under review

நல்லழிசியார்

From Tamil Wiki

நல்லழிசியார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய இரண்டு பாடல்கள் பரிபாடலில் இடம்பெற்றுள்ளன.

வாழ்க்கை குறிப்பு

நல்லழிசியார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். சில ஏடுகளில் நல்லழுசியார் என்றும் குறிப்பிடப்படுகிறார்.

இலக்கிய வாழ்க்கை

நல்லழிசியார் பாடிய பாடல்கள் பரிபாடலில் 16, 17-ம் பாடல்கள். இரண்டு பாடல்களுக்கும் நல்லச்சுதனார் நோதிற பண்ணில் இசையமைத்துள்ளார். பரிபாடல் 16 - ல் வையையில் காதல் பரத்தையோடு நீராடிய தலைவன் தன் மனைவியாகிய தலைவியிடம் வருகிறான். தோழி அவன் விளையாடிய வையை ஆற்றைப்பற்றிக் கூறி வாயில் மறுக்கிறாள். பரிபாடல் 17 -ம் பாடல் செவ்வேள் முருகப்பெருமான் மீது பாடப்பட்டுள்ளது.

பாடல் வழி அறியவரும் செய்திகள்

பரிபாடல் - 16

வைகை நதியில் புதுவெள்ளம் வரும் காட்சியும் மக்கள் அதனை கொண்டாடுவதையும் நதி வெள்ளத்தை வணங்குவதும் ஆடவரும் பரத்தையரும் புதுப்புனலின் நீராடி களிக்கும் காட்சிகளும் பாடலில் கூறப்பட்டுள்ளன.

  • வையை ஆற்றில் நீர் பெருக்கெடுத்து வருகிறது. அதன் கரை வழங்கும் வள்ளலின் கை போன்று தோன்றுகிறது. மிளகும், சந்தனமும் அடித்துவரப்படுகின்றன. நெய்யும் தயிரும் போல் நுரை மிதக்கிறது. பிறவும் அடித்துவரப்பட்டு எங்கும் கிடக்கின்றன. துறையில் பலரும் நீராடுகின்றனர். முத்துப் பதித்த மாலை, முத்துமாலை, பொன்னணி, மணி பதித்த அணி, வயிற்றில் அணியும் வலஞ்சுழி, தலையில் அணியும் முஞ்சம் முதலான அணிகலன்களுடன் வந்து சிறுவர்கள் ஒத்த பருவத் துணைவருடன் நீராடுகின்றனர். தாவிப் பாய்ந்து அரித்துத் தின்னும் கண்ணினை உடையவர்கள் வருகின்றனர். வயல்களில் பூக்கள் மிதக்கின்றன. கும்மாள இசையுடன் அரங்கில் ஆடுகின்றனர். பூங்காவில் வண்டுகள் பல்குகின்றன. நரந்தம் பூக்கள் மிதக்கின்றன. புனலை எதிர்கொள்வது போல, பூங்கா, குளம், ஆற்றுத் துருத்தி ஆகிய இடங்களெல்லாம் தேன் உண்ணும் வண்டுகளுடன் பூத்துக் குலுங்குகின்றன.
