சத்காரிய வாதம்

From Tamil Wiki

சத்காரியவாதம் (ஸத்கார்யவாதம், சத்கார்யவாதம்) சாங்கிய தரிசனத்தின் தத்துவக் கொள்கைகளில் ஒன்று. இந்திய சிந்தனை மரபின் ஆறு தரிசனங்களில் ஒன்றாகிய சாங்கியம் தன்னுடைய பிரபஞ்சக் கொள்கையை விளக்க உருவாக்கிக்கொண்ட விவாதமுறை சத்காரியவாதம். இது இப்பிரபஞ்சம் காரண காரிய உறவால் எப்படி உருவாகி நிகழ்கிறது என விளக்குகிறது.

தரிசனங்கள்

இந்திய மெய்யியலில் ஆறு தரிசனங்கள் உள்ளன. சாங்கியம். யோகம், வைசேஷிகம், நியாயம், பூர்வ மீமாம்ஸம், உத்தர மீமாம்ஸம் (வேதாந்தம்) . சத்காரியவாதம் சாங்கிய மரபின் கொள்கையாகும்.

மூலம்

சத்காரியவாதம் ஈஸ்வரகிருஷ்ண சூரியின் சாங்கியகாரிகையிலும் பின்னர் வந்த நூல்களிலும் விரிவாக விளக்கப்பட்டுள்ளது.

காரணகாரிய உறவு

சத்காரிய வாதத்தின்படி நாம் காணும் ஒவ்வொன்றும் ஒரு பரிணாமத்தின் விளைவாக உருவாகி வந்தவை. ஆகவே அவையெல்லாம் காரியங்கள். அவற்றின் காரணம் முன்னால் உள்ளது. அவை அவற்றுக்கு முந்தைய காரணத்தில் இருந்து உருவானவை. நாம் காணும் காரியங்கள் எல்லாம் இன்னொன்றாக மாறிக்கொண்டிருக்கின்றன. ஆகவே அவை காரணங்களும்கூட. ஒவ்வொன்றும் காரணமும் காரியமும் ஆக உள்ளது. இந்த காரியகாரண உறவு மிகப்பெரிய வலைப்பின்னலாக இங்கே நிகழ்ந்தபடி இருக்கிறது. காரணகாரிய உறவை சாங்கியம் இவ்வாறு வரையறைச் செய்கிறது

  • ஒவ்வொன்றும் ஒன்றின் காரியம், ஒவ்வொரு காரியத்துக்கும் காரணம் உண்டு. காரணம் இல்லாத ஏதுமில்லை
  • காரியம் காரணம் இரண்டுக்கும் இடையிலான உறவு பிரிக்கமுடியாதது. ஏனென்றால் அது இயற்கையின் நெறி
  • காரணம் அழிந்து காரியம் உருவாவதில்லை. காரணத்தில் காரியம் உள்ளடங்கியுள்ளது. தயிரில் பால் உருமாறிய வடிவில் உள்ளது. பாலில் தயிர் என்னும் சாத்தியக்கூறு உள்ளது.
  • காரணத்தின் இயல்பான, பிறிதொன்றில்லாத பரிணாமமே காரியம், பாலில் இருந்தே தயிர் வரமுடியும், நீரிலிருந்து வரமுடியாது.
  • அறியப்படாததில் இருந்து அறியப்படுவது உருவாவதே இயற்கையின் பரிணாமம். அறியப்படாதது (அவியக்தம்) அறியப்படுவதாகிறது (வியக்தம்)
  • ஒரே பொருளில் அதன் அறியப்படாததும் அறியப்படுவதும் திகழ்கின்றது.
  • இல்லாத ஒன்றில் இருந்து எதுவும் உருவாக முடியாது (நா வஸ்துனோ வஸ்து ஸித்தி)
  • இருப்பது இல்லாமலாவதுமில்லை

இந்திய மெய்யியல் மரபின் எல்லா தரிசனங்களும் தங்களுக்கான காரண காரிய உறவு கொள்கைகளைக் கொண்டுள்ளன. சாங்கியத்தின் காரிய காரண உறவுக் கொள்கையே சத்காரியவாதம் எனப்படுகிறது (பார்க்க காரண காரிய உறவு)

