சாங்கியம்

From Tamil Wiki
கபில முனிவர். (கபிலதாரா ஆலயம் வாரணாசி) 1810 நன்றி Research Gate
இரு நாகங்கள் (ஒன்றையொன்று எதிர்கொள்ளும் பிரகிருதி- புருஷன்)
இரு நாகங்கள் (ஒன்றையொன்று உண்ணும் பிரகிருதி புருஷன்)
நாகமண்டலம், சங்கமேஸ்வரர் ஆலயம் சஸ்வத்

சாங்கியம்: (சாங்க்யம்,ஸாங்க்யம்) இந்து சிந்தனை மரபின் ஆறு தரிசனங்களில் ஒன்று. இந்து மரபில் வேதத்தை முதன்மையாகக் கொள்ளாத அவைதிக மரபின் முதன்மைச் சிந்தனை. இந்திய தத்துவ சிந்தனைகளில் மிகத்தொன்மையானதாகவும்; வேதாந்தம் பௌத்தம் சமணம் உட்பட பிற சிந்தனைகள் அனைத்திலும் ஆழமான செல்வாக்கைச் செலுத்தியதாகவும் ஆய்வாளர்களால் மதிப்பிடப்படுகிறது.

தரிசனங்கள்

பிரபஞ்சத்தின் தோற்றம், பிரபஞ்சத்தின் செயல்பாடு, வாழ்க்கையின் அடிப்படைகள், துயரத்தில் இருந்து மீளும் வழி ஆகிய அடிப்படைகளை முன்வைக்கும் முழுமைப் பார்வையை பொதுவாக தரிசனம் (தர்சனம்) என்று இந்திய தத்துவநூல்கள் சொல்கின்றன. அவ்வாறு முழுமையான பார்வை இல்லாமல் ஒரு குறிப்பிட்ட கோணத்தை மட்டுமே முன்வைப்பவை வாதம் (தர்க்கமுறை) எனப்படுகின்றன. இவற்றில் தனக்கென வழிபாட்டு முறையும், தெய்வங்களும், குருமரபு மற்றும் குலமரபுகளும் உள்ள தரிசனங்கள் காலப்போக்கில் மதம் ஆக மாறின. வைணவம், சைவம் ஆகியவை அவ்வாறு மதங்களாக மாறின. வழிபாட்டு முறை, அமைப்பு ஆகியவை இல்லாமல் தரிசனமாகவே நின்றுவிட்டவை தொடர்ந்து தரிசனம் என்ற சொல்லால் குறிப்பிடப்பட்டன. அவற்றில் தொன்மையானது சாங்கியம்

இந்து மரபில் சாங்கியம், யோகம், வைசேஷிகம், நியாயம், பூர்வ மீமாம்ஸம், உத்தர மீமாம்ஸம் என ஆறு தரிசனங்கள் உண்டு என தொன்மையான நூல்கள் குறிப்பிடுகின்றன. இவை ஷட்தர்சனம் எனப்படுகின்றன. ஆறு மதங்கள் என்றும் இவை சில நூல்களில் கூறப்படுவதுண்டு. அவற்றில் பூர்வமீமாம்சம் பின்னாளில் வைதிகமதமாக வளர்ந்து எல்லா இந்து வழிபாட்டுமுறைகளையும் இணைத்துக் கொண்டது. உத்தர மீமாம்சம் வேதாந்தமாக எல்லா இந்து மதப்பிரிவுகளுக்கும் பொதுவான தத்துவ மையமாக ஆகியது. சாங்கியமும் யோகமும் நியாயமும் வைசேஷிகமும் சமணம், பௌத்தம் உட்பட இந்தியாவின் எல்லா மதங்களுக்குள்ளும் வெவ்வேறு வகையில் ஊடுருவி வளர்ந்தன.

சொற்பொருள்

சாங்கியம் என்னும் சொல் சங்கியா (எண்ணிக்கை) என்னும் சொல்லில் இருந்து வந்திருக்கக்கூடும் என ஊகிக்கப்படுகிறது. எண்ணிக்கை, கணிப்பு, தர்க்கம் ஆகிய பொருட்கள் இச்சொல்லுக்கு உண்டு. தொல்காலத்தில் நம்பிக்கைக்கு எதிரான தர்க்கநிலைபாடுகளில் இதற்கு முதலிடம் இருந்திருக்கிறது. பொதுவாக உலகியல் சார்ந்தது, தர்க்கபூர்வமானது என்னும் பொருளிலேயே இச்சொல் பயன்படுத்தப்படுகிறது. பகவத்கீதை சாங்கியயோகம் என்னும் அத்தியாயத்தில் சாங்கிய என்னும் சொல்லை நடைமுறைசார்ந்த தர்க்கம் என்னும் பொருளிலேயே பயன்படுத்துகிறது.

ஆசிரியர்

சாங்கிய தரிசனத்தின் ஆசிரியர் கபிலர் . இவர் வைதிக மரபுக்கு எதிரான தரப்பைச் சேர்ந்த ஞானி என்று பொதுவாக குறிப்பிடப்படுகிறார். கபிலர் என்பது ஒரு குலப்பெயர் அல்லது ஆசிரியமரபின் பெயராக இருக்கலாம். பல கபிலர்கள் தொன்மத்திலும் வரலாற்றிலும் காணப்படுகிறார்கள். ஆனால் தொன்மங்கள் அனைத்திலுமுள்ள பொதுவான கூறு கபிலர், பதஞ்சலி இருவருமே வைதிகமரபுக்கு எதிரானவர்கள் என்பதே. மகாபாரதக் கதைகளில் வரும் கபிலர் பாதாள உலகில் நாகங்களுடன் வாழ்பவராகச் சொல்லப்படுகிறார். கோயில்களிலுள்ள பதஞ்சலி சிலைகள் அவரை ஒரு நாகமாக இடைக்குக் கீழே பாம்பு வடிவிலேயே சித்தரிக்கின்றன.

தோற்றுவாய்

தொன்மையான சிந்தனைகளின் காலகட்டத்தை அறுதியாகக் கணிப்பது கடினமானது. அந்தச் சிந்தனைகளிம் மூலநூல் என பிற்காலத்தில் மதிப்பு பெற்ற நூல் உருவான காலகட்டத்தையே அவற்றின் தோற்றம் உருவான காலம் என பொதுவாகக் கணிக்கிறார்கள்.

சாங்கிய தரிசனம் இந்திய மரபின் மிகத்தொன்மையான தத்துவப்பார்வை என்று பொதுவாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர். ரிச்சர்ட் கார்பே “மானுடசிந்தனையில் முதல்முறையாக கபிலரின் தத்துவத்திலேயெ மானுட உள்ளத்தின் முழுமையான சுதந்திரமும் தன் சிந்தனையின் ஆற்றல் மீதான முழுமையான நம்பிக்கையும் வெளிப்படுகிறது’ என்று குறிப்பிடுகிறார்.

ஹென்றிச் ஸிம்மர் “கிட்டத்தட்ட வரலாறு தொடங்கும் காலகட்டத்திலேயே, இருபத்துநான்கு தீர்த்தங்காரர்களுக்கு முன்னரே, வேதங்கள் அல்லாத மரபில் இருந்து சாங்கியம் உருவாகி வந்திருக்கிறது” என்று கருதுகிறார்.

