under review

கலாநிலையம்: Difference between revisions

From Tamil Wiki
(Added First published date)
 
Line 61: Line 61:
* [https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt3k0xy&tag=#book1/ இலக்கிய சிந்தனையாளர் டி.என் சேஷாசலம். முனைவர் அ.நா.பெருமாள் இணையநூலகம்]
* [https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt3k0xy&tag=#book1/ இலக்கிய சிந்தனையாளர் டி.என் சேஷாசலம். முனைவர் அ.நா.பெருமாள் இணையநூலகம்]
* [http://www.viruba.com/final.aspx?id=VB0002726 தமிழியல் ஆய்வு வரலாறு முனைவர் இரா சிவக்குமார்]
* [http://www.viruba.com/final.aspx?id=VB0002726 தமிழியல் ஆய்வு வரலாறு முனைவர் இரா சிவக்குமார்]
{{Finalised}}
{{Finalised}}
{{Fndt|12-Apr-2023, 17:10:57 IST}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Latest revision as of 13:50, 13 June 2024

கலாநிலையம்

கலாநிலயம் (கலாநிலையம்) (1928 - 1935 ) டி.என் சேஷாசலம் நடத்திய பல்சுவை இதழ். தமிழில் பழந்தமிழ் இலக்கிய ரசனைக்கும் நாடகவியலுக்கும் பங்களிப்பாற்றியது.

தொடக்கம்

வழக்கறிஞரும் தமிழறிஞருமான டி.என். சேஷாசலம் 'கலாநிலயம்’ (கலாநிலையம்) என்ற பெயரில் ஜனவரி 5,1928-ல் முதல் வாரஇதழ் ஒன்றை தொடங்கினார். 'கலாநிலயம்' டி.என். சேஷாசலம் நடத்தி வந்த நாடகக் குழுவின் பெயர், அவரது இல்லத்தின் பெயரும் கூட. 'வியாழன் தோறும் வெளிவரும் வாரப் பத்திரிகை’ என்ற அறிவிப்புடன் வெளியான இவ்விதழின் நோக்கங்களாக சேஷாசலம், தமிழைப் பிழையறக் கற்றுக் கொள்ளுதல், ஆங்காங்கு உள்ள தமிழ்ப் புலவர்களை ஒருங்கிணைத்து இதழுக்கு எழுத வைத்து இலக்கிய வளம் சேர்த்தல், ஆங்கில மொழியின் பெருமையை, சிறப்பை அனைவரும் அறியும் பொருட்டு சிறந்த படைப்புகளை மொழிபெயர்த்து அளித்தல் போன்றவற்றைக் குறிப்பிட்டிருந்தார்.

ஆசிரியர்குழு

கே. ராஜகோபாலன் இந்த இதழின் உதவி ஆசிரியராக இருந்தார். பிற்காலத்தில் இவர் 'கலாநிலயம்’ ராஜகோபால் என்று அழைக்கப்பட்டார். எஸ். அனவரத நாயகம் பிள்ளை போன்றோரும் இதழின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தனர்.

உள்ளடக்கம்

இலக்கியம்

இலக்கண, இலக்கியங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளியான கலாநிலயம் இதழில் அக்காலத் தமிழ்ச் சான்றோர் பலர் பங்களித்தனர். ஆரம்ப கால இதழ்களில் நளவெண்பா, 'கம்பராமாயாணம்’ போன்றவை டி.என். சேஷாசலத்தின் விளக்க உரைகளுடன் தொடர்களாக வெளியாகியுள்ளன. அன்னம் - நளன் உரையாடலை ரோமியோ - ஜூலியட் உரையாடலுடன் தொடர்பு படுத்தி எழுதினார். 'சேக்கிழாரும் திருக்கண்ணப்பரும்', 'கம்பராமாயணம்', 'தேவாரமும் ஐந்திணையும்', 'அப்பர்', 'வில்லிபாரதம்', 'குலசேகரர் தத்துவ விளக்கம்', 'அகப்பொருள் விளக்கம்', 'நம்மாழ்வார் வைபவம்' தொடர்(கே. ராஜகோபாலாச்சாரியார்) 'குறுந்தொகை', 'அப்பரும் 64 கலைகளும்' எனப் பல இலக்கியக் கட்டுரைகள் கலாநிலயம் இதழில் தொடர்ந்து வெளியாகின.

புனைவு

கலாநிலயத்தில் சேஷாசலம் எழுதிய ’காந்திமதி என்னும் காந்தார நாட்டுக் கட்டழகி’ என்னும் தொடர்கதை வெளிவந்தது. 'தேவகி’ என்ற தலைப்பில் நாவல் ஒன்று தொடராக வெளியானது. 'வண்மையின் வரம்பு' (விடி சுந்தரலிங்கம்), 'விதியில்லா மதிபாலன்' (திம்மப்பா ஐயர்), 'மாரிமுத்துவின் மனைவி', 'உருபு மயக்கம் '(முத்துராமலிங்கம்) போன்ற சிறுகதைகளும் குறிப்பிடத்தக்கவை.

