under review

ராஜாம்பாள் (நாவல்)

From Tamil Wiki
ராஜாம்பாள்
ராஜாம்பாள்

ராஜாம்பாள் (நாவல்) (1908) ஜே.ஆர்.ரங்கராஜு எழுதிய புகழ்பெற்ற குற்றப்புலனாய்வு நாவல். இது அவருடைய முதல் நாவல். நாடகமாகவும் திரைப்படமாகவும் வெளிவந்தது. தமிழின் தொடக்ககால நாவல்களில் ஒன்று

எழுத்து,வெளியீடு

ஜெ.ஆர். ரங்கராஜு எழுதிய முதல்நாவலான ராஜாம்பாள் 1908-ல் அவரால் நூல்வடிவில் வெளியிடப்பட்டது

கதைச்சுருக்கம்

1926ல் வெளிவந்த ராஜாம்பாள் நாவலின் ஓவியம்

ராஜாம்பாள் பணக்காரரான சாமிநாத சாஸ்திரியின் மகள். அவளுடைய சிற்றன்னைதான் கனகவல்லி. அவள் படிப்பறிவில்லாதவள், பேராசை கொண்ட தீயவள். அவளுடைய தம்பி நடேச சாஸ்திரி. நடேசன் கெட்டவன். அவனுக்கு ராஜாம்பாளை கட்டிவைக்க கனகவல்லி முயல்கிறாள். ராஜாம்பாள் கோபாலன் என்ற நல்லவனை காதலிக்கிறாள். கோபாலனுக்கே ராஜாம்பாளைக் கொடுக்கவேண்டும் என்று சாமிநாத சாஸ்திரி நினைக்கிறார்

இத்தருணத்தில் சப்மாஜிஸ்ட்ரேட் நீலமேக சாஸ்திரிகள் உள்ளே நுழைகிறார். அவர் மனைவியை இழந்த ஐம்பதுவயதுக்காரர். அவருக்கு இளம்பெண்ணான ராஜாம்பாளை திருமணம் செய்ய ஆசை. ராமண்ணா என்ற கொடிய சூழ்ச்சியாளரைக் கனகவல்லி அழைத்து சாமிநாத சாஸ்திரி மகளுக்கு ஜாதகம் பார்க்க அழைக்கும் சோதிடர்களை பணம்கொடுத்து கோபாலனின் ஜாதகம் தப்பானது என்றும், அவனுக்கு ராஜாம்பாளை கொடுக்கக்கூடாது என்றும் பொய்சொல்லும்படி கேட்டுக்கொள்கிறாள். அதே ராமண்ணாவை கூப்பிட்டு தனக்கு ராஜாம்பாளை ஏற்பாடுசெய்தால் பணம் தருவதாக நீலமேக சாஸ்திரி சொல்கிறார்

ராமண்ணாவின் ஏற்பாட்டின்படி சாமிநாத சாஸ்திரி திருட்டுவழக்கில் சிக்கவைக்கப்படுகிறார். அதிலிருந்து விடுதலையாகவேண்டும் என்றால் ராஜாம்பாளை நீலமேக சாஸ்திரிக்கு கொடுக்க அவர் சம்மதிக்கவேண்டும். வேறுவழியில்லாமல் அவர் சம்மதிக்கிறார். ராஜாம்பாளும் அப்பாவின் கௌரவத்தைக் காக்க அதற்கு சம்மதம் சொல்கிறாள். நீலமேக சாஸ்திரியை திருமணம் செய்யவேண்டும் என்றால் அவர் காஞ்சீபுரம் நகருக்கே சோறுபோட்டு தடபுடலாக கல்யாணம் செய்யவேண்டும் என்கிறாள்.

நீலமேக சாஸ்திரி சாமிநாத சாஸ்திரியின் சொத்தெல்லாம் தனக்குத்தானே என்ற நினைப்பில் அவ்வாறே செலவுசெய்கிறார். அவருடைய பணமெல்லாம் காலியாகிறது. ஆனால் திருமணம் நடப்பதற்கு முன்னரே ராஜாம்பாள் காணாமலாகிறாள். அவள் எழுதிப்போட்ட ஒரு துண்டுத்தாள் கிடைக்கிறது. அதிலிருந்து விசாரித்துச்சென்று கோபாலனை இன்ஸ்பெக்டர் மணவாள நாயிடு கைதுசெய்கிறார்.ராஜாம்பாளின் எரிந்து கருகிய சடலம் கிடைக்கிறது

ராஜாம்பாளைக் கொன்றது உண்மையிலேயே கோபாலன் தானா? விசாரிப்பதற்காக துப்பறியும் கோவிந்தன் வருகிறார். மணவாளநாயுடு, நீலமேக சாஸ்திரி ஆகியோரின் ஜோடனைகளைக் கடந்து துப்பறிந்து உண்மையைக் கண்டடைகிறார். ராஜாம்பாள் சாகவில்லை. செத்தது வேறொரு தாசி. கொன்றவன் நடேச சாஸ்திரி. கேஸ் முடிகிறது, ராஜாம்பாளை கோபாலன் திருமணம் செய்துகொள்கிறான்.