தேபிப்பிரசாத் சட்டோபாத்யாய ‘சாங்கியம் தொன்மையான பழங்குடிகளின் மாந்த்ரீக- தாந்த்ரீகச் சடங்குகளில் இருந்து திரண்டு வந்த தத்துவக் கொள்கை. சாங்கியத்தில் உள்ள பிரகிருதி என்னும் கருதுகோள் தொன்மையான தாய்த்தெய்வ வழிபாடுகளில் இருந்தும், நிலவழிபாடுகளில் இருந்தும் உருவாகி வந்தது.’ என்று கருதுகிறார்.’

கபிலர் உபநிடதங்கள் உருவான காலகட்டத்தில் வாழ்ந்திருக்கலாம் என ஊகிக்கப்படுகிறது. (கிட்டத்தட்ட பொமு 1000) .கபிலர் சாங்கியசூத்திரங்கள் என்னும் நூலை எழுதினார் என்றும் அதுவே சாங்கிய மரபின் முதன்மைநூல் என்றும் வெவ்வேறு நூல்களில் கூறப்படுகிறது. ஆனால் அந்நூல் கிடைப்பதில்லை. சாங்கிய சூத்திரங்கள் என்றபேரில் கபிலரின் நூல் என கூறப்படுவது பிற்காலத்தைய படைப்பு. பிற அறிஞர்கள் கபிலரின் நூலுக்கு எழுதிய மறுப்புகள் விளக்கங்கள் வழியாக அதை மூலநூலாக உருவகிப்பது வழக்கமாக உள்ளது என்று ஹிரியண்ணா கருதுகிறார்.

வேதமரபும், சாங்கியமும்

சாங்கிய மரபு அடிப்படையில் வேதங்களின் ஒட்டுமொத்தமான பார்வைக்கு மாறானது. வேதமரபு வெவ்வேறு தெய்வ உருவகங்களினூடாக பிரம்மம் என்னும் மையக்கருதுகோள் நோக்கிச் செல்லும் தன்மை கொண்டது. பிரபஞ்சத்திற்கு பிரபஞ்சத்தைக் கடந்த ஒரு பரம்பொருளே காரணம் என்னும் நோக்கு கொண்டது. அப்படி ஒரு மையம் சாங்கியத்தில் இல்லை. சாங்கியம் பருப்பொருளாலான பிரபஞ்சத்திற்கு அப்பால் ஒரு காரணத்தை உருவகிக்கவுமில்லை. பிரபஞ்சம் பருப்பொருளாலானது என்றும், அப்பருப்பொருள் தனக்கென ‘உள்ளொளி’ அற்றது என்றும் சாங்கியம் கருதுகிறது. அது தனக்கன நோக்கமோ, செயல்திட்டமோ அற்றது. அது ஜடம், அசேதனம்.

மகாபாரதம் சாந்திபர்வத்தில் சாங்கியம் வேதங்களுக்கு மாற்றான தரிசனங்களாக சாங்கியம், யோகம் ஆகியவை குறிப்பிடப்படுகின்றன. அனைத்துக்கும் முதற்காரணம் பிரகிருதி என்னும் முதலியற்கை என்று அறிந்துகொள்பவனால் துயர்களைக் கடக்கமுடியும் என்று மகாபாரதம் குறிப்பிடுகிறது. சாங்கியத்திலுள்ள இருபத்துநான்கு தத்துவங்கள் எப்படி முதலியற்கையிலிருந்து உருவாகி வந்தன என்றும் மகாபாரதம் குறிப்பிடுகிறது.

ரிச்சர்ட் கார்பே தன் நூலில் சாங்கியம் சாரம்சத்தில் இறைமறுப்பு நோக்கு கொண்டதும், வேத மறுப்பு நோக்கு கொண்டதுமான ஒரு தரிசனம் என்றும், அதன் வைதிகச்சார்புள்ள பகுதிகள் பின்னர் சேர்க்கப்பட்டவை என்றும் குறிப்பிடுகிறார்.

மூலநூல்கள்

சாங்கிய தரிசனத்திற்கு உரிய மூலநூல்களாக இன்று கருதப்படுபவை

  • சாங்கிய சூத்திரங்கள் : கபிலர் எழுதிய முதன்மை நூல் இந்நூல் இன்று கிடைப்பதில்லை. இந்நூலுக்கான விளக்கக் குறிப்புகளாகவே வேறு நூல்கள் எழுதப்பட்டுள்ளன.
  • சாங்கிய பிரவசன சூத்ரம்: இந்நூல் கபிலர் இயற்றியது என்று சொல்லப்பட்டது. அது பதினான்காம் நூற்றாண்டு வாக்கில் எழுதப்பட்டது என பின்னர் ஆய்வாளர் முடிவுசெய்தனர்.
  • சாங்கிய காரிகை : ஈஸ்வரகிருஷ்ண சூரி இயற்றிய சாங்கிய காரிகை பொயு 3 முதல் 5 ஆம் நூற்றாண்டுக்குள் எழுதப்பட்டது. சாங்கிய தரிசனத்தின் மிகப்பழையதும் முழுமையானதும் நம்பத்தக்கதுமான நூல் இதுவே என கார்பே உள்ளிட்ட ஆய்வாளர் கருதுகிறார்கள்.
  • சாங்கிய காரிகை பாஷ்யம். கௌடபாதர். பொயு எட்டாம் நூற்றாண்டு
  • தத்வகௌமுதி : வாசஸ்பதி மிஸ்ரர் ஈஸ்வரகிருஷ்ண சூரியின் சாங்கிய காரிகைக்கு எழுதிய விளக்கம். பொயு 9 ஆம் நூற்றாண்டு
  • சாங்கிய பிரவசன சூத்ர பாஷ்யம்: விக்ஞான பிக்ஷு. பொயு 16 ஆம் நூற்றாண்டு
தமிழில்
  • தமிழில் சாங்கிய காரிகைக்கு கடலங்குடி நடேச சாஸ்திரி ஓர் உரை எழுதியுள்ளார்
  • சாங்கிய காரிகையை க.சுப்ரமணியம் செய்யுளில் மொழியாக்கம் செய்துள்ளார்

இருவகை சாங்கியம்

கார்பே உள்ளிட்ட தத்துவ வரலாற்றாசிரியர்கள் இரண்டு வகையான சாங்கியங்கள் உண்டு என கூறுகிறார்கள். நிரீஸ்வர சாங்கியம் (இறை இலா சாங்கியம்) சேஸ்வர சாங்கியம் (இறையுள்ள சாங்கியம்).

ஈஸ்வரகிருஷ்ண சூரியின் சாங்கிய காரிகைக்கு பின்னர் சாங்கியத்தின் புருஷன் என்னும் கருதுகோள் பிற்காலத்தில் இறைவன் ஆக விளக்கப்பட்டது. அதனடிப்படையில் சாங்கியம் புருஷனின் ஐந்து தன்மாத்திரைகளில் இருந்து ஐந்து பருப்பொருட்கள் உருவானதைப் பற்றி விளக்குமிடங்கள் பிரபஞ்சம் தெய்வசக்தியால் உருவாக்கப்படுவதாக கூறுகின்றன என விளக்கப்பட்டன. டாக்டர் சர்வப்பள்ளி ராதாகிருஷ்ணன் போன்றவர்கள் சாங்கியத்தை இந்தியாவின் ஆன்மிகதத்துவங்களில் ஒன்றகாவே காண்கிறார்கள். சாங்கியம் புருஷசித்தாந்தம் என்றே கூறப்பட்டது.

