under review

நிகழ் (இதழ்): Difference between revisions

From Tamil Wiki
(category & stage updated)
m (Madhusaml moved page நிகழ் to நிகழ் (இதழ்) without leaving a redirect)
(No difference)

Revision as of 03:57, 16 February 2022

நிகழ் (1983- 1996 ) ஞானி நடத்திய சிற்றிதழ். நிகழ் இலக்கியம் மற்றும் மார்க்ஸிய ஆய்வுகளுக்காக நடத்தப்பட்டது. தமிழில் நவீன இலக்கியத்தை மார்க்ஸிய அடிப்படையில் ஆராய்ந்த கட்டுரைகளை வெளியிட்டது. பல புதிய எழுத்தாளர்களை அறிமுகம் செய்தது.

வரலாறு

மார்க்ஸிய ஆய்வுக்காகவும் இலக்கியத்திற்காகவும் 1983ல் கோவையிலிருந்து ஞானி அவருடைய நண்பர்கள் சிலரோடு இணைந்து நிகழ் இதழை தொடங்கினார். தொடக்கத்தில் சுகுமாரன் ஆசிரியராக இருந்தார். அடுத்து நாவலாசிரியர் க. ரத்தினம் ஆசிரியராக இருந்தார். 1985ல் நிகழ் ஏழு இதழ்களுடன் நின்றுவிட்டது. 1988ல் கண்பார்வை இழந்து பணி ஓய்வுபெற்ற ஞானி நிகழ் இதழை மீண்டும் தொடங்கினார். மும்மாத இதழாக 1996 வரை நடத்தினார். இரண்டாம் கட்டத்தில் 25 இதழ்கள் வெளியாயின.

உள்ளடக்கம்

முதல்கட்ட நிகழ் இதழ் பெரும்பாலும் இலக்கிய இதழாகவே வெளிவந்தது. சுந்தர ராமசாமியின் ஜே. ஜே. சில குறிப்புகள் நாவல் குறித்து விரிவான உரையாடலை நிகழ் வெளியிட்டது. டி. எஸ். எலியட்டின் இலக்கியக் கொள்கை என்ற ஞானியின் விரிவான கட்டுரை நிகழில் இடம் பெற்றது. கன்னட மொழியிலிருந்து வீ.அரசு மொழிபெயர்த்த கவிதைகள், விமலாதித்த மாமல்லன், கோணங்கி ஆகியவர்களின் சிறுகதைகள் தொடக்ககால நிகழ் இதழில் வெளிவந்தன.

இரண்டாம் கட்ட நிகழ் இலக்கியம், மார்க்ஸிய விமர்சனம் ஆகிய இரண்டையும் பேசுபொருளாகக் கொண்டிருந்தது. சோவியத் ருஷ்யாவின் வீட்சிக்கு பின் மார்க்சியம் தன்னை எப்படி மறுஅமைப்பு செய்யவேண்டும் என்னும் கோணத்தில் எஸ். என். நாகராஜன் முன்வைத்த ஆய்வுக் கட்டுரைகளை தொடர்ந்து வெளியிட்டது. ரவி சீனிவாஸ் க.பூர்ணசந்திரன் ஆகியோர் புதிய பொருளியல், சமூகவியல் போக்குகளைப் பற்றி எழுதினார்கள். பின்நவீனத்துவம் குறித்த கட்டுரைகளும் நிகழில் இடம்பெற்றன. எம்.டி.முத்துக்குமாரசாமி, நாகார்ஜுனன், நோயல் இருதயராஜ் முதலியோர் எழுதினர்.

நிகழ் இதழ் அன்று யதார்த்தவாத கதைமுறைகளை கடந்து புதிய பாணியில் எழுதப்பட்ட படுகை (ஜெயமோகன்) போன்ற கதைகளை வெளியிட்டது. கோணங்கி, காவேரி லக்ஷ்மிகண்ணன், தேவிபாரதி, நாஞ்சில் நாடன், சுப்ரபாரதிமணியன் முதலியவர்களின் சிறுகதைகளும் வெளியிடப்பட்டன. தேவதேவன், மனுஷ்ய புத்திரன், பாப்லோ அறிவுக்குயில், அண்ணாத்துரை கரிகாலன், அறிவன், எஸ்தர், ஜே.ஆர்.வி.எட்வர்டு கவிதைகள் வெளிவந்தன. தாமரை ஆறுமுகம், அன்பு வசந்த குமார், கண குறிஞ்சி, க.ரத்தினம், பொன். சந்திரன்,சிங்கராயர், ரவி சீனிவாஸ், ஜீவ ஒளி, ஜி. எஸ். ஆர். கிருஷ்ணன் போன்றவர்கள் பங்களித்தனர்.

மொழியாக்கங்கள் தொடர்ச்சியாக வெளிவந்தன. ஜெரோமி ரிப்சின்சி என்பவரின் அர்ஜென் என்ற உலகளவில் புகழ் பெற்ற நூல் குறித்து, சிங்கராயர் எழுதினார். தரம்பாலின் ஆய்வுகளைத் தொகுத்து ஜி. எஸ். ஆர். கிருஷ்ணன் எழுதினார்.எரிக் ப்ராம், மாஸ்லோ, விக்டர் ப்ராங்கள் முதலியவர்களைப் பற்றிய கட்டுரைகளையும் நிகழ் வெளியிட்டது. தலித்தியம் பற்றிய விவாதங்களை நிகழ் ஊக்குவித்தது. தலித்தியம், பெண்ணியம் நோக்கிலான கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள் முதலியவற்றை நிகழ் வெளியிட்டது.

