under review

தேவாங்கர்

From Tamil Wiki
தேவலமுனிவர், தேவாங்கர்களின் முதல்மூதாதை
வேரும் விழுதுகளும்
தேவாங்கர் திருமணச் சடங்குகள்

தேவாங்கர்: (தேவாங்கச் செட்டியார்) தமிழகத்திலும் ஆந்திர மாநிலத்திலும் உள்ள நெசவாளர் சாதியினர். இவர்கள் பொ.யு. 15-ம் நூற்றாண்டு முதல் ஆந்திர மாநிலத்தில் இருந்து தமிழகத்தில் குடியேறியவர்கள். இவர்களின் குலக்கதைகளில் இவர்கள் முதலில் அந்தணர்குலத்தில் ஒரு பிரிவாக இருந்தனர் என்றும், ஷத்ரியர்களாக நாடாண்டார்கள் என்றும் சொல்லப்படுகிறது. தேவாங்க புராணம் இவர்களின் தொன்மக்கதைகளைச் சொல்கிறது.

வாழ்விடம்

தேவாங்கர் வாழ்வும் வழிபாடும்

தேவாங்கர்கள் இந்து மதத்தின் ஒரு சமூக உட்குழு. பல துணைச்சாதிகள் அடங்கிய ஒரு சாதி. இந்தியாவில் ஆந்திர மாநிலத்தை முதன்மையிடமாக கொண்ட இவர்கள் தென்னிந்தியாவில் தமிழகம், கர்நாடகம், ஓரளவு கேரளம் ஆகிய மாநிலங்களில் வசிக்கிறார்கள். ஒரிசாவிலும் வாழ்கிறார்கள்.தமிழகத்தில் சின்னாளப்பட்டி, போடிநாயக்கனூர், கம்பம், திருப்பூர், கோயம்புத்தூர்,திண்டுக்கல், ஈரோடு, சென்னை ஆகிய ஊர்களில் மிகுதியாக வாழ்கின்றனர்.

பெயர்

தேவாங்கர் நெசவை தொழிலாகக் கொண்டவர்கள். தேவல முனிவரின் குலம் என்னும் பொருளிலும், தேவர்களின் உடலுக்கு உடை அணிவித்தவர்கள் என்னும் பொருளிலும் தேவாங்கர் என்று சொல்லப்படுவதாக அவர்களின் புராணங்கள் சொல்கின்றன. செட்டா, செட்டியார், தேவர, ஜடரு, ஜன்ட்ர, ஜெந்தார், சாலியர் போன்ற பெயர்களும் இவர்களுக்கு உண்டு.

சமூக அடையாளம்

தேவாங்கர்கள் பிராகிருத பிராமணர்கள் (பண்டை பிராமணர்கள்) பிரிவைச் சேர்ந்தவர்கள் என அவர்களின் வாய்மொழி வரலாறுகள் சொல்கின்றன. பிராமணர்களாக இருந்து, வெவ்வேறு வரலாற்றுச் சூழல்களால் வேறு தொழில்களுக்குச் சென்ற பிராமணர்களின் வம்சாவளியினர் அவ்வாறு அழைக்கப்படுகிறார்கள். பின்னர் இவர்கள் நாடாண்டதாகவும் உஜ்ஜயினியை ஆட்சி செய்த போஜராஜன் தங்கள் குலத்தவரே எனவும் இவர்களின் குலக்கதைகள் சொல்கின்றன.

இவர்களின் தெய்வம் சௌடேஸ்வரி அம்மன் என்னும் துர்க்கை. பழைய விஜயநகர ஆட்சிப் பகுதிகளில் இவர்களிடம் நடுகல் வழிபாடு உள்ளது. போரில் மறைந்த முன்னோர்களின் நினைவுச்சின்னங்கள் அவை. முன்பு இவர்கள் பத்மசாலியர் சமூகத்துடன் இணைந்திருந்தனர் என்றும், பின்னர் சைவமதத்தைப் பின்பற்றி தனிப் பிரிவாக ஆயினர் என்றும் சொல்லப்படுகிறது

