under review

ஜி.ஏ. நடேசன்: Difference between revisions

From Tamil Wiki
(படம் சேர்க்கப்பட்டது.)
(Link Added)
Line 82: Line 82:
* [https://www.ideasofindia.org/project/indian-review/ The Indian Review Magazine]   
* [https://www.ideasofindia.org/project/indian-review/ The Indian Review Magazine]   
* [https://www.tamildigitallibrary.in/book-search.php?tag=G.%20A.%20Natesan%20&%20Co ஜி.ஏ. நடேசன் & கோ நூல்கள்: தமிழ் இணையக் கல்விக்கழக நூலகம்]
* [https://www.tamildigitallibrary.in/book-search.php?tag=G.%20A.%20Natesan%20&%20Co ஜி.ஏ. நடேசன் & கோ நூல்கள்: தமிழ் இணையக் கல்விக்கழக நூலகம்]
* [https://www.amazon.in/G-Natesan-National-Awakening/dp/938233727X G.A. Natesan Life History: Amazon.in]
* ஜி.ஏ.நடேசன், பெ.சு. மணி, பூங்கொடி பதிப்பகம், முதல் பதிப்பு: ஏப்ரல், 2012
* ஜி.ஏ.நடேசன், பெ.சு. மணி, பூங்கொடி பதிப்பகம், முதல் பதிப்பு: ஏப்ரல், 2012


== அடிக்குறிப்பு ==
== அடிக்குறிப்பு ==
<references />{{Ready for review}}
<references />{{Ready for review}}

Revision as of 23:38, 23 January 2024

ஜி.ஏ. நடேசன்

ஜி.ஏ. நடேசன் (கணபதி அக்ரஹாரம் அண்ணாதுரை ஐயர் நடேசன்) (ஆகஸ்ட் 24, 1873 – ஜனவரி 10, 1949) எழுத்தாளர், இதழாளர், பதிப்பாளர், சுதந்திரப் போராட்ட வீர்ர். அரசியல்வாதி. ஆங்கிலத்தில் பல புத்தகங்களைப் பதிப்பித்தார். இதழ்களை நடத்தினார். காந்திக்கு நெருக்கமானவராக அறியப்பட்டார். காந்தி நடேசனுக்கு எழுதிய கடிதங்கள் குறிப்பிடத்தகுந்தவை.

பிறப்பு, கல்வி

கணபதி அக்ரஹாரம் அண்ணாதுரை ஐயர் நடேசன் எனும் ஜி.ஏ. நடேசன், தஞ்சை திருவையாறு அருகே உள்ள கணபதி அக்ரஹாரத்தில், ஆகஸ்ட் 24, 1873 அன்று, அண்ணாதுரை ஐயர் – அன்னபூரணி அம்மாள் இணையருக்குப் பிறந்தார். நடேசனின் தந்தை இரண்டு வயதிலேயே காலமானார். நடேசன் தாய்மாமாவின் ஆதரவுடன் பள்ளிக் கல்வியை கும்பகோணம் டவுன் ஹைஸ்கூலில் படித்தார். இடைநிலை வகுப்பை திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரியில் கற்றார். சென்னை மாநிலக் கல்லூரியில் இளங்கலை பயின்று பட்டம் பெற்றார்.

ஜி.ஏ. நடேசன் - மங்களம்மாள் நடேசன்

தனி வாழ்க்கை

ஜி.ஏ. நடேசன், மணமானவர். மனைவி, மங்களம்மாள். மகன்கள் மணியன் நடேசன், சந்திரன் நடேசன்.

ஜி.ஏ. நடேசன் நூல்

இலக்கிய வாழ்க்கை

ஜி.ஏ. நடேசன், சென்னை மாநிலக் கல்லூரி இலக்கிய சங்கத்தின் செயலாளராக இருந்தார். பல கூட்டங்களை ஒருங்கிணைத்து நடத்தினார்.

ஜி.ஏ. நடேசன், தனது இதழ்களான தி இந்தியன் பாலிடிக்ஸ் (The Indian Politics), தி இந்தியன் ரிவ்யூவில் (The Indian Review) பல்வேறு கட்டுரைகளை, தலையங்கங்களை எழுதினார். ‘What India wants – Autonomy within the Empire’ என்ற நூலை எழுதி வெளியிட்டார். அந்நூலில் அரசியலமைப்புச் சீர்திருத்தம், சுதந்திரம், சுயாட்சி, தனிமனித சுதந்திரம் போன்றவற்றின் தேவை குறித்து விரிவாக எழுதிக் கவனமேற்படுத்தினார். வில்லியம் வெட்டர்பனுக்கு அந்நூலைச் சமர்ப்பித்திருந்தார். காந்தி, தாதாபாய் நௌரோஜி, மதன்மோகன் மாளவியா, வி.எஸ். ஸ்ரீனிவாச சாஸ்திரி, அன்னிபெசண்ட் உள்ளிட்ட பலர் அந்த நூலுக்கு முன்னுரை, வாழ்த்துரைகளை எழுதியிருந்தனர். ஜி.ஏ. நடேசன் எழுதிய ஒரே நூலாக ‘What India wants அறியப்படுகிறது.

