being created

வெள்ளிவீதியார்: Difference between revisions

From Tamil Wiki
(category and template text moved to bottom of text)
(Corrected text format issues)
Line 238: Line 238:


[http://www.tamilsurangam.in/literatures/ettuthogai/index.html எட்டுத்தொகை நூல்கள், தமிழ் சுரங்கம்]
[http://www.tamilsurangam.in/literatures/ettuthogai/index.html எட்டுத்தொகை நூல்கள், தமிழ் சுரங்கம்]
   
   
[[Category:புலவர்கள்]]
[[Category:புலவர்கள்]]
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
{{Being created}}
{{Being created}}

Revision as of 14:24, 3 July 2023

வெள்ளிவீதியார், சங்க காலப் பெண்பாற் புலவர்களில் ஒருவர். சங்கத்தொகை நூல்களில் 13 பாடல்கள் இவரால் பாடப்பட்டவை.

வாழ்க்கைக் குறிப்பு

வெள்ளிவீதியாரது இயற்பெயர் தெரியவில்லை. இவர் பெண்பாற்புலவர் என அறிஞர்கள் கருதுகின்றனர். ஆதிமந்தி போலக் காதலனைத் தேடிப் பித்துப் பிடித்து நான் அலையமாட்டேன் என தனது பாடலில் குறிப்பிடுவதைக் கொண்டு வெள்ளிவீதியாரும் ஆதிமந்தியாரும் ஒரே காலத்தவர் எனக் கருதப்படுகிறது. வெள்ளிவீதியாரின் பாடல்கள் அனைத்தும் அகத்திணைப் பாடல்களாக உள்ளன. வெள்ளிவீதியார், தம் சொந்த வாழ்க்கையில் அனுபவித்தவற்றையே பாடல்களாக வடித்துள்ளதாக நச்சினார்க்கினியர் தனது உரையில் குறிப்பிடுகிறார்.

சங்ககால பெண்பாற் புலவர்களில் ஒருவரான ஔவையார் எழுதிய பாடலொன்றில் (அகம் 147) வெள்ளிவீதியார் பற்றிய குறிப்பு உள்ளது. தலைவன் பொருள்செய்ய பிரியப் போகும்போது, தலைவி தானும் வெள்ளிவீதி போலத் தலைவனுடன் செல்ல விரும்புவதாகக் குறிப்பிடுகிறாள். வெள்ளிவீதியார் பொருளீட்டச் சென்ற தன் கணவனுடன் தானும் சென்றார் எனத் தெரியவருகிறது.

இலக்கிய வாழ்க்கை

வெள்ளிவீதியார் இயற்றியதாக கீழ்காணும் 13 பாடல்கள் சங்க இலக்கிய தொகையில் இடம்பெற்றுள்ளன;

பாடல்கள்வழி அறியவரும் செய்திகள்

  • வாகை மரத்தின் காய்ந்த நெற்றுகள் (உழிஞ்சில் நெற்று) காற்றில் கலகலக்கும்போது கயிற்றில் ஏறி ஆடுவோர் முழக்கும் பறையைப் (ஆடுகளப் பறையைப்) போல ஒலியெழுப்பும்.
  • குறுக்கைப் பறந்தலை என்னுமிடத்தில் நடந்த போரில் திதியன் என்ற அரசன் அன்னியின் புன்னையை வெட்டி வீழ்த்தினான். அதைக் கொண்டாட வயிரியர் யாழிசைத்துப் பாடினர்
  • ஆட்டன் அத்தி காவிரி வெள்ளத்தில் அடித்துக்கொண்டுபோகப்பட, கரைவழியே ஊர் ஊராகச் சென்று “என் கணவனைக் கண்டீரா?” என்று ஆதிமந்தி தேடினாள்
  • இவ்வாறு உறவுகளோடு மகிழ்ந்து விழாக் கொண்டாடும் மக்கள் தாமும் தம் சுற்றமும் மகிழ்ந்து வாழ தெய்வத்திடம் வேண்டி நின்றனர்.
  • கரும்பு வயல்களில் மணலால் உயர்ந்த பாத்திகள் போடப்பட்டிருந்தன.
  • பொன்மாலை அணிந்த வானவரம்பன் ஒரு சேர மன்னன். கடலிலிருந்து புயல்காற்று வீசுவது போல வேல் வீசி கோட்டைகளைத் தாக்குபவன்.

