under review

மனுக்குல வெண்பா

From Tamil Wiki

மனுக்குல வெண்பா (1995), கிறிஸ்தவச் சிற்றிலக்கிய நூல்களுள் ஒன்று. ’ஏசுவின் அன்னைக்கு ஏற்றிய தீபங்கள்’ தொகுப்பு நூலில் இந்நூல் இடம்பெற்றது. இதனை இயற்றியவர் சூ. தாமஸ்.

வெளியீடு

மனுக்குல வெண்பா, ஏசுவின் அன்னைக்கு ஏற்றிய தீபங்கள் தொகுப்பு நூலில் இடம்பெற்றது. இந்நூல் ஜனவரி 1, 1995 அன்று தஞ்சாவூரில் நிகழ்ந்த உலகத் தமிழ் மாநாட்டில், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக வளாகத்தில் வெளியிடப்பட்டது. புலவர் நாக. சண்முகம் இந்நூலைப் பதிப்பித்தார். நூலின் ஆசிரியர்: சூ. தாமஸ்.

ஆசிரியர் குறிப்பு

சூசை உடையார் தாமஸ் என்னும் சூ. தாமஸ் தஞ்சை தூய இருதய மகளிர் உயர்நிலைப்பள்ளியில், 22 ஆண்டுகள் தமிழாசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார்.

வேளாங்கண்ணித் திருத்தலத்தின் மீதும் அங்குக் கோயில் கொண்டுள்ள ஆரோக்கிய மாதா மீதும் மிகுந்த பக்தி கொண்டு பல சிற்றிலக்கிய நூல்களைப் படைத்தார். அவை தொகுக்கப்பட்டு ’ஏசுவின் அன்னைக்கு ஏற்றிய தீபங்கள்’ என்ற தலைப்பில் நூலாக வெளிவந்தது.

நூல் அமைப்பு

மனுக்குல வெண்பாவில் 55 வெண்பாக்கள் இடம்பெற்றன.

உள்ளடக்கம்

மனிதர்கள் வாழ்வில் மேன்மையுறுவதற்கான கருத்துக்கள் மனுக்குல வெண்பா நூலில் இடம் பெற்றன. திருக்குறளையும், கிறிஸ்தவ ஆன்மீகக் கருத்துகளையும் பொதுமைப்படுத்தி இந்நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாடல் நடை

பெண்ணின் சொல் கேட்டு இறைவனின் அன்பை இழந்தது

ஆதிமனி தன்கடவுள் அன்பை யிழந்தான்தன்
மாதினுரை கேட்டு மனுக்குலமே - தீதே
மனைவிழைவார் மான்பய னெய்தார்
வினைவிழைவார் வேண்டாப் பொருளும் அது

இறைவனே அனைத்துக்கும் ஆதாரம்

ஆதார மானபுவி யத்தனையும் உண்டுசெய்தார்
மாதேவன் முன்னாள் மனுக்குலமே - ஓதின்
அகரமுதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே யுலகு

அறிவின் பெருமை

அஞ்சிச் சிறுமகவை ஆற்றினில் விட் டான் பொதிந்து
வஞ்சி யொருத்தி மனுக்குலமே - நெஞ்சின்
அறிவற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்க லாகா அரண்

மது விலக்கல்

தாதையாம் லோத்தும் மதுமயக்கால் தான்பயந்த
மாதர்க் கிசைந்தான் மனுக்குலமே - ஆதரையில்
துஞ்சினார் செத்தாரின் வேறல்லர்
எஞ்ஞான்றும் நஞ்சுண்பார் கள்ளுண் பவர்

ஊழ்வினை

அன்றுரைத்த கானானுக் கார்வமுடன் மோயீசன்
சென்றிடுமுன் செத்தான் மனுக்குலமே - நொந்து
பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச்
சொரியினும் போகா தம

அருளுடைமை

நாட்டினின்று போகாமல் நல்லிசரோலைப் பரவோன்
வாட்டியரு ளற்றான் மனுக்குலமே - ஈட்டும்
பொருளற்றார் பூப்ப ரொருகால் அருளற்றார்
அற்றால்மற் றாதல் அரிது

சான்றாண்மை

தீராத் துயருறினும் யோடி சிறிதுமுளம்
மாறா திருந்தான் மனுக்குலமே - பேராத
ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்கு
ஆழி எனப்படு வார்

மதிப்பீடு

மனுக்குல வெண்பா மானுடத் துயர்களை நீங்குவதற்கு இறைவனைச் சரணடைவது குறித்தும், அதன் மூலம் பாவங்கள் விலகுவதையும் ஆன்மிகக் கருத்துக்கள், அறவுரைகள், திருக்குறள் கருத்துக்களுடன் ஒப்பிட்டு விளக்குகிறது. அறம் பேசும் கிறிஸ்தவச் சிற்றிலக்கிய நூல்களுள் குறிப்பிடத்தகுந்த ஒன்றாக மனுக்குல வெண்பா மதிப்பிடப்படுகிறது.

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 10-Jun-2024, 09:42:04 IST