ஆனால் புருஷதத்துவம் இப்படி முன்னிறுத்தப்படுவதற்கு முந்தைய சாங்கியத்தில் அப்படி ஒரு படைப்புசக்தி இல்லை என்றும் பிரபஞ்சம் பருப்பொருட்களின் கூட்டால் தன் விதிகளின்படி இயங்குவதாகவும் அதில் புருஷன் என்பது இங்குள்ள அனுபவப்பிரபஞ்சத்தை உருவாக்கும் ஒரு கூறு என்னும் இடத்திலேயே இருந்ததாகவும் அறிஞர்கள் கூறுகிறார்கள்.

சாங்கியத்தின் அடிப்படைகள்

சாங்கிய தரிசனத்தை மூன்று அலகுகளாகப் பிரிக்கலாம். தரிசனம், தத்துவம், பயிற்சிகள். சாங்கியத்தின் அடிப்படையான பார்வையே அதன் தரிசனம். அதன்பொருட்டு சாங்கியம் பல கொள்கைகளை உருவாக்கிக் கொண்டது. இவை பிற தத்துவங்களுடன் உரையாடி வளர்ந்தன. சாங்கியத்தின் செயல்முறை யோகம் (தரிசனம்) என்னும் தனி தரிசனமாக வளர்ந்தது.

தரிசனம்

சாங்கிய தரிசனம் முன்வைக்கும் முழுமையான பார்வையையே அதன் தரிசனம் என்று சொல்லப்படுகிறது.

துக்கநிவாரணம்

சாங்கிய காரிகையின் ஒன்றாம் காரிகையில் ‘மூவகை துயரங்களில் இருந்து விடுபட விரும்புபவர்களுக்கான பதில் இதில் உள்ளது’ என்று சொல்லப்படுகிறது. சாங்கியத்தின்படி துயரங்கள் மூன்று

  • ஆத்யாத்மிகம் (மானுட இயல்புகளில் உருவாகும் துயரம்)
  • ஆதி பௌதிகம் (பருப்பொருட்களால் உருவாகும் துயரம்)
  • ஆதி தெய்விகம் (மனிதனை மீறிய பிரபஞ்ச சக்திகளால் உருவாகும் துயரம்)

இம்மூன்று துயர்களில் இருந்தும் விடுதலை அடைவதற்காகவே சாங்கியம் வழிதேடுகிறது.

சாங்கியக் கொள்கையின்படி இப்பிரபஞ்சம் என்பது மூலப்பிரகிருதியாலானது. அது சமநிலை குலைந்து தன்னை மீண்டும் ஒருங்கிணைக்கும்பொருட்டு தன்னை நிகழ்த்துகிறது. அறியாமையின் விளைவாகவே துயர்கள் உருவாகின்றன. துயர்களை அறிவதே விடுபடும் வழி. மூலப்பிரகிருதி என்னும் முதலியற்கையின் இயல்பை அறிபவன் அதன் ஒஉ பகுதியாக தன்னை உணர்ந்து துயரிலிருந்து விடுபடும் வழியை கண்டடைகிறான்.

மூலப்பிரகிருதி

சாங்கியத்தின் முதன்மையானதும் தனித்துவம் கொண்டதுமான கொள்கை என்பது இயற்கையைப் பற்றியதாகும். இங்குள்ள இயற்கையையே சாங்கியம் தன் அறிதலின் அடிப்படையாகக் கொள்கிறது. அதை பிரகிருதி என வரையறுக்கிறது. அதைக்கொண்டு பிரபஞ்சம் முழுக்க நிறைந்திருக்கும் ஒட்டுமொத்தமான பருப்பொருள் தொகுப்பை உருவகிக்கிறது. அதை மூலப்பிரகிருதி என குறிப்பிடுகிறது.

பிரகிருதி (ப்ர- க்ருதி) என்னும் சொல்லுக்கு தன்னைத்தானே உருவாக்கிக்கொண்டது, தானாகவே பரவிக்கொள்வது என்று பொருள். தமிழ் கலைச்சொல்லான இயற்கை மிகச்சரியாக அதே பொருள் கொண்டது. தானாகவே இயல்வது இயற்கை)

இயற்கை பற்றிய சாங்கியத்தின் பார்வையை கீழ்க்கண்ட அடிப்படைகள் கொண்டது என வரையறை செய்யலாம்

  • இயற்கை பருப்பொருட்களால் ஆனது. அப்பருப்பொருட்களை நிலம்,நீர்,தீ,காற்று, வானம் என்னும் ஐந்து அடிப்படைப்பொருட்களாகப் பிரிக்கலாம். அதற்கு அப்பால் இயற்கையில் உள்ளடக்கமென ஏதுமில்லை.
  • இயற்கை புலன்களால் அறியப்படத்தக்கது. உணரத்தக்க குணங்கள் கொண்டது. பார்வையாளன் அதை எப்படியும் பார்க்கலாம்,. ஆனால் அது தன்னியல்பில் மாறுபடுவதில்லை. பார்வையாளனுக்கு அப்பால் அது நிலைகொள்கிறது.
  • இயற்கை படைப்பப்பட்டது அல்ல. அழிந்து மறையக்கூடியதும் அல்ல. அது முதல்முடிவற்ற இருப்பு கொண்டது
  • இயற்கை தன் இயல்புகளின் அடிப்படையில் தன்னைத்தானே படைத்து உருமாற்றி இயங்கிக்கொண்டிருப்பது.
  • இயற்கைக்கு சாராம்சம் என ஏதுமில்லை. இயற்கையை ஆளும் இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்தியும் இல்லை. இயற்கைக்கு உள்நோக்கமோ உள்ளமோ செயல்திட்டமோ ஏதுமில்லை.

இக்காரணங்களால் எம்.என்.ராய், தேபிப்பிரசாத் சட்டோபாத்யாய போன்ற இந்தியவியல் அறிஞர்கள் சாங்கியம் பொருள்முதல்வாதம் சார்ந்த பார்வை கொண்ட தரிசனம் என வரையறை செய்கிறார்கள். சாங்கியம் இந்த இயற்கை பற்றிய கொள்கையை தொன்மையான பழங்குடிச் சமூகங்களின் நிலவழிபாட்டில் இருந்து எடுத்துக்கொண்டிருக்கலாம். பிரகிருதி என்னும் சொல் சாங்கியம் உருவாக்கிய பொருளிலேயே பின்னர் வந்த எல்லா தத்துவங்களிலும் பயன்படுத்தப்படுகிறது (பார்க்க: பிரகிருதி)

முக்குணங்கள்

இயற்கையில் பல இயல்புகள் (குணங்கள்) வெளிப்படுகின்றன. அவற்றை அறுதியாக மூன்று அடிப்படைக் குணங்களாகப் பிரிக்கலாம். அவை

  • சத்வம்: ஆக்கநிலை. சமநிலை.நன்னிலை.
  • தமோ குணம்: எதிர்மறைப் பண்பு. தேக்கநிலை. பின்னிழுக்கும் விசை.
  • ரஜோ குணம்: செயலூக்க நிலை, ஆட்படுத்தும் விசை, வெல்லும் விழைவு

இயற்கை என நாம் நினைப்பது இந்த மூன்று குணங்களும் தங்களுக்குள் முரண்பட்டு உருவாக்கிக் கொள்ளூம் ஒரு சமரசநிலையைத்தான். இயற்கையின் ஒரு தருணத்தில், ஓர் இடத்தில் ஒரு குணம் ஓங்கிக் காணப்படலாம். அப்போது அது செயலூக்கம் கொண்டதாகவோ, தேக்கநிலை கொண்டதாகவோ, ஆக்கநிலை கொண்டதாகவோ இருக்கலாம்.

