under review

மேகலா சித்ரவேல்

From Tamil Wiki
எழுத்தாளர் மேகலா சித்ரவேல்

மேகலா சித்ரவேல் (பிறப்பு: ஏப்ரல் 6, 1952) தமிழக எழுத்தாளர், பேச்சாளர், இதழாளர். பொது வாசிப்புக்குரிய சிறுகதைகளையும் நாவல்களையும் எழுதினார். தனது இலக்கிய முயற்சிகளுக்காகப் பல்வேறு விருதுகள் பெற்றார்.

பிறப்பு, கல்வி

மேகலா சித்ரவேல், ஏப்ரல் 6, 1952 அன்று, கடலூர் புதுப்பாளையத்தில், இரெ. இளம்வழுதி-மாலதி இணையருக்குப் பிறந்தார். தொடக்கக் கல்வியை கடலூர் புதுப்பாளையம் புனித அன்னாள் உயர்நிலைப் பள்ளியில் கற்றார். புதுமுக வகுப்பை (பியூ.சி.) மதுரை பாத்திமா கல்லூரியில் படித்தார். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் இளங்கலை வரலாறு, முதுகலை தமிழ் பயின்று பட்டம் பெற்றார். எம்.பில். பட்டம் பெற்றார். அண்ணாமலைப் பல்கலைகழகத்தில் கல்வியியலில் இளங்கலை, முதுகலை (பி.எட்., எம்.எட்.) பட்டங்கள் பெற்றார். முனைவர் பட்டம் பெற்றார். தமிழ், ஆங்கிலத்துடன் மலையாளம், தெலுங்கு, ஹிந்தி மொழிகளையும் கற்றார்.

தனி வாழ்க்கை

மேகலா சித்ரவேல், சுதந்திர எழுத்தாளராகச் செயல்பட்டார். ஆசிரியராகச் சில வருடங்கள் பணிபுரிந்தார். பள்ளி ஒன்றை நடத்தினார். இதழியல் துறையில் சில ஆண்டுகள் பணியாற்றினார். கணவர் டாக்டர் வி. சித்ரவேல் (அமரர்). மகன் வெற்றிமாறன் திரைப்பட இயக்குநர். மகள் வந்தனா புற்றுநோய் மருத்துவர்.

மேகலா சித்ரவேல் புத்தகங்கள்

இலக்கிய வாழ்க்கை

மேகலா சித்ரவேல், 16 வயதில் எழுதிய சிறுகதை ‘குவிந்த மலர்கள்’, இலங்கை வானொலியின் ‘கதையும் கானமும்’ நிகழ்ச்சியில் ஒலிபரப்பானது. அதன் பிறகு மிக நீண்ட இடைவெளிக்குப் பின், கணவரது ஊக்குவிப்பால் எழுதத் தொடங்கினார். ‘மேகலா சித்ரவேல்’ என்ற பெயரில் எழுதினார். இவரது படைப்புகளுக்கு பெண் வாசகர்களிடையே நல்ல வரவேற்புக் கிடைத்தது. ராணி ஆசிரியர் அ.மா. சாமி மற்றும் உதவி ஆசிரியர் அமல்தாஸ் ஆகியோர் மேகலா சித்ரவேலை ஊக்குவித்தனர்.

மேகலா சித்ரவேல் எழுதியிருக்கும் ஆன்மிக நூலான, ‘யாதுமாகி நின்றாள் பகவதி’ என்பது குறிப்பிடத் தகுந்த ஒன்று. மேனாள் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். பற்றி இவர் எழுதியிருக்கும் நூல்கள் மாறுபட்ட கோணத்தில், மக்களின் பார்வையில் எம்.ஜி.ஆரைக் காட்டுபவை.

மேகலா சித்ரவேல், 80-க்கும் மேற்பட்ட நாவல்கள், இரண்டு சிறுகதைத் தொகுதிகள், மூன்று வாழ்க்கை வரலாற்று நூல்கள், மூன்று சமையற்கலைத் தொகுப்புகளை எழுதினார். நாட்டுப்புற இலக்கியம், சிறார் இலக்கியம் போன்ற துறைகளிலும் நூல்கள் எழுதினார்.

இதழியல்

மேகலா சித்ரவேல், குமுதம் சிநேகிதி இதழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்தார்.

