under review

சாவி (இதழ்): Difference between revisions

From Tamil Wiki
No edit summary
No edit summary
Line 30: Line 30:
* [https://www.tamilvu.org/library/nationalized/pdf/87-saavi/saavi-85.pdf சாவி 85: ராணிமைந்தன்: தமிழ் இணைய மின்னூலகம்]  
* [https://www.tamilvu.org/library/nationalized/pdf/87-saavi/saavi-85.pdf சாவி 85: ராணிமைந்தன்: தமிழ் இணைய மின்னூலகம்]  
* [http://ungalrasigan.blogspot.com/2016/ சாவி 100: ரவிபிரகாஷ்: உங்கள் ரசிகன் தளம்]  
* [http://ungalrasigan.blogspot.com/2016/ சாவி 100: ரவிபிரகாஷ்: உங்கள் ரசிகன் தளம்]  
{{First review completed}}
{{Finalised}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 08:42, 30 May 2023

சாவி இதழ் - 1980

சாவி (1979) தமிழில் வெளியான பல்சுவை இதழ். பத்திரிகையாளரும் எழுத்தாளருமான சா. விஸ்வநாதன் இவ்விதழைத் தொடங்கி நடத்தினார். புதிய பல எழுத்தாளர்களை, பத்திரிகையாளர்களை ‘சாவி’ உருவாக்கியது. இதழ் வெளியீட்டில் பல புதுமைகளைச் செய்தது. எழுத்தாளர்கள், பல்துறைச் சாதனையாளர்களின் படங்களை தனது அட்டை முகப்பில் வெளியிட்டுச் சிறப்பித்தது.

எழுத்தாளர் சாவி (படம், நன்றி: விகடன்)

பதிப்பு/வெளியீடு

குங்குமம் இதழில் ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்த சாவி, டில்லி பாலு என்ற நண்பரின் ஆலோசனை மற்றும் உறுதுணையில் ஆரம்பித்த வார இதழ் சாவி. 1979-ல் தொடங்கப்பட்ட இவ்விதழுக்கு சா. விஸ்வநாதன் என்னும் தன் பெயரின் எழுத்துக்களையே அடிப்படையாகக் கொண்டு ‘சாவி’ என்று பெயர் சூட்டினார். மே 6, 1979-ல், 75 காசு விலையில் இவ்விதழ் வெளிவந்தது. முதல் இதழ், மூன்று லட்சம் பிரதிகள் விற்பனை ஆனது. தொடர்ந்து விற்பனை அதிகரித்தது. ஆரம்பத்தில் அமைந்தகரையில் தனி அலுவலகத்தில் இயங்கிய சாவி, நாளடைவில் விற்பனைப் பாதிப்பால் சாவி வீட்டின் கார்ஷெட்டில் இயங்கியது. பின் பொருளாதாரச் சூழல்களால் 1997-ல் நின்று போனது.

சாவி இதழ் - 1991

உள்ளடக்கம்

சிறுகதை, கட்டுரை, திரைப்படச் செய்திகள், பேட்டி, துணுக்குகள், சாவி கேள்வி-பதில், பயணக்கட்டுரை, நாவல் தொடர்கள் போன்றவற்றை சாவி இதழ் உள்ளடக்கமாகக் கொண்டிருந்தது. இளம் எழுத்தாளர்கள் பலரது படைப்புகளை சாவி இதழ் வெளியிட்டது. எழுத்தாளர்கள் பலரை ஊக்குவித்து எழுத வைத்தது. எழுத்தாளர்களின் படங்களை அட்டையின் முகப்பில் வெளியிட்டுச் சிறப்பித்தது.

