under review

மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்

From Tamil Wiki

மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார் சங்க காலப் புலவர். இவர் பாடிய பன்னிரெண்டு பாடல்கள் சங்கநூல் தொகையில் இடம் பெற்றுள்ளன.

வாழ்க்கைக் குறிப்பு

இவர் மதுரையில் அறுவை வணிகம் செய்து வாழ்ந்து வந்தார். துணி ஆடை பாவும் ஊடையுமாக இருப்பதை அறுத்து, மடித்து அழகாக அடுக்கி வணிகம் செய்ததால் இவரை மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார் என அழைத்தனர்.

இலக்கிய வாழ்க்கை

இவர் பாடிய பன்னிரெண்டு பாடல்கள் சங்கநூல் தொகையில் இடம் பெற்றுள்ளன. தன் பன்னிரெண்டு பாடல்களிலும் அரசர்களைப்பற்றி பாடவில்லை. மாறாக ஒரு பாடலில் மட்டும் சிற்றூர் தலைவனாகிய "உரைசால் நெடுந்தகை" பற்றி பாடியுள்ளார். ஐந்திணை வளங்களையும் பாடல்களில் பாடியுள்ளார். திருக்குறளுக்கு 'வாயுறை வாழ்த்து' என்ற பெயர் இவரால் ஏற்பட்டது.

பாடிய பாடல்கள்

பாடல் நடை

  • அகநானூறு: 56

'இம் மனை அன்று; அஃது உம் மனை' என்ற
என்னும் தன்னும் நோக்கி,
மம்மர் நெஞ்சினோன் தொழுது நின்றதுவே.

  • குறுந்தொகை 185

நுதல்பசப் பிவர்ந்து திதலை வாடி
நெடுமென் பணைத்தோள் சாஅய்த் தொடி நெகிழ்ந்
தின்ன ளாகுத னும்மி னாகுமெனச்
சொல்லி னெவனாந் தோழி பல்வரிப்
பாம்புபை அவிழ்ந்தது போலக் கூம்பிக்
கொண்டலிற் றொலைந்த வொண்செங் காந்தள்
கன்மிசைக் கவியு நாடற்கென்
நன்மா மேனி யழிபடர் நிலையே.

  • புறநானூறு 329

இல்லடு கள்ளின் சில்குடிச் சீறூர்ப்
புடைநடு கல்லின் நாட்பலி யூட்டி,
நன்னீர் ஆட்டி, நெய்ந்நறைக் கொளீஇய,
மங்குல் மாப்புகை மறுகுடன் கமழும்,
அருமுனை இருக்கைத்து ஆயினும், வரிமிடற்று
அரவுஉறை புற்றத்து அற்றே, நாளும்
புரவலர் புன்கண் நோக்காது, இரவலர்க்கு
அருகாது ஈயும் வண்மை,
உரைசால், நெடுந்தகை ஓம்பும் ஊரே.

உசாத்துணை


✅Finalised Page