இயற்கையின் இந்த முக்குணங்கள் அடிப்படையில் சாங்கியத்தின் கொள்கைகள். இவற்றை மிக விரிவாக சாங்கியம் விளக்குகிறது, சாங்கியத்திற்கு பிறகு வந்த தத்துவங்கள் மேலும் வளர்த்தெடுத்துள்ளன . (பார்க்க முக்குணங்கள்)

புருஷ நிலை

இயற்கையிலுள்ள முக்குணங்கள் எவரால் அறியப்படுகின்றன என்னும் வினாவுக்கான விடையாக சாங்கியம் சொல்லும் கருத்துரு புருஷநிலை என்பது. குணங்களை அறியும் குணி என்பதே புருஷநிலை.ஒவ்வொரு உயிரிலும் உறைந்து இயற்கையை அறியும் ஒரு தன்னுணர்வுதான் இயற்கையில் குணங்களை அடையாளம் காண்கிறது. இந்த உலகில் எத்தனை உலகை அறியும் தன்னுணர்வுகள் உள்ளனவோ அத்தனை புருஷநிலைகள் உள்ளன. ஆனால் ஒட்டுமொத்தமாக அது ஒரே தன்னிலைதான். அதுவே புருஷ நிலை.(சம்ஸ்கிருதத்தில் புருஷ என்னும் ஆண்பெண் பேதமற்ற சொல்லே பயன்படுத்தப்படுகிறது)

பிரகிருதி அசேதனம் (தன்னுணர்வற்றது) என்று சாங்கியம் சொல்கிறது. எனில் இங்குள்ள தன்னுணர்வு (சேதனை) எப்படி வந்தது என்னும் வினாவுக்கான விளக்கமாகவே சாங்கியம் புருஷ தத்துவத்தை உருவாக்கியது. புருஷ நிலை என்பது தூயதன்னுணர்வு. (சுத்த சேதனா) . புருஷநிலையும் பிரகிருதியைப் போலவே முதலும் முடிவும் அற்றது. இது பிற்காலத்தில் சாங்கியத்தில் சேர்க்கப்பட்டது என்று கார்பே போன்ற அறிஞர்கள் கருதுகிறார்கள்.

புருஷ நிலை பற்றிய சாங்கியத்தின் கருத்துக்கள் கீழ்க்கண்டவை

  • புருஷநிலை பிரகிருதியைப்போலவே தோற்றமும் அழிதலும் அற்றவது
  • புருஷ நிலை தூய என்பது தன்னுணர்வு, அது வாழும் பொருளுடல் அந்த தன்னுணர்வை தீர்மானிப்பதில்லை. அது சுதந்திரமானது.
  • புருஷநிலை பிரகிருதியின் இயல்பை தீர்மானிப்பதில்லை, அது அறிநிலை மட்டுமே.
  • புருஷநிலையின் இருப்பு பிரகிருதிக்கு எவ்வகையிலும் தொடர்புடையது அல்ல.புருஷ நிலை பிரகிருதியின் செயல்பாட்டுக்கு தவிர்க்கமுடியாததும் அல்ல. பிரகிருதியும் புருஷநிலையும் பிரிக்கமுடியாதபடி இணைந்தவையோ ஒன்றின் இரு பக்கங்களோ அல்ல. புருஷநிலை வெறும் சாட்சி மட்டுமே. (சாங்கிய காரிகை 19)
  • பிரபஞ்சத்தின் உருவாக்கத்திற்கோ செயல்பாட்டுக்கோ புருஷநிலை எவ்வகையிலும் காரணமோ பங்லாகளிப்பாற்றுவதோ அல்ல..

பிரகிருதியும் புருஷநிலையும் உலக உருவாக்கத்திற்கு முன்னரே இருந்தன. புருஷநிலைகுச் செயலுக்குக் காரணமாக அமையும் இயல்பில்லை. பிரகிருதிக்கு மட்டுமே அந்த இயல்பு உள்ளது என்று சாங்கிய காரிகை குறிப்பிடுகிறது. (சாங்கிய பிரவசன சூத்திரம் 1.75)

பிற்காலத்தில் புருஷநிலை என்னும் கருத்துரு இந்தியாவின் எல்லா மதப்பிரிவுகளாலும் எடுத்துக்கொள்ளப்பட்டது.புருஷன், பரமபுருஷன் என்பதே இறைவனின் வடிவமாக விளக்கப்பட்டது. (பார்க்க புருஷன்)

முக்குணச் சமநிலை

மூலப்பிரகிருதி என்பது மூன்று குணங்களின் சமன்பாடு மிகச்சரியாக அமையும்போது செயலற்றதாக உள்ளது. அதன் சமநிலை குலையும்போது அது செயல்வேகம் கொண்டதாக ஆகிறது. தன்னுடைய சமநிலையை மீண்டும் அடையும்பொருட்டு அது முடிவில்லாத இணைவுகளையும் மறு இணைவுகளையும் நிகழ்த்திக்கொண்டே உள்ளது. அதுவே பிரபஞ்ச இயக்கமாகும். மூன்று குணங்களின் இணைவிலுள்ள வேறுபாடுகளால்தான் நாம் காணும் புறப்பிரபஞ்சம் இத்தனை முடிவில்லாத பொருட்களால் ஆனதாக உள்ளது.

’முக்குணங்கள் ஒன்றையொன்று தாக்கி வெல்கின்றன, ஒன்றையொன்று சார்ந்துள்ளன, ஒன்றையொன்று உருவாக்குகின்றன, இணைகளைப்போல ஒன்றோடொன்று சேர்கின்றன, ஒன்றையொன்று வளர்க்கின்றன. இந்த இயல்புகளின் விளைவாகவே பருப்பொருளின் பரிணாமம் நிகழ்கிறது’ என்று சாங்கிக காரிகை சொல்கிறது (சாங்கிய காரிகை 12)

சாங்கியத்தின் இந்த சமநிலைக் கொள்கை ஆயுர்வேதம், பரதசாஸ்திரம் பிற அறிவுத்துறைகளில் தொடர்ச்சியான தீவிரமான செல்வாக்கைச் செலுத்தியது.

தத்துவம்

சாங்கியம் தன்னுடைய தரிசனத்தை நிறுவும்பொருட்டு விரிவான தத்துவ அடிப்படையை உருவாக்கியது. சமகாலத்தைய பிற சிந்தனைகளுடன் விவாதித்து அந்த தத்துவக்கொள்கைகளை விரிவாக்கிக்கொண்டே இருந்தது.

