under review

சி.எம். முத்து: Difference between revisions

From Tamil Wiki
(Added First published date)
(Added links to Disambiguation page)
Line 1: Line 1:
{{OtherUses-ta|முத்து|[[முத்து (பெயர் பட்டியல்)]]}}
{{Read English|Name of target article=C. M. Muthu|Title of target article=C. M. Muthu}}
{{Read English|Name of target article=C. M. Muthu|Title of target article=C. M. Muthu}}



Revision as of 21:49, 26 September 2024

XYZ என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: XYZ

To read the article in English: C. M. Muthu. ‎


சி.எம். முத்து, நன்றி: இந்து தமிழ் திசை

சி.எம். முத்து (பிறப்பு: பிப்ரவரி 10, 1950 ) சிறுகதை மற்றும் நாவலாசிரியர். தஞ்சை நிலப்பகுதியையும் அதை சார்ந்த விவசாயக் குடும்பங்களின் கிராமிய வாழ்வம்சங்களையும் தொடர்ந்து நாற்பது வருடங்களுக்கும் மேலாக இலக்கியமாக்கி வரும் எழுத்தாளர். நாட்டுப்புறப் பாடல்களின் மீது ஆர்வம் கொண்டவர்.

பிறப்பு கல்வி

சி.எம். முத்து தஞ்சாவூரில் உள்ள இடையிருப்பு என்ற கிராமத்தில் சந்திராஹாசன்- கமலாம்பாள் தம்பதியினருக்கு பிப்ரவரி 10, 1950 அன்று பிறந்தார். வசதியான விவசாய குடும்பத்தில் பிறந்த இவர் எழுத்தின் மீது ஆர்வம் ஏற்படவே பள்ளிப்படிப்பை பாதியில் விட்டு முழுநேர எழுத்து மற்றும் விவசாயம் என்று தன் வாழ்க்கையை அமைத்துக்கொண்டார்.

தனி வாழ்க்கை

எழுதுவதற்கிடையில் விவசாயத்தில் ஒட்ட முடியாமல் சென்னை சென்று இலங்கையை சேர்ந்த சரோஜினி வரதராஜ கைலாசப் பிள்ளை அவர்கள் நடத்திய 'மாணிக்கம்’ என்ற பத்திரிகையில் சென்னை பிரதிநிதியாக வேலை பார்த்தார். பின்னர் அப்பாவின் வற்புறுத்தலுக்கு இணங்கி பத்திரிகை பிரதிநிதி வேலையை விட்டு மீண்டும் சொந்த ஊர் இடையிருப்புக்கு வந்து தபால் ஆபிசில் போஸ்ட் மாஸ்டராக வேலை பார்த்தார். தபால் துறை பணியில் இருந்துகொண்டே எழுதுவதில் ஏற்பட்ட சிரமம் காரணமாக போஸ்ட் மாஸ்டர் பணியில் இருந்து விலகி முழுநேர விவசாயம் மற்றும் மற்ற நேரங்களில் சிறுகதைகள், நாவல்கள் எழுதினார்.

சி.எம். முத்துவின் மனைவியின் பெயர் பானுமதி. இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர்.

படைப்புலகம்

மிராசு நாவல் , சி.எம்.முத்து

விவசாயத்திலும் எழுத்திலும் மட்டுமே முழு கவனத்தை செலுத்திவந்த சி.எம்.முத்துவின் முதல் சிறுகதை எம்.எஸ்.மணியன் நடத்திவந்த கற்பூரம் இதழில் வெளியானது. தொடர்ந்து தீபம், தென்றல், கண்ணதாசன் போன்ற இதழ்களில் எழுதினார். இதை தொடர்ந்து எழுத்தாளர் தஞ்சை பிரகாஷின் அறிமுகமும் ஆழமான நட்பும் உருவானது. தஞ்சை பிரகாஷிடமிருந்து பெற்றுக்கொண்ட தாக்கத்தின் மூலம் தன் எழுத்தில் சமூகத்தை குறித்தும் அதன் பிரச்சனைகளை குறித்தும் தீவிரமாக எழுத ஆரம்பித்தார். இவர் 300-க்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளார்.

நாட்டுப்புற பாடல்களின் மீது ஆர்வம் கொண்டவர். தஞ்சாவூரைச் சுற்றியுள்ள பல கிராமங்களில் நடக்கும் நிகழ்வுகளில் நாட்டுப்புற கலைநிகழ்ச்சிகளை மேடையேற்றியிருக்கிறார். கூத்துக்கலை வாத்தியார்கள் பற்றியும் அவர்களின் வாழ்க்கை அவலங்களை பற்றியும் இவர் எழுதியிருக்கும் 'நாடக வாத்தியார் தங்கசாமி" என்ற சிறுகதை குறிப்பிடத்தக்கது.