நடை

ஜே.ஆர்.ரங்கராஜூ இப்படி நீலமேக சாஸ்திரிகளை அறிமுகம் செய்கிறார். ”காஞ்சிபுரம் கஸ்பா சப் மஜிஸ்ட்ரேட் நீலமேக சாஸ்திரிகள் சுப்ரமணிய சாஸ்திரிகளின் ஏக குமாரர். நீலமேக சாஸ்திரிகளும் வாலாயமாய் யூனிவர்சிடி பரீட்சை கேள்விகளை பரீட்சைக்கு சிலநாட்களுக்கு முன்னாலேயே வரவசைத்து அதை வேண்டுபவர்களுக்கு விற்று பணம் சம்பாதித்து கேள்விகளை கொடுக்கும்படி யூனிவர்சிடி உத்தியோகஸ்தர்களுக்கு பாதியை கொடுத்துவிட்டு மற்றபாதியை வைத்து ஜீவனம் செய்துகொண்டிருக்கும் ஸ்ரீனிவாசய்யங்காராவர்கள் வீட்டில் வருஷம் பூராவும் வேலைசெய்வதும் பரீசை காலங்களில் மட்டும்போய் ஸ்ரீனிவாசய்யங்கார் சொல்லுகிறபடி எழுதி வந்துவிடுவார். அவர் பரீட்சையில் முதன்மையாகவே தேறி வந்தார்”

நாடகம்

ராஜாம்பாள் நாடகமாக பல குழுக்களால் நடிக்கப்பட்டிருக்கிறது. ஔவை டி.கே. சண்முகம் நாடகக்குழுவினர் ராஜாம்பாளை பலமுறை மேடையேற்றியிருக்கின்றனர்.

ப.சிங்காரம் எழுதிய புயலிலே ஒரு தோணி எனும் நாவலில் ஒரு நாடக விளம்பரம் பகடியாகச் சொல்லப்படுகிறது. ”ராஜாம்பாளே ராஜாம்பாளாக நடிக்கும் ராஜாம்பாராஜாம்பாள்! நவீன நாடகம்!!!” ராஜாம்பாள் என்ற அக்கால நாடகநடிகை ஜே.ஆர்.ரங்கராஜூ எழுதிய ராஜாம்பாள் நாவலைத் தழுவி எழுதப்பட்ட ராஜாம்பாள் என்னும் நாடகத்தில் கதைநாயகி ராஜாம்பாளாக நடிக்கும் விளம்பரம் அது. அந்நாடகத்துக்கு சென்னையில் இருந்து கும்பகோணத்துக்குச் சிறப்பு ரயில் விடப்பட்டது என ப.சிங்காரம் குறிப்பிடுகிறார்.

திரைப்படம்

ராஜாம்பாள் இருமுறை சினிமாவாக ஆகியிருக்கிறது. 1935-ல் வெளிவந்த படத்தை கோயம்பத்தூர் டாக்கீஸ் பட நிறுவனம் தயாரித்தது. ஏ. நாராயணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பி.எஸ்.ஸ்ரீனிவாசராவ் கதைநாயகனாக நடித்திருந்தார். கே.என்.ராஜலட்சுமி ராஜாம்பாளாக நடித்தார்

1951-ல் வெளிவந்த இரண்டாவது ராஜாம்பாள் படத்தில்தான் துப்பறியும் கோவிந்தனாக ஆர்.எஸ்.மனோகர் சினிமாவுக்கு அறிமுகமானார். ஆர்.எம்.கிருஷ்ணசாமி இயக்கிய இந்தப்படத்திற்கு வசனம் எ.டி.கிருஷ்ணசாமி. எம்.எஸ்.ஞானமணி இசையமைத்திருந்தார். பாடல்கள் மருதகாசி, கு.சா.கிருஷ்ணமூர்த்தி ஆகியோரால் எழுதப்பட்டன.

இலக்கிய இடம்

ராஜாம்பாள் தமிழில் எழுதப்பட்ட தொடக்ககால குற்றப்புலனாய்வு நாவல்களில் ஒன்று. அக்கால உயர்குடி வாழ்க்கையையும் அதிலுள்ள பலவகை ஊழல்களையும் சித்தரிப்பது. தமிழில் பெரும் வணிகவெற்றி பெற்ற முதல் நாவல் இது. தமிழில் ஒரு புனைவெழுத்து மிகப்பெரிய வணிகப்பண்டமாக ஆகியது ராஜாம்பாள் நாவல் வழியாகவே.

உசாத்துணை


✅Finalised Page