பாடல்கள்

சங்க இலக்கிய தொகை நூலில் இடம் பெற்றுள்ள வெள்ளிவீதியாரரின் 13 பாடல்களும் அவற்றிற்கான எளிய பொருளும்

அகநானூறு 45

வாடல் உழுஞ்சில் விளை நெற்று அம் துணர்
ஆடுகளப் பறையின், அரிப்பன ஒலிப்ப,
கோடை நீடிய அகன் பெருங் குன்றத்து,
நீர் இல் ஆர் ஆற்று நிவப்பன களிறு அட்டு,
ஆள் இல் அத்தத்து உழுவை உகளும்
காடு இறந்தனரே, காதலர். மாமை,
அரி நுண் பசலை பாஅய், பீரத்து
எழில் மலர் புரைதல்வேண்டும். அலரே,
அன்னி குறுக்கைப் பறந்தலை, திதியன்
தொல் நிலை முழுமுதல் துமியப் பண்ணி,
புன்னை குறைத்த ஞான்றை, வயிரியர்
இன் இசை ஆர்ப்பினும் பெரிதே. யானே,
காதலற் கெடுத்த சிறுமையொடு, நோய் கூர்ந்து,
ஆதிமந்தி போல, பேதுற்று
அலந்தனென் உழல்வென்கொல்லோ பொலந்தார்,
கடல் கால் கிளர்ந்த வென்றி நல் வேல்,
வானவரம்பன் அடல் முனைக் கலங்கிய
உடை மதில் ஓர் அரண் போல,
அஞ்சுவரு நோயொடு, துஞ்சாதேனே!

(திணை - பாலை)

கயிற்றில் ஏறி ஆடுவோர் பறையை முழக்கிக்கொண்டு ஆடுவர். கோடையில் வாடிய வாகை நெற்றுக்கள் அவர்களின் பறை முழக்கம் போல ஒலிக்கும். அப்படி ஒலிக்கும் கடுமையான கோடைக்காலம் அது. அந்தக் காலத்தில் குன்றத்து வழியில் என் காதலர் செல்கிறார். அது தண்ணீர் இல்லாத, நடமாட்டம் இல்லாத வழி. யானையைக் கொன்றுவிட்டு வேங்கைப்புலி விளையாடும் வழி. இதனை எண்ணி என் மாந்தளிர் போன்ற மேனி பசலை நோய் கூர்ந்து துன்பம் அடையட்டும். பீர்க்கம்பூ போன்ற பசலைநிறம் கொள்ளட்டும். அதனைப் பார்த்து ஊரார் அலர் தூற்றட்டும். குறுக்கைப் பறந்தலைப் போர்க்களத்தில் திதியன் என்பவன் அன்னி அரசன் காவல்மரமான புன்னையை வெற்றிச் சாய்த்தான். அப்போது யாழிசைப் பாணர்கள் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர். அப்போது அவர்கள் செய்த ஆரவாரம் போல ஊர் என்னை அலர் தூற்றட்டும்.

ஆதிமந்தி காதலன் பெயரைச் சொல்லிக்கொண்டு பித்தேறி ஊர் ஊராகத் திரிந்து துன்புள்ளாள். ஆதிமந்தி போல நானும் பித்தேறி, அலர் தூற்றுகிறார்களே என்று பித்தேறி அலைவேனோ?பொன்மாலை அணிந்த வானவரம்பன்என்ற சேர மன்னன் கடலிலிருந்து புயல்காற்று வீசுவது போல வேல் வீசித் தாக்குபவன். அவனுடைய தாக்குலுக்கு ஈடு கொடுக்க முடியாமல் துன்புறும் ஒன்றைமதில் கொண்ட கோட்டைக்குள் இருப்பவர்கள் போல காதலனை எண்ணி அச்சம் கொண்ட நோயோடு தூங்காமல் கிடக்கிறேனே!

