under review

திருத்தசாங்கம்

From Tamil Wiki

திருத்தசாங்கம் தசாங்கப்பத்து என்னும் சிற்றிலக்கிய வகைமையில் மாணிக்கவாசகரால் இயற்றப்பட்டது. திருவாசகத்தின் ஒரு பகுதியாக அமைகிறது.

ஆசிரியர்

திருத்தசாங்கத்தை இயற்றியவர் சைவ சமயக் குரவர் நால்வரில் ஒருவரான மாணிக்கவாசகர். வாதவூரார் என்றும் அழைக்கப்பட்டார். 9 -ஆம் நூற்றாண்டில் வரகுண பாண்டியனின் காலத்தைச் சேர்ந்தவர். அரிமர்த்தன பாண்டியனிடம் தலையமைச்சராகப் பணியாற்றினார். மாணிக்கவாசகர் இயற்றியவை திருவாசகமும், திருக்கோவையாரும்.

மாணிக்கவாசகர் தில்லையில் இருந்தபோது திருத்தசாங்கம் இயற்றப்பட்டது.

நூல் அமைப்பு

மலை, ஆறு, நாடு, ஊர், மாலை, யானைப்படை, குதிரைப்படை, கொடி, முரசு, செங்கோல் எனும் பத்தும் அரசனின் அங்கங்கள். அரசனுக்குரிய பத்து அங்கங்களையும்(சிறப்புகளையும்) 10 நேரிசை வெண்பாக்களால் பாடுவது தசாங்கப்பத்து.

திருத்தசாங்கம் திருவாசகத்தின் ஒரு பகுதி. திருத்தசாங்கத்தில் அரசனுக்குரிய பத்து உறுப்புகளும் சிவபெருமானிடத்தில் காணப்படும் முறை கூறப்பட்டுள்ளது. தசாங்கங்கள் கீர்த்தித் திருவகவலில் கூறப்பட்டன. பாடல்கள் தலைவி கிளியைப் பார்த்துக் கூறப்பட்டனவாகவே அமைகின்றன. இறைவனது தசாங்கங்களையும் தலைவி கிளியின் வாயால் கேட்டு இன்புறுகின்றாள். திருத்தசாங்கம் பத்து நேரிசை வெண்பாக்களால் ஆனது.

பாடல் நடை

நாடு

ஏதமிலா இன்சொல் மரகதமே ஏழ்பொழிற்கும்
நாதன்நமை ஆளுடையான் நாடுரையாய் - காதலவர்க்
கன்பாண்டு மீளா அருள்புரிவான் நாடென்றுந்
தென்பாண்டி நாடே தெளி.

குற்றமில்லாத, இனிய சொல்லையுடைய மரகதம் போன்ற பச்சைக் கிளியே, தன்மீது அன்புள்ளவர்க்கு, அன்பினால் ஆட்கொண்டு, பிறவிக்கு மீண்டு வாராதபடி அருள் செய்வோனாகிய பெருமானது நாடாவது, எப்பொழுதும், தென்பாண்டி நாடே - இதனை நீ அறிவாயாக;. ஏழுலகுக்குந் தலைவனும், நம்மை அடிமையாகவுடையவனுமாகிய அவனது, நாட்டைச் சொல்வாயாக. இங்கு சிவபெருமானின் நாடு சொல்லப்பட்டது.