தொன்மம்

தேவாங்கர்களின் தொன்மம் தேவாங்க புராணம் என்னும் நூலில் விரிவாகப் பேசப்பட்டுள்ளது. அக்கதைகளின் படி இவர்கள் தேவல முனிவரின் வழித்தோன்றல்கள். தேவலமுனிவர் விலங்குகளின் தோல்களை ஆடையாக அணிந்திருந்த தேவர்களுக்கும் மனிதர்களுக்கும் பருத்தியால் ஆடை செய்து அளித்தவர். தேவலர் ஆடை அளிக்கச் சென்ற சமயம் அவரை அசுரர்கள் தாக்கியபோது விஷ்ணுவும் சிவனும் துணைக்கு வந்தனர். ஆனால் வெவ்வேறு சாபங்களால் அவர்களால் அந்த அசுரர்களை வெல்ல முடியவில்லை. ஆகவே விஷ்ணு சௌடேஸ்வரி அன்னையை உருவாக்கினார். ஒரு பெண்ணால்தான் அந்த அசுரர்கள் கொல்லப்படவேண்டும் என்று முன்னரே சாபம் இருந்தமையால் சௌடேஸ்வரி அம்மன் அசுரர்களைக் கொன்றார். அசுரர்களின் குருதியால் தேவலரின் கையில் இருந்த பருத்திநூல் ஐந்து நிறங்கள் கொண்டதாக ஆகியது. அவருடைய வழித்தோன்றல்கள் நெசவாளராக ஆயினர். (பார்க்க தேவாங்க புராணம் )

பிரிவுகள்

தேவாங்கர்கள் ஒரிசா மற்றும் தென்மாநிலங்களில் விரிந்து பரவிருக்கிறார்கள். ஒவ்வொரு பகுதியிலும் ஏராளமான துணைப்பிரிவுகள் உள்ளன. அவை இன்னமும்கூட விரிவாக மானுடவியல் நோக்கில் பதிவு செய்யப்படவில்லை. பொதுவாகக் காணப்படும் பிரிவினைகள் இரண்டு. ஒன்று சைவ, வைணவ நம்பிக்கை சார்ந்த பிரிவு. இரண்டு, சைவ உணவுப்பழக்கம் அசைவ உணவுப்பழக்கம் சார்ந்த பிரிவு.

தேவாங்கபுராண வசனம்
பிரிவுகளின் தொன்மம்

தேவலரின் பதினெட்டாம் தலைமுறை வழித்தோன்றலாகிய தேவதாசமையன் ஆமேத நகரில் ஆட்சி செய்து மறைந்தார். அவருடைய மரபில் காளசேன மன்னர் பத்தாயிரம் இளவரசிகளை மணந்து, கௌதம ரிஷியின் உதவியால் புத்ரகாமேஷ்டி யாகம் செய்து அமுதம் பெற்று பத்தாயிரம் பிள்ளைகளைப் பெற்றார். பத்தாயிரம் மக்களும் 700 முனிவர்களிடம் சிவதீட்சை பெற்றனர். தீட்சை அளித்த முனிவர்களின் பெயர்கள் 700 கோத்ரங்களாக ஆயின. பத்தாயிரம் மக்களும் பத்தாயிரம் குலங்களாக ஆகி தங்கள் குலங்களைப் பெருக்கினர். காளசேன மன்னன் இந்த பத்தாயிரம் பேரில் மூத்தவனான ரூபசேன மன்னனுக்கு முடிசூட்டி ஆட்சியை ஒப்படைத்தான். இவர் வழியில் வந்த ஏகோராமன் என்னும் விருபாட்சன் சமூகக்கட்டுப்பாடுகளையும் ஒழுக்க நியதிகளையும் வகுத்தான்.

கர்நாடகப்பிரிவினர்

தேவாங்கர் கர்நாடகத்தில் இரு பிரிவினராக உள்ளனர். குலாசார தேவாங்கர், சிவாச்சார தேவாங்கர். சிவாச்சார தேவாங்கர்கள் தூய சைவர்களாக குலாச்சார தேவாங்கர்களிடமிருந்து பிரிந்தவர்கள். இருசாராருமே பனசங்கரி தேவியை வழிபடுகின்றனர். (வனசங்கரி, வனதுர்க்கை)

தேவுரு மனைக்காரு

தேவுரு மனைக்காரு (தெய்வத்தின் வீட்டுக்காரர்கள்) தேவாங்க குலத்தில் சௌடேஸ்வரி அம்மனை வீட்டில் வைத்து பூசை செய்யும் உரிமை கொண்டவர்கள். தேவாங்கர் செய்த ஒரு வேள்வியை அசுரர்கள் தாக்கியபோது வேள்விக்காக வைத்திருந்த ஐந்து கலசங்களில் நான்கை நான்குபேர் எடுத்துக்கொண்டு ஓடி காப்பாற்றினர். ஆகவே அவர்களின் குடும்பங்களுக்கும் தேவுருமனை என்னும் தகுதி கிடைத்தது. இவர்கள் அம்மன் கோயிலின் கருவறைக்குள் செல்லும் உரிமை கொண்டவர்கள். இஸ்லாமியப் படையெடுப்பின்போது ஆலயத்தை காத்துநின்ற நான்கு குடும்பத்தவர் இவர்கள் என்றும் கதை உண்டு