  • பருப்பொருட்கள் மட்டுமேயான பிரபஞ்சம் எப்படி செயல்படுகிறது?
  • இப்பிரபஞ்ச இயக்கத்தின் நோக்கம் என்ன?
  • முதலியற்கை தன்னுணர்வற்றது என்றால் பிரபஞ்சத்திலுள்ள தன்னுணர்வு எப்படி உருவானது?
  • வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்தையும் நிகழ்த்தும் அதே விதிகள் எப்படி பிரபஞ்ச இயக்கங்களையும் நிகழ்த்துகின்றன?
  • பிரபஞ்சத்தில் மனிதனின் இடம் என்ன? அவன் மீட்பு எவ்வாறு அமையும்?

ஆகிய ஐந்து வினாக்களை எதிர்கொள்ளும் முகமாக சாங்கியம் இந்த தத்துவ விவாதப்புள்ளிகளை உருவாக்கிக்கொண்டது.

வியக்தம், அவியக்தம்

வியக்தம் (தோன்றுவது) அவியக்தம் (தோன்றாதது) என்னும் இருநிலைகளில் பிரபஞ்சம், அப்பிரபஞ்சமாக தெரியும் முதலியற்கை இருந்துகொண்டிருப்பதாக சாங்கியம் சொல்கிறது. பிரகிருதி இரு நிலைகளில் இயல்கிறது. நாம் காணும் இப்பிரபஞ்சம் ஒரு விளைவு (காரியம்) . அதுவே அறியப்படுவது , ஆகவே வியக்தம். ஆனால் இதற்கு காரணமாக உள்ளது நாமறிய முடியாத மூலப்பிரகிருதி. அதுவே அவியக்தம். சாங்கிய ஞானம் என்பது அறியப்படுவது- அறியப்படாதது பற்றிய அறிவு எனப்படுகிறது. (வியக்தாவ்யக்த ஞானம்) வியக்தம் என்பது காரணங்கள் கொண்டது, பற்பலவாக பெருகியிருப்பது, நிலையற்றது, சார்ந்திருப்பது. அவியக்தம் காரணமற்றது, ஒன்றேயானது, நிலையானது, எதையும் சாராதது. (சாங்கிய காரிகை 10, 11)

சத்காரிய வாதம்

இந்த பிரபஞ்சம் காரிய- காரண உறவால் ( விளைவு, விளைவுக்கு காரணம்) ஆனது என சாங்கியம் வகுக்கிறது. இந்த பிரபஞ்சத்திலுள்ள அனைத்தும் மிகச்சிக்கலான காரியகாரண உறவால் இணைக்கப்பட்டு ஒன்று இன்னொன்றை நிகழ்த்திக்கொண்டே இருக்கின்றன. இங்கே நாம் காணும் பிரபஞ்சம் இதற்கு காரணமாகிய இன்னொன்றில் இருந்து உருவானது. மோரில் இருந்து நெய்போல. மோர் பாலில் இருந்தும் பால் பசுவில் இருந்தும் பசு இன்னொரு பசுவில் இருந்தும் வருகின்றன. நாம் காணும் ஒவ்வொன்றும் ஒன்றில் இருந்து இன்னொன்றாக மாறிக்கொண்டிருக்கிறது. ஆகவே ஒரே சமயம் காரணமாகவும் காரியமாகவும் அது உள்ளது. நாம் காணும்போது அது எப்படி தன்னை நிகழ்த்தியிருக்கிறதோ அதுவே நாமறியும் பிரபஞ்சமாகும். ஆகவே இப்பிரபஞ்சம் என்பது ‘விளைவின் இருப்பு’ மட்டுமே (சத்காரியாத்).

இந்த உருவகத்தை சாங்கியம் சிக்கலான நாகமண்டலங்கள் வழியாக விளக்குகிறது. இந்த உருவகம் பின்னாளில் மதவழிபாட்டு உருவகமாக ஆகியது. ( பார்க்க சத்காரிய வாதம்)

பரிணாமவாதம்

முதலியயற்கை அவியக்த நிலையில் இருந்து வியக்த நிலைக்கு உருமாறியதையே பரிணாமம் என்று சாங்கியம் சொல்கிறது. இப்பிரபஞ்சம் முதன்மையான பருப்பொருளில் இருந்து உருவாகி வந்த விதம்தான் பரிணாமக்கொள்கையாக அவர்களால் விளக்கப்படுகிறது. முதலியற்கையிலுள்ள மூன்று குணங்களின் சமநிலை குலைந்து அதன் விளைவாக பிரபஞ்சமெனும் தொடர்நிகழ்வு உமுதலியற்கையே பிரபஞ்சம் ஆக மாறுகிறது என்பது சாங்கியத்தின் கொள்கை.

“இயற்கையில் இருந்து மஹத் என்னும் தத்துவமும், மஹத்தில் இருந்து அகங்காரமும் , அஹங்காரத்தில் இருந்து 16 குணங்களும் (ஷோடசகுணம்) அவற்றிலுள்ள ஐந்து தன்மாத்திரைகளில் இருந்து ஐந்து பருப்பொருட்களும் உருவாயின’’ என்று சாங்கிய காரிகை குறிப்பிடுகிறது (சாங்கிய காரிகை 22)

இந்த பிரபஞ்ச உருவாக்கம் எந்த வெளிச்சக்தியின் தூண்டுதலும் இல்லாமல் இயற்கையின் பருப்பொருட்களின் இயல்பில் இருந்தே உருவானதாகும். ’பாலில் இருந்து தயிர் உருவாவதுபோல’ இயல்பாக முதல்முடிவற்ற முதலியற்கையில் இருந்து இவையெல்லாம் உருவாயின என்று சாங்கியம் குறிப்பிடுகிறது.

சஜாதிய பரிணாமம்

முக்குணங்களின் சமநிலை குலைந்து பிரபஞ்ச உருவாக்கம் நிகழ்ந்தமைக்கு சாங்கியம் இரண்டு விளக்கங்களை அளிக்கிறது. பழைய சாங்கியக் கொள்கை (நிரீஸ்வர சாங்கியம்) இயற்கையின் மூன்று குணங்களின் சமநிலை விளக்கமுடியாத ஏதோ காரணத்தால் குலைந்தது என்கிறது. (அநிர்வசனீயம்). முக்குணங்கள் தங்கள் இயல்பாலேயே முரண்பட்டு பிரபஞ்சநிகழ்வு தொடங்கியதற்கு சஜாதிய பரிணாமம் (அகப் பரிணாமம்) என்று சாங்கியம் சொல்கிறது. அந்நிலையில் பொருள்வயப் பிரபஞ்சம் உருவாவதில்லை. இயற்கை தன்னுள் தானே நிகழ்ந்துகொண்டிருக்கிறது. எதனாலும் அறியப்படாமையால் அது நிகழ்வதும் நிகழாமலிருப்பதும் ஒன்றே. இதை சொரூபப்பரிணாமம் என்று சாங்கியம் சொல்கிறது.