பதிப்பு

ஜி.ஏ. நடேசன், 1897-ல், ஜி.ஏ. நடேசன் & கோ என்ற பதிப்பக நிறுவனத்தைத் தொடங்கினார். அதற்கு முன் ’லட்சுமி கம்பெனி’ என்ற பெயரில் ஒரு புத்தக நிறுவனத்தை அவர் நடத்தி வந்தார். அதுவே பின்னர் ‘நடேசன் & கோ’வாக உருமாற்றம் பெற்றது. Indian Politics என்பது நடேசன் & கோ வெளியிட்ட முதல் நூல். அது 1898-ல் வெளிவந்தது. ஜி.ஏ. நடேசன் தொடர்ந்து தன் பதிப்பகம் மூலம் தேசிய விடுதலை உணர்வுகளை வளர்க்கும் நூல்கள் பலவற்றை வெளியிட்டார்.

1909 ஆம் ஆண்டு எச்.எஸ்.எல்.போலக் எழுதிய ‘மகாத்மா காந்தியின் வாழ்க்கை வரலாறு’ என்ற நூலை வெளியிட்டார். அதுவே முதன்முதலில் ஆங்கிலத்தில் வெளியான காந்தி பற்றிய நூலாக அறியப்படுகிறது. அன்னிபெசன்ட் மொழிபெயர்த்த கீதை தொடங்கி, பல்வேறு சுதந்திரப் போராட்டத் தலைவர்களின் உரைகள் மற்றும் எழுத்துக்களைத் தொகுத்து ஆங்கிலத்தில் மலிவு விலையில் வெளியிட்டார்.

தமிழில் ஜி.ஏ. நடேசன் நூல்களை அதிகம் பதிப்பிக்கவில்லை. அதுகுறித்து ம.பொ. சிவஞானம், தனது, ‘‘விடுதலைப் போரில் தமிழ் வளர்ந்த வரலாறு’ நூலில், ”தமிழ் நூல்களை வெளியிட முதலில் தேவைப்படுவது பணமன்று; தமிழ்ப்பற்று! அந்த மூலதனம் ஆங்கில மோகத்தில் மூழ்கிக் கிடந்த ஜி.ஏ.நடேசன் கம்பெனியாரிடம் அன்று இருக்கவில்லை.” என்று விமர்சித்தார்.

ஜி.ஏ. நடேசன் & கோவின் முதல் தமிழ் நூல், ‘நீதி நூல்கள்’ என்னும் கையடக்கப் பதிப்பு. எட்வர்ட் சக்கரவர்த்தி, பெற்றோர்க்குச் சொல்லிய புத்திமதிகள், எஸ். எம். நடேச சாஸ்திரி (1859-1906), எஸ். வி. இராமசாமி ஐயங்கார் போன்ற நூல்களையும் ஜி.ஏ. நடேசன் & கோ வெளியிட்டது.

தி இந்தியன் ரிவ்யூ இதழ்

இதழியல்

தி மெட்ராஸ் டைம்ஸ்

ஜி.ஏ. நடேசன், அயர்லாந்தைச் சேர்ந்த கிளைன் பார்லோ (Glyn Barlow) என்பவர் நடத்தி வந்த ‘தி மெட்ராஸ் டைம்ஸ்’ (The Madras Times) இதழில் பணியாற்றினார். இதழியல் நுணுக்கங்களைக் கற்றார்.

தி இந்தியன் பாலிடிக்ஸ்

1897-ல், ‘தி இந்தியன் பாலிடிக்ஸ்’ (The Indian Politics) என்ற ஆங்கில இதழைத் தொடங்கினார். பொது மக்களின் எண்ணங்களையும், கருத்துக்களையும் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடம் கொண்டுசேர்ப்பது மற்றும் சுதந்திரப் போராட்டத்திற்கு வலுசேர்ப்பது போன்றவை அந்த இதழின் நோக்கங்களாக இருந்தன. சிறிது காலம் வெளிவந்த இவ்விதழ் பின் நின்று போனது.

