standardised

இரட்டைமணிமாலை: Difference between revisions

From Tamil Wiki
(Standardised)
(Moved to Standardised)
Line 102: Line 102:
* [[பாட்டியல்]]
* [[பாட்டியல்]]
* [[சிற்றிலக்கியங்கள்]]
* [[சிற்றிலக்கியங்கள்]]
{{Ready for review}}


{{Standardised}}
[[Category:சிற்றிலக்கிய வகைகள்]]
[[Category:சிற்றிலக்கிய வகைகள்]]
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 17:15, 24 February 2022

இரட்டைமணிமாலை தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். மணிகளைக் கோர்ப்பது போல் வெண்பா, கட்டளைக் கலித்துறை என்னும் பாவகைகளால் அல்லது வெண்பா, விருத்தப்பா என்னும் பாவகைகளால் அமையும் இந்த இலக்கியவகை அந்தாதியாக அமைந்திருக்கும்[1]. மொத்தம் இருபது பாடல்களைக் கொண்டிருக்கும்.

வரலாறு

இரட்டைமணிமாலை என்னும் இலக்கிய வகையில் முதல் நூலைப் பாடியவர் காரைக்காலம்மையார். இவர் கி.பி 4 ஆல்லது 5-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். இது முதலில் கட்டளைக் கலித்துறையும் அடுத்து நேரிசை வெண்பாவும் எனத் தொடர்ந்து வகைக்குப் பத்து பாடல்களாக மொத்தம் இருபது பாக்களைக் கொண்டு அந்தாதித்தொடையால் ஆக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு இரட்டைமணிமாலை பாடியதாகச்சான்று இல்லை.

அடுத்து எழுதப்பட்டது கபிலதேவ நாயனார் பாடிய இரண்டு நூல்கள்(மூத்தநாயனார் திருவிரட்டைமணிமாலை, சிவபெருமான் திருவிரட்டைமணிமாலை). அவற்றிற்குப் பின்னர் இரட்டைமணிமாலை என்னும் சிற்றிலக்கிய வடிவம் தோன்றியது.

இலக்கணக் குறிப்புகள்

வடமொழி கலந்த தமிழை மணிப்பவள நடை என்றதைப்போல வெவ்வேறு உவமைகளை வெவ்வேறு ஆசிரியர்கள் வெண்பாவுக்கும் கட்டளைக் கலித்துறைக்கும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

”இரட்டைமணிமாலையென்பது பவளமும் முத்துமாகிய இருவேறு மணிகள் மீஙிடைந்தமாலை போல வெண்பாவும் கட்டளைக் கலித்துறையும் அந்தாதியாக அமையவும், உறும் முதலும் மண்டலிக்கவும் இருபது செய்யுட்களாற் பாடப்பெறும் பிரபந்தம் - குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு–பக்கம் 125” என உ.வே.சா குறிப்பிட்டுள்ளார்.

”வெண்பா என்பது வைரமணியை ஒத்தது என்றும் கட்டளைக் கலித்துறை மரகதமணியை ஒத்தது என்றும் கொண்டு, வைரமும் மரகதமும் விரவத்தொடுத்தமாலை போல வெண்பாவும் கட்டளைக் கலித்துறையும் விரவத்தொடுக்கப் பட்டதாகலின், இந்த இலக்கிய வகை இரட்டைமணிமாலை என்னும் பெயர் பெற்று வழங்குகிறது” என்று முனைவர் ந. வீ. செயராமன் குறிப்பிடுகின்றார். (சிற்றிலக்கியத் திறனாய்வு பக். 116)

இரட்டைமணிமாலையின் இலக்கணத்தை விளக்கும் பாட்டியல் நூல்கள்:

  • பன்னிரு பாட்டியல்
  • வெண்பாப் பாட்டியல்
  • நவநீதப் பாட்டியல்
  • சிதம்பரப் பாட்டியல்
  • இலக்கண விளக்கப் பாட்டியல்
  • பிரபந்த மரபியல்
  • பிரபந்த தீபம்
  • பிரபந்த தீபிகை
  • தொன்னூல் விளக்கம்
  • முத்துவீரியம்
  • சாமிநாதம்

எடுத்துக்காட்டு

தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலையில் இருந்து முதல் மூன்று பாடல்கள் எடுத்துக் காட்டுக்காகத் தரப்பட்டுள்ளன[2]. முதல் பாடல் நேரிசை வெண்பாவில் அமைய இரண்டாம் பாடல் கட்டளைக் கலித்துறையில் அமைந்துள்ளது. மூன்றாம் பாடல் மீண்டும் நேரிசை வெண்பாவில் உள்ளது. இவ்வாறு இருபது பாடல்களும் மாறிமாறி வருகிறது.

முதற்பாடல் "மான்" என்ற சொல்லில் முடிய இரண்டாம் பாடல் "மாகம்" என்று தொடங்குகிறது. இரண்டாம் பாடல் அங்கவர்க்கே என முடிய அடுத்த பாடல் அங்கம் எனத் தொடங்குகிறது. இவ்வாறே இருபது பாடல்களும் அந்தாதியாக அமைகின்றன.

