under review

பூதத்தாழ்வார்: Difference between revisions

From Tamil Wiki
(Corrected error in line feed character)
(Added First published date)
 
Line 128: Line 128:
== அடிக்குறிப்புகள் ==
== அடிக்குறிப்புகள் ==
<references />
<references />
{{Finalised}}
{{Finalised}}
{{Fndt|11-Jan-2023, 06:25:31 IST}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:வைணவ அறிஞர்கள்]]
[[Category:வைணவ அறிஞர்கள்]]

Latest revision as of 16:37, 13 June 2024

பூதத்தாழ்வார் -கடல்மல்லை தலசயனப் பெருமாள் கோயில்

பூதத்தாழ்வார் தமிழ் வைணவ நெறியின் பன்னிரு ஆழ்வார்களிலும், முதலாழ்வார்கள் மூவரிலும் இரண்டாமவர். பூதத்தாழ்வார் பாடிய 100 அந்தாதிகளின் தொகுப்பு நாலாயிர திவ்யப் பிரபந்தத்தின் இரண்டாம் திருவந்தாதி எனப்படுகிறது.

பிறப்பு

சித்தார்த்தி வருடம் ஐப்பசி மாதம் அவிட்ட நட்சத்திரத்தில் மாமல்லபுரம் தலசயனம் பெருமாள் ஆலயத்தருகில் குருக்கத்திப் பந்தலில் அவதரித்தார் (நீலோத்பவ மலரில் அவதரித்தார் என்ரும் சொல்லப்படுகிறது) . ஆழ்வார்களில் சிலர் திருமாலின் கையில் உள்ள ஐந்து ஆயுதங்களில் ஏதேனும் ஒன்றின் அம்சமாகப் பிறந்தவர்கள் என்பது வைணவக் கொள்கை. இதன்படி பூதத்தாழ்வார் கௌமோதகி எனப்படும் பெருமாளின் கதையின் அம்சமாக கருதப்படுகிறார். பொ. யு. ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்தவராகக் கருதப்படுகிறார். இவருடைய இளமைப் பருவம் பற்றிய செய்திகள் அறியக் கிடைப்பதில்லை.

பெயர்க்காரணம்

பூதம் என்னும் வடசொல் பூ என்ற அடிச்சொல்லில் இருந்து தோன்றியது. இதன் பொருள் சத்தைப் பெற்றது என்பது. (சத்து = அறிவு). திருமாலின் திருக்குணங்களை அநுபவித்தே அறிவைப் பெற்றவர் பூதத்தாழ்வார் என்பது பெயர்க்காரணம் என்று கருதப்படுகிறது.

பூதம் என்கிற வடமொழிச் சொல்லுக்கு அடியார் என்றும் பொருள் உண்டு. ‘மாதவன் பூதங்கள் மண்மேல்’ (நம்மாழ்வார்) இங்கு பூதத்தாழ்வார் என்ற சொல்லுக்கு அடியார்களையே தெய்வமாகக் கொண்டவர் என்றும் பொருள்படும்.

திருக்கோயிலூரில் சந்திப்பு, இரண்டாம் அந்தாதி இயற்றல்

(பார்க்க: முதலாழ்வார்கள்- திருக்கோயிலூரில் சந்திப்பு)

பூதத்தாழ்வார் திருக்கோயிலூருக்கு உலகளந்த பெருமாளை தரிசிக்கச் சென்று, மழைக்கு ஓர் இடைகழியில் ஒதுங்கியபோது அங்கு வந்த பூதத்தாழ்வாருடனும், பேயாழ்வாருடனும் சந்திப்பு எற்பட்டது. மூவருடன் நான்காவதாக ஒருவர் நெருக்கி நிற்பதையுணர்ந்து அவர் யார் எனப் பார்க்க வேண்டி, பொய்கையாழ்வார் 'வையம் தகழியா' எனத் தொடங்கி முதல் திருவந்தாதியைப் பாடினார். பூதத்தாழ்வார் அவரைத் தொடர்ந்து ஞானச் சுடர் ஏற்ற முற்பட்டு

கடல்மல்லை தலசயனப் பெருமாள் ஆலயம்Nativeplanet.com

அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடுதிரியா - நன்புருகி
ஞானச் சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணற்கு
ஞானத் தமிழ் புரிந்த நான்

எனத் தொடங்கி இயற்றிய 100 வெண்பாக்களைக் கொண்டது இரண்டாம் திருவந்தாதி. அந்தாதித் தொடையில் இயற்றப்பட்ட மிகப் பழைய பிரபந்தங்களுள் இதுவும் ஒன்றாகும். இரண்டாம் திருவந்தாதி நாலாயிர திவ்யப் பிரபந்தத்தின் 'இயற்பா' தொகுப்பில் இடம்பெறுகிறது.