  1. சதானந்த மஹரிஷி கோத்திரம் - இருமனேரு
  2. கௌசிக மஹரிஷி கோத்திரம் - ஏந்தேலாரு
  3. அகஸ்திய மகரிஷி கோத்திரம் - லத்திகாரரு
  4. வரதந்து மகரிஷி கோத்திரம் - கப்பேலாரு
தேவாங்க சிந்தாமணி

இருமனேரு என்பவர்கள் தான் குலங்கள் உருவான பத்தாயிரம் பேரில் மூத்தவர்கள் என்பதால் அவர்கள் தான் செட்டிக்காரர்கள். எந்த விழாவும் அவர்கள் குலத்தில் ஒரு ஆள் கலந்து கொள்ளாமல் நடக்காது.

சௌடாம்பிகா வரலாறு

ஆசாரங்கள்

உணவு

தேவாங்கர்கள் அசைவ உணவுப்பழக்கம் கொண்டவர்கள். சைவ உணவுப்பழக்கம் கொண்டவர்கள் தாங்கள் பிராமணர்களாக இருந்தவர்கள் எனக் கூறுகிறார்கள்.

பூணூல்
ஐந்து தேவுரு மனை தெய்வங்கள்

தேவாங்கர்களில் எல்லா பிரிவினரும் பூணூல் (உபவீதம்) அணியும் வழக்கம் இருந்தது. அவர்களுக்கு இருந்த பிராமண மரபு அதற்கு காரணம் என்றும், தேவலமுனிவர் அவர்களுக்கு பூணூல் அளித்தார் என்றும் சொல்லப்படுகிறது. ஒவ்வொரு முடிச்சிலும் மூன்று நுல்கள். மூன்று முடிச்சுக்களை சேர்த்து ஒன்பது நூல் கொண்டதாக போட்டுக்கொள்வது இவர்களின் பூணூல். முடிச்சுகளை பிரம்ம முடிச்சு என்று சொல்வதுண்டு. தேவாங்கர் குல மக்கள் வருடம் ஒரு முறை ஆவணி மாதத்தில் வரும் திருவோணம் நட்சத்திரத்தில் பூணூல் நோன்பு கொண்டாடி பழைய பூணூலை மாற்றி புது பூணூல் அணிகிறார்கள். தேவாங்கர்களின் முதல் தோன்றலான தேவலர் யோனி பிறப்பில்லாமல் சிவனின் நெற்றிக் கண்ணிலிருந்து வந்தவர் ஆதலால் தேவாங்கர்களுக்கு காயத்ரி மந்திரம் ஓதி சந்தியாவந்தனம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்று சொல்லப்படுகிறது.

கத்தி போடுதல் (அலகு சேவை)

தேவல முனிவரின் ஏழாவது அவதாரமான தேவதாசமையன் ஆமேத நகரில் சௌடாம்பிகை அம்மனுக்குக் கோயில் கட்டினார். அங்கே குடியிருப்பதற்காக சௌடேஸ்வரி அம்மனை அழைக்க ஶ்ரீசைலம் சென்றார். அம்மன் அவர்களுக்கு பின்னால் வருவதாகவும், ஆனால் அவர்கள் திரும்பிப் பார்க்க கூடாது என்றும் ஆணையிட்டாள். அவர்கள் சென்றபோது பின்னால் கொலுசுச் சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது. வழியில் ஆற்றில் இறங்கியபோது அம்மன் நீருள் கால்வைத்து நடந்தமையால் கொலுசின் ஓசை கேட்கவில்லை. அம்மன் திரும்பிப் போய்விட்டாளா என்று பதறி தேவதாசமையன் திரும்பிப் பார்க்க அம்மன் கோபம் கொண்டு திரும்பிச் சென்றுவிட்டாள். தேவாங்கர்கள் ஶ்ரீசைலம் சென்று அம்மனைத் திரும்ப அழைத்தனர். அம்மன் வரமறுக்கவே தங்கள் உடலில் கத்தியால் வெட்டிக்கொள்ள தொடங்கினர். மைந்தர் துயர் கண்டு உள்ளம் உருகிய அம்மன் அவர்களுடன் ஆமேதநகருக்கு வந்தாள். அந்நிகழ்வைக் கொண்டாட தேவாங்கர் சௌடேஸ்வரி அம்மனை ஒரு கரகமாக அலங்கரித்து நீர்நிலையில் இருந்து எடுத்து வருகிறார்கள். அப்போது கத்தியால் உடலில் கீறிக்கொள்ளும் கத்தி போடுதல் சடங்கை செய்கிறார்கள்.

