மகளிர் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றினார். மகள்: அன்பு; மகன்: ஓவியன்.

கல்விப் பணிகள்

இரா. இளவரசு, 1963-ல், திருச்சி காசாமியான் உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றினார். 1965 முதல் 1969 வரை, கேரளப் பல்கலைக்கழகத்தில் ஆய்வாளராகவும் ஆசிரியராகவும் பணிபுரிந்தார். 1969-1970-ல், காரைக்குடி அழகப்பா கல்லூரியில் தமிழ்த்துறை விரிவுரையாளராகப் பணியாற்றினார். 1970 முதல் 1997 வரை புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரி தொடங்கி, தஞ்சை, கரூர், சென்னை ஆகிய ஊர்களிலுள்ள அரசுக் கல்லூரிகளில் துணைப் பேராசிரியராகவும், பேராசிரியராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றார்.

பணி ஓய்வுக்குப் பின் 1999 முதல் 2004 வரை, திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் பாரதிதாசன் உயராய்வு மையத்தில் பேராசிரியராகவும் தலைவராகவும் பணிபுரிந்தார். இந்திய ஆட்சிப் பணித் தேர்வு எழுதும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்காக, சென்னையில் உள்ள பயிற்சி நிறுவனங்களில் பகுதிநேரப் பேராசிரியராகப் பணியாற்றினார். சென்னையிலுள்ள இரத்தினவேல் சுப்பிரமணியம் செந்தமிழ்க் கல்லூரி, திருவள்ளுவர் தமிழ்க்கல்லூரி, காஞ்சி மணிமொழியார் தமிழ்க் கல்லூரி ஆகியவற்றில் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.

முனைவர் இரா. இளவரசு நூல்கள்

இலக்கிய வாழ்க்கை

இரா. இளவரசு, பாரதிதாசன் கவிதைகளால் ஈர்க்கப்பட்டார். தனித் தமிழ் ஆர்வம் கொண்டவராக இருந்தார். பெருஞ்சித்திரனாரின் வேண்டுகோளுக்கிணங்க, பிச்சை என்னும் தன் இயற்பெயரை ‘இளவரசு’ என்று மாற்றிக் கொண்டார். 'தமிழ்ப்பொழில்', 'தமிழியக்கம்' இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றக் கருத்தரங்கு மலர்கள் போன்றவற்றில் கவிதை, கட்டுரைகளை எழுதினார். பாரதிதாசனின் நூல்வடிவம் பெறாத 353 பாடல்களை தனித்தொகுப்பாக வெளியிட்டார். 154 தலைப்புகளில் 7,854 பக்கங்களில் 25 தொகுதிகளில் பாரதிதாசனின் எழுத்துகள் அனைத்தும் தொகுக்கப்பட்டு வெளியான ‘பாவேந்தம்’ நூல்களின் பதிப்பாசிரியர்களுள் ஒருவராகச் செயல்பட்டார். கவிதை நூல்கள், ஆய்வு நூல்கள், கட்டுரை நூல்களை எழுதினார்.

பல்வேறு கல்லூரிகளிலும், பல்கலைக்கழகங்களிலும், ஆய்வரங்குகளிலும், தமிழ்ச்சங்க நிகழ்வுகளிலும் இலக்கியச் சொற்பொழிவாற்றினார். தனித்தமிழ் சார்பாகப் பல பணிகளை முன்னெடுத்தார். இளவரசுவின் மேற்பார்வையில் ஒன்பது பேர் முனைவர் பட்டம் பெற்றனர்; இருபது பேர் ஆய்வியல் நிறைஞர் பட்டம் பெற்றனர்.

அமைப்புப் பணிகள்

இரா. இளவரசு, தனித்தமிழ், பகுத்தறிவு, பொதுவுடைமைக் கொள்கைகள் சார்ந்து இயங்கினார். தமிழ்ப் பேராயம், பாவாணர் தமிழியக்கம், தமிழ்நாடு அரசுக் கல்லூரி ஆசிரியர் கழகம், ஓய்வுபெற்ற அரசுக் கல்லூரி ஆசிரியர் சங்கம் போன்ற அமைப்புகளில் இணைந்து பல்வேறு பணிகளை மேற்கொண்டார்.

