under review

சூர்யகாந்தன்: Difference between revisions

From Tamil Wiki
(Split image templates and other text)
Line 74: Line 74:


== இலக்கிய இடம் ==
== இலக்கிய இடம் ==
சூரியகாந்தன் கொங்கு வட்டார வேளாண்மைப் பண்பாட்டை எழுதிய படைப்பாளி. இயல்புவாதத் தன்மையுடன், வாழ்க்கையிலிருந்து பெற்ற தரவுகளைக்கொண்டு கதைசொல்லும் படைப்புகள் இவருடையவை. கொங்குபகுதி விவசாய வாழ்க்கையின் ஆவணங்கள் என இவை கருதப்படுகின்றன.  [[File:Suryakandhan books.jpg|thumb|சூர்யகாந்தன் புத்தகங்கள்]]
சூரியகாந்தன் கொங்கு வட்டார வேளாண்மைப் பண்பாட்டை எழுதிய படைப்பாளி. இயல்புவாதத் தன்மையுடன், வாழ்க்கையிலிருந்து பெற்ற தரவுகளைக்கொண்டு கதைசொல்லும் படைப்புகள் இவருடையவை. கொங்குபகுதி விவசாய வாழ்க்கையின் ஆவணங்கள் என இவை கருதப்படுகின்றன.   
[[File:Suryakandhan books.jpg|thumb|சூர்யகாந்தன் புத்தகங்கள்]]
 
== நூல்கள் ==
== நூல்கள் ==
===== கவிதைத் தொகுப்புகள் =====
===== கவிதைத் தொகுப்புகள் =====

Revision as of 22:55, 2 July 2023

எழுத்தாளர் சூர்யகாந்தன்

சூர்யகாந்தன் (மருதாசலம்; பிறப்பு: ஜூலை 17, 1955) கவிஞர், எழுத்தாளர், கட்டுரையாளர், வானொலி நிலைய அறிவிப்பாளர், பத்திரிகையாளர். கல்லூரிப் பேராசிரியராகப் பணியாற்றினார். கொங்கு மக்களின் வாழ்க்கையைத் தனது படைப்புகளில் ஆவணப்படுத்தி வருகிறார். தனது படைப்புகளுக்காக அகிலன் விருது உள்ளிட்ட விருதுகளைப் பெற்றார்.

பிறப்பு, கல்வி

சூர்யகாந்தன் (இயற்பெயர்: மருதாசலம்) , கோவையைச் சேர்ந்த ராமசெட்டிப்பாளையத்தில், ஜூலை 17, 1955 அன்று மாரப்பக்கவுண்டர்-சின்னம்மாள் தம்பதியினருக்குப் பிறந்தார். உள்ளூரில் ஆரம்பக் கல்வி பயின்றார். உயர்கல்வியை பேரூர் தவத்திரு. சாந்தலிங்க அடிகளார் பள்ளியில் படித்தார். கோவை அரசுக் கலைக்கல்லூரியில் பி.யு.சி. மற்றும் இளங்கலை புவியியல் பயின்றார். தமிழார்வத்தால் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. தமிழ் படித்தார். ஆசிரியர் பயிற்சி பட்டப்படிப்பை (B.Ed.) நிறைவு செய்தார் ‘கவிதைகள்’ பற்றி ஆய்வு செய்து ‘ஆய்வியல் நிறைஞர்’ (எம்.பில்) பட்டம் பெற்றார். ‘தற்கால இலக்கியத்தில் நாவல்கள்’ என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார்.

எழுத்தாளர் சூர்யகாந்தன் (படம் நன்றி: எழுத்தாளர், பத்திரிகையாளர் கா.சு. வேலாயுதன்)

தனி வாழ்க்கை

சூர்யகாந்தன், சிறிது காலம் இதழாளராகப் பணியாற்றினார். அகில இந்திய வானொலியின் கோவைப் பிரிவில் பகுதி நேர அறிவிப்பாளராக 1987 முதல் 2017 வரை பணியாற்றினார். கல்லூரிப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார். மனைவி கண்ணம்மா. மகன் சரவணக்குமார். மகள்கள் திவ்யபாரதி, சுவேதா.

இலக்கிய வாழ்க்கை

சூர்யகாந்தனின் கல்லூரிக் காலத்தில் அறிமுகமான தீபம், தாமரை, வானம்பாடி போன்ற இதழ்கள் இலக்கிய ஆர்வத்தை வளர்த்தன. சூர்யதீபனின் ‘கனல் மணக்கும் பூக்கள்’ என்ற முதல் கவிதை, அக்டோபர் 1973-ல், கோவை ஈஸ்வரன் நடத்தி வந்த ‘மனிதன்’ இதழில் வெளியானது. தொடர்ந்து தாமரை, வானம்பாடி, தீபம், நீலக்குயில், மகாநதி, சிவந்த சிந்தனை, புதிய பொன்னி, மலர்ச்சி, வேள்வி போன்ற இதழ்களில் பல கவிதைகளை எழுதினார். கவிஞர் மு.மேத்தாவின் ஊக்குவிப்பில் சூர்யகாந்தனின் கவிதைகள் தொகுக்கப்பட்டு, ‘சிவப்புநிலா’ என்ற பெயரில் நூலாக வெளியானது. கவிஞர் மீராவின் அகரம் பதிப்பகம் அதனை வெளியிட்டது.