இச்சந்திப்புக்குப்பின் பூதத்தாழ்வார் பொய்கையாழ்வார், பேயாழ்வார் இருவருடன் பல தலங்களுக்கு யாத்திரை சென்று திருமால் புகழ் பாடினார்.

முக்கியமான பாசுரங்கள்

தம்மைப் போல் தவம் செய்தவர் யாரும் இல்லையென்றும், தாமே ஏழு பிறவிகளிலும் தவமுடையவர் என்றும் இறுமாப்புக் கொள்கின்றார் பூதத்தாழ்வார். இதற்குக் காரணம் கூறுவாராய், 'யானே, இருந்தமிழ் நன்மாலை இணைடியக்கே சொன்னேன்' என்றார். பெருமானின் இணையடிகளுக்குப் பெருமை வாய்ந்த தமிழால் தொடுத்த மாலையை அணிவித்தமையால் தாம் பெருந்தமிழனான பெருமையினை, பெருந்தமிழன் நல்லேன் பெரிது என்று கூறிப் பெருமிதம் அடைகின்றார்.

யானே தவம் செய்தேன்; ஏழ் பிறப்பும் எப்பொழுதும்,
யானே தவம் உடையேன்; எம்பெருமான்! – யானே
இருந்தமிழ் நன்மாலை இணையடிக்கே சொன்னேன்;
பெருந்தமிழன் நல்லேன் பெரிது

தன் நனவிலும் கனவிலும் காண்பது திருமாலையே

பகல் கண்டேன் நாரணனைக் கண்டேன், - கனவில்-
மிகக் கண்டேன் மீண்டு அவனை மெய்யே மிகக் கண்டேன்
ஊன் திகழும் நேமி ஒளி திகழும் சேவடியான்
வான் திகழும் சோதி வடிவு.

வேதத்தின் பொருளும் முடிவும் நாராயணனின் நாமமே. வேதத்தை ஓதாவிட்டலும் மாதவன் பேர் சொன்னால் போதும், அதுவே வேதத்தின் சாரம் என்பது பூதத்தாழ்வாரின் முடிபு.

ஒத்தின் பொருள் முடிவும் இத்தனையே
உத்தமன் பேர் ஏத்தும் திறமறிமின் ஏழைகள்
ஒத்ததனை வல்லீரேல் நன்று, அதனை மாட்டீரேல்
மாதவன்பேர் சொல்லுவதே ஒத்தின் சுருக்கு

திருவேங்கட மலையின் வளத்தைக் கூறவந்த ஆழ்வார், மதம் பெருகும் களிறு ஒன்று,இளமூங்கிலைத் தன் துதிக்கையால் வளைத்து, அருகிலுள்ள தேனடையில் இருந்த தேனில் தோய்த்துத் தன் காதல் பிடிக்கு ஊட்டும் சிறப்புடையது என்று கூறுவது சிறப்பாகும்.

பெருகுமதவேழம் மாப்பிடிக்கு முன் நின்று
இருகணிளமூங்கில் வாங்கி - அருகிருந்த
தேன் கலந்து நீட்டும் திருவேங்கடம் கண்டீர்

கொடிய பாரதப் போரிலே தேரை நடத்திக் கொண்டு அலைந்ததும், இராமனாகத் அவதரித்த காலத்து மாயமானின் பின்னே சென்று பிராட்டியைப் பிரிந்து அலைச்சல்பட்டதும், தரையிலே படுத்துக் கொள்ளும்படி ஆசை கொண்டதும் (ஆகிய இச்செயல்கள் யாவும்) திருவனந்தாழ்வான் மீது பள்ளிகொண்டிருக்கும் பெருமானுக்கு ஏற்றவையோ? -இந்தப் பாடல் வஞ்சப் புகழ்ச்சியாக அமைந்தது.