  • தோழிமார் சுருங்கையால் நீரை விசிறும்போது பரத்தை ஒருத்தி முலையில் இருக்கும் நீரைத் துடைக்காமல் நின்றாள். பெருந்தகை வீரன் ஒருவன் வருவதைப் பார்த்து முந்தானைத் துணியால் துடைத்துக்கொண்டாள். அவனை அணைக்கவேண்டும் என்று புன்னகை பூத்தாள். தோழியர் அவள் புன்னகைக்கு ஒத்தூதினர். கடலில் கலக்கும் ஆறு போல அவனும் அவளும் ஏறித் தழுவினர். களிப்புத் தரும் தேனைப் பரிமாறிக்கொண்டனர். குங்கும நீர்க் குருதியைத் துடைக்காமல் இணைந்தனர். ஒருவருக்கொருவர் இனியர் ஆயினர். இதனைப் பார்த்து வையைப் பெண் நாணினாள்.
  • அவள் கண்மீனில் இருப்பது கள்ளா, புனலா, புலவியா என்று மயங்கும்படி எல்லாமுமாய் அவள் கண் இருந்தது. வண்டினம் மொய்க்கும்படித் தேன் கலந்து புனல் ஓடிற்று. புனலாடுவோர் ஆங்காங்கே அரவணைத்துக்கொண்டனர். மகள் அப்பியிருந்த மன்மதச் சாந்து மகனின் மார்பில் ஒழுகிற்று. எக்கியில் நீர் பீச்சுவதால் இப்படி ஒழுகிற்று. அப்போது அவன் மார்பு தேன் ஒழுகும் மலர் போல் காணப்பட்டது.
  • மலையருவி மரங்களின் பூங்கொத்துகளை அழகாக்கியது. மகளிர் கூந்தலில் சூடிய பூக்களும், மைந்தர் மாலையிலிருந்த பூக்களும் ஒன்றில் ஒன்று தாவின. அவை மிதந்து வரும் வெள்ளமானது, மீன்-மாலையைச் சூடிக்கொண்டு கங்கையாறு வருவது போல் இருந்தது. வைகை ஆற்று நீர் சலசலக்கும் ஒலி, தேனீக்களின் ரீங்காரத்தை ஒத்திருக்கும்.
  • மலையில் மேகங்கள் நிறைந்தன. அதனால் வையையில் அலைகள் மோதின. புனலில் மகளிர் ஆடினர். அவர்கள் தலையில் கண்ணியும், மார்பில் மாலையும் அணிந்திருந்தனர். பண்ணிசைகள் முழங்கின. அந்த இசையைப் பயன்படுத்திக்கொள்வதற்காக மகளிர் ஆடினர். அவர்கள் வையை ஆற்றை வேண்டிக்கொண்டனர். "மழையும்(உறை), மணக்கும் சந்தனமும், மாலையும், பூசையில் பூக்கும் புகையும், படைக்கும் அவியலும் காய்ந்து போகாமலும், மாறாமலும் இருப்பதற்காக வானம் பொழிந்து, வெள்ள வறட்சி இல்லாமல் வையை விளங்குவதாகுக" என்று வேண்டிக்கொண்டனர்.
பரிபாடல் - 17