விவாதங்கள்

  • நிகழ் இதழில் வெளிவந்த இலக்கிய, அரசியல் விவாதங்கள் தமிழ் அறிவுச்சூழலில் முக்கியமானவை
  • பிரமிள் எழுத்தாளர் சுஜாதா ஃப்ரிஜோ காப்ராவின் நூலை முன்வைத்து நவீன அறிவியலை மதத்திற்குள் இழுக்கும் திரிபு முயற்சிகளை கண்டித்து எழுதினார்.
  • ஸ்டீபன் ஹாக்கிங்ஸ் குறித்து விமர்சனம் செய்து ஜீவ ஒளி எழுதினார்.
  • இந்து, இந்தி, இந்தியா என்று எஸ். வி. ராஜதுரை எழுதிய நூலை விமர்சித்து ஜி. எஸ். ஆர். கிருஷ்ணன் எழுதினார். எஸ். வி. ராஜதுரை மறுப்புரை தந்தார்.
  • விடுதலை இறையியல் பற்றிய ஃபாதர் காப்பனின் கருத்துகளைச் சா. தா. செல்வராசு தொகுத்து எழுதினார். அருள்திரு அல்போன்சு இன்னொரு கட்டுரை எழுதினார். விடுதலை இறையியலுக்குள் மக்களுக்கான இறையியல் குரல் இல்லை என்று மறுத்து டேவிட் சித்தையா எழுதினார். அவருக்கு அல்போன்சு பதில் தந்தார்.
  • தேவி பிரசாத் சட்டோபாத்யாயவின் உலகாயுதம் என்ற புகழ்பெற்ற நூலின்ஒரு கட்டுரையைச் சிங்கராயர் தொகுத்துத் தந்தார். ஜெயமோகன், தேவி பிரசாத்தின் பொருள் முதல்வாத எல்லைகள் குறித்து எழுதினார். இந்திய மெய்யியல் குறித்துக் கலாநிதி நா. சுப்பிரமணியன் எழுதிய விரிவான கட்டுரையும் நிகழில் இடம்பெற்றது.
  • காந்தியின் சத்தியாகிரகம் என்ற போர்முறையை கிராம்சி மறுத்தார் என்றும் ஏற்றுக்கொண்டார் என்றும் விவாதக் கட்டுரைகள் நிகழில் வந்தன.

தொகைநூல்கள்

நிகழ் இதழில் வெளிவந்த கட்டுரைகளை பின்னாளில் ஞானி ஐந்து நூல்களாக தொகுத்தா

  • இந்தியாவில் தத்துவம் கலாச்சாரம்
  • அறிவியல், அதிகாரம், ஆன்மீகம்
  • மார்க்சியம்:தேடலும் திறனாய்வும்
  • படைப்பியல்: சில சிகரங்களும் வழித் தடங்களும்
  • நிகழ் மதிப்புரைகள் 100.

அறிவியக்க இடம்

“நிகழ் உண்மையில் தமிழகத்தில் ஒரு மாபெரும் கலாச்சார இயக்கத்தில் ஒரு பகுதியாக இருந்து தீவிரமாகவும் உண்மையாகவும் செயல்பட்டது. வளமான மார்க்சியத்தைக் காப்பாற்றியது நிகழின் ஒரு சாதனை. எஸ். என். நாகராஜன் தமிழகச் சூழலில் தீவிரமாகச் செயல்பட நிகழ் ஒரு கருவியாக இருந்தது” என ஞானி தன் இதழின் பங்களிப்பை மதிப்பிடுகிறார் (காலச்சுவடு இதழ்)

நிகழ் இதழ் தமிழில் ஆற்றிய பங்களிப்புகள்

  • மார்க்ஸியத்தின் பண்பாட்டுப் பார்வையை விரியச்செய்ததில் முக்கியமான பங்களிப்பாற்றியது. ஐரோப்பிய மார்க்ஸிய பார்வையை அறிமுகம் செய்து பண்பாட்டாய்வில் அல்தூசர் முதலிய புதிய சிந்தனையாளர்களின் பார்வையை விவாதித்தது. எஸ்.என்.நாகராஜன் இத்தளத்தில் முன்வைத்த புதிய பார்வைகளை வெளியிட்டது.
  • தலித்தியம், விடுதலை இறையியல் போன்று உருவாகி வந்த புதிய சிந்தனைப் போக்குகளுக்கான விவாதக்களத்தை அமைத்தது,
  • பழைய யதார்த்தவாதக் கதைசொல்லல் முறையை மீறி உருவாகி வந்த புதிய கதைகளை வெளியிட்டு இலக்கியத்தில் அடுத்த நகர்வுக்கு களம் அமைத்தது.

உசாத்துணை


இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.