under review

வேளை நகர் அன்னையைப் போற்றும் ஆனந்தக் கும்மி

From Tamil Wiki

வேளை நகர் அன்னையைப் போற்றும் ஆனந்தக் கும்மி (1995), கிறிஸ்தவச் சிற்றிலக்கிய நூல்களுள் ஒன்று. ’ஏசுவின் அன்னைக்கு ஏற்றிய தீபங்கள்’ தொகுப்பு நூலில் இக்கும்மி நூல் இடம்பெற்றது. இதனை இயற்றியவர் சூ. தாமஸ்.

வெளியீடு

வேளை நகர் அன்னையைப் போற்றும் ஆனந்தக் கும்மி நூல், ஏசுவின் அன்னைக்கு ஏற்றிய தீபங்கள் தொகுப்பு நூலில் இடம் பெற்றது. இந்நூல், ஜனவரி 1, 1995 அன்று, தஞ்சாவூரில் நடந்த உலகத் தமிழ் மாநாட்டில், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக வளாகத்தில் வெளியிடப்பட்டது. புலவர் நாக. சண்முகம் இந்நூலைப் பதிப்பித்தார். சூ. தாமஸ் இந்நூலின் ஆசிரியர்.

ஆசிரியர் குறிப்பு

சூசை உடையார் தாமஸ் என்னும் சூ. தாமஸ், தஞ்சை தூய இருதய மகளிர் உயர்நிலைப்பள்ளியில், 22 ஆண்டுகள் தமிழாசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார்.

வேளாங்கண்ணித் திருத்தலத்தின் மீதும் அங்குக் கோயில் கொண்டுள்ள ஆரோக்கிய மாதா மீதும் மிகுந்த பக்தி கொண்டு பல சிற்றிலக்கிய நூல்களைப் படைத்தார். அவை தொகுக்கப்பட்டு ’ஏசுவின் அன்னைக்கு ஏற்றிய தீபங்கள்’ என்ற தலைப்பில் நூலாக வெளிவந்தது.

நூல் அமைப்பு

வேளை நகர் அன்னையைப் போற்றும் ஆனந்தக் கும்மி கும்மி என்னும் சிற்றிலக்கிய வகைமையில் அமைந்தது. இந்நூலில், கீழ்க்காணும் தலைப்புகளில் பாடல்கள் இடம் பெற்றன.

  • நாட்டு வளம்
  • இடைச் சிறுவன் கண்ட அதிசயம்
  • பாவையும் பாலகனும்
  • ஆனந்தமும் அச்சமும்
  • சற்குணத்தாயும் சப்பாணி மகனும்
  • ஏழைக்கு இரங்கும் இனிய அன்னை
  • அன்னையின் அற்புதம்
  • ஆரோக்கிய மாதா
  • மேலைநாட்டு வணிகர்
  • தித்திக்கும் திருநாள்

உள்ளடக்கம்

வேளை நகர் அன்னையைப் போற்றும் ஆனந்தக் கும்மி நூலில் வேளாங்கண்ணி மாதா ஆலயத் தோற்றம், சிறப்பு, பெருமை, அன்னை நிகழ்த்திய அற்புதங்கள், திருநாள்கள் போன்றவை பற்றிய செய்திகள் 111 பாடல்களில் இடம்பெற்றன

பாடல் நடை

வேளை நகரின் சிறப்பு

கண்ணைக் கவர்ந்திடும் வேளைநகர் - தெய்வக்
கன்னி மரியன்னை வாழும் நகர்
உன்னதக் காட்சிகள் உற்றநகர் - இந்த
உலகப் புகழினைப் பெற்றநகர்

செந்தமிழ்ப்‌ பாவினைக்‌ கொண்ட நகர் -‌ பல
தேய மனிதரும்‌ கண்ட நகர்‌
அந்தமிலா வளம்‌ சிந்தும்‌ நகர்‌ - எங்கள்‌
அன்னை மரிக்கது சொந்த நகர்‌

நித்தம்‌ அருவியில்‌ நீர்குதிக்கும்‌ - அந்தச்‌
சத்தம்‌ முழவினைப்போல்‌ தொனிக்கும்‌
கத்தும்‌ குயில்கள்‌ இசை முழக்கும் -‌ மயில்‌
நாடக மாதரைப்‌ போல்‌ நடிக்கும்‌

கூடும்‌ மதகு நீர்‌ துள்ளிவரும் ‌- கரும்‌
குவளை மலர்களை அள்ளி வரும்‌
ஓடும்கால்‌ வாய்களில்‌ மீன்‌ புரளும் - கொத்தி
உண்ணப்‌ பறவையெ லாம்‌ திரளும்‌

தாமரை வாவியில்‌ பூத்திருக்கும்‌ - வண்டு
தண்தேன்நு கர்ந்திடக்‌ காத்திருக்கும்‌
மாமலர்ச்‌ சோலைகள்‌ மன்றல்தரும்‌ - தென்றல்‌
மங்கையர்‌ தம்நடை கொண்டு வரும்‌