சி.எம். முத்து தன் இலக்கிய வாழ்க்கை பற்றி குங்குமம் இதழுக்கு அளித்த பேட்டியில் கூறும்பொழுது "40 வருஷம் எழுத்தும் இலக்கியமுமா வாழ்ந்திருக்கேன். ஏகப்பட்டதை இழந்திருக்கேன். 65 வயசுலயும் இடைவிடாம எழுதிக்கிட்டிருக்கேன். ஆனா இன்னமும் ஊருக்குள்ள என்னை எழுத்தாளனா யாருக்கும் தெரியாது. ஆனா ஜெயகாந்தனுக்கு, நாஞ்சில்நாடனுக்கு, கல்யாண்ஜிக்கு, எஸ்.ராமகிருஷ்ணனுக்கு, ஜெயமோகனுக்கு என்னையும், என் எழுத்தையும் தெரியும். அதுதான் என்னை எழுதத் தூண்டுது. இன்னைக்கு பதினைஞ்சுக்கும் மேல புத்தகங்கள் வந்திருக்கு. ஆனா, விவசாயத்தில் பெரும்பாலான நிலம் கையவிட்டுப் போயிருச்சு. மிஞ்சியிருக்கறது 2 வேலி மட்டும் தான். அதுதான் ஜீவனம். நாளுக்கு நாள் வாழ்க்கை தேஞ்சுக்கிட்டேதான் இருக்கு. இந்த வாழ்வியலை முன்வச்சு 'மிராசு’ன்னு ஒரு நாவல் எழுதிருக்கேன். என் வாழ்க்கையோட மொத்த செய்தியும் அதுல இருக்கும்" என்கிறார். 850 பக்க அளவுகள் கொண்ட பெரிய நாவலான மிராசு 2018 -ல் அனன்யா பதிப்பக வெளியீடாக பிரசுரமாகியது. மேலத்தஞ்சை மாவட்டத்தில், இந்தியா சுதந்திரம் அடைந்த காலத்தில் செல்வாக்காக இருந்த பெருநிலக்கிழார்கள் பிறகு மெல்லமெல்ல மறைந்ததையும், விவசாயம் படிப்படியாக வீழ்ச்சி அடைந்த கதையையும் காட்டும் நாவல் 'மிராசு’.

விவாதங்கள்

சி.எம்.முத்து

சி.எம்.முத்து அதிகம் சாதியை பற்றியே எழுதுகிறார் என்ற குற்றச்சாட்டு வைக்கப்பட்டு சர்ச்சை உண்டானபோது "இங்கு சாதி எங்கே ஒழிந்திருக்கிறது, நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டுதான் இருக்கிறது! மேலும் என் எழுத்து சாதியை பற்றியது கிடையாது சாதிக்குள் இருக்கும் சாதியை பற்றியது" என்று அச்சர்ச்சைக்கு பதிலளித்து இருக்கிறார்.

மதிப்பீடுகள்

"தமிழ் இலக்கிய வரலாற்றில் பிரச்சார எழுத்துக்கள் ஒரு அலையாக புகழ் பெற்றிருந்த காலகட்டங்களிலும் அதன் தாக்கத்திலிருந்து விலகி தன் எழுத்துகளை அமைத்துக்கொள்ள சி.எம். முத்துவால் முடிந்தது. சாதிபற்றிய விஷயங்களை கலாபூர்வமாக சொல்லமுடியும் என்று தன் எழுத்தில் சாதித்து காட்டியவர். அவரை கவனிக்காமல் போனது தமிழகத்தின் துரதிர்ஷ்டமே!" என்று சி.எம். முத்துவை பற்றி விமர்சகர் வெங்கட் சாமிநாதன் மதிப்பிடுகிறார்.

"தஞ்சாவூர் மாவட்டத்தை நான் எழுதியதை விடவும் சி.ம். முத்துவே அதிகம் எழுதிவிட்டார்" என்று எழுத்தாளர் தி. ஜானகிராமனால் புகழப்பட்டவர். எழுத்தாளர் வல்லிக்கண்ணன் சி.எம். முத்துவை பற்றி மதிப்பிடும்பொழுது இவ்வாறு கூறுகிறார்."தஞ்சை கிராமங்களில் விவசாயத்தில் ஈடுபட்டுள்ள மக்களின் வாழ்க்கையை சி.எம்.முத்துவின் எழுத்து சுவாரசியமாக விவரிக்கின்றது. தஞ்சை மாவட்டத்தின் சிற்றூர் ஒன்றைச் சேர்ந்த இக்கலைஞர் கிராம மக்களோடு கலந்து வாழ்ந்து தான் பெற்ற அனுபவங்களை தனித்துவமான எழுத்தின்மூலம் கலைப்படுத்துகிறார்"

"தீர்மானகரமான முடிவுகளை வலிந்து திணிக்காமல், தனது வாழ்க்கையில் வெவ்வேறு சாயல்களுடன் யதார்த்தமாகக் கண்டதைப், படைப்பாகப் பதிவு செய்துள்ளார். அதுவே வாழ்க்கைக்கு அர்த்தமும் புதிய பரிமாணமும் சேர்ப்பதாய் அமைந்துவிட்டிருக்கிறது. சி.எம்.முத்துவின் படைப்புகள் பாசாங்கற்ற பாணியில் நேர்த்தியான எழுத்து நடையில் இனிமை தரும் பேச்சு மொழியில் அமைந்தது. தஞ்சை வட்டாரத் தமிழில் தனிச்சிறந்த படைப்பாளுமையோடு சித்திரமாகியுள்ளது" என்று எழுத்தாளர் சா.கந்தசாமி குறிப்பிட்டுள்ளார்.

நூல் பட்டியல்

சிறுகதைத் தொகுப்புகள்

  • இவர்களும் ஜட்கா வண்டியும் (அனன்யா பதிப்பகம், 2004)
  • சி.எம்.முத்துவின் சிறுகதைகள்

நாவல்கள்

  • நெஞ்சின் நடுவே (1982)
  • கறிச்சோறு (1989)
  • அப்பா என்றொரு மனிதர் (2000)
  • பொறுப்பு (2001)
  • வேரடி மண் (2003)
  • ஐந்து பெண்மக்களும் அக்ரஹாரத்து வீடும் (2010)
  • மிராசு (2018)

பரிசுகளும், விருதுகளும்

  • கதா விருது
  • இலக்கியச் சிந்தனை விருது

உசாத்துணை

இணைப்புகள்



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 10-Jan-2023, 06:32:23 IST