திரிந்தது வெம் சமத்துத் தேர் கடவி; அன்று
பிரிந்தது சீதையை, மான் பின் போய் புரிந்ததுவும்
பண் பள்ளி கொள்ள - அழகியதே நாகத்தின்
தண் பள்ளி கொள்வான் - தனக்கு

மங்களாசாசனம் செய்த திருத்தலங்கள்

  • திருநீர்மலை நீர்வண்ணன் திருக்கோயில்[1]
  • திருவிடந்தை
  • திருக்கடல் மல்லை ( ஸ்தல சயனப் பெருமாள் திருக்கோயில்)[2]
  • அத்திகிரி வரதராஜப் பெருமாள் திருக்கோயில், காஞ்சிபுரம்)[3]
  • குன்றின்மேல் நின்ற நாராயணன்திருக்கோயில், திருத்தங்கல்
  • திரிவிக்கிரமர் திருக்கோயில், திருக்கோயிலூர்
  • நீலமேகப் பெருமாள், மணிக்குன்ற பெருமாள் திருக்கோயில்கள், வெண்ணாற்றங்கரை
  • தஞ்சைமாமணி கோயில், தஞ்சாவூர்
  • பாண்டவ தூதப் பெருமாள் திருக்கோயில், திருப்பாடகம்[4]
  • சவுமிய நாராயணப்பெருமாள் திருக்கோயில், திருக்கோஷ்டியூர்[5]
  • திருமாலிருஞ்சோலை
  • சாரங்கபாணி திருக்கோயில், கும்பகோணம்[6]
  • திருவேங்கடம்[7]
  • ஸ்ரீரங்கம்

வாழி திருநாமம்

செய்யதுலா வோணத்திர் செகத்துதித்தான் வாழியே
திருக்கச்சி மாநகரஞ் செழிக்க வந்தோன் வாழியே
வையந்தகளிலூறும் வகுத்துரைத்தான் வாழியே
வனச மலர்க்கருவதனில் வந்தமைந்தான் வாழியே
வெய்யகதிரோன் தன்னை விளக்கிட்டான் வாழியே
வேங்கடவர் திருமலையே விரும்புபவன் வாழியே
பொய்கைமுனி வடிவழகும் பொற்பதமும் வாழியே
பொன்முடியுந் திருமுகமும் பூதலத்தில் வாழியே

உசாத்துணை

அடிக்குறிப்புகள்

  1. பயின்ற தரங்கம் திருக்கோட்டி, பன்னாள்
    பயின்றதுவும் வேங்கடமே பன்னாள், - பயின்ற
    தணிதிகழும் சோலை யணிநீர் மலையே
    மணிதிகழும் வண்தடக்கை மால்

  2. தமருள்ளம் தஞ்சை தலையரங்கம் தண்கால்,
    தமருள்ளும் தண்பொருப்பு வேலை, - தமருள்ளும்
    மாமல்லை கோவல் மதிட்குடந்தை யென்பரே,
    ஏவல்ல எந்தைக் கிடம்.

  3. அத்தி யூரான் புள்ளை யூர்வான் அணி மணியின்
    துத்தி சேர் நாகத்தின் மேல் துயில்வான் -முத்தீ
    மறையாவான் மா கடல் நஞ்சுண்டான் தனக்கும்
    இறையாவான் எங்கள் பிரான் –(96)

  4. உற்று வணங்கித் தொழுமின் உலகு ஏழும்
    முற்றும் விழுங்கும் முகில் வண்ணன் -பற்றிப்
    பொருந்தா தான் மார்பிடந்து பூம் பாடகத்துள்
    இருந்தானை ஏத்தும் என் நெஞ்சு

  5. இன்றா அறிகின்றேன் அல்லேன் இரு நிலத்தைச்'
    'சென்று ஆங்கு அளந்த திருவடியை -அன்று
    கருக் கோட்டியுள் கிடந்தது கை தொழுதேன் கண்டேன்
    திருக் கோட்டி எந்தை திறம்

  6. எங்கள் பெருமான் இமையோர் தலைமகன் நீ
    செங்கண் நெடுமால் திரு மார்பா -பொங்கு
    பட மூக்கின் ஆயிர வாய்ப் பாம்பணை மேல் சேர்ந்தாய்
    குட மூக்கில் கோயிலாகக் கொண்டு–97

  7. உளன் கண்டாய் நன்னெஞ்சே உத்தமன் என்றும்
    உளன் கண்டாய் உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய்
    விண் ஒடுங்கக் கோடு உயரும் வீங்கருவி வேங்கடத்தான்
    மண் ஒடுங்கத் தான் அளந்த மன்



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 11-Jan-2023, 06:25:31 IST