அகநானூறு 362

பாம்புடை விடர பனி நீர் இட்டுத் துறைத்
தேம் கலந்து ஒழுக, யாறு நிறைந்தனவே;
வெண் கோட்டு யானை பொருத புண் கூர்ந்து,
பைங் கண் வல்லியம் கல் அளைச் செறிய,
முருக்கு அரும்பு அன்ன வள் உகிர் வயப் பிணவு
கடி கொள, வழங்கார் ஆறே; ஆயிடை
எல்லிற்று என்னான், வென் வேல் ஏந்தி,
நசை தர வந்த நன்னராளன்
நெஞ்சு பழுதாக, வறுவியன் பெயரின்,
இன்று இப்பொழுதும் யான் வாழலெனே;
எவன்கொல்? வாழி, தோழி! நம் இடை முலைச்
சுணங்கு அணி முற்றத்து ஆரம் போலவும்,
சிலம்பு நீடு சோலைச் சிதர் தூங்கு நளிப்பின்
இலங்கு வெள் அருவி போலவும்,
நிலம் கொண்டனவால், திங்கள் அம் கதிரே!

(திணை - குறிஞ்சி)

எளிய பொருள்;

ஆற்று வெள்ளம் பாய்ந்து வருகிறது. யானையுடன் போராடிய புலி குகையில் முடங்கிக் கிடக்கிறது. அங்கே அதன் பெண்புலி இருக்கிறது. இந்தக் காட்டு வழியில் யாரும் வருவதில்லை. இப்படிப்பட்ட வழியில் இருட்டிவிட்டதே என்று எண்ணாமல் வேல் ஒன்றை மட்டும் வைத்துக்கொண்டு உன்னை அடையலாம் என்னும் நப்பாசையால் இந்த நன்னராளன் (நல்லவன்) வந்துள்ளான். அவன் நினைவு பழுதாகும்படி உன்னை அடையாமல் வெறுமனே திரும்புவானாகில் நான் உன்னுடன் வாழ மாட்டேன். குளிர்ந்த சோலையில் கொட்டும் அருவி போல் நிலா வெளிச்சம் இருக்கிறது. நினைத்துப் பார்.

குறுந்தொகை 27

கன்று முண்ணாது கலத்தினும் படாது
நல்லான் தீம்பால் நிலத்துக் காஅங்
கெனக்கு மாகா தென்னைக்கு முதவாது
பசலை உணீஇயர் வேண்டும்
திதலை அல்குலென் மாமைக் கவினே.

(திணை - பாலை)

பொருள்

என் மேனி அழகு எனக்கும் பயன்படாது, என் தலைவனுக்கும் பயன்படாமல் பசலை தின்றுவிட்டுப் போகட்டும். கன்றுக் குட்டியும் குடிக்காமல், கறக்கும் பாத்திரத்திலும் விழாமல் நல்ல பசுவின் மடியிலுள்ள இனிய பால் நிலத்தில் கொட்டிவிட்டது போல என் அழகு பயனில்லாமல் போகட்டும்.

குறுந்தொகை 44

காலே பரிதப் பினவே கண்ணே
நோக்கி நோக்கி வாளிழந் தனவே
அகலிரு விசும்பின் மீனினும்
பலரே மன்றவிவ் வுலகத்துப் பிறரே

(திணை - பாலை)

பொருள்

கால்கள் நடந்து நடந்து நடை ஓய்ந்தன; இணைந்து எதிர் வருவாரைப் பார்த்துப் பார்த்து என் கண்கள் ஒளியை இழந்தன; நிச்சயமாக இந்த உலகத்தில் நம்மகளும் அவள் தலைவனும் அல்லாத பிறர் அகன்ற பெரிய வானத்திலுள்ள மீன்களைக் காட்டிலும் பலராவர்.