சுஜாதாவின் ‘நில்லுங்கள் ராஜாவே’ தொடர், சாவியின் முதல் இதழில் வெளியானது. சுஜாதாவின் ‘சலவைக் கணக்கு’ சாவி இதழில் தான் வெளியானது. பாலகுமாரனின் புகழ்பெற்ற நாவலான ‘மெர்க்குரிப் பூக்கள்’ சாவி இதழில் தொடராக வெளிவந்து, அவரை எழுத்தாளராக அடையாளம் காட்டியது. மு. அப்பாஸ்மந்திரி, கவிஞர் தாமரை உள்ளிட்டோர் தொடர்கதைகளை எழுதினர். ஸ்ரீ வேணுகோபாலன், ‘புஷ்பா தங்கதுரை’ ஆனது ‘சாவி’ இதழில் தான். ‘சிறைக் கதைகள்’ ‘ஒரு சிவப்பு விளக்கு எரிகிறது’, ‘என் பெயர் கமலா’, ‘ஒரு ஊதாப்பூ கண்சிமிட்டுகிறது’ போன்ற தொடர்கள் இவ்விதழில் வெளியாகி வாசக வரவேற்பைப் பெற்றன. ஸ்ரீ வேணுகோபாலனின் ‘சத்யமே சாயி' தொடர் சாவியில் வெளியாகி வரவேற்கப்பட்டது.

மே 13, 1992 தேதியிட்ட சாவியின் முகப்பு அட்டையில் வெளியான நகைச்சுவைத் துணுக்குக்காக எழுத்தாளர் சாவி, கைது செய்யப்பட்டுப் பின் விடுவிக்கப்பட்டார்.

சாவி, சாவி இதழ் எழுத்தாளர்களுடன்

பங்களிப்பாளர்கள்

சாவி, இதழின் ஆசிரியராக இருந்தார். உதவி ஆசிரியர்களாக  சி.ஆர். கண்ணன் (அபர்ணா நாயுடு), கே. வைத்தியநாதன்,  ரமணீயன், மு. அப்பாஸ் மந்திரி, ரவிபிரகாஷ் உள்ளிட்ட பலர் செயல்பட்டனர். ராணி மைந்தன் சிறப்புச் செய்தியாளராகச் செயல்பட்டார். அரஸ், கார்டூனிஸ்ட் மதி எனப் பலர் ‘சாவி’ இதழுக்குப் பங்களித்தனர். ஆசிரியர் குழுவில் ஆர். லோகநாயகி, ஜெ. குமணன், எஸ். சித்ரா, எஸ், சியாமளா, ஹேமப்ரியா, என். சாந்தி, ஜி. பத்மாவதி, அனுராதா சேகர்  உள்ளிட்ட பலர் இயங்கினர்.

ராஜேஷ்குமார், பட்டுக்கோட்டை பிரபாகர், சுபா, மாலன், பாலகுமாரன், சுப்ரமண்ய ராஜு, பி.எஸ். ரங்கநாதன், ஸுஜாதா விஜயராகவன், சிவசங்கரி, மஞ்சுளா ரமேஷ், அனுராதா ரமணன், நிர்மலா சுரேஷ் எனப் பலரை சாவி இதழில் எழுத ஊக்குவித்தார் எழுத்தாளர் சாவி.

நிறுத்தம்

18 ஆண்டுகள் வெளிவந்த சாவி இதழ், விற்பனைச் சரிவு மற்றும் பொருளாதாரச் சூழல்களால் 1997-ல் நின்று போனது.

இலக்கிய இடம்

ஆனந்த விகடன், குமுதம், கல்கி இதழைத் தொடர்ந்து மிகுந்த வாசக வரவேற்பைப் பெற்ற பல்சுவை இதழாக சாவி வெளிவந்தது. பொதுவாசிப்புக்குரிய பல படைப்புகளை வெளியிட்டது. இதழுக்கு இதழ் பல்வேறு புதுமைகளைக் கையாண்டது. க்ரைம் கதைகள், துப்பறியும் கதைகள், குடும்பக் கதைகள் போன்றவற்றைத் தொடர்ந்து வெளியிட்டு வாசகர்களைக் கவர்ந்தது. 1980-களின் முக்கிய வெகுஜன இதழாக சாவி மதிப்பிடப்படுகிறது.

உசாத்துணை


✅Finalised Page