ஐந்து வாதங்கள்

வேதாந்த மரபின்படி இப்பிரபஞ்சம் அசத் (தன்னுணர்வு, சாராம்சம் அற்ற பருப்பொருள்). பிரம்மம் சத் (தன்னுணர்வு கொண்ட, தூய சாராம்சம்). சத் வடிவமான பிரம்மமே உண்மையில் இருப்பது. அசத் வடிவமான பிரபஞ்சம் உண்மையில் இல்லாதது, அது பிரம்மத்தின் ஒரு மாயத்தோற்றம் மட்டுமே. சத்வடிவமான பிரம்மத்தில் இருந்து அசத் வடிவமான பிரபஞ்சம் பிறந்தது (சிருஷ்டிகீதம், ரிக்வேதம். 10 ஆம் காண்டம்) பிரம்மத்தை ஜீவாத்மாக்கள் பிரபஞ்சம் என மயங்குகின்றன. பிரபஞ்சம் என்பது ஜீவாத்மாக்கள் அடையும் ஒரு பிழையறிவே. இதை அசத்காரியவாதம் என்று வேதாந்தம் கூறுகிறது.

இதை சாங்கியர்கள் மறுக்கிறார்கள்.ஆகவே இப்பிரபஞ்சத்தின் காரணம் சத் வடிவமே. (உண்மையான இருப்பே) என வாதிடுகிறார்கள். தங்கள் தரப்பை நிலைநிறுத்த ஐந்து வாதங்களை முன்வைத்தனர். (சாங்கிய காரிகை -9). இந்த ஐந்தும்தான் சத்காரியவாதம் என அழைக்கப்படுகின்றன. அவையாவன

  1. சதகாரணாத் : சாரமே காரணம். இல்லாத ஒன்றுக்கு (அசத்) காரணம் தேவையில்லை. இது இல்லாத ஒன்று என்றால் இதற்குக் காரணம் இருக்காது, தேடவேண்டியதும் இல்லை. இப்பிரபஞ்சம் இருக்கிறது. ஆகவே இதன் காரணமும் ஓர் இருப்பே. நம்மைச்சுற்றியுள்ள எல்லா பொருட்களும் இன்னொரு பொருளாகின்றன. பொருள்வடிவமான இந்தப்பிரபஞ்சத்தின் காரணமும் பொருள் வடிவமான ஒன்றே. ஆகவே இப்பிரபஞ்சத்தின் காரணம் சத் வடிவமே.
  2. உபதான க்ரஹணாத் : சாரமே தொடர்கிறது. ஒரு பொருளின் பொருண்மைக்குணமே அது இன்னொன்றாக ஆகும்போதும் அதில் நீடிக்கிறது. தயிர் பாலில் இருந்தே உருவாகும். பாலின் இயல்பே தயிராகிறது. ஆகவே பால் தயிரில் இன்னொரு வடிவில் நீடிக்கிறது. இந்த பிரபஞ்சம் எப்படி உள்ளதோ அதன் இன்னொரு வடிவிலேயே அதன் காரணம் இருக்க முடியும். அந்தக் காரணம் இந்தப்பிரபஞ்சத்தினுள் உறைந்துமிருக்கும். ஒன்றின் சாரமே இன்னொன்றாகிறது. இப்பிரபஞ்சம் நம்முன் உள்ளது, இதன் அடிப்படை இயல்புகளே இதன் காரணத்துக்கும் இருக்கும். ஆகவே இப்பிரபஞ்சத்தின் காரணம் சத் வடிவமே.
  3. சர்வசம்பவாஃபாவாத்: எங்குமிருப்பது இயல்வதல்ல. பொருளுக்கு இடமும் காலமும் உண்டு. ஒரு பொருள் இன்னொரு இடத்திலும் ஒரே சமயம் இருக்க முடியாது. எங்குமிருக்கும் ஒரேபொருள் என ஒன்று இருக்கவியலாது. இப்பிரபஞ்சம் நம் முன் இருக்கிறது. ஆகவே இதன் காரணம் இதற்கு அப்பால் தனியாக இருக்க முடியாது. ஆகவே இப்பிரபஞ்சத்தின் காரணம் சத் வடிவமே.
  4. சக்தஸ்ய சக்த்யகரணாத்: ஆற்றலே ஆற்றலாகிறது. எல்லாம் எல்லாமும் ஆவதில்லை. ஒன்றின் இயல்பான ஆற்றல் மட்டுமே அது இன்னொன்றாக ஆகச்செய்கிறது. பாலே தயிராகும், நீர் தயிராகாது. பாலின் ஆற்றலே தயிராகும் தன்மை. நீர் ஆற்றல் மிக்கது, ஆனால் தயிராக ஆகும் ஆற்றல் அற்றதும்கூட இப்பிரபஞ்சமாக இருப்பதன் காரணமாக உள்ளது இப்பிரபஞ்சமாக ஆகும் ஆற்றல்கொண்டது. ஆகவே இப்பிரபஞ்சத்தின் காரணம் சத் வடிவமே.
  5. காரணபவாத்: காரணம் காரியத்தில் உறைகிறது. பால் தயிரில் மறைந்துள்ளது. தயிரில் நெய் உறைகிறது. இப்பிரபஞ்சம் வியக்தம், இதன் அவியக்தமான மூலகாரணம் இதிலேயே அறியப்படாததாக உறைகிறது. ஆகவே இப்பிரபஞ்சத்தின் காரணம் சத் வடிவமே.