திருப்பரங்குன்றத்து முருகப்பெருமானின் கோயிலில் நடைபெறும் விழாவின் காட்சிகளும் விழவுக்கு செல்லும் மக்களின் நிலையும் கூறப்பட்டுள்ளது.

  • சாமியாடி வேலன் தேன் தெறிக்கும் மலர், காதணி குழை, இடையில் பூப்போட்ட ஆடை, அடிக்கும் மணி ஆகியவற்றோடு வருகிறான். இலைகளையும் உடுத்தியிருக்கிறான். மார்பில் சந்தனம் பூசியிருக்கிறான். முருகனுக்கு நடப்பட்ட காப்பு-மரத்தைப் பற்றிச் சொல்லிப் பாடுகிறான். பல இசைக் கருவிகள் முழங்குகின்றன. விரிமலர்த் தேனால் திருப்பரங்குன்றம் நனைந்துகொண்டிருக்கிறது. கோலாட்டம், குரவை ஒலி(கொளை), மணப்பொருள், புகையும் பொருள், பறக்கும் கொடி ஆகியவை மாலை மாலையாக எங்கும் காணப்படுகின்றன. இப்படி முருகனை வழிபடுவோர், மேலோர் வாழும் தேவர் உலகைக்கூட விரும்புவார்களா என்னும்படி மகிழ்ந்திருந்தனர்.
  • ஒருபக்கம் பாணர் தரும் யாழிசை, ஒருபக்கம் வண்டின் இசை, ஒருபக்கம் துளைகளில் எழும் குழலோசை, ஒருபக்கம் தும்பி இசை, ஒருபக்கம் முழவின் இசை, ஒருபக்கம் அருவி கொட்டும் ஓசை, ஒருபக்கம் விறலியர் ஆட்டம், ஒருபக்கம் வாடைக்காற்றில் கொடி ஆடும் ஆட்டம், ஒருபக்கம் பாடினி பாடும் பாலைப் பண்ணின் குரல் ஒருபக்கம் மயில் ஆடும் காட்சி, - இப்படி எங்கும் நிறையும் குறையுமாகத் தோன்றும் காட்சிகள். எதிர் முழக்கக் காட்சிகள். மாறுபட்டவரை வென்ற முருகன் குன்றத்தில் நிகழ்ந்தன.
  • பாடல் பெற்ற மதுரைக்கும் பரங்குன்றுக்கும் இடையில் மக்கள் மகிழ்ந்து திளைக்கின்றனர். மணக்கும் சந்தனத்தைப் பூசிக்கொண்டனர். அருகிலா, சேய்மையிலா என்னும்படி ஊர் இடைவெளி இருந்தது. எதுவாயினும் அது மகிழ்ச்சி மிக்க நாடு. மகளிரை மைந்தர் வணங்கும்போது மைந்தர் தலையிலிருந்த மலரும், மகளிர் மாலையிலிருந்த மலரும் சோர்ந்து விழுந்தன. வாய்ச்சொல் வழுவாமல் செய்த வேள்விப் புகை, அகில் புகை மேலும் மேலும் எழுந்து போய்த் தேவர்களின் இமைக்காத கண்களைத் தாக்கி இமைக்காத சூரியன் போல் ஆக்கிவிட்டன.
  • வளையல் அணிந்த கைகளுடன் மகளிர் தோளை வீசிக்கொண்டடு சென்றனர். அவர்களின் தோள் மெத்தை ஆயிற்று. மகளிர், மைந்தர் மாலைகள் ஈர மாலைகள் ஆயின. அவர்கள் பாய்ந்து பாய்ந்து தழுவி ஆடுதலானது சுனை மலரில் தேன் உண்ணும் வண்டின் நிலை ஆயிற்று.
  • அருவி பாயும் வயல்கள் கீழோர். அதன் மேல் நடக்கும் மக்கள் மேலோர். மேலோர் மிதிப்பதால் கீழோர் சேறாயினர். தெய்வ விழா நடைபெற்றது. திருந்தும் மக்களின் உறவு விழாவும் நடைபெற்றது. பரங்குன்று, கூடல், வையை ஆகிய மூன்றும் விழாவால் தடுமாறின.
  • முருகன் மயில்-கொடி பிடித்துக்கொண்டு மயில்-ஊர்தியில் செல்பவன். இப்படிச் செல்லும் "இறைவனே! எங்கள் பணிகளை விட்டுவிட்டு வந்து உன்னை வாழ்த்துகிறோம். தொழுகிறோம். நாங்கள் உன்னிடம் நலம் பெற்று வாழவேண்டும்" என்று வேண்டுகின்றனர்.

பாடல் நடை

பரிபாடல் - 16

  • பண்: நோதிறம்
  • கூற்று:காதற் பரத்தையுடன் புனல் ஆடிய தலைமகன் தோழியை வாயில் வேண்ட, அவள் புனல் ஆடியவாறு கூறி, வாயில் மறுத்தது.

கரையே கை வண் தோன்றல் ஈகை போன்ம் என,
மை படு சிலம்பின் கறியொடும், சாந்தொடும்,
நெய் குடை தயிரின் நுரையொடும், பிறவொடும்,
எவ் வயினானும் மீதுமீது அழியும்.
துறையே முத்து நேர்பு புணர் காழ், மத்தக நித்திலம்,
பொலம் புனை அவிர் இழை, கலங்கல் அம் புனல் மணி
வலம் சுழி உந்திய, திணை பிரி புதல்வர்
கயந் தலை முச்சிய முஞ்சமொடு தழீஇ,
தம்தம் துணையோடு ஒருங்கு உடன் ஆடும்
தத்து அரிக் கண்ணார் தலைதலை வருமே.
செறுவே விடு மலர் சுமந்து, பூ நீர் நிறைதலின்,
படு கண் இமிழ் கொளை பயின்றனர் ஆடும்,
களி நாள் அரங்கின் அணி நலம் புரையும்.
காவே சுரும்பு இமிர் தாதொடு தலைத்தலை மிகூஉம்
நரந்த நறு மலர் நன்கு அளிக்கும்மே.
...............................................................................................

உசாத்துணை

‎


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 08-Sep-2025, 11:46:45 IST