விஜாதிய பரிணாமம்

பிற்கால சாங்கியக்கொள்கை (சேஸ்வர சாங்கியம்) அந்த சமநிலைக்குலைவு புருஷநிலையின் பார்வையால் உருவானது என்கிறது. இதை விஜாதிய பரிணாமம் (வெளிப்பரிணாமம்) என்கின்றது சாங்கிய காரிகை. அதன்படி சஜாதிய பரிணாமம் நிகழ்ந்து இயற்கை செயல்வடிவம் கொண்டதனால்தான் புருஷநிலை தன் தனித்துவத்தை அடைந்தது. அதன் பார்வையில் இயற்கை மேலும் மேலுமென பிரிந்து பெருகலாயிற்று. அவ்வாறுதான் நாமறியும் இப்பிரபஞ்சப்பெருவெளி பிறந்தது.

புருஷ பிரகிருதி சம்யோகம்

புருஷநிலையின் பார்வையில்தான் இயற்கையின் சமநிலைக்குலைவின் விளைவான முடிவில்லாத வடிவவேறுபாடுகளும் அவற்றின் இணைவும்பிரிவுமான செயல்பாடுகளும் உள்ளன. புருஷநிலையும் அதற்கேற்ப முடிவில்லாத தனிப்புருஷநிலைகளாக பிரிந்து பெருகியுள்ளது. ஒரு தனிப்புருஷநிலை தன்னை அந்த பிரிவுபட்ட தன்னிலையை கடந்து தன் ஒட்டுமொத்த புருஷநிலையை அடையுமென்றால் இயற்கையும் பிளவுபடாத ஒற்றைப்பேரியற்கையாக ஆகிவிடும். இதுவே புருஷ- பிரகிருதி சம்யோகம் எனப்படுகிறது.

பிரபஞ்ச உருவாக்கம் பிரகிருதி- புருஷ இணைவால் உருவாவது என்பதற்காக சாங்கியம் ஒரு குறிப்புருவகத்தை பயன்படுத்துகிறது. விழியிழந்தவரும் காலிழந்தவரும் இணைந்து காட்டை கடப்பதுபோல. ஜடப்பிரபஞ்சம் கண்ணற்றது. ஆகவே அறிதல் அற்றது. ஆனால் செயல்படுவது. புருஷநிலை காலற்றது, ஆகவே செயல்படாதது. ஆனால் அது அறிவுகொண்டது. புருஷநிலை பிரகிருதியை செயலூக்கம் கொண்டதாக ஆக்குகிறது.

மஹத்

மூலப்பிரகிருதியில் உருவான முதல் ‘கருத்துரு’ என மஹத் சாங்கியத்தால் உருவகம் செய்யப்படுகிறது. அறிவு, தன்னுணர்வு, உள்ளம் ஆகிய அனைத்துக்கும் அடிப்படையாக அமைந்த முதல் பிரக்ஞைத்துளி அது. அதை ஒரு தன்னுணர்வு என சொல்லலாம். சாங்கியத்தின் கொள்கைப்படி அது பருப்பொருளின் ஓர் இயல்பே. வெவ்வேறு பொருட்களை சேர்த்து அரைக்கும்போது அதுவரை இல்லாதிருந்த புதிய நறுமணம் ஒன்று உருவாவது போல பருப்பொருளின் பலவகையான இணைவுகளினூடாக இந்த அணுப்பிரக்ஞை உருவானது. இதுவே இப்பிரபஞ்சத்திலுள்ள அத்தனை பிரக்ஞைகளுக்கும் விதை.

அகங்காரம்

அஹம் என்றால் தான். அகங்காரம் என்றால் நானெனும் உணர்வு, அல்லது தன்னிலை. இருக்கிறேன், உள்ளேன், அறிகிறேன் என்னும் பிரக்ஞை. அது மகத்தின் அடுத்தகட்ட வளர்ச்சிநிலையாகும்.

அகங்காரம் மூன்று வகையானது என சாங்கியம் சொல்கிறது. மனம் என்னும் என்னும் புலன்களை அறியும் புலன். மனதுக்கு புத்திச்சார்பு, செயல்சார்பு என இரண்டு நிலைகள் உண்டு. அது இரண்டாகப்பிரிந்து புத்தியையும் செயல்களையும் ஆள்கிறது (சாங்கிய காரிகை 27)

சத் அகங்காரம் :

சமநிலை, செயலூக்கநிலை தன்னுணர்வு. இது தைசத அகங்காரம் என்றும் சொல்லப்படும். சத் அகங்காரத்தில் இருந்து மனம் இந்திரியங்கள் ஆகியவை உருவாகின்றன. அவை

  • ஞான இந்திரியங்கள்: கண்,காது,நாக்கு,மூக்கு,தோல் எனும் ஐந்து அறியும்புலன்கள்.
  • கர்ம இந்திரியங்கள் : பேச்சு, கைகள், கால்கள், கழிவுறுப்புகள், பாலுறுப்புகள் என்னும் ஐந்து செயற்புலன்கள்
  • மனம் : இரு புலன்களையும் ஆளும் பதினொன்றாவது புலன்
தமஸ் அகங்காரம்

தேக்கநிலை தன்னுணர்வு. இது பூதாதி அகங்காரம் என்றும் சொல்லப்படும். தமஸ் அகங்காரத்தில் இருந்து பஞ்சபூதங்கள், தன்மாத்திரைகள் உருவாகின்றன

  • பஞ்சபூதங்கள்: நிலம், நீர், தீ, காற்று, வானம் என்னும் ஐந்து பருப்பொருட்கள்
  • ஐந்து தன்மாத்திரைகள்: மணம், சுவை, வடிவம், தொடுகை, ஓசை என்னும் ஐந்து நுண்கருத்துருவங்கள்

சாங்கியக் கொள்கையின்படி நிலத்தின் இயல்பு மணம், நீரின் இயல்பு சுவை, வடிவம் தீயின் இயல்பு, காற்று தொடுகையையும், வானம் ஓசையையும் இயல்பாகக் கொண்டுள்ளது. பரிணாமம் இரண்டு வழிகளில் ஒன்றையொன்று நிகழ்த்திக்கொண்டு வளர்கிறது. புருஷனில் மணம் உருவாகும்போது இயற்கையில் நிலம் உருவாகிறது. புருஷனில் சுவை உருவாகும்போது இயற்கையில் நீர் உருவாகிறது. இவற்றில் எது ஒன்றை ஒன்று உருவாக்கியது என்று அறியமுடியாது.

புருஷனும் பிரகிருதியும் என்னும் இருநிலைக்கு சாங்கியம் அளிக்கும் உருவகம் இரு நாகங்கள். ஒன்றையொன்று நோக்கும் இரு நாகங்கள் உடல்பின்னி இருப்பது புருஷனும் பிரகிருதியும் ஒன்றையொன்று அறிவதை சுட்டுகிறது. புருஷன் போக்தா (நுகர்பவன்) பிரகிருதி போக்ய (நுகரப்படுவது). ஆனால் தன்மாத்திரைகள் வழியாக புருஷனின் இயல்பை பிரகிருதி நிர்ணயிப்பதனால் பிரகிருதியும் புருஷனை நுகர்கிறது என்று ஒரு கொள்கை உண்டு. அதற்கு சாங்கியம் அளிக்கும் உவமை ஒன்றையொன்று விழுங்கும் இரு நாகங்கள். சாங்கியத்திலிருந்து இந்த உருவகம் பின்னர் ஒரு வழிபாட்டுருவமாகவே ஆகியது. மிகச்சிக்கலான நாகமண்டல உருவங்கள் இந்து, பௌத்த, சமண மரபுகளில் உள்ளன.