மூலகாரணம்

இந்த பருவடிவ பிரபஞ்சத்திற்கான காரணம் அருவ வடிவமான அல்லது நுண்வடிவமான ஒரு கருத்து என்பதை சாங்கியர் ஏற்றுக்கொள்ளவில்லை. பிரபஞ்சம் பருவடிவமானது, ஆகவே அதன் காரணமும் பருவடிவம் கொண்டதே. பிரபஞ்சத்திலுள்ள முடிவில்லாத வடிவங்கள் உருமாறிக்கொண்டே உள்ளன. இவை இல்லாத ஓர் இருப்பாகவே அந்த முதல் காரணம் இருக்கமுடியும். அதுவே மூலப்பிரகிருதி, அல்லது முதலியற்கை.

ஒவ்வொரு காரியத்திற்கும் காரணம் உண்டு. இப்பிரபஞ்சம் காரியம், இதன் காரணம் மூலப்பிரகிருதி. எனில் அந்த மூலப்பிரகிருதிக்கான காரணம் என்ன? இந்த வினாவுக்கு ‘வேருக்கு வேர் தேவையில்லை’ என்ற பதிலை சாங்கியர் சொன்னார்கள் (மூல காரணாத்) முதலியற்கை உருவாகவில்லை, அழியவுமில்லை, அது என்றும் இருந்துகொண்டிருக்கும்.

இணைக்கொள்கைகள்

சத்காரியவாதம் சாங்கியத்தில் ஒரு தர்க்கமுறையாக உருவாகியது. இது உபநிடதங்களின் வேதாந்தக் கொள்கைக்கு எதிரான வாதிட்டு உருவாக்கப்பட்டது. வேதாந்த நோக்கில் உபநிடதங்களில் ஒரு சத்காரியவாதம் பேசப்படுகிறது. பௌத்தர்கள் காரணகாரியவாதத்தை பிரதீதசமுத்பாதம் என்ற பெயரில் தனிக்கொள்கையாக விரிவாக்கிக் கொண்டனர்

உபநிடத சத்காரியவாதம்

உபநிடதங்களில் பேசப்படும் தொடக்ககால வேதாந்தம் அனைத்திற்கும் அடிப்படையாக உள்ள இயக்கநெறி (ரித) ஒன்றை வகுக்க முற்பட்டது. நம் காணும் இப்பிரபஞ்சத்தின் இயக்கமுறையில் இருந்து அந்த நெறியை ஊகிக்கலாமென்றும் அதுவே இப்பிரபஞ்சத்திற்குக் காரணமாக உள்ளதன் நெறியும் ஆகும் என கருதியது. இப்பிரபஞ்சத்தில் உள்ள தன்னியல்பான நெறி அல்லது செயல்நோக்கம் (ஸ்வத) இதன் காரணத்திலும் இருக்கலாம் என்று கூறியது. அதை சத்காரியவாதம் என வேதாந்திகள் அழைக்கின்றனர். பின்னர் இக்கொள்கை மறுக்கப்பட்டது. இது சாங்கிய சத்காரியவாதத்தில் இருந்து சற்று மாறுபட்டது

பிரதீத சமுத்பாதம்

பௌத்தர்கள் உருவாக்கிக்கொண்ட பிரதீத சமுத்பாதம் என்பது அவர்களுக்குரிய காரண காரியவாதமாகும். அதன்படி இங்குள்ள ஒவ்வொன்றும் காரியமே, அவற்றுக்கு காரணம் உள்ளது. ஒவ்வொன்றும் இன்னொன்றாக மாறிக்கொண்டிருக்கிறது, ஆகவே அவையனைத்தும் காரணங்களும்கூட. நாம் காண்பது இந்த தொடர்மாற்றத்தைத்தான். காரியத்தில் காரணம் உள்ளடங்கியுள்ளது என்பதை பௌத்தர்கள் ஏற்பதில்லை. ஒன்று அழிந்தே இன்னொன்று உருவாகிறது. முகில் மழையாகிறது மழை ஆறாகிறது ஆறு கடலாகிறது. ஒன்று இன்னொன்றானபின் முதல் நிலை நீடிப்பதில்லை. எல்லாமே மாறிக்கொண்டிருக்கின்றன, எல்லாமே நிலையற்றிருக்கின்றன என்பதே பிரதீதசமுத்பாதக் கொள்கை. இதில் இருந்தே பின்னர் திக்நாகரின் விக்ஞானவாதக் கொள்கை (அறிதல்வாதம்) நாகார்ஜுனரின் சூனியவாதக் கொள்கை (இன்மைவாதம்) உருவாகியது

