under review

நீலவன்

From Tamil Wiki

நீலவன் (வ. முருகேசன்; ஜூன் 3, 1946) ஒரு தமிழக எழுத்தாளர். கவிஞர். பொது வாசிப்புக்குரிய சிறுகதைகளை, நாவல்களை எழுதினார். நாடக நடிகர். பள்ளித் தலைமை ஆசிரியராகப் பணியாற்றினார்.

பிறப்பு, கல்வி

வ. முருகேசன் என்னும் இயற்பெயர் கொண்ட நீலவன், ஜூன் 3, 1946 அன்று, வேலூரில் உள்ள சின்ன அல்லாபுரத்தில், வரதராஜ்-தனபாக்கியம் இணையருக்குப் பிறந்தார். பள்ளிக் கல்வியை முடித்த பின் இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டங்கள் பெற்றார். கல்வியலில் முதுகலைப் பட்டம் (எம்.எட்.) பெற்றார்.

தனி வாழ்க்கை

நீலவன், ஆர்.சி.எம். உத்தரிய மாதா நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றினார். மனைவி: ரோஸ். மகன்கள்: சுந்தரராஜன், ஆனந்த்.

இலக்கிய வாழ்க்கை

நீலவன் புதுமைப்பித்தன், ஜெயகாந்தன் போன்றோரது எழுத்தால் ஈர்க்கப்பட்டார். பொதுவுடைமை சித்தாந்தத்தால் கவரப்பட்டார். 'முல்லை அரசு' என்கிற புனை பெயரில் கம்யூனிஸ, பொது உடைமை கருத்துகளை வலியுறுத்தும் மரபுக் கவிதைகளை தாமரை, ஜனசக்தி, தினமணிச்சுடர் அனுபந்தம் போன்ற இதழ்களில் எழுதினார். ஜெயகாந்தன், விக்கிரமன், வையவன், நா.பார்த்தசாரதி, அகிலன், வல்லிக்கண்ணன், வாசவன் போன்றோரது அறிமுகமும் நட்பும் கிடைக்கப் பெற்றார். இவர்களின் அறிமுகத்தால் தனக்கு ‘நீலவன் என்ற புனை பெயரைச் சூட்டிக் கொண்டு சிறுகதைகள் எழுதினார். 'தெற்கே செல்லும் டீசல் வண்டி' என்னும் நீலவனின் முதல் சிறுகதை ஆனந்த விகடன் இதழில் முத்திரைச் சிறுகதையாக வெளியானது. 501 ரூபாய் பரிசும் பெற்றது. தொடர்ந்து பல சிறுகதைகள் விக்டனில் முத்திரைச் சிறுகதைகளாக வெளியாகின. தினமணி கதிரில் நட்சத்திரக் கதைகள் எழுதினார். சாவி, புஷ்பா தங்கதுரை ஆகியோர் நீலவனைத் தொடர்ந்து எழுத ஊக்குவித்தனர்.

நீலவன் குடுகுடுப்பைக்காரர், ரிக்‌ஷாக்காரர், மூட்டை தூக்குபவர், இட்லி விற்பவர், சித்தாள், சுகாதாரப் பணியாளர் போன்ற பல்வேறு அடித்தட்டு மக்களின் வாழ்க்கையைத் தனது படைப்புகளில் ஆவணப்படுத்தினார். தமிழரசி இதழில் 'காலை எழுந்தவுடன்' என்னும் தலைப்பில் 73 வாரத் தொடர் ஒன்றை எழுதினார். அமுதசுரபியில் 'ஆணி வேர்கள்' என்னும் தலைப்பிலான 22 மாதத் தொடரை எழுதினார். 350-க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் 10-க்கும் மேற்பட்ட நாவல்களையும் எழுதினார்.

நாடக வாழ்க்கை

நீலவன், இளம் வயதில் நாடக ஆர்வத்தில் அமெச்சூர் நடிகராகப் பல நாடகங்களில் நடித்தார்.

இலக்கிய இடம்

நீலவன், ஜெயகாந்தனை முன் மாதிரியாகக் கொண்டு சமூகம் சார்ந்த பல கதைகளை எழுதினார். அடித்தட்டு மக்களின் வாழ்க்கையைத் தனது படைப்புகளில் ஆவணப்படுத்தினார். உண்மைச் சம்பவங்களைக் கதைகளாக எழுதினார். பொதுவுடைமைச் சித்தாந்தக் கருத்துக்களைக் கொண்ட பல கதைகளை எழுதினார்.

விருதுகள்/பரிசுகள்

  • ஆனந்த விகடன், அமுதசுரபி போன்ற இதழ்கள் நடத்திய சிறுகதைப் போட்டிகளில் கலந்துகொண்டு பரிசு பெற்றார்.

நூல்கள்

சிறுகதைத் தொகுப்புகள்
  • கரை ஒதுங்கிய நுரைப்பூக்கள்
  • காலம் கனியும்
  • பத்தான் கோட் ஜங்ஷன்
  • ஊத்துமலை ஊராகிவிட்டது
  • ஊமைக்காயங்கள்
  • வாழ்க்கைக்கு ஒரு வழிகாட்டி

உசாத்துணை

  • சூரியன் சந்திப்பு நேர்காணல் - தொகுதி - 2: ஆர்னிகா நாசர், மணிவாசகர் பதிப்பகம், சென்னை-108


✅Finalised Page