ரஜஸ் அகங்காரம் :

வெல்லும் தன்னுணர்வு. வைகாரிக அகங்காரம் என்றும் பெயருண்டு. தமோகுணத்திற்கும் சத்வகுணத்திற்குமான இணைப்பு. தமோகுணம் சத்வகுணம்நோக்கிச் செல்லும் பாதை.

இருபத்துதான்கு தத்துவங்கள்

ஐந்து ஞான இந்திரியங்கள்(அறிபுலன்கள்), ஐந்து கர்ம இந்திரியங்கள் (செயற்புலன்கள்), ஐந்து தன்மாத்திரைகள் (நுண்ணறிதல்கள்) மனம் ஆகிய பதினாறும் ஷோடஸ கணம் என சாங்கியத்தால் அழைக்கப்படுகின்றன. இவற்றுடன் பஞ்சபூதங்கள் (பருப்பொருட்கள்) அகங்காரம், மகத் ஆகியவற்றுடன் பிரகிருதியையும் இணைத்தால் 24 பேசுபொருட்கள் உள்ளன. இவை 24 தத்துவங்கள் என சாங்கியத்தால் அழைக்கப்படுகின்றன. (இங்கே தத்துவம் என்பது philosophy என்னும் பொருளில் இல்லை. இருத்தல்நிலைகள் அல்லது அறிதல்நிலைகள் என்றே பொருள்)

இந்த இருபத்துநான்கு தத்துவங்கள் ஒன்றையொன்று வரையறை செய்கின்றன. இந்த இருபத்துநான்கு தத்துவங்களையும் இருபத்து நான்கு புள்ளிகளாகவும் அவற்றை இணைக்கும் ஒரு கோலமாக இந்த பிரபஞ்சத்தையும் நாம் புரிந்துகொள்ளலாம். சாங்கியம் இந்த இருபத்துநான்கு புள்ளிக் கோலத்தையும் ஓர் உருவகமாகப் பயன்படுத்துகிறது.

பிற்கால நூல்கள் புருஷனையும் சேர்த்துக்கொண்டு இருபத்தைந்து தத்துவங்கள் என்று சாங்கியத்தை வரையறை செய்கின்றன

தன்மாத்திரைகள்

சாங்கியம் நம் அறிதல்கள் என்பவை நம் புலன்களின் இயல்புகள் அல்ல என வரையறை செய்கிறது. அவை இயற்கையிலேயே உள்ள சாத்தியக்கூறுகள். இயற்கை அறிவாக ஆவதற்கான ஐந்து வழிகள் அவை. மறுபக்கம் அவை புருஷனின் ஐந்து சாத்தியக்கூறுகள், புருஷனின் ஐந்து அறியும் முறைகள். புருஷன் ஐந்து தன்மாத்திரைகள் கொண்டு இருப்பதனால் இயற்கை அவனுக்கு தன்னை ஐந்து பருப்பொருட்களாகக் காட்டுகிறது. அப்படி நோக்கினால் ஐந்து தன்மாத்திரைகளே ஐந்து பருப்பொருட்களா ஆயின. ஆனால் ஐந்து தன்மாத்திரைகளின் அறிதல் மட்டும் அல்ல ஐந்து பருப்பொருட்கள். ஐந்து என்னும் அப்பிரிவினை, அந்த ஐந்தின் தனித்தன்மைகள் மட்டுமே ஐந்து தன்மாத்திரைகளால் உருவாக்கப்பட்டவை. அந்த ஐந்து நிலைகளுக்கு அப்பால் அவை தன்னளவில் முழுமையான இருப்பு கொண்டவை. சாங்கியத்தின் பிற்கால வடிவங்களில் இந்த இடம் ஐந்து தன்மாத்திரைகளின் உருவாக்கம் அல்லது மயக்கநிலையே ஐந்து பருப்பொருட்களும் என மறுவிளக்கம் அளிக்கப்பட்டு சாங்கியம் வேதாந்தம் நோக்கி கொண்டுசெல்லப்பட்டது. காலப்போக்கில் அது இந்து ஆன்மிகவாதமாகவே விளக்கவும்பட்டது.

பயிற்சிகள்

சாங்கிய தரிசனம் இப்பிரபஞ்சம் முதலியற்கை எனும் பிரகிருதியின் வெளிப்பாட்டுநிலையே என கூறியது. மூன்று குணங்களும் சமநிலையிழப்பதனால் பிரகிருதி செயல்வடிவம் கொண்டு பிரபஞ்சமாகப் பெருகியது. பிரகிருதியில் குணங்களை ஏற்றி அறியும் புருஷன் அதனுடன் இணைந்து பெருகி முடிவிலாக்கோடி பிரக்ஞைகளாக ஆனான். அந்த பிரக்ஞைகளில் ஒன்றே ஒவ்வொருவரிடமும் உள்ளது. அந்த துண்டுபட்ட பிரக்ஞை துண்டுபட்ட இயற்கையை அறிகிறது. அது அறிவேயாயினும் முழுமைநோக்கில் அறியாமையேயாகும். அந்த அறியாமையால்தான் அதற்கு பதற்றம், துயரம் ஆகியவை உருவாகின்றன. இயற்கை, இயற்கையை அறியும் தன்னிலை ஆகிய இரண்டைப்பற்றிய புரிதல் உருவாகும்போது அறியாமை மறைந்து துயரம் நீங்குகிறது.

ஆனால் இந்த அறிதல் ஒருவரின் இயல்பாகவே ஆகவேண்டும். அது ஒரு தகவலறிவாக இருந்தால் பயனில்லை. ஒருவர் பிறப்பிலேயே அடைந்து, நாள்தோறும் வளர்த்துக்கொண்டே இருக்கும் துண்டுபட்ட தன்னிலையில் இருந்து முழுமையான தன்னிலை நோக்கி தன்னை அவர் கொண்டுசெல்லவேண்டும். அந்த முழுமைத்தன்னிலை முழுமையான இயற்கையைக் காட்டுகிறது. பிரகிருதிபுருஷ சம்யோகம் என்னும் இணைப்பு நிகழ்கையில் துயரங்கள் அழிகின்றன. இந்நிலைக்கு சாங்கியம் முன்வைக்கும் வழிமுறைகள் அடங்கியது யோகம். யோகம் சாங்கியத்தின் துணைத்தரிசனமாக வளர்ந்து காலப்போக்கில் ஆறுதரிசனங்களில் ஒன்றாக ஆகியது. பின்னர் இந்து, சமண, பௌத்த, மதங்களிலும் விரிவாக்கம் பெற்றது (பார்க்க யோகம்)

மறுப்புகள்

சாங்கிய தர்சனம் அது உருவான காலகட்டத்திலேயே வேதாந்திகளால் கடுமையாக எதிர்க்கப்பட்டது. சாங்கிய தரிசனத்தின்மேல் வைதிகத்தரப்புக்கும் எதிர்ப்பு இருந்தது. ஒரு தொன்மக்கதையில் கபிலர் கபிலவாஸ்து என்னும் இடத்தில் வைதிகர்களால் கல்லால் அடித்து கொல்லப்பட்டார் என்று சொல்லப்படுகிறது. இதுவே சாங்கியம் வைதிகத்தின் வலுவான எதிர்த்தரப்பாக நீடித்தது என்பதற்கான சான்றாகும்.