ஆயுர்வேத சத்காரியவாதம்

சத்காரியவாதம் ஆயுர்வேதத்தில் சற்று மாறுபட்ட கோணத்தில் பயன்படுத்தப்படுகிறது. விளைவில் அதன் காரணம் உள்ளடங்கியுள்ளது, விளைவை ஆய்வதன் வழியாக அதன் காரணத்தை ஊகித்தறிய முடியும் என்பது ஆயுர்வேதத்தின் சத்காரியக் கொள்கையின் சாரம். ஒரு நோய் என்பது விளைவு. நோயை ஆய்வுசெய்து அந்நோயை உருவாக்கிய காரணத்தின் இயல்பை அறிய முடியும். நோய் உண்மையானது என்பதனால் அதன் காரணமும் உண்மையானதே.

காவிய இயல் சத்காரியவாதம்

சம்ஸ்கிருத காவிய இயலில் சத்காரியவாதம் வேறொரு தளத்தில் பயன்படுத்தப்படுகிறது. விளைவில் அதன் காரணம் உறைவதுபோல வெளிப்பாட்டில் அதன் நோக்கம் உறைகிறது. இலக்கியத்தில் அல்லது கலையில் நமக்குக் கிடைப்பது ஒரு மொழிவடிவம் அல்லது குறியீட்டு வடிவம் மட்டுமே. அது காரியம். அதன் காரணமாக அமைவது ஆசிரியனின் உள்ளம், அல்லது கற்பனை. அந்த வடிவில் அந்த ஆசிரியனின் உள்ளம் அல்லது கற்பனை உறைகிறது .ஆனந்தவர்த்தனர் அவருடைய தொனிக் கோட்பாடு விவாதங்களில் சத்காரியவாதத்தின் பல வடிவங்களைப் பயன்படுத்துகிறார்.

ஏற்பு

சாங்கியத்தின் சத்காரியவாதக் கொள்கை சமணத்தின் அடிப்படையாக பின்னாளில் ஏற்கப்பட்டது. சமண நூலான சீவகசிந்தாமணி ’மூவா முதலா உலகம் ஒருமூன்றும் ஏத்த’ என்று தன் கடவுள் வாழ்த்துப்பாடலில் சொல்கிறது. மூப்பில்லாத, தொடக்கமில்லாத உலகம் என்று பொருள்

மறுப்பு

சத்காரியவாதத்தை பின்னாளில் அத்வைத மரபின் நிறுவனரும் வேதாந்த கொள்கை கொண்டவருமான சங்கரர் மறுக்கிறார்.

  • நம் கண்முன்னாலேயே இரண்டுவகை இயற்கைகள் உள்ளன. ஒன்று, அசேதனமாகிய ஜடப்பிரபஞ்சம். இன்னொன்று சைதன்யம் கொண்ட உயிர்ப்பிரபஞ்சம். ஜடப்பிரபஞ்சத்தில் இருந்து உயிர் உருவாவதில்லை என்பதை ஐயமற அறிகிறோம். ஜடம் செயலூக்கம் கொள்ள ஒரு படைப்புவிசை தேவை. மண்ணுக்கு தன்னை உருவாக்கிக்கொள்ளும் ஆற்றல் இல்லை, ஒரு குயவரின் கை படும்போதே அது சட்டிகளும் பானைகளும் ஆகிறது. (பிரம்மசூத்திர பாஷ்யம் அத்தியாயம் 2- பாதம் 2) )
  • காரணம் காரியமாகும் செயல்பாடு தானாக நிகழ்வதில்லை.பாலில் இருந்து நெய்யை ஒருவர் எடுக்க வேண்டியுள்ளது. புல் பசுவின் வழியாக பால் ஆகிறது என்று சொல்வது பிழை. எல்லா புல்லும் பால் ஆவதில்லை. பசுவால் உண்ணப்படும் புல்லே பாலாகிறது. பசுவில் இருந்து ஒரு சைதன்யம் அதை செய்யவேண்டியிருக்கிறது (பிரம்மசூத்திர பாஷ்யம் அத்தியாயம் 2 பாதம் 2)

உசாத்துணை