வாளையெழுந்து குதிபாயும் - தட
வாவியில் தென்னங் குலைசாயும்
தாழை மடலில் மணம் விரியும் - கரை
தன்னில் தருக்கள் மலர் சொரியும்

வேளாங்கண்ணியின் பெருமை

ஆழமிகுங்‌ கடல்‌ நீர்‌ முழங்கும்‌ - அதன்‌
அருகினில்‌ வேளை நகர்‌ துலங்கும்‌
நாளும்‌ அடியவர்‌ கூட்டம்‌ வரும்‌ - பொல்லா
நாத்திகர்க்கும்‌ தெய்வ நாட்டம்வரும்‌

காற்றி லசைந்து கொடி பறக்கும்‌ - நம்மைக்‌
கையால்‌ அழைப்பது போலிருக்கும்‌
தோற்றும்‌ கலைகள்‌ பொலிந்‌ திருக்கும்‌ - அந்தத்‌
தொன்னகர்‌ விண்ணகர்‌ போன்றிருக்கும்‌

நித்தில மாடம்‌ நிறைந்திருக்கும்‌ - பல
நீண்ட தெருக்கள்‌ அமைந்‌ திருக்கும்‌
சித்திரக்‌ கோவில்‌ அழகெரிக்கும்‌ - தெய்வ
பக்தியும்‌ அன்பும்‌ பரிமளிக்கும்‌

அப்ப வகைசுடும்‌ தீம்‌ புகையும் - கரும்‌
பாலையி லேயெழும்‌ பூம்‌ புகையும்‌
விற்பவர்‌ வாங்குவோர்‌ பேரொலியும்‌ - கடை
வீதியில்‌ எங்கணுமே மலியும்‌

வெள்ளைப்‌ பசுக்குலம்‌ மேய்ந்து வரும்‌ - தென்றல்‌
மெல்லென வேநடை ஓய்ந்து வரும்‌
கொல்லையில்‌ முல்லைக்‌ கொடி மலரும் ‌- வண்டு
குந்தி யிருந்து மதுநுகரும்‌

குட்டியின்‌ கையினைக்‌ கொண்டுவைத்தே - சுடும்‌
சட்டியை மந்தி பதம்‌ பார்க்கும்‌
தெட்டிச்‌ சிறுவர்‌ பொருள்‌ கவர்ந்தே - மரத்‌
தேறிஇருந்து ருசி பார்க்கும்‌

ஆலயம் உருவாகுதல்

மேனாளில்‌ வாணிகம்‌ செய்துவந்த அந்த
மேற்குத்‌ திசையினர்‌ கப்பலொன்று
சீனாவின்‌ நின்று புகுந்து - பயணமாய்ச்‌
சென்றது இலங்கையை நோக்கியன்று

ஆழக்‌ கடலில்‌ மிதந்துசென்று - கப்பல்‌
அகன்ற வங்காளக்‌ கடல்‌ புகவே
சாலப்‌ பெரும்‌ புயல்‌ தோன்றிடவே - கலம்‌
சாயும்‌ என்றபயம்‌ மூண்டிடவே

சேரும்‌ வணிகர்‌ மிகப்‌ பயந்தார்‌ தாங்கள்‌
செய்தமுயற்சி யெலாம்‌ இழந்தார்‌
பாரக்‌ கலமினித்‌ தப்பிக்‌ கரையினைப்‌
பற்றல்‌ அரிதென நன்குணர்ந்தார்‌

அஞ்சியே தான்‌ முழந்தாளில்‌ நின்று-தேவ
அன்னையின்‌ பாத மதைநினைந்து
கெஞ்சியழுது கண்‌ நீர்வடித்தார்‌ - தாயின்‌
கிருபையை வேண்டிப்‌ பரிதவித்தார்‌

கன்னி கருணை புரிகுவையேல்‌ - எங்கள்‌
கப்பலைக்‌ காத்துத்‌ தருகுவையேல்‌
மண்ணில்‌ உனக்கொரு கோவில்செய்வோம்‌ - என்றும்‌
மறவோமினி யென நேர்ச்சை செய்தார்‌

தாயும் அருளினள் ஓய்ந்தது காற்றும் - அந்த
ஆழ் கடலிற் கலம் தப்பியதே
தோயும் கலம் கரையுற்றதுவே - அவர்
துன்பமும் நீங்கிடப் பெற்றனரே

துங்க மரியன்னை தன்னருளால் - இடம்
தோன்றவே கோவிலைக் கட்டிவைத்தார்
அங்கு சொருபமும் தன்னிசையாய் - வந்
தமைந்தது கண்டே அதிசயித்தார்.

மதிப்பீடு

வேளாங்கண்ணி மாதா ஆலயத் தோற்றம் பற்றியும் ஆரோக்கிய மாதாவின் சிறப்பு பற்றியும் இனிய, எளிய தமிழில் கூறும் நூலாக ’வேளை நகர் அன்னையைப் போற்றும் ஆனந்தக் கும்மி' நூல் அறியப்படுகிறது.

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 09-Jun-2024, 23:02:54 IST