under review

ராமோஜியம்

From Tamil Wiki
ராமோஜியம்

ராமோஜியம் (2020) இரா.முருகன் எழுதிய நாவல். ராமோஜி என்னும் ஒரு சாமானியனின் வாழ்க்கையின் அன்றாடநிகழ்வுகளைச் சொல்லும் நாவல் அவனுக்கு முன்னால் பதினாறாம் நூற்றாண்டுவரை வாழந்த வெவ்வேறு ராமோஜிகளின் வாழ்க்கையை தொட்டுக்கொண்டு விரிகிறது. பகடியும், நுண்சித்தரிப்புகளும் கொண்ட படைப்பு

எழுத்து, வெளியீடு

இரா.முருகன் எழுதிய ராமோஜியம் 2020 ல் வெளிவந்தது. கிழக்கு பதிப்பகம் இதன் முதல்பதிப்பை வெளியிட்டது.

கதைச்சுருக்கம்

ராமோஜியம் 1930-களில் சென்னையில் ராமோஜி என்ற தஞ்சாவூர் மராட்டிய இளைஞன் ரத்னாபாய் என்னும் பெண்ணை மணந்துகொள்வதில் தொடங்குகிறது. அவனுடைய அன்றாட வாழ்க்கை, அன்றைய சினிமா, அன்றைய அரசியல், அன்றைய சடங்கு சம்பிரதாயங்கள், அன்றைய உணவுமுறைகள் என விரிகிறது.

அதை ஒரு தன் வரலாற்று நாவலாக எழுதும் பத்மநாப ராவின் மகனான ராமோஜி 1937-ல் பிரிட்டிஷ் அரசில் வேலைக்கு சேர்ந்து, விட்டோபாவை நண்பனாக பெற்று, ரத்னாவை திருமணம் செய்து, சுதந்திராவைப் பெற்று, காமப் பிறழ்வில் புவனாவை சேர்ந்து, ஏமர்ஜன்சி காலத்தில் ஓய்வு பெற்று 1997-ல் லண்டனில் இயற்கை எய்துகிறார். அவர் எழுதும் ராமோஜியம் நாவலில் அவருக்கு முந்தைய தலைமுறையில் ஒரு பத்மநாப ராவின் மகன் ராமோஜி புதுவை துய்ப்ளெக்ஸ் துரைக்கும் ஆனந்தரங்கம்பிள்ளைக்கும் உதவியாக அரசு வேலையில் இருக்கிறான். அவன் வாழ்விலும் விட்டோபா, ரத்னா, புவனா ஆகியோர் இருக்கிறார்கள். அவர்களுக்கும் முந்தைய தலைமுறையிலும் ஒரு ராமோஜி சிவாஜியின் இரண்டாவது மகன் ஆட்சி செய்யும் மகாராஷ்டிராவில், ஒரே மனிதர் வெவ்வேறு காலங்களில் வாழ்வதுபோலவோ, அல்லது வரலாறு ஒரே மனிதரை திரும்பத் திரும்ப நிகழ்த்துவது போலவோ இந்நாவல் அமைப்பு கொண்டுள்ளது

இலக்கிய இடம்

சீரான கதைக்கட்டமைப்பும் நிகழ்ச்சித்தொடர்பும்-ல்லாமல் தனிச்செய்திகள், நுண்சித்தரிப்புகளாக விரியும் இந்நாவல் நவீனத்துவத்திற்கு பிந்தைய எழுத்துமுறை கொண்டது. வரலாற்றை சாமானியர்கள் வழியாக அணுகும் முயற்சி. வரலாறு என்பது அர்த்தமில்லாமல் பல்லாயிரம் சாமானியர்கள் வழியாக நிகழ்ந்துகொண்டிருப்பதுதானா என்னும் வினா இரா முருகனின் மிளகு உள்ளிட்ட நாவல்களின் கருப்பொருள்.

’நாவல் முழுவதையும் ஒரு மெல்லிய புன்னகையுடன் மட்டுமே படிக்க முடியும். வெகு இயல்பான நகைச்சுவை, வலிந்து புகுத்தியது ஏதுமில்லை, அங்கங்கு மெல்லிய நுண்ணுர்வை தொடும் சம்பவங்கள்’ என்று ரெங்கசுப்ரமணி இந்நாவலை மதிப்பிடுகிறார். ‘சின்ன சின்ன சித்தரிப்புகள் வழியே அந்த சூழலை விஸ்தாரமாக விவரிப்பதன் வழியே வசீகர காலப் பயணம் ஒன்றை நோக்கி வாசகனை தள்ளி விடுகிறார் நாவலாசிரியர்’ என்று கடலூர் சீனு இந்நாவல் பற்றி குறிப்பிடுகிறார்.

உசாத்துணை


✅Finalised Page