under review

நெடுங்குருதி

From Tamil Wiki
நெடுங்குருதி

நெடுங்குருதி ( 2003) எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய நாவல். வேம்பர்கள் என்னும் கற்பனையான வேட்டைச்சமூகத்தின் வாழ்க்கையை விவரிக்கும் மாய யதார்த்தச்சாயல் கொண்ட நாவல். தமிழகத்தின் தென்பகுதி மக்களின் வாழ்க்கையை உருவகமாக விவரிக்கிறது

எழுத்து வெளியீடு

எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய இரண்டாவது நாவல் நெடுங்குருதி. இது 2003-ல் எழுதப்பட்டு உயிர்மை பதிப்பகத்தால் முதல் பதிப்பு வெளியிடப்பட்டது

கதைச்சுருக்கம்

நெடுங்குருதி இரண்டு கதைக் களங்களாக அமைந்துள்ளது. வேம்பலை என்னும் ஊரில் வாழும் வேம்பர்கள் என்னும் மக்கள் தொன்மையான வேட்டைச்சமூகம். பின்னர் களவில் ஈடுபடுகிறார்கள். அவர்களின் வரலாறும் தொன்மங்களும் நாவலில் கதைகளாக விரிகின்றன. வெல்சி என்னும் வெள்ளைக்காரனின் ஒடுக்குமுறையால் குற்றவாழ்க்கையை விட்டு வெவ்வேறு தொழில்களுக்கு திரும்புகிறார்கள். கடும் வறட்சியில் அவர்களால் வேம்பலை கைவிடப்படுகிறது. நவீன வாழ்க்கையை எதிர்கொள்ளும் வேம்பர்களின் நிலைமை நாகு என்னும் கதாபாத்திரத்தின் நினைவுகள் மற்றும் அனுபவங்கள் வழியாகச் சொல்லப்படுகிறது. நாகுவின் நினைவுகளில் இருந்து தொடங்கி, ஆசிரியர் கூற்றாகவும் வேம்பலைக்கு வரும் வெவ்வேறு மனிதர்களின் அறிதல்களாகவும் வேம்பர்களின் வாழ்க்கையையும் வரலாற்றையும் கடந்து காலத்துக்குச் சென்று விவரித்து நிகழ்காலத்தில் நிறைவுறும்படி இதன் கதையோட்டம் உள்ளது. நாவலின் மையப் படிமமாக வேம்பின் கசப்பு உள்ளது.

அமைப்பு

வேம்பலையின் நான்கு பருவ காலங்களாக தன்னைப் பகுத்துக் கொண்டிருக்கிறது நெடுங்குருதி. கோடைகாலம். இதுதான் மிகப்பெரியது. காற்றடிக்காலம், மழைக்காலம், கடைசியாக குளிர்காலம். இரண்டு கதைசொல்லல் ஓடைகள் இந்நாவலில் உள்ளன. முதல் அத்தியாயம் நாகுவின் பார்வையில் அமைந்திருக்கிறது. இரண்டாவது அத்தியாயம் ஆசிரியரின் ஈடுபாடற்ற பார்வையில் நேரடியான யதார்த்தத்தைச் சொல்கிறது.

இலக்கிய இடம்

நெடுங்குருதி தமிழில் மாய யதார்த்தக் கூறுகளைக் கொண்டு எழுதப்பட்ட நாவல்களில் ஒன்று. தமிழ்ச் சமூகவியல் வரலாறும், அதன் சமகாலமும் இந்நாவலில் புனைவாக மாற்றப்பட்டுள்ளன. இந்நாவலில் தொன்மக்கதாபாத்திரங்களும் யதார்த்த மனிதர்களும் கலந்து வருகிறார்கள். 'நெடுங்குருதி நாம் அவசியம் படிக்கவேண்டிய அற்புதமான நாவல். நாவல் ஆரம்பித்து முடியும்வரை காலத்தின் பிடியில் நாம் கட்டுண்டு கிடக்கிறோம். எத்தனை விதமான மனிதர்கள்! எத்தனை விதமான மனங்கள்! எத்தனை விதமான வாழ்க்கை! எத்தனை விதமான உணர்வுகள்! எத்தனை விதமான காட்சிகள்! நம் நாடி நரம்புகள் முழுதும் குருதியாக நெடுங்குருதி கலந்துவிடுகிறது" என்று விமர்சகர் கேசவமணி குறிப்பிடுகிறார். 'எஸ். ராமகிருஷ்ணனின் நெடுங்குருதி தமிழின் இலக்கியப்பரப்பில் உருவான மிகச்சிறந்த நாவல்களில் ஒன்று. ஒரு புனைகதை என்ற வகையில் கசப்பிலும் கரிப்பிலும் ஊறிய சுவை கொண்டது’ என்று ஜெயமோகன் குறிப்பிடுகிறார்.

உசாத்துணை


✅Finalised Page