வீரமுட்டி

இது தேவாங்கர்களின் ஒரு சிறுதெய்வம். சௌடாம்பிகை அம்மன் ஊர்வலம் வரும்போது காவலுக்கு உடன் வருவது. அம்மன் வரும் வழியில் செருப்பு, கறுப்பு ஆடை ஆகியவை அணிந்திருப்பவர்களை அப்புறப்படுத்துவது இதன் பணி. 41 நாட்கள் விரதமிருந்த ஒருவர் வீரமுட்டி வேடமிட்டு வருவார்.

சமயம்

தேவாங்கர் இந்தியா முழுக்க இருந்தாலும் அனைவருக்கும் உரிய பொதுவான தெய்வம் சௌடேஸ்வரி அம்மன். ராமலிங்க சாமியையும் வழிபடுகிறார்கள். ஒன்பது தலங்கள் இவர்களுக்கு முக்கியமானவை

  • ஸ்ரீசைலம் மல்லிகார்ஜூன மூர்த்தி கோவில்.
  • மொதனூர் ஸ்ரீ இராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் கோவில்.
  • நந்தவரம் செளடேஸ்வரி தேவி கோவில்
  • கங்காசாகர் கபிலேஸ்வரர் ஆலயம்
  • நேபாளத்தில் பசுபதிநாத் கோவில்.
  • மைசூர் சாமுண்டீஸ்வரி அம்மன் திருக்கோவில்.
  • ஹம்பி ஹேமகூட காயத்ரி பீடம்.
  • ஸ்ரீ காயத்ரி பீடம் , திருமூர்த்திமலை.
  • உஜ்ஜைன் மகாகாளேஸ்வரர் ஆலயம்.

மரபுகள்

ஐந்து தேவுருமனை தலங்கள்

தேவாங்கர்களின் மடங்களும், குருபரம்பரைகளும் தமிழகத்தில் இருநூறு ஆண்டுகளுக்கு முன்னரே இல்லாமலாயின. தேவாங்கர்களுக்குள் திருமணம் முதலிய குடிச்சடங்குகள் நடத்துவதற்காகப் பரம்பரையாக சிலருக்கு சில உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. அவை

  • பட்டக்காரன்
  • நாட்டு எஜமானன்
  • செட்டிமைக்காரன்
  • எஜமானன்
  • குடிகள்

தேவாங்கர்களில் குடும்பங்கள் இணைந்து இருப்பதற்கு பங்களம் என்று பெயர். இதன் தலைவர் செட்டிகாரர். இவருக்கு மந்திரி போன்றவர் பெத்தர். பணியாளர் சேசராஜு . இப்படிப்பட்ட பங்களங்கள் பல்லாயிரக்கணக்கில் இருக்கின்றன.இபல பங்களங்கள் சேர்ந்தால் அதன் பெயர் ஸ்தலம்.

சேலம் மாவட்டத்தில் தாராபுரம், ஒஸக்கோட்டை, அமரகுந்தி, காரிமங்கலம், சேலம் என்னும் ஐந்து ஸ்தலப் பட்டக்காரர்கள் தேவாங்கர் குலத்தில் உள்ளனர்.

தேவாங்கர் இதழ்கள்

  • ஆதி ஸ்ரீ சௌடேஸ்வரி மலர்-குமாரபாளையம்,நாமக்கல் மாவட்டம்
  • தேவாங்கர்-சென்னை தேவாங்கர் மகாஜன சபை
  • சவுடாம்பிகா - அருப்புக்கோட்டை

நவீனப் பண்பாட்டுப் பதிவுகள்

தேவாங்க சமுதாயத்தைப் பற்றி ஜப்பானியப் பெண்மணி யுமிகொ நானாமி 1998-ல் ஆய்வு செய்துள்ளார்

தேவாங்கரின் வாழ்க்கைப் பின்னணியில் தமிழில் சுப்ரபாரதிமணியன், எம்.கோபாலகிருஷ்ணன் ஆகியோர் நாவல்களை எழுதியுள்ளனர். எம்.கோபாலகிருஷ்ணன் எழுதிய 'அம்மன் நெசவு' குறிப்பிடத்தக்க நூல்.

உசாத்துணை


✅Finalised Page