தி இந்தியன் ரிவ்யூ

ஜி.ஏ. நடேசன், சமூகப் பிரச்சனைகளில் தீவிர அக்கறை கொண்டு செயல்பட்டார். அதற்காகவே 1900-த்தில், தி இந்தியன் ரிவ்யூ (The Indian Review) என்ற ஆங்கில மாத இதழைத் தொடங்கினார். அந்த இதழில் நடேசன் எழுதிய தலையங்கங்கள் குறிப்பித்தகுந்தனவாகவும், பிரிட்டிஷார் மற்றும் காந்தி உள்ளிட்டோரால் மேற்கோள் காட்டப்படுபனவாயும் அமைந்தன. தேசம், அரசியல், பொருளாதாரம், கிராமப்புற மேம்பாடு, இலக்கியம் எனப் பல்வேறு செய்திகளைத் தாங்கி அவ்விதழ் வெளிவந்தது.

தி இந்தியன் ரிவ்யூ இதழில் காந்தி 50-க்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதினார். காந்தி மட்டுமல்லாமல், கோபாலகிருஷ்ண கோகலே, பாலகங்காதரத் திலகர், நேரு, ஜான் மாத்தாய், நாராயண் சந்தாவர்கர், சுரேந்திரநாத் பானர்ஜி, சப்ரு, ஆகா கான், வி. கிருஷ்ணசாமி ஐயர், மதன் மோகன் மாளவியா, சி.பி.ராமசாமி ஐயர், தாதாபாய் நௌரோஜி, ஆர்.சி.தத், சி.எஃப்.ஆன்ட்ரோஸ், பி.எஸ்.சிவசாமி ஐயர், வி.எஸ். ஸ்ரீனிவாச சாஸ்திரி, அன்னிபெசன்ட் மற்றும் பல பிரிட்டிஷ் எழுத்தளார்களின் கட்டுரைகளும் தி இந்தியன் ரிவ்யூ இதழில் வெளிவந்தன.

தி இந்தியன் ரிவ்யூ இதழ்கள் ஆண்டுதோறும் தொகுக்கப்பட்டு நூல்களாக வெளியிடப்பட்டன. 1949-ல் ஜி.ஏ. நடேசன் மறைந்தபின்னர் அவரது வாரிசுகள் இவ்விதழைப் பொறுப்பேற்று நடத்தினர். 1962-ல் இடை நின்ற இதழ், டி.டி. கிருஷ்ணமாச்சாரி மற்றும் டி.டி. வாசுவால், 1970-ல் மீண்டும் தொடங்கி நடத்தப்பட்டது. 1982-ல் நின்று போனது.

ஜி.ஏ. நடேசன் காந்தி, வி.எஸ். சீனிவாச சாஸ்திரி மற்றும் லக்ஷ்மி நரசு செட்டியுடன்
காந்தி, ஜி.ஏ. நடேசனுக்கு எழுதிய ஒரு கடிதம்

அரசியல்

ஜி.ஏ.நடேசன், இளமைப் பருவத்திலேயே இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டார். சுவாமி விவேகானந்தர் தொடங்கி பாரதியார் வரை பலருடன் நட்பில் இருந்தார்.

காந்தியுடனான தொடர்பு

காந்தி, தென்னாப்பிரிக்காவில் இருந்தபோதே அவருடன் ஜி.ஏ. நடேசன் கடிதத் தொடர்பு கொண்டிருந்தார். தென்னாப்பிரிக்காவில் காந்தியடிகள் நடத்திய சத்தியாக்கிரகத்திற்கு ஆதரவாக இருந்தார். சென்னையில் 'இந்திய – தென்னாப்பிரிக்கச் சங்கம்’ என்ற அமைப்பை ஏற்படுத்தி, அதன் சார்பில் பொருள் திரட்டி, தென்னாப்பிரிக்காவிலிருந்த காந்திக்கு அனுப்பினார்.

ஜி.ஏ. நடேசன் பற்றி காந்தி, “அந்த நாட்களில் திரு.ஜி.ஏ. நடேசன் ஒருவர்தான் வெளிநாடுகளில் இருந்த இந்தியர்களுடைய துன்பங்களை ஆராய்ந்தவர்; மதிப்பிற்குரிய உதவியாளர்; அவர்களுடைய விஷயங்களை நன்கு எடுத்துச் சொல்பவர். இப்படிப்பட்டவர் இந்தியாவில் அப்போது திரு.ஜி.ஏ. நடேசன் ஒருவரே என்றும் சொல்லலாம். எனக்கும் அவருக்கும் கடிதத் தொடர்பு உண்டு. வெளியேற்றப்பட்டவர்கள் சென்னையைச் சேர்ந்த போது அவர்களுக்கு திரு. நடேசன் முழு உதவியும் செய்தார்.[1]" என்று தனது கடிதங்களில் குறிப்பிட்டார்.

