மெர்க்குரிப் பூக்கள்
மெர்க்குரிப் பூக்கள் (1982) பாலகுமாரன் எழுதிய நாவல். பாலகுமாரனின் முதல்நாவல் இது. தமிழ் பொதுவாசிப்புச் சூழலில் ஒரு புதியவகை எழுத்தின் அறிமுகமாக நிகழ்ந்தது
எழுத்து, வெளியீடு
பாலகுமாரன் 1982-ல் சாவி வார இதழில் இந்நாவலை 34 வாரங்கள் தொடராக எழுதினார். பின்னர் நூல்வடிவம் பெற்றது. இது பாலகுமாரனின் முதல்நாவல்.
கதைச்சுருக்கம்
மரபான ஒற்றைச்சரடு கொண்ட தொடர்கதை போல அன்றி ஒரு நவீன நாவலின் வடிவம் உடையது இப்படைப்பு. சாவித்ரி தன் கணவன் கணேசனுடன் மனம் ஒத்துவாழ்கிறாள். டிராக்டர் தொழிற்சாலையில் பணியாற்றும் கணேசன் கொல்லப்படுகிறான். இன்னொரு தம்பதிகளான தண்டபாணிக்கும் சியாமளிக்கும் நல்லுறவு இல்லை. டிராக்டர் நிறுவனத்தில் பணியாற்றும் சங்கரன் இசை, இலக்கியம் இரண்டிலும் ஆர்வம் கொண்டவன். அவனுக்கும் சியாமளிக்கும் உறவு உருவாகிறது. டிராக்டர் நிறுவனத்தில் போராட்டம் நிகழ்கிறது, அதை கோபால் தலைமை ஏற்றுநடத்துகிறான். அவனை போலீஸ் வேட்டையாடுகிறது. அவனுக்குச் சாவித்ரி அடைக்கலம் கொடுக்கிறாள். கோபால் அவளிடம் காதல்கொள்கிறான். சாவித்ரி, சியாமளி எனும் இரு பெண்களும் இரண்டுவகையில் வாழ்க்கையில் முக்கியமான முடிவுகளை எடுக்கிறார்கள். சங்கரன் வாழ்க்கையின் நிதர்சனத்தை உணர்ந்து முதிர்ச்சி கொள்கிறான்
இலக்கிய இடம்
மெரிக்குரிப் பூக்கள் பொதுவாசிப்புக்குரிய இதழில் வெளிவந்தாலும் இலக்கியச்சூழலில் ஓர் இலக்கிய ஆக்கமாகவே கொள்ளப்பட்டது. தி.ஜானகிராமனின் மரபில் வந்த எழுத்துமுறை என மதிப்பிடப் பட்டது. இந்நாவலில் வந்த சியாமளியின் கதைக்கு சமானமான சிறுகதைகளை தி.ஜானகிராமன் எழுதியிருந்தார். பாலகுமாரனின் நடையும் தி.ஜானகிராமனைப்போல உரையாடல்களுக்கு அதிக இடமளிப்பதாக இருந்தது. தொடர்கதைத் தன்மை இல்லாமல் நாவல்களுக்குரிய வகையில் பலகதைகளை இணையாக கொண்டுவந்து ஒன்றாக்கி நாவல் உருவாக்கப்பட்டிருந்தது. எண்பதுகளில் இந்தியாவெங்கும் நிகழ்ந்துவந்த தொழிற்சங்கப் போராட்டங்களின் பின்னணியும் இந்நாவலுக்கு இருந்தது. ஆகவே பாலகுமாரனின் சிறந்த நாவல் மெர்க்குரிப்பூக்களே என்று கூறப்படுகிறது.
ஆனால் பாலகுமாரன் இந்நாவலில் இருந்த அடங்கியகுரல், வாசகனுக்கும் இடமளிக்கும் தன்மை ஆகியவற்றிலிருந்து விலகி இதிலுள்ள ஆண்பெண் உறவு, பாலியல் சார்ந்த உரையாடல்கள் ஆகியவற்றை மையப்படுத்திய நாவல்களை தொடர்ந்து எழுதினார். இந்நாவலின் கலைக்குறைபாடு என்பது இதன் முடிவு திருப்பங்கள் வழியாக அமைந்திருப்பதும், ஸ்டில்லட்டோ என்னும் கத்தி போன்ற பரபரப்புக் கூறுகள் உள்ளே சேர்க்கப்பட்டமையும், மையக்கருத்து சாவித்ரியின் நீண்ட உரையாடல் வழியாக வெளிப்படுவதும்தான். எனினும் தமிழின் இலக்கியப்படைப்புக்களில் ஒன்றாக மெர்க்குரிப்பூக்கள் கருதப்படுகிறது.
உசாத்துணை
- மெர்க்குரிப்பூக்கள் ஏகாந்தன்
- சாமானியனின் கிறுக்கல்கள்!: பேரன்பின் பெருஞ்சுடர்
- பாலகுமாரன்: கம்யூனிஸ்ட்; எழுத்தாளர்; சித்தர் – அருண்மொழிவர்மன் பக்கங்கள் (arunmozhivarman.com)
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
15-Nov-2022, 13:37:06 IST