under review

ரஃபீக் இஸ்மாயில்

From Tamil Wiki
ரஃபீக் இஸ்மாயில்

ரஃபீக் இஸ்மாயில் (முகம்மது இஸ்மாயில்) (பிறப்பு: டிசம்பர் 23, 1980) திரைக்கதையாசிரியர், படத்தொகுப்பாளர், திரைப்பட, ஆவணப்பட இயக்குனர். வள்ளலார் பற்றிய ஆவணப்படத்தை இயக்கினார்.

பிறப்பு, கல்வி

ரஃபீக் இஸ்மாயில் தென்காசி மாவட்டம் வடகரையில் முகம்மது நயினார், சேகு பாத்திமா இணையருக்கு டிசம்பர் 23, 1980-ல் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் இரண்டு அண்ணன்கள், ஒரு அக்கா. வடகரை முஸ்லீம் உயர்நிலைப்பள்ளி, கடையநல்லூர் மசூது தைக்கா மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வி பயின்றார். தென்காசி அருள்மிகு செந்திலாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரியில் பயின்றார். கல்லூரியிலிருந்து இடைநின்றார்.

தனிவாழ்க்கை

ரஃபீக் இஸ்மாயில் மே 25, 2009-ல் அரஃபாத் ரைஹானாவைத் திருமணம் செய்து கொண்டார். மகள்கள் ஷெஹரஸாத், மினா.

ஆவணப்படம்

ரஃபீக் இஸ்மாயில் 2022-ல் 'Westminster Abbey Of The East' என்ற ஆவணப்படத்தை இயக்கினார். இதன் படத்தொகுப்பாளரும் இவரே. 2024-ல் 'அன்பெனும் பெருவெளி' என்ற இராமலிங்க வள்ளலார் பற்றிய ஆவணப்படத்தை ஒன்மெய் ஃபவுண்டேஷன் தயாரிப்பில் இயக்கி வெளியிட்டார். இதில் வள்ளலாரின் பிரபலமான ஆறு பாடல்களை ஷான் ரோல்டனின் இசையமைப்பில் கர்நாடக இசைக்கலைஞர் சஞ்சய் சுப்ரமண்யன் பாடினார்.

திரை வாழ்க்கை

ரஃபீக் இஸ்மாயில் வசந்தபாலனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். இயக்குனர், திரைக்கதையாசிரியர், படத்தொகுப்பாளராகத் திரைத்துறையில் பணியாற்றி வருகிறார். 2009-ல் வெளிவந்த 'மாடத்தி' (Maadathy, an Unfairy Tale) என்ற படத்தின் திரைக்கதையாசிரியர், இணைப் படத்தொகுப்பாளர். 2021-ல் 'Life in Stars' என்ற குறும்படத்தை இயக்கினார். இதன் திரைக்கதையாசிரியர், படத்தொகுப்பாளர். 2022-ல் எழுத்தாளர் ஜெயமோகனின் 'கைதிகள்' சிறுகதையை 'ரத்தசாட்சி' என்ற திரைப்படமாக இயக்கினார். திரைக்கதையும் எழுதினார்.

ரஃபீக் இஸ்மாயில் அப்பாஸ் கியாரோஸ்டாமி (Abbas Kiarostami), மைக்கேல் ஹான்கே (Michael Haneke) ஆகிய இருவரும் தனது சினிமாவின் மொழியைத் தீர்மானிப்பவர்களாகக் கருதுகிறார். சத்யஜித் ரே, ஸ்டான்லி குப்ரிக், விம் வெண்டர்ஸ், ஆண்ட்ரேய் தார்கோவ்ஸ்கி, அகிரா குரசோவா, டேவிட் ஃபின்கர், பாரதிராஜா ஆகியோர் ஆதர்ச திரை ஆளுமைகள்.

இலக்கிய வாழ்க்கை

ரஃபீக் இஸ்மாயிலின் சிறுகதை 'முன்னத்தி' 2021 அரூ அறிவியல் சிறுகதைப் போட்டியில் குறிப்பிடத்தகுந்த படைப்புகளுள் ஒன்றாகத் தேர்வாகியது. ஜெயமோகன், தேவதச்சன் ஆகியோரைத் தன் இலக்கிய ஆதர்சங்களாகக் குறிப்பிடுகிறார்.

விருதுகள்

  • இந்தியாவின் OTT மற்றும் வலைதள பொழுதுபோக்கு சார்ந்த விருதுகள் அளிக்கும் IWMBuzz டிஜிட்டல் விருதுகள் ரஃபீக் இயக்கிய ரத்தசாட்சி திரைப்படத்திற்கு சிறந்த டிஜிட்டல் சினிமா விருது அளித்தது.

ஆவணப்படம்/படங்கள்

இணைப்புகள்


✅Finalised Page