காவ்யா சண்முகசுந்தரம்
- சண்முகசுந்தரம் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: சண்முகசுந்தரம் (பெயர் பட்டியல்)
To read the article in English: Kavya Shanmugasundaram.
காவ்யா சண்முகசுந்தரம் (பிறப்பு: டிசம்பர் 30, 1949) பேராசிரியர், ஆய்வாளர், பதிப்பாளர், பேச்சாளர், பத்திரிக்கை ஆசிரியர்.
பிறப்பு, கல்வி
காவ்யா சண்முகசுந்தரத்தின் இயற்பெயர் சண்முக சுந்தர பாண்டியன். இவர் டிசம்பர் 30, 1949-ல் திருநெல்வேலி மாவட்டம் இருக்கந்துறையில் சுடலைமுத்துத் தேவர் - இசக்கியம்மாள் தம்பதியருக்கு மூத்தமகனாகப் பிறந்தார்.
காலாங்கரையில் தொடக்கக் கல்வியையும், வடக்கன்குளத்தில் உயர்நிலைக் கல்வியையும் பயின்றார். பாளையங்கோட்டை செயிண்ட் சேவியர் கல்லூரியில் தமிழில் இளங்கலைப் பட்டமும், சென்னை பச்சையப்பன் கல்லூரியில் முதுகலைப் பட்டமும் பெற்றார்.
தனி வாழ்க்கை
காவ்யா சண்முகசுந்தரத்தின் மனைவி பெயர் முத்துலட்சுமி. இரண்டு குழந்தைகள் மகன் முத்துக்குமார், மகள் டாக்டர் காவ்யா. 1978-ல் பெங்களூர் செயிண்ட் ஜோசப் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக பணியாற்றினார்.006-ல் பணி ஓய்வு பெற்ற பின் பதிப்பகத் தொழிலில் ஈடுபட்டார்.
கல்விப்பணிகள்
சென்னை குறள் பீடத்தில் செயற்குழு உறுப்பினராகப் பணியாற்றினார். சாகித்ய அகாடமி ஆலோசனைக் குழு உறுப்பினராகவும் பொறுப்பு வகித்தார். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தகைசால் பேராசியராகப் பொறுப்பு வகித்தார்.
இதழியல்
படிகள், இங்கே இன்று, வித்யாசம் ஆகிய இலக்கியச் சிற்றிதழ்களையும் நாட்டாரியலுக்காக தன்னனானே என்ற இதழையும்தொடங்கி நடத்தினார்.
ஆய்வுகள்
நாட்டுப்புற இயல் குறித்து பல ஆய்வு நூல்களை எழுதி வெளியிட்டார். செம்மொழி மத்திய தமிழாய்வு நிறுவனத்தில் முதுநிலை ஆய்வாளராகப் பணியேற்று பல ஆய்வுகளை முன்னெடுத்தார். "நாட்டுப்புற அரங்கியல்", "காலந்தோறும் கண்ணகி கதைகள்", "நாட்டுப்புற தெய்வங்கள் வழிபாடும் பண்பாடும்" ஆகிய நூல்கள் குறிப்பிடத்தக்கவை.
பதிப்பக பணிகள்
சண்முகசுந்தரம் 1981-ல் தனது மகளின் பெயரில் காவ்யா பதிப்பகத்தை ஆரம்பித்தார். கல்வித்துறை சார்ந்த ஏராளமான நூல்களை வெளியிட்டிருக்கிறார்.
எழுத்து பணி
1972-ல் இவர் எழுதிய கவிதைகளைத் தொகுத்து "கதம்பம்" என்ற நூலை வெளியிட்டார். 1982-ம் ஆண்டு தன் முதல் நாவலான "கன்னடியார் மகள்" எழுதி காவ்யா பதிப்பகம் மூலம் வெளியிட்டார். அதன்பின் பல நாவல்களும், சிறுகதைகளும் எழுதினார். இவர் சிறுகதைகளைத் தொகுத்து ("களவு") 1995-ல் வெளியிட்டார். முதல் நாடக நூல் "அக்னி" 1998-ல் வெளியானது.
விருதுகள்
ஆய்வு
- "சுடலைமாடன் வழிபாடு" ஆய்வு நூலுக்கு தமிழ் வளர்ச்சி இயக்கத்தின் சிறந்த ஆய்வுக்கான பரிசு கிடைத்தது.
- "நாட்டுப்புறத் தெய்வங்கள் களஞ்சியம் - அம்மன் முதல் விருமாண்டி வரை"தமிழ் வளர்ச்சித் துறையின் தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல் பரிசினைப் பெற்றது.
படைப்பிலக்கியம்
- "களவு" சிறுகதைத் தொகுப்பு தமிழக அரசின் சிறந்த நூலுக்கான பரிசைப் பெற்றது.
- "வரம்" சிறுகதைத் தொகுப்பு கோவை லில்லி தேவசிகாமணி பரிசைப் பெற்றது.
- "ஆராரோ" நாவல் கலை இலக்கிய பெருமன்றத்தின் சிறந்த நாவலுக்கான பரிசைப் பெற்றது
- "அந்தி" நாவலுக்கு தருப்பூர் கலை இலக்கியப் பேரவை மற்றும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் பரிசு கிடைத்தது.
- திருப்பூர் தமிழ்சங்கம் 1998-ம் ஆண்டு "அக்னி" நாடகத்தை சிறந்த நாடகமாக தேர்வு செய்தது.
நூல்கள்
கவிதைத் தொகுப்புகள்
- கதம்பம்
- பகல் கனவுகள்
- மேலும் பகல் கனவுகள்
சிறுகதைத் தொகுப்புகள்
- களவு
- வரம்
- அம்மா
- சாபம்
- சுந்தரப்பாண்டியன் சிறுகதைகள்
நாடகம்
- அக்னி
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
15-Nov-2022, 13:32:09 IST