மொழியாக்கங்கள்

ஜூலியஸ் சீசர்’, 'புயல் (Tempest)’, 'ஒத்தெல்லோ’ போன்ற ஷேக்ஸ்பியரின் நாடகங்களைத் தமிழில் மொழிபெயர்த்துத் தொடராக வெளியிட்டுள்ளார் சேஷாசலம். பல ஆங்கிலக் கவிதைகளைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டார்.

கட்டுரைகள்

சேஷாசலம் 'மதுகரம்', 'சபரி' போன்ற புனைபெயர்களிலும் கலாநிலயத்தில் சில கட்டுரைகளை எழுதினார். 'சூரியன்' ,'வான சாஸ்திரம்' போன்ற தலைப்புகளில் அறிவியல் தொடர்கள் இடம் பெற்றன.' வர்த்தமானம்’ என்ற தலைப்பில் அக்காலத்து நிகழ்வுகள் தொகுத்தளிக்கப்பட்டுள்ளன. தெ.பொ.மீனாட்சிசுந்தரம் பிள்ளை எழுதிய மனம், அதன் உணர்வு, செயல்பாடுகள் பற்றிய சிந்தனைகளைப் பேசிய 'மானத சாத்திரம்’ எனும் தமிழின் ஆரம்பகால உளவியல் தொடர் வெளிவந்தது. குறுக்கெழுத்துப் போட்டி 'சொல்லூடாட்டம்’ என்ற தலைப்பில் இடம்பெற்றுள்ளது.

தர்மம் வளர்ப்பதற்காக ஜான்ராக் பெல்லர் கொடுத்திருக்கும் 300 கோடி, புதுச்சேரியில் நிலவரி குறைக்கப்பட்டது, இந்திய ராஜப் பிரதிநிதி விடுதலை இயக்கங்களை அடக்குவதற்காக இயற்றியிருக்கும் மூன்று அவசரச் சட்டங்கள், சந்திரபோஸ் ஸ்டேட்ஸ்மேன் பத்திரிகை மீது தொடுத்த மான நஷ்ட வழக்கு, சென்னையில் 'மர்க்காரா’ என்ற கப்பல் எரிந்தது, பாரதி நூல்கள் பறிமுதல் செய்யப்பட்டது எனப் பல்வேறு செய்திகள் கலாநிலயம் இதழ்களில் காணக் கிடைக்கின்றன.

விளம்பரங்கள்

கலாநிலயம் இதழ்களில், இதழ்தோறும் இலக்கிய நூல்களின் விற்பனை, வெளியீடு பற்றிய அறிவிப்புகள், விளம்பரங்கள் வெளியாகியுள்ளன. அவை தவிர்த்து 'நஞ்சன்கூடு பல்பொடி’, ' 'பவுண்டரி விளம்பரம்’, 'இன்ஸ்யூரன்ஸ் விளம்பரம்’ போன்ற விளம்பரங்களும் வெளியாகியுள்ளன.

தொகுப்புகள்

ஒவ்வொரு ஆண்டிலும் வெளியாகும் இதழ்கள் தொகுக்கப்பட்டு, முதல் வால்யூம், இரண்டாவது வால்யூம், மூன்றாவது வால்யூம் என்று விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கின்றன.

மதிப்புரை - அறிவிப்பு

பிறர் படைப்புகளின் மதிப்புரை கலாநிலயம் இதழில் வெளியாக வேண்டுமென்றால், மதிப்புரைக் கட்டணம் ரு. 10/- கட்ட வேண்டும் என்ற அறிவிப்பையும் கலா நிலயம் வெளியிட்டுள்ளது.

விலை

கலா நிலயம் தனிப்பிரதியின் விலை 3 அணா. ஆரம்பத்தில் உள்நாட்டு வருட சந்தா ரூ.7 ,வெளி நாட்டு சந்தா ரூ.9. சில வருடங்களுக்குப் பின் 7- ரூபாய் எட்டு அணா என்றும்வெளி நாட்டு சந்தா 9-ரூபாய் எட்டு அணாவாகவும் உயர்ந்தது. ஆரம்பத்தில் இருபது பக்கங்களும் சில மாதங்களுக்குபின் 16 பக்கங்களும் கொண்டிருந்தது.

பங்களிப்பாளர்கள்

மற்றும் பலர்

நிறுத்தம்

பொருளாதாரச் சூழல்களால் ஆகஸ்ட் 1935 இதழுக்குப்பின் கலாநிலயம் நின்று போனது.

ஆய்வு

தமிழியல் ஆய்வு வரலாறு. முனைவர் இரா.சிவக்குமார் (கலாநிலயம் இதழ் ஆய்வு)

இலக்கிய இடம்

கலாநிலயம் தமிழில் பழந்தமிழிலக்கிய ஆய்வுக்கும் புதியவகை பொழுதுபோக்கு எழுத்துக்கும் நாடகவியலுக்கும் இடமளித்த இதழ்.

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 12-Apr-2023, 17:10:57 IST