under review

பால விநோதக் கதைகள்

From Tamil Wiki
அ. மாதவையா படைப்புகள் : பேராசிரியர், முனைவர் - காவ்யா சண்முகசுந்தரம்.

அ. மாதவையா, சிறார்களுக்காக எழுதிய சிறுகதைகளின் தொகுப்பே ‘பால விநோதக் கதைகள்’. இக்கதைகள் அ.மாதவையா ஆசிரியராக இருந்த ‘தமிழர் நேசன்’ இதழில் வெளியாகின. 1923-ல், இந்தியன் பப்ளிஷிங் ஹவுஸ் லிமிடெட் இச்சிறுகதைகளைத் தொகுத்து வெளியிட்டது. இத்தொகுப்பில் படங்களும் இடம் பெற்றிருந்தன.

பதிப்பு, வெளியீடு

சிறுவர்களுக்கென ஓர் இலக்கியப் பிரிவு அங்கீகாரம் பெறும் முன்பே, ‘விவேக சிந்தாமணி’ போன்ற இதழ்கள், சிறார்களுக்கெனச் சில பக்கங்களை ஒதுக்கி கதை, துணுக்குகளை வெளியிட்டு வந்தன. அந்த வகையில், ‘சென்னை கல்விச் சங்கம்’ மூலம் வெளியான தமிழர் நேசன் இதழிலும் சிறார்களுக்கென சில பக்கங்கள் ஒதுக்கப்பட்டுச் சிறுகதைகள் வெளியாகின. அவ்விதழின் ஆசிரியராக இருந்த அ. மாதவையா இச்சிறுகதைகளை எழுதினார். பின்னர் இவை தொகுக்கப்பட்டு, 1923-ல், சென்னையில் உள்ள இந்தியன் பப்ளிஷிங் ஹவுஸ் லிமிடெட் மூலம் நூலாக வெளிவந்தது. இத்தொகுப்பில் படங்களும் இடம் பெற்றிருந்தன.

மக்களிடையே வாய்மொழியில் வழங்கி வந்த நாட்டுப்புறக் கதைகளையே மாதவையா ‘பால விநோதக் கதைகள்’ என்ற தலைப்பில் தமிழர் நேசனில் எழுதி வந்தார். ‘பால விநோதக் கதைகள்’ தற்போது அச்சில் இல்லை என்றாலும், பேராசிரியர் காவ்யா சண்முகசுந்தரம் தொகுத்து, காவ்யா பதிப்பகம் வெளியிட்டுள்ள, ‘அ. மாதவையா படைப்புகள்’ நூலில் அக்கதைகள் இடம் பெற்றுள்ளன.

உள்ளடக்கம்

‘பால விநோதக் கதைகள்' தொகுப்பு நூலில்மொத்தம் 11 கதைகள் இடம் பெற்றுள்ளன.

அவை,

  1. நவாபும் குருவியும்
  2. அதிகப்பிரசங்கி சுண்டைக்காய்
  3. ஓணானும் அதன் மனைவிகளும்
  4. என் முக்கவறே!
  5. எலிகளும் பூனையும்
  6. கர்வம் கொண்ட பொரியரிசி
  7. தைரியம் உள்ள சிற்றணில்
  8. அவசரப்படேல்
  9. காக்கையும் வேடனும்
  10. பெயர் மறந்த ஈ
  11. கொசுவின் பிராது

எளிய மொழியில் கட்டமைக்கப்பட்டுள்ள இச்சிறுகதைகளில், சிறுவர்களே உணர்ந்து கொள்ளும் விதத்தில் அறிவுறுத்தல்கள் அமைந்துள்ளன. கதைகளின் முடிவுகளும் நேர்மறை எண்ணங்களைத் தோற்றுவிக்கும் வகையில், சிறார்கள் ஏற்கும் விதத்தில் உள்ளன. எதிர்மறையான முடிவுகள் சிறுவர் மனதில் முரணான எண்ணங்களைத் தோற்றுவிக்கக்கூடும் என்பதால் அவ்வாறு அமைத்துள்ளார் அ. மாதவையா. கற்பனைகளுக்கு அதிக இடமளித்திருப்பதுடன், சில கதைகளின் இடையே, குழந்தைகள் பாடும் வகையில் பாடல்களையும் இடம் பெறச் செய்துள்ளார்.