குறுந்தொகை 58

இடிக்குங் கேளிர் நுங்குறை ஆக
நிறுக்க லாற்றினோ நன்றுமற் றில்ல
ஞாயிறு காயும் வெவ்வறை மருங்கிற்
கையில் ஊமன் கண்ணிற் காக்கும்
வெண்ணெய் உணங்கல் போலப்
பரந்தன் றிந்நோய் நோன்றுகொளற் கரிதே

(திணை - குறிஞ்சி)

பொருள்

இடித்துரைக்கும் நண்பரே நுமது காரியமாக என் காமநோயை நிறுத்தலைச் செய்தால் மிக நன்று; எனது விருப்பம் அது; சூரியன் வெயில் எறிக்கும் வெம்மையையுடைய பாறையினிடத்தே கையில்லாத ஊமையன் தன் கண்ணினாலே பாதுகாக்க முயலுகின்ற உருகிய வெண்ணெயைப்போல என் காமநோய் பரவியது; பொறுத்துக்கொண்டு நீக்குதற்கு அரிதாயிருக்கின்றது.

குறுந்தொகை 130

நிலந்தொட்டுப் புகாஅர் வானம் ஏறார்
விலங்கிரு முந்நீர் காலிற் செல்லார்
நாட்டின் நாட்டின் ஊரின் ஊரின்
குடிமுறை குடிமுறை தேரிற்
கெடுநரும் உளரோநம் காதலோரே

(திணை - பாலை)

பொருள்

தோழி! நம்முடைய தலைவர் சித்தி பெற்ற சாரணரைப்போலப் பூமியைத் தோண்டி உள்ளே போகமாட்டர்; ஆகாசத்தின் மேல் ஏறார்; குறுக்கிடுகின்ற பெரிய கடலின்மேல் காலினால் நடந்து செல்லார்; நாடுகள் தோறும் ஊர்கள் தோறும் முறையாகக் குடிகள் தோறும் தேடினால் அகப்படாமல் தப்புவாரும் உள்ளாரோ? இல்லை..

குறுந்தொகை 146

அம்ம வாழி தோழி நம்மூர்ப்
பிரிந்தோர்ப் புணர்ப்போர் இருந்தனர் கொல்லோ
தண்டுடைக் கையர் வெண்டலைச் சிதவலர்
நன்றுநன் றென்னு மாக்களோ
டின்றுபெரி தென்னும் ஆங்கண தவையே

(திணை - குறிஞ்சி)

பொருள்

தண்டு ஊன்றிய கையும் நரைத்த தலையில் தலைப்பாகையும் கொண்டிருக்கும் முதியவர்கள் அவையாக ஒன்றுகூடி (மணம் பேசும்போது) “நன்று நன்று, இன்று பெரிதும் நல்ல நாள்” எனக் கூறுகின்றனர். நம் ஊரில் பிரிந்தவர்களை ஒன்றுசேர்த்து வைக்கும் மக்களும் இருக்கிறார்கள் போல் இருக்கிறது.

குறுந்தொகை 149

அளிதோ தானே நாணே நம்மொடு
நனிநீ டுழந்தன்று மன்னே இனியே
வான்பூங் கரும்பின் ஓங்குமணற் சிறுசிறை
தீம்புனல் நெரிதர வீய்ந்துக் காஅங்குத்
தாங்கு மளவைத் தாங்கிக்
காம நெரிதரக் கைந்நில் லாவே.
(திணை - பாலை)

பொருள்

தோழி! நாணம் நம்மோடு மிக நெடுங்காலம் கூடவே இருந்து வருந்தியது. இனிமேல், வெண்ணிறமான பூக்களையுடைய கரும்பிற்குப் போடப்பட்ட உயர்ந்த மணலையுடைய பாத்தி, வெள்ளம் பெருகி வந்ததால் அழிந்து விழுந்ததைப்போல, பொறுக்கும் அளவிற்குப் பொறுத்து, காமம் நெருங்கித் தாக்கியதால், நாணம் என்பால் நிலைபெறாமல் போய்க்கொண்டிருக்கிறது.