தர்க்கபூர்வமாக சாங்கிய தரிசனந்த்துக்கான மறுப்புகளை பிற்கால வேதாந்திகளான சங்கரர், வாசஸ்பதி மிஸ்ரர் போன்றவர்க்ளே எழுதியுள்ளனர். வெவ்வேறு உரை (பாஷ்யம்)களில் சங்கரர் சாங்கிய தரிசனத்தை மறுக்கிறார். அம்மறுப்புகளை இவ்வாறு தொகுக்கலாம்

  • நம் கண்முன்னாலேயே இரண்டுவகை இயற்கைகள் உள்ளன. ஒன்று, அசேதனமாகிய ஜடப்பிரபஞ்சம். இன்னொன்று சைதன்யம் கொண்ட உயிர்ப்பிரபஞ்சம். ஜடப்பிரபஞ்சத்தில் இருந்து உயிர் உருவாவதில்லை என்பதை ஐயமற அறிகிறோம். ஜடம் செயலூக்கம் கொள்ள ஒரு படைப்புவிசை தேவை. மண்ணுக்கு தன்னை உருவாக்கிக்கொள்ளும் ஆற்றல் இல்லை, ஒரு குயவரின் கை படும்போதே அது சட்டிகளும் பானைகளும் ஆகிறது. (பிரம்மசூத்திர பாஷ்யம் அத்தியாயம் 2- பாதம் 2) )
  • காரணம் காரியமாகும் செயல்பாடு தானாக நிகழ்வதில்லை.பாலில் இருந்து நெய்யை ஒருவர் எடுக்க வேண்டியுள்ளது. புல் பசுவின் வழியாக பால் ஆகிறது என்று சொல்வது பிழை. எல்லா புல்லும் பால் ஆவதில்லை. பசுவால் உண்ணப்படும் புல்லே பாலாகிறது. பசுவில் இருந்து ஒரு சைதன்யம் அதை செய்யவேண்டியிருக்கிறது (பிரம்மசூத்திர பாஷ்யம் அத்தியாயம் 2 பாதம் 2)

விரிவாக்கங்கள்,செல்வாக்கு

  1. பிரபஞ்சத்தை அதைப் படைத்து நடத்தும் சக்தி, அதன் உள்ளுறையான சாராம்சம் ஆகிய இரண்டு கருத்துநிலைகளும் இல்லாமல் முற்றிலும் பருப்பொருட்களின் நிகழ்வாகவே விளக்க முடிந்ததே சாங்கியத்தின் முதன்மையான தத்துவ வெற்றியாகும். அதன் வழியாக சமகாலத்தில் சார்வாகம், தார்க்கிக மதம் போன்ற இறைமறுப்புக் கொள்கைகளுக்கு அது அதாரமாக ஆகியது. பின்னாளிலும் சமணம், பௌத்தம் போன்ற மாற்று இறைக்கொள்கை கொண்ட மதங்களுக்கான அடிப்படையாக திகழ்ந்தது.
  2. பிரகிருதி, புருஷன் என்னும் இரு அடிப்படைக் கருத்துருவங்களை உருவாக்கி அவற்றின் முரணியக்கமாக பிரபஞ்சத்தை விளக்கியதன் வழியாக சாங்கியம் இந்திய சிந்தனைமுறையில் முரணியக்கத்தை தர்க்கபூர்வமாக முன்வைத்த முதல் தத்துவமரபாக ஆகியது. அந்த முரணியக்கம் வெவ்வேறு வகையில் பின்னாளில் எல்லா இந்திய சிந்தனைப்பள்ளிகளாலும் எடுத்தாளப்பட்டது. சைவசித்தாந்த மரபின் சிவசக்தி லயம் என்பது சாங்கியத்தின் இந்த பிரகிருதிபுருஷக்கொள்கையின் இன்னொரு வடிவமே.
  3. சாங்கியம் உருவாக்கிய சத்காரிய வாதம் பிரபஞ்ச இயக்கத்தை விளக்கும் முதன்மையான அடிப்படையாக சமணம், பௌத்தம், வேதாந்தம் என அனைத்துத் தரப்பாலும் விரிவாக்கம் செய்யப்பட்டது.
  4. சாங்கியம் அசேதன (உள்ளுயிர்ப்பற்ற) வடிவமாகிய முதலியற்கை சேதன (உயிரூட்டம்கொண்ட) பிரபஞ்சமாக ஆனதை விளக்கும்பொருட்டு உருவாக்கிய இருபத்துநான்கு தத்துவங்கள் கொள்கையும், தன்மாத்திரைகள் ஐந்து பருப்பொருட்களாக ஆனமை குறித்த விளக்கமும் பின்னாளில் அனைவருக்குமே பருப்பொருளும் கருத்துருவ அகமும் ஒன்றையொன்று உருவாக்கும் விதத்தை விளக்க பயன்பட்டது. வேதாந்தம் போன்ற கொள்கைகள் சாங்கியம் சொன்ன விளக்கத்தை நேர் எதிராக விளக்கி தங்களை முன்வைத்தன.
  5. சாங்கியம் முன்வைத்த முக்குணச் சமநிலை என்னும் கருத்து தொடர்ச்சியாக எல்லா இந்திய சிந்தனைகளையும் பாதித்தது. அதில் இருந்து ஆயுர்வேதத்தின் திரிதோஷம் (வாதம் ,பித்தம்,கபம்)போன்ற கருத்துருக்கள் உருவாயின. கலைமரபிலுள்ள ரச சித்தாந்தம் (நவரசங்கள் ) இந்த சமநிலைக்கொள்கையின் விரிவாக்கங்களே.

இடம்

இந்திய சிந்தனை மரபில் சாங்கியம் மிக அடிப்படையான இடம் வகிக்கிறது. சாங்கியம் இல்லாமல் இந்திய மரபின் எந்தச் சிந்தனையும் செயல்பட முடியாது என்று கார்பே குறிப்பிடுகிறார். இந்திய சிந்தனையில் சாங்கியத்தின் இடம் இரண்டு வகையிலானது

  • ஓர் தூய ஜடவாதக் கொள்கையாக (பருப்பொருள் வாதம். பொருள்முதல்வாதம்) சாங்கியம் இந்தியாவிலுள்ள எல்லா ஆன்மிகக் கொள்கைகளுக்கும் எதிர்த்தரப்பாக நிலைகொண்டது.
  • பருப்பொருள் பிரபஞ்சத்துக்கும் கருத்துருவப் பிரபஞ்சத்துக்குமான உறவை விளக்கும் விரிவான பரிணாமக் கொள்கை வழியாக பிற்காலத்தைய ஆன்மிகவாதத் தரப்புகள் அனைத்துக்கும் தேவையான தத்துவக் கருவிகளை அளித்தது.

உசாத்துணை