கதைச் சுருக்கம்

1 நவாபும் குருவியும் குருவி ஒரு காசை வைத்துக் கொண்டு நவாப்பை கேலி செய்யும் கதை; அவன் ஆடம்பரத்தை ஒழித்து மனம் திருந்தும் கதை.
2 அதிகப்பிரசங்கி சுண்டைக்காய் பாட்டி ஒருவரால் வற்றல் ஆகாமல் காப்பாற்றப்பட்ட சுண்டைக்காய், பாட்டிக்கு உதவியாக இருந்து, பின்னர் தனது அதிகப் பிரசங்கத்தால், ஆணவத்தால் அழிந்த கதை.
3 ஓணானும் அதன் மனைவிகளும் ஓணானுக்கும் காக்கை, கொக்கு, வண்டு, நண்டு என்ற அதன் நான்கு மனைவிகளுக்கும் இடையிலான சண்டையையும் அதன் முடிவைப் பற்றியும் கூறும் பாடல்களுடன் கூடிய கதை.
4 என் முக்கவறே! பட்டமரம் ஒன்றில் வாழ்ந்த கிளியை, பழம் நிறைந்த சோலையில் குடியேற்றினார் ஒரு முனிவர். கிளியோ, பட்ட மர நினைவால் வாடியது. இறுதியில் முனிவரை வேண்டி அப்பட்ட மரத்திற்கே திரும்பி வந்து வாழ்ந்தது. தாய்நாட்டின் மீது ஒருவருக்கு இருக்க வேண்டிய பற்றினைப் பற்றிக் கூறும் கதை.
5 எலிகளும் பூனையும் வேட்டையாடச் சக்தியற்ற கிழட்டு பூனை, தன் தந்திரத்தால் எலிகளை வேட்டையாட முனைந்தது. கடைசியில் எலிகள் எப்படித் தப்பித்தன என்பதைக் கூறும் கதை.
6 கர்வம் கொண்ட பொரியரிசி தனக்கு ஒரு மணமகன் வேண்டும் என்று தேடிச் சென்ற பொரியரிசி, தன்னை மணக்க வந்த யானை, குதிரை, ஒட்டகம், கழுதை, காக்கை, குருவி இவற்றை உதறிவிட்டு சேவலுக்கு வாழ்க்கைப்பட்டு, அழிந்து போவதைக் கூறும் கதை.
7 தைரியம் உள்ள சிற்றணில் மரத்தடியில் ஓய்வெடுத்த மன்னரின் தலையில் கொட்டைகளை உமிழ்ந்த அணிலுக்குக் கிடைத்த தண்டனைகளும், ஒவ்வொன்றையும் அது தைரியத்துடன் எதிர்கொண்டு ராஜாவுக்கு பணிய மறுத்து வென்றதைக் கூறும் கதை.
8 அவசரப்படேல் பேராசை பிடித்த குருவி பாயசம் குடித்த கதை.
9 காக்கையும் வேடனும் தாய் காக்கையை வேடன் வேட்டையாடிக் கொண்டுசெல்ல, குஞ்சுகள் மனம் இரங்கிப் பாட, அதைக் கேட்ட வேடன் தன் மனைவியையும் தன் குழந்தையையும் நினைத்து, தாய்க் காக்கையை விடுதலை செய்யும் கதை.
10 பெயர் மறந்த ஈ தீபாவளியன்று ஒரு ஈ, தன் வீட்டு வாசலில் அழகிய கோலம் போட்டது. தான் போட்ட கோலத்தை கண்ட மகிழ்ச்சியில் ஈ தன் பெயரை மறந்துவிட்டது. அதை நினைவூட்ட வேண்டி, ஆணவத்தோடு கன்று, பசு, பசுவின் ஆயன், ஆயனின் கைக்கோல், கொடி, மரம், குயவன், மீன் என்றெல்லாம் பலவற்றிடம் தன் பெயரைக் கேட்டது. யாரிடமிருந்தும் பதில் கிடைக்காததால் ஆணவம் அழிந்து இறுதியில் குதிரை இளித்ததன் மூலம் தன் பெயரைத் தெரிந்துகொண்ட கதை.
11 கொசுவின் பிராது கொசுவினால் வரும் தீமைகளைப் பற்றிக் கூறும் கதை. கொசு, தேவேந்திரனிடம், பறக்க முடியாதபடி தங்களுக்குத் தொந்தரவாக இருக்கும் காற்று (வாயு பகவான்) குறித்து முறையிட, வழக்கை விசாரிக்க தேவேந்திரன் இருவரையும் அழைக்க, வாயு தேவன் வந்தும் கொசுக்கள் வரவில்லை (காற்று இருக்கும் இடத்தில் கொசு வர இயலாது என்பதால்) பாடல்களும் இக்கதையில் இடம் பெற்றுள்ளன.

இலக்கிய இடம்

அ. மாதவையரின் பாலவிநோதக் கதைகள், தமிழ்ச் சிறார் இலக்கியத்தில், ஒரு மரபின் தொடக்கப்புள்ளியாக அமைந்தது. பின்னர் வந்த கவிமணி, வாய்மொழிக் கதைகளை எளிய பாடல்களாகப் பாடினார். அவரைத் தொடர்ந்த வள்ளியப்பாவும் அம்முறையையே பின்பற்றினார். அந்த வகையில் மாதவையா, சிறார் இலக்கியத்தின் முன்னோடிகளுள் ஒருவராக மதிக்கத் தக்கவர்.

உசாத்துணை

அ. மாதவையா படைப்புகள், பேராசிரியர் காவ்யா சண்முகசுந்தரம், காவ்யா பதிப்பகம் வெளியீடு.


✅Finalised Page