காந்தியின் தமிழக வருகை

காந்தி, முதன்முதலாகத் தமிழ்நாட்டுக்கு 1915-ல் வந்தார். அப்போது சென்னை ஜார்ஜ் டவுனில் தம்புச் செட்டித் தெருவில் இருந்த ஜி.ஏ. நடேசன் இல்லத்தில் தங்கினார். ஏப்ரல் 17, 1915 முதல் மே 8 1915 வரை சுமார் 21 நாட்கள் காந்தி அங்கு தங்கியிருந்தார். நடேசனின் வீட்டில்தான் சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரி முதன்முதலில் காந்தியைச் சந்தித்தார்.

சென்னை மாகாண மாநாடு

ஜுன், 19154-ல் நெல்லூரில் நடைபெற்ற சென்னை மாகாண மாநாட்டில் காந்தியுடன் ஜி.ஏ. நடேசன் கலந்துகொண்டார். காந்தியைப் பாராட்டி ஒரு தீர்மானத்தையும் அம்மாநாட்டில் நிறைவேற்றினார்.

லிபரல் கட்சி

ஜி.ஏ. நடேசன், பிற்காலத்தில் காந்தியின் சில கொள்கைகளில் மனம் வேறுபட்டு வி.எஸ்.ஸ்ரீனிவாச சாஸ்திரி தொடங்கிய இந்தியன் லிபரல் கட்சியில் இணைந்தார். 1922-ல், கட்சியின் தேசிய இணைச் செயலாளராகப் பொறுப்பேற்றார்.

ஜி.ஏ. நடேசன் - காந்தி மற்றும் கஸ்தூரி பாயுடன்

அமைப்புப் பணிகள்

ஜி.ஏ. நடேசன், 1923 மற்றும் 1931-ல், சென்னை மாகாணச் சட்டமன்றத்தின் நியமன உறுப்பினராகச் செயல்பட்டார். 1933-ல் இந்திய சுங்கவரி வாரியத்தின் முழுநேர உறுப்பினராகப் பணியாற்றினார். அப்போது உருவான மில் தொழிலாளர்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைத்தார். கனடா நாட்டில் நடைபெற்ற பிரிட்டிஷ் சாம்ராஜ்ய பார்லிமெண்டரி குழுக் கூட்டத்தில் (Empire Parliamentary Association) கலந்து கொண்டார். 1938-ல் சென்னையின் ஷெரீப்பாக நியமிக்கப்பட்டார்.

ஜி.ஏ. நடேசன், சென்னை நகராட்சியின் உறுப்பினராகத் தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்டுப் பல ஆண்டுகள் பணியாற்றினார். நிர்வாகம் மற்றும் அரசுத் துறை சார்ந்த விஷயங்களில் சீர்திருத்தங்கள் மற்றும் வெளிப்படைத்தன்மையைச் செயல்படுத்னார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் பல்வேறு பொறுப்புகள் ஏற்றுப் பணியாற்றினார். பல நிர்வாகச் சீர்திருத்தங்களை நடைமுறைக்குக் கொண்டு வந்தார்.

மறைவு

ஜி.ஏ. நடேசன், ஜனவரி 10, 1949-ல், காலமானார்.

மதிப்பீடு

ஜி.ஏ. நடேசன், தனது இதழ்கள் மற்றும் நூல்கள் மூலம் கல்வி கற்ற இந்தியர்களிடையே தேச விடுதலை உணர்வைத் தூண்டினார். இந்தியர்களின் பிரச்சனை பற்றி பிரிட்டிஷாரின் கவனத்துக்குக் கொண்டு சென்றார். காந்தியின் தமிழ்நாட்டு நிகழ்வுகள் பலவற்றுக்கு உறுதுணையாகச் செயல்பட்டார்.

தனது நூல்கள் மற்றும் இதழ்கள் மூலம் தேச விடுதலையைக் கற்றவர்களிடையே பரப்பியதும், பிரிட்டிஷாரிடம் இந்தியர்கள் பற்றிய சிறந்த புரிதலை ஏற்படுத்தியதும் ஜி.ஏ. நடேசனின் முக்கிய சாதனைகளுள் ஒன்றாக மதிப்பிடப்படுகிறது.

உசாத்துணை

அடிக்குறிப்பு

இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.