under review

திருப்போரூர் முருகன் அலங்காரம்

From Tamil Wiki

திருப்போரூர் முருகன் அலங்காரம் (பதிப்பு: 2016) திருப்போரூரில் உறையும் முருகப் பெருமான் மீது பாடப்பட்ட சிற்றிலக்கிய நூல். இதன் ஆசிரியர்: ஸ்ரீ சிதம்பர சுவாமிகள்.

வெளியீடு

திருப்போரூர் முருகன் அலங்காரம் நூலை, நிறைமதி வழிபாட்டுச் சங்கம், 2016-ல் வெளியிட்டது. இதன் ஆசிரியர்: சிதம்பர சுவாமிகள். உரையாசிரியர்: புலவர் மாசிலாமணி. திருப்போரூர் முருகன் சந்நிதி முறை தொகுப்பில் இந்நூல் இடம்பெற்றது.

ஆசிரியர்

சிதம்பர சுவாமிகள் (சிதம்பர அடிகள்) வீரசைவ மரபைச் சேர்ந்த பக்திக் கவிஞர். வீரசைவ மரபைச் சேர்ந்த துறையூர் சாந்தலிங்க அடிகளின் மாணவர். திருப்போரூரில் கோயில் கொண்ட முருகன் மேல் திருப்போரூர் முருகன் சன்னிதி முறை உள்ளிட்ட நூல்களை இயற்றியவர்.

நூல் அமைப்பு

திருப்போரூர் முருகன் சந்நிதி முறைத் தொகுப்பினுள் ஒன்று 'திருப்போரூர் முருகன் அலங்காரம்'. சொல்லாலும், பொருளாலும் கற்பனை நயத்துடன் அழகுபடப் பாடப்படுவது அலங்காரம். திருப்போரூர் முருகன் அலங்காரம் நூலில் காப்புச் செய்யுள் நீங்கலாக 101 பாடல்கள் இடம்பெற்றன. காப்புச் செய்யுள் விநாயகர் மீது கட்டளைக் கலித்துறை யாப்பில் பாடப்பட்டுள்ளது.

முருகனின் சிறப்பு, அழகு, பெருமை இந்நூலில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. முருகனின் பெருமை, சைவப் பயிரை வளர்க்குந்தண் மேகம், வெள்ளிப் பொருப்பினன் மைந்தன், தேவர் சிரோமணி, போரூர்ச் சடானனக் கோக்கொண்டல், கவணுற்ற கைக்குற மானைத் திருடிய கள்வன், நண்ணச் சிவானந்த போகம் விளைவிக்கும் நல்உழவன் என்றெல்லாம் சிறப்பித்து, இறைவனின் வேறு திருநாமங்களாக, வேலன், மயிலவன், சரவணன், குருதேசிகன், சுராதிபன், விசாகன், குகன், வேலன், செவ்வேள், காங்கெயன், முருகன், தேவன்சிரோமணி, குமரேசன், சண்முகன், எண்குணன், சேவலன், அயிலவன் என்றெல்லாம் பலவாறாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாடல்

பூமேவு நாபனும் நான்முகத் தோனும் புரந்தரனுந்
தாமேவு வாழ்வும் அதிகார மும்பெறத் தார்புனைந்த
கோமேவு வேல்கொண்டவுணரை மாய்த்த குமரனெங்கோன்
தூமேவு தாள்மலர் போரூரி லென்முடி சூடினனே

கொங்கணர் ஆரியர் ஒட்டியர் கோசலர் குச்சரராஞ்
சிங்களர் சோனகர் வங்காளர் ஈழர் தெலுங்கர்
கொங்கர் அங்கர் கலிங்கர்கன் னாடர் துருக்க ரனைவருமே
தங்கள்தங் கட்கிறை நீயென்பர் போரிச் சரவணனே

மெய்வேடம் பூண்டவர்க்குள்ளும் புறனும் விளங்கும் பிரான்
பொய்வேடம் பூண்டனன் என்றாலுங் காத்தனை பூங்கணையால்
எய்வேட னால்வருந் தாதெனையாளினி யேய்ந்ததினை
கொய்வேட மானை மணந்தோய்தென் போரிக் குணக்கொண்டலே

சந்திர காந்த மணிமாடத் தூடுதன் சாயை கண்டோர்
பைந்தொடி மாது தலைவனொ டூடப் பரிந்தவனே
சுந்தர ஆடி நிழற்காட்டி யின்புற சொற்புகலுஞ்
செந்திருப் போரிக் குகனைக் கண்டார்க்குண்டு சித்திகளே

மதிப்பீடு

திருப்போரூர் முருகன் அலங்காரம் நூல் முருகன் மீதான பக்தி இலக்கியங்களில் ஒன்றாகவும், 17-ம் நூற்றாண்டில் தோன்றிய சிற்றிலக்கிய நூல்களுள் ஒன்றாகவும் அறியப்படுகிறது.

உசாத்துணை

  • திருப்போரூர் முருகன் அலங்காரம், உரையாசிரியர்: பா. மாசிலாமணி, வெளியீடு: நிறைமதி வழிபாட்டுச் சங்கம், விற்பனை உரிமை: ஸ்ரீமத் சிதம்பர சுவாமிகள் வழிபாட்டுச் சங்க அறக்கட்டளை, புதுப்பெருங்களத்தூர், சென்னை; முதல் பதிப்பு: 2016.


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 20-Oct-2025, 11:33:29 IST