குறுந்தொகை 169

சுரஞ்செல் யானைக் கல்லுறு கோட்டிற்
றெற்றென இறீஇயரோ ஐய மற்றியாம்
நும்மொடு நக்க வால்வெள் ளெயிறே
பாணர், பசுமீன் சொரிந்த மண்டைபோல
எமக்கும் பெரும்புல வாக
நும்மும் பெறேஎம் இறீஇயரெம் முயிரே

(திணை - மருதம்)

பொருள்

உன்னோடு மகிழ்ந்து சிரித்த தூய வெள்ளிய பற்கள் பாலை நிலத்திற் செல்லும் யானைன் மலையைக் குத்திய கொம்பைப் போல விரைவாக முறிவனவாக; எனது உயிர் பாணர் தாம் பிடித்த பச்சை மீனை வைத்த பானையைப் போல கெடுமணத்தோடு எமக்கும் பெரிய வெறுப்பைத் தருவதாகி உன்னிஅயும் நான் பெறாமல் அழிக!

குறுந்தொகை 386

வெண்மணல் விரிந்த வீததை கானல்
தண்ணந் துறைவன் தணவா ஊங்கே
வாலிழை மகளிர் விழவணிக் கூட்டும்
மாலையோ அறிவேன் மன்னே மாலை
நிலம்பரந் தன்ன புன்கணொடு
புலம்புடைத் தாகுதல் அறியேன் யானே

(திணை - நெய்தல்)

பொருள்

'தோழி! வெள்ளிய மணல் பரவிய மலர்கள் செறிந்த சோலையையுடைய தண்ணிய கடற்றுறையையுடைய தலைவன் என்னைப் பிரியாதமுன்காலத்தில் யான்! தூய அணிகலன்களை யணிந்த மகளிர் விழவுக்குரிய அலங்காரங்களைத் தொகுக்கின்ற மாலைக்காலத்தையே அறிவேனாயினேன்; இனி அது கழிந்தது! அம்மாலைக் காலம் பூமி பரந்தது போன்ற பெரியதுன்பத்தோடு தனிமையைஉடையதாதலை அப்பொழுது அறியேன்.

நற்றிணை 70

சிறு வெள்ளாங்குருகே! சிறு வெள்ளாங்குருகே!
துறை போகு அறுவைத் தூ மடி அன்ன
நிறம் கிளர் தூவிச் சிறு வெள்ளாங்குருகே!
எம் ஊர் வந்து, எம் உண்துறைத் துழைஇ,
சினைக் கௌற்று ஆர்கையை அவர் ஊர்ப் பெயர்தி,
அனைய அன்பினையோ, பெரு மறவியையோ-
ஆங்கண் தீம் புனல் ஈங்கண் பரக்கும்
கழனி நல் ஊர் மகிழ்நர்க்கு என்
இழை நெகிழ் பருவரல் செப்பாதோயே!

(திணை - மருதம்)

பொருள்

சிறிய வெள்ளைக் குருகே! சிறிய வெள்ளைக் குருகே! துவைக்கும் துறையில் துவைத்த தூய்மையான வெள்ளை ஆடைகளின் நிறத்தையுடைய சிறகுகளையுடைய சிறிய வெள்ளைக் குருகே! எங்கள் ஊருக்கு வந்து குடிக்கும் நீர் துறைகளில் தேடி, சினைக் கெளிற்று மீன்களை நிறைய உண்டு விட்டு, அவருடைய ஊருக்குச் செல்வாயாக. அவரிடம், ‘உன் தலைவி வருந்துகின்றாள். அவளுடைய வளையல்கள் நெகிழ்ந்து விழுகின்றன’ என்று நீரும் வயல்களும் நிறைந்த ஊரினனான என் தலைவனிடம் சொல்லாது இருக்கின்றாய் நீ. உனக்கு என் மேல் அன்பு இல்லையா? இல்லை பெருமறதி உடையையா நீ?

நற்றிணை 335

திங்களும் திகழ் வான் ஏர்தரும்; இமிழ் நீர்ப்
பொங்கு திரைப் புணரியும் பாடு ஓவாதே;
ஒலி சிறந்து ஓதமும் பெயரும்; மலி புனற்
பல் பூங் கானல் முள் இலைத் தாழை
சோறு சொரி குடையின் கூம்பு முகை அவிழ,
வளி பரந்து ஊட்டும் விளிவு இல் நாற்றமொடு
மை இரும் பனைமிசைப் பைதல உயவும்
அன்றிலும் என்புற நரலும்; அன்றி,
விரல் கவர்ந்து உழந்த கவர்வின் நல் யாழ்
யாமம் உய்யாமை நின்றன்று;
காமம் பெரிதே; களைஞரோ இலரே!

(நெய்தல் - திணை)

பொருள்

திங்கள் வானை உழுதுகொண்டிருக்கிறது. கடல் அலையால் உறங்கவில்லை. கடலலை (ஓதம்) வந்து வந்து போய்க் கொண்டிருக்கிறது. தாழை மணத்தைப் பரப்பிக்கொண்டிருக்கிறது. தாழைமேல் இருக்கும் அன்றில் பறவையும் தன் துணையுடன் நரலுகிறது (ஒலித்துக்கொண்டிருக்கிறது. என் யாழ் என் விரல் தடவாமல் ஏங்குகிறது. என் காமம் மிகப் பெரியது. அதைக் களைபவர் இல்லை.

நற்றிணை 348

நிலவே, நீல் நிற விசும்பில் பல் கதிர் பரப்பி,
பால் மலி கடலின், பரந்து பட்டன்றே;
ஊரே, ஒலி வரும் சும்மையொடு மலிபு தொகுபு ஈண்டி,
கலி கெழு மறுகின், விழவு அயரும்மே;
கானே, பூ மலர் கஞலிய பொழில் அகம்தோறும்
தாம் அமர் துணையொடு வண்டு இமிரும்மே;
யானே, புனை இழை ஞெகிழ்த்த புலம்பு கொள் அவலமொடு
கனை இருங் கங்குலும் கண்படை இலெனே:
அதனால், என்னொடு பொரும்கொல், இவ் உலகம்?
உலகமொடு பொரும்கொல், என் அவலம் உறு நெஞ்சே?

(நெய்தல் - திணை)

பொருள்

நீல நிற வானத்தில், பால் போன்ற தன் கதிரைப் பரப்புவதால், பால் போல் தோன்றும் கடலில்முளைத்தெழுகிறது. தழைக்கும் ஓசையுடன் மகிழ்ந்து ஒன்றாகத் திரண்டு ஆரவாரம் மிக்க தெருவில் விழாக் கொண்டாடுகிறது. காட்டில் பூக்கும் மலர்கள் பொதிந்து கிடக்கும் இடமெல்லாம் வண்டுகள் தாம் விரும்பும் துணையோடு தேன் உண்டு ஒலிக்கின்றன. எங்கும் மகிழ்ச்சி ஆரவாரம். நானோ, என் அணிகலன்கள் கழன்று என் காதலர் என் அருகில் இல்லாததால் எனக்குத் தோன்றும் துன்பத்தைப் பிறருக்குக் காட்டிக்கொடுப்பதால் உண்டாகும் அவல நிலையோடு இருண்டு கிடக்கும் இரவிலும் கண் மூடாமல் கலங்கிக்கொண்டிருக்கிறேன்.அதனால், இந்த உலகம் என்னோடு போரிடுகிறதா, அல்லது, துன்புறும் என் நெஞ்சம் இந்த உலகத்தோடு போரிட்டுக்கொண்டிருக்கிறதா என்பது விளங்கவில்லை.

உசாத்துணை

மகடூ முன்னிலை, பெண்பாற் புலவர் களஞ்சியம், டாக்டர் தாயம்மாள் அறவாணன், பச்சை பசேல் பதிப்பகம்

எட்டுத்தொகை நூல்கள், தமிழ் சுரங்கம்


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.