சூர்யகாந்தனின் முதல் சிறுகதை ‘தண்டிக்கப்படாத குற்றவாளிகள்’ 1974-ல், தாமரை இதழில் வெளியானது. தொடர்ந்து சிறுகதைகளும் கவிதைகளும் எழுதினார். அமுதசுரபி, குங்குமம், கல்கி, சுபமங்களா, புதிய பார்வை, தினமணி கதிர் எனப் பல இதழ்களில் இவரது படைப்புகள் வெளியாகின. முதல் நாவல், ‘அம்மன் பூவோடு’ 1984-ல் வெளியானது. தொடர்ந்து சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள் என எழுதினார். மகரந்த குமார், கடல் கொண்டான், ஆர்.எம்.சூர்யா, பர்வதா, சூரி எனப் பல புனை பெயர்களில் எழுதினார்.

மொழிபெயர்ப்புகள்

சூர்யகாந்தனை பரவலாக இலக்கிய உலகிற்கு அறிமுகம் செய்த நாவல் ‘மானாவாரி மனிதர்கள்’. இதற்கு அகிலன் நாவல் போட்டி விருது கிடைத்தது. இதே நாவலுக்கு ‘இலக்கியச் சிந்தனை' விருதும் அளிக்கப்பட்டது. தமிழகத்தின் பல கல்லூரிகளில் இந்நாவல் பாடமாக வைக்கப்பட்டது. இந்நாவல், ‘Men of the Red soil’ என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. இதே நாவல், ‘மாரி காரின்னு காத்திருக்குன்னு மனுசர்’ என்ற தலைப்பில் மலையாளத்திலும், ‘மேகா கேலியே தரஸ்தி லோக்’ என்று ஹிந்தியிலும், ’மண்ணிண்ட மக்கள்' என்ற தலைப்பில் தெலுங்கிலும் மொழியாக்கம் செய்யப்பட்டது. செக்கோஸ்லோவாக்கியா மொழியிலும் மொழியாக்கம் செய்யப்பட்டு வருகிறது.

பிற மொழிபெயர்ப்புகள்
பூர்வீக பூமி Parents Land (ஆங்கிலம்); பூர்வீக பூமி (மலையாளம்)
விதைச்சோளம் விதைச்சோளம் (மலையாளம்)
அழியாச்சுவடு மாயச்சுவடு (மலையாளம்)
கிழக்கு வானம் கிழக்கு வானம் (மலையாளம்); கிழக்கு வானம் (கன்னடம்)
ஒரு வயல்வெளியின் கதை ஒரு வயலிண்டகதா (மலையாளம்); Story of The Green Field (ஆங்கிலம்)
விடிவெள்ளி The Morning Star (ஆங்கிலம்)
முள்மலர் வேலி முள்ளும் பூவும் மயலும் (மலையாளம்)

இவரது சில சிறுகதைகள் மலையாளம், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் போன்ற மொழிகளில் பெயர்க்கப்பட்டுள்ளன.

பாட நூல்களும் ஆய்வுகளும்

சூர்யகாந்தனின் படைப்புகள் பல்வேறு பல்கலைக்கழகங்களிலும், கல்லூரிகளிலும் பாட நூலாக வைக்கப்பட்டுள்ளன. இவரது படைப்புகளை ஆராய்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள், எம்.பில், முனைவர் பட்டம் பெற்றுள்ளனர்.

சூர்யகாந்தன் 14 நாவல்கள், 7 கட்டுரை நூல்கள், 3 கவிதைத் தொகுப்புகள், 12 சிறுகதைத் தொகுப்புகள் என 36 நூல்களை எழுதியுள்ளார்.

இதழியல்

சூர்யகாந்தன், ‘சோலை’, ‘தாய்’ போன்ற இதழ்களின் ஆசிரியர் குழுவில் பணியாற்றினார். கோவையிலிருந்து 1980-களில் வெளியான ’ஜனரஞ்சனி’ வார இதழில், துணை ஆசிரியராகப் பணிபுரிந்தார்.

இசைப் பாடல்கள்

இவருடைய பாடல்கள் ‘அம்மன் கோவில் அம்மா’, ‘அங்காள பரமேஸ்வரி’, ‘சிவயோகி’ என்ற தலைப்புகளில் மூன்று குறுந்தகடுகளாக வெளிவந்துள்ளன.