மேகலா சித்ரவேல் பற்றிய ஆய்வு நூல்

சிறப்புகள்

மேகலா சித்ரவேல் பட்டிமன்றம், வழக்காடு மன்றம், கவியரங்கம், கருத்தரங்கம் போன்றவற்றில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளில் பேசினார். அவரது படைப்புகளை ஆய்வு செய்து சில மாணவர்கள் இளம் முனைவர், முனைவர் பட்டம் பெற்றனர். ‘மேகலா சித்ரவேல் படைப்புகளில் சமுதாய நோக்கம்’ என்ற தலைப்பில் முனைவர் கு. சந்திரன் ஆய்வு நூல் ஒன்றைப் படைத்துள்ளார்.

விருதுகள்

  • ராணி வார இதழ் சிறுகதைப் போட்டியில் இரண்டாம் பரிசு - நிழல் தேடும் நிஜங்கள் சிறுகதைக்காக.
  • தமிழரசி வார இதழ் சிறுகதைப் போட்டியில் சிறப்புப் பரிசு - பாதரச உறவுகள் சிறுகதைக்காக
  • தமிழரசி வார இதழ் மத நல்லிணக்கக் குறுநாவல் போட்டியில் சிறந்த குறுநாவல் - மதமென்னும் வானத்தில் மனமென்னும் புறா.
  • தஞ்சை இலக்கியக் குழுவால் வழங்கப்பட்ட வாழ்நாள் சாதனை விருது
  • உரிமைக்குரல் மாத இதழால் வழங்கப்பட்ட வாழ்நாள் சாதனைப் பெண் விருது

இலக்கிய இடம்

மேகலா சித்ரவேல் எளிமையான நடையில் பொதுவாசிப்புக்குரிய பல படைப்புகளை எழுதினார். தேவையற்ற வர்ணனைகள் இல்லாமல் யதார்த்தத்தை, உண்மை நிகழ்வுகளை, அனுபவங்களைப் பேசுவதாக இவரது படைப்புகள் அமைந்தன. அனுராதா ரமணன், ரமணி சந்திரன் வரிசையில் பெண்களை மையப்படுத்தி பல நூல்களைத் தந்த எழுத்தாளராக மேகலா சித்ரவேல் அறியப்படுகிறார்.

மேகலா சித்ரவேல் நூல்கள்

நூல்கள்

நாவல்கள்
  • பாதரச உறவுகள்
  • வாடாமல்லி
  • ஈரமான ரோஜாவே
  • ஆற்றோட்டத்துப் பூக்கள்
  • காதல் ஒருவனைக் கைப்பிடித்தே
  • கனாக் கண்டேன் தோழி
  • எல்லே ... இளங்கிளியே!
  • கங்கா
  • செவ்வந்திப் பூவும் வெள்ளி நிலவும்
  • நிலவும் நீல மலர்களும்
  • ரதிதேவி வந்தாள்
  • சொர்ணப் புறா
  • ஒரு பூ மலர்ந்தபோது
  • மழைவில்
  • கைத்தலம் பற்ற
  • சித்ர சலபம்
  • கண்ணாடி நிலவு
  • பளிங்கு பூக்களின் ஊர்வலம்
  • ஆனந்தப் பூத்தூறல்
  • ஆனந்த ஆராதனை
  • காதல் தாமரை
  • மஞ்சள் மத்தாப்பு
  • நகுலனின் மாதங்கி
  • சௌகந்தி
  • மதுரா
  • காதலடி நீ எனக்கு
  • நான் நப்பின்னை பேசுகிறேன்
  • பூவே வெண்பூவே
  • வாலைக் குமரியடி
  • போய்வா சினேகிதி
  • மதுர நிலவே மதுரா
  • அமுத கீதம்
  • ஒரு பூ மலர்ந்த போது
  • அவளோடு வானவில்
  • நெஞ்சத்தில் நீ
  • தென்றல் வரும் நேரம்
  • வா பொன்மயிலே!
  • பொன்மலர்
  • சந்தன மலர் சிரித்தது
  • சந்தன மின்னல்
  • பூவே நீயும் பெண்தானே
  • அப்பா குருவிகள்
  • விக்ரம துளசி
  • வசந்தமே வருக
  • முத்தழகி
  • ஜெகதா
  • நதியே பெண் நதியே
  • மழை மேக மயில்கள்
  • கமலி அண்ணி
  • ஜரிகை பட்டாம்பூச்சிகள்
  • செவ்வரளிப் பூ
சிறுகதைத் தொகுப்பு
  • அம்மும்மா சொல்லும் அமுதக் கதைகள்
கட்டுரை நூல்கள்
  • வரலாறு படைத்த வள்ளல் எம்.ஜி.ஆர்
  • மக்கள் தங்கம் எம்.ஜி.ஆர்.
  • யாதுமாகி நின்றாய் பகவதி

உசாத்துணை


✅Finalised Page