நேரிசை வெண்பா

சீர்பூத்த செல்வத் திருத்தில்லை மன்றகமென்
கார்பூத்த நெஞ்சகமாகக் கைக்கொண்டாள் - ஏர்பூத்துள்
ஐய மொருங்கீன்ற வந்நுண் மருங்கொசிய
வைய மொருங்கீன்ற மான்.

கட்டளைக் கலித்துறை

மாகந் திருவுரு மன்றுடை யார்க்கெனின் மற்றுனக்கோர்
பாகந் தரவொர் படிவமுண் டேபர மானந்தமே
ஏகந் தருந்திரு மேனிய தாக்கிமற் றெண்ணிறந்த
ஆகந் தருவது மம்மைநின் னாடல்கொ லங்கவர்க்கே.

நேரிசை வெண்பா

அங்கம் பகுந்தளித்த வம்பலத்தார்க் காம்பலங்கைச்
சங்கொன்று கொங்கைத் தழும்பொன்றே - நங்கையுனை
வந்திப்பார் பெற்றவர மற்றொருநீ வாய்த்ததிரு
உந்திப்பா ரேழு மொருங்கு.

இரட்டைமணிமாலைகள் சில

  • திரு இரட்டைமணிமாலை
  • மூத்தநாயனார் திருஇரட்டை மணிமாலை
  • சிவபெருமான் திருவிரட்டைமணிமாலை
  • பழனி இரட்டைமணிமாலை
  • களக்காட்டுச் சத்யவாசகர் இரட்டைமணிமாலை
  • தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை (குமரகுருபரர்)
  • சிவகாமியம்மை இரட்டைமணிமாலை
  • சிவபெருமான் திரு இரட்டைமணிமாலை
  • திருநாரையூர்ப் பிள்ளையார் இரட்டைமணிமாலை (நம்பியாண்டார்நம்பி)
  • கேசவப் பெருமாள் இரட்டைமணிமாலை
  • சித்திவிநாயகர் இரட்டைமணிமாலை
  • கொக்குவில் சித்திவிநாயகர் இரட்டைமணி மாலை
  • நாகைத்திருவிரட்டை மணிமாலை
  • வண்ணைத் திருமகள் இரட்டைமணிமாலை
  • விரகந்தி விநாயகர் இரட்டைமணிமாலை
  • பாற்கரசேதுபதி இரட்டைமணிமாலை
  • மதுரை மீனாட்சியம்மை ஈரட்டைமணிமாலை

துணைநூற்பட்டி

  1. தொல்காப்பியம் – கழகப் பதிப்பு, 1998
  2. திருவிரட்டைமணிமாலை - காசிமடத்துப் பதிப்பு, 1963
  3. பெரியபுராணம் - காசிமடத்துப் பதிப்பு, 1963
  4. குமரகுருபரர் பிரபந்தத்திரட்டு - காசிமடத்துப் பதிப்பு, ஜூன் 01, 1961
  5. மூத்தநாயனார் திருவிரட்டைமணிமாலை - 11-ஆம் திருமுறை - காசிமடத்துப் பதிப்பு
  6. சிவபெருமான் திருவிரட்டைமணிமாலை - 11-ஆம் திருமுறை - காசிமடத்துப் பதிப்பு
  7. திருநாறையூர். விநாயகர் திருவிரட்டைமணிமாலை - 11-ஆம் திருமுறை - காசிமடத்துப் பதிப்பு
  8. மதுரை மீனாட்சியம்மை விநாயகர் திருவிரட்டைமணிமாலை - குமரகுருபரர் பிரபந்தத் திரட்டு - காசிமடத்துப் பதிப்பு, ஜூன் 01, 1961
  9. தில்லைச் சிவகாமியம்மைத் திருவிரட்டைமணிமாலை - குமரகுருபரர் பிரபந்தத் திரட்டு - காசிமடத்துப் பதிப்பு, ஜூன் 01, 1961
  10. பன்னிரு பாட்டியல் - கழகப் பதிப்பு, 1970
  11. வெண்பாப்பாட்டியல் - கழகப் பதிப்பு, 1969
  12. நவநீதப் பாட்டியல் - உ.வே.சா. பதிப்பு, 1961
  13. சிதம்பரப் பாட்டியல் - தஞ்சை சரசுவதி மகால் பதிப்பு, 2002
  14. இலக்கண விளக்கப் பாட்டியல் - தஞ்சை சரசுவதி மகால் பதிப்பு, 1974
  15. பிரபந்த மரபியல் பிற்சேர்க்கை - 2 - தஞ்சை சரசுவதி மகால் பதிப்பு
  16. பிரபந்த தீபம் - தமிழ்ப் பதிப்பு, சென்னை-96, ஜூன் 14, 1980
  17. பிரபந்த தீபிகை - தஞ்சை சரசுவதி மகால் பதிப்பு - பிற்சேர்க்கை 3
  18. தொன்னூல்
  19. சாமிநாதம் - ஆ.ப. கழகம், 1975
  20. சிற்றிலக்கியத் திறனாய்வு - இலக்கியப் பதிப்பகம், சென்னை–18, 1980

அடிக்குறிப்புகள்

  1. சதாசிவம், ஆ., 1966.
  2. ஸ்ரீ குமரகுருபரர் சுவாமிகள் பிரபந்தத் திரட்டு நூலில் இருந்து எடுக்கப்பட்டது.

உசாத்துணைகள்

இதர இணைப்புகள்



⨮ Standardised


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.