under review

வாய்மைநாதன்

From Tamil Wiki
வாய்மைநாதன்

வாய்மைநாதன் (மு.இராமநாதன்) (மே 19, 1937 - ஆகஸ்ட் 11, 2023) கவிஞர், எழுத்தாளர். பள்ளி ஆசிரியராகப் பணியாற்றினார்.

வாழ்க்கைக் குறிப்பு

மு.இராமநாதன் என்னும் இயற்பெயரைக் கொண்ட வாய்மைநாதன், மே 19, 1937 அன்று, நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் வட்டத்தில் உள்ள வாய்மேடு என்ற கிராமத்தில் பிறந்தார். பள்ளிக் கல்விக்குப் பின் ஆசிரியர் பயிற்சி பெற்றார். முத்துப்பேட்டை அரசுப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றினார். கும்பகோணம் பந்தநல்லூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார். முனைவர் ய. மணிகண்டன், மருத்துவ நிபுணர் ச.மருதுதுரை, அரசியல் தலைவர் டி. லெனின், எஸ்.ஜி.எம்.லெனின், எழுத்தாளர்கள் மோகன்ராஜ், சண்முகசுந்தரம் போன்ற பலருக்கு ஆசிரியராக இருந்தார்.

மணமானவர். இவருக்கு ஜீவானந்தம், முருகபாரதி என இரு மகன்கள். மகள், தமிழ்க்கோதை.

இலக்கிய வாழ்க்கை

வாய்மைநாதன் இளம் வயது முதலே இலக்கிய ஈடுபாடு கொண்டவராக இருந்தார். பொதுவுடைமை சித்தாந்தத்தில் ஈர்ப்புக் கொண்டார். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து பணியாற்றினார். இதழ்களில் கவிதைகள் எழுதினார். தன் ஊர் பெயரைத் தனது பெயரின் பிற்பாதியுடன் இணைத்துக் கொண்டு 'வாய்மைநாதன்' என்ற பெயரில் எழுதினார். ஜீவாவின் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தில் தன்னை இணைத்துக் கொண்டு பல இலக்கியப் பணிகளில் ஈடுபட்டார்.

வாய்மைநாதன் எழுதிய நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் வாழ்க்கை வரலாற்றைக் கூறும் 'நேதாஜி காவியம்' ஒரு குறிப்பிடத்தகுந்த நூலாக அறியப்படுகிறது. தமிழ்வளர்ச்சித் துறையின் நிதி உதவியை பெற்று உருவான இந்நூல், இந்தியில், 'வங்க்கா சிங்க்' என்ற தலைப்பில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியானது. வாழ்க்கை வரலாறு, பொது வாசிப்புக்குரிய சிறுகதை, கட்டுரை, நாவல் எனப் பல நூல்களை எழுதினார். வேதாரண்யம் வட்டாரத்தில் பல பாதிப்புக்களை ஏற்படுத்திய இறால் பண்ணைகள் குறித்து வாய்மைநாதன் எழுதிய 'நாலி' நாவல் முக்கியமானதாக அறியப்படுகிறது. 'நந்தனார் சரித்திரக் கீர்த்தனைகள்' குறித்த ஆய்வை மேற்கொண்டார். பேராசிரியர் நா. வானமாமலையுடன் ஏற்பட்ட தொடர்பால் நாட்டுப்புறவியலிலும் ஈடுபாடு கொண்டு செயல்பட்டார்.

பொறுப்பு

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் வேதாரண்யம் வட்டத்தின் முன்னாள் மாநிலச் செயலாளராகவும், தலைவராகவும் பணிபுரிந்தார். பல்வேறு இலக்கிய அமைப்புகளுடன் இணைந்து பல இலக்கியப் பணிகளில் ஈடுபட்டார்.

விருதுகள்/பரிசு

  • 'கப்பலுக்கொரு காவியம்' நூலுக்குத் தமிழ் வளர்ச்சித்துறையின் சிறந்த நூலுக்கான பரிசு (2008)
  • தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் வாழ்நாள் சாதனையாளருக்கான விருது

மறைவு

வாய்மைநாதன், ஆகஸ்ட் 11, 2023 அன்று காலமானார்

மதிப்பீடு

வாய்மைநாதன் அடிப்படையில் மரபுக்கவிஞர். மரபுக் கவிதைகளை இசைப் பாடல்கள் போல எழுதும் ஆற்றல் கொண்டிருந்தார். பொதுவுடைமை இயக்கங்களுடன் இணைந்து பல சமூக நலப்பணிகளில் ஈடுபட்டார். மாணவர்களிடையே தமிழார்வத்தை விதைத்தார். பொது வாசிப்புக்குரிய சிறுகதைகளையும், நாவல்களையும் எழுதியிருக்கிறார். கவிஞர், எழுத்தாளர், கல்வியாளர் ஆகிய நிலைகளில் மதிப்பிடப்படுகிறார்.

நூல்கள்

கவிதைத் தொகுப்பு
  • நேதாஜி காவியம்
  • கப்பலுக்கொரு காவியம் (வ.உ.சி வரலாறு)
  • பகத்சிங் புரட்சிக் காப்பியம்
  • வெண்மணிக் காப்பியம்
  • மதுரை வீரன் (கவிதை நாடகம்)
சிறுகதைத் தொகுப்பு
  • புதிய மனிதன்
  • உயிரின் விலை
வாழ்க்கை வரலாறு
  • தியாகி களப்பால் குப்பு
நாவல்
  • அலைமகள்
  • நாலி
தொகுப்பு
  • தஞ்சை நாட்டுப்புறப் பாடல்கள்
  • சின்ன சின்ன திண்ணைக் கதைகள்

உசாத்துணை


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 11-May-2026, 12:43:53 IST