கோவை கோனியம்மன், குமாரபாளையம் அங்காள பரமேஸ்வரி, மருதமலை முருகன், பண்ணாரி மாரியம்மன், பூண்டி வெள்ளிங்கிரியாண்டவர், தங்க நாயகியம்மன், குருவாயூரப்பன், சீரடி சாயிபாபா, பொன்னாச்சி அம்மன் போன்ற தெய்வங்களின் மீது நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார்.

விருதுகள்

  • அகிலன் நாவல் போட்டிப் பரிசு - ’மானவாரி மனிதர்கள்’ (நாவல்)
  • இலக்கிய சிந்தனையின் சிறந்த நாவலுக்கான விருது - ’மானவாரி மனிதர்கள்’ (நாவல்)
  • இலக்கிய வீதி விருது
  • தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற விருது
  • அழகிய நாயகி அம்மாள் விருது
  • லில்லி தேவ சிகாமணி அறக்கட்டளை விருது
  • பாரதியார் பல்கலைக்கழகத் தமிழ்ச்சான்றோர் விருது
  • உடுமலை இலக்கியப் பேரவை விருது
  • கொங்குச் சாதனையாளர் விருது
  • தமிழ்ப் பண்பாட்டு மையம் விருது

ஆய்வு

‘சூரியகாந்தன் நாவல்களில் நாட்டுப்புறவில் கூறுகள்’ என்ற தலைப்பில், ஆய்வாளர் ம. ராஜாத்தி செல்வக்கனி, சென்னைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வு[1] செய்துள்ளார். ’சூரிய காந்தன் படைப்பிலக்கியத் திறனாய்வுகள்’ என்ற தலைப்பில் இவரைப் பற்றிய ஆய்வு நூல்கள் இரண்டு பாகங்களாக வெளிவந்துள்ளன. நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் அவற்றை வெளியிட்டது.

  • சூர்யகாந்தனின் புதினங்களில் மக்கள் வாழ்வியல்
  • சூர்யகாந்தனின் நாவல்களில் கொங்குமரபும், வாழ்வும்
  • சூர்யகாந்தனின் புதினங்கள்
  • சூர்யகாந்தனின் நாவல்களில் குடும்பமும், சமூகமும்
  • சூர்யகாந்தனின் புதினங்களில் சமுதாயப்பார்வை
  • சூர்யகாந்தன் நாவல்களில் மண்ணின்மணம்
  • படைப்புக் கலைஞர் சூர்யகாந்தன்

போன்ற தலைப்புகளில் இவரைப் பற்றிய ஆய்வு நூல்கள், கட்டுரைகள் வெளியாகியுள்ளன.

இலக்கிய இடம்

சூரியகாந்தன் கொங்கு வட்டார வேளாண்மைப் பண்பாட்டை எழுதிய படைப்பாளி. இயல்புவாதத் தன்மையுடன், வாழ்க்கையிலிருந்து பெற்ற தரவுகளைக்கொண்டு கதைசொல்லும் படைப்புகள் இவருடையவை. கொங்குபகுதி விவசாய வாழ்க்கையின் ஆவணங்கள் என இவை கருதப்படுகின்றன.

சூர்யகாந்தன் புத்தகங்கள்

நூல்கள்

கவிதைத் தொகுப்புகள்
  • சிவப்புநிலா
  • இவர்கள் காத்திருக்கிறார்கள்
  • வீரவம்சம்
சிறுகதைத் தொகுப்புகள்
  • இனிப்பொறுப்பதில்லை
  • தோட்டத்தில் ஒரு வீடு
  • விடுதலைக் கிளிகள்
  • உறவுச் சிறகுகள்
  • பால் மனது
  • மண்ணின் மடியில்
  • வேட்கை
  • ரத்தப்பொழுதுகள்
  • முத்துக்கள் பத்து
  • பயணங்கள்
  • ஒரு தொழிலாளியின் டைரி
  • முத்துக்கள் பத்து (தேர்ந்தெடுத்த சிறுகதைகள்)
நாவல்கள்
  • அம்மன் பூவோடு
  • பூர்வீக பூமி
  • கிழக்குவானம்
  • கல்வாழை
  • அழியாச்சுவடு
  • எதிரெதிர் கோணங்கள்
  • ஒரு வயல்வெளியின் கதை
  • மானாவாரி மனிதர்கள்
  • முள்மலர்வேலி
  • விதைச் சோளம்
  • பிரதிபிம்பங்கள்
  • விடிவெள்ளி
  • நொய்யலாற்றங் கரையினிலே
  • புலரும் பொழுது
கட்டுரை நூல்கள்
  • பக்தி வரலாற்றில் கோவை மண்டலக் கோவில்கள்
  • விருட்சமும் விழுதுகளும்
  • ஏர் முனைக்கு நேர்
  • பொங்கும் பூம்புனல்
  • தமிழ் நாவல்களில் கிராம சமுதாயம்
  • திரையிசையில் இலக்கிய முத்திரைகள்
  • மனங்களை வருடும் மயிலிறகு

உசாத்துணை

அடிக்குறிப்புகள்


✅Finalised Page