பொறுப்பு

  • திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கத்தின் இணைச்செயலாளர்
  • உலகத் தமிழ்க் கழகத்தின் கேரள மாநில அமைப்பாளர், பொதுச் செயலாளர்
  • தமிழியக்கம் அமைப்பின் தலைவர், பொதுச் செயலாளர்
  • உலகத்தமிழ்க் கல்வி, கலை, பண்பாட்டுக் கழகத்தின் செயலாளர்
  • தமிழ் வழிக்கல்வி, இயக்கத்தின் நெறியாளர்
  • இளங்கோ இலக்கியக் கழகத்தின் தலைவர்
  • தமிழக – ஈழ நட்புறவுக் கழகத்தின் தலைவர்
இரா. இளவரசு, முதல்வர் மு. கருணாநிதியுடன்

விருதுகள்

  • தமிழக அரசின் பாவேந்தர் புகழ் பரப்புநர் விருது
  • பாவேந்தர் பாசறையின் பாவேந்தர் பைந்தமிழ்ச் செல்வர் விருது
  • பாண்டித்துரைத் தேவர் விருது
  • தலைநகர் தமிழ்ச்சங்கம் அளித்த ’தமிழவேள்’ விருது.
  • திருச்சிராப்பள்ளித் தமிழ்ச்சங்கம் வழங்கிய ’மகா வித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை தமிழ் மாமணி’ விருது
  • தமிழக அரசு வழங்கிய ‘பாவேந்தர் பாரதிதாசன்’ விருது
  • உலகத் தமிழர் பேரமைப்பு அளித்த ‘உலகப் பெருந்தமிழர்’ விருது

மதிப்பீடு

இரா. இளவரசு, தனித்தமிழ் இயக்கம், ஈழ விடுதலை இயக்கம் போன்றவற்றில் தொடர்புகொண்டு செயல்பட்டவர். கவிதை, ஆய்வு, தனித்தமிழ் சொற்பொழிவு எனப் பல களங்களில் இயங்கியவர். மாணவர்கள் பலரை ஊக்குவித்து இலவசமாகப் பலருக்குக் கற்பித்தவர். தனித்தமிழ் வளர்த்த தமிழ்ப் பேராசிரியராகவும், கிடைத்தற்கரிய, வெளி வராத பாரதிதாசனின் படைப்புக்களைத் தேடிச் சேகரித்துத் தொகுத்து நூல்களாக வெளியிட்டவராகவும் அறியப்படுகிறார்.

மறைவு

இரா. இளவரசு, ஜனவரி 23, 2015 அன்று காலமானார்.

பேராசிரியர், முனைவர் இரா. இளவரசு நினைவு நூல்
நினைவேந்தல்

முனைவர் இரா. இளவரசுவை நினைவு கூரும் வகையில் ‘நேற்றிருந்தார் இளவரசு’ என்னும் தலைப்பில் நூல் ஒன்று வெளியானது. திருச்சியில், ’பேராசிரியர் முனைவர் இரா இளவரசு நினைவு அறக்கட்டளை' ஏற்படுத்தப்பட்டு, அதன் மூலம் நூல் மின்னாக்கம், நூல் வெளியீடு உள்ளிட்ட பணிகள் நடைபெறுகின்றன.

நாட்டுடைமை

இரா. இளவரசுவின் நூல்களை, தமிழக அரசு, 2020-ல், நாட்டுடைமை ஆக்கியது.

நூல்கள்

  • கவிதை நூல்கள்
  • விடுதலை
  • வரும்புயல் நாங்கள்
ஆய்வு - கட்டுரை நூல்கள்
  • நண்பகல் ஞாயிறு
  • அலைகள் (நாட்குறிப்பு இலக்கியம்)
  • நிறைந்த அன்புடன் (அணிந்துரை இலக்கியம்)
  • பாரதிதாசன் பழம் புதுப்பாடல்கள்
  • பாரதிதாசன் பாடல்கள் தலைப்பு, முதற்குறிப்பு அகரவரிசை
  • பாரதிதாசன் கடிதங்கள்
  • இந்திய விடுதலை இயக்கத்தில் பாரதிதாசன்
  • தமிழும் தமிழரும்
  • பாவேந்தரின் உலக நோக்கு
  • முரசின் முழக்கம்
பதிப்பு
  • பாவேந்தம் 23 தொகுதிகள் (பதிப்பாசிரியர்களுள் ஒருவர்)

உசாத்துணை

‎


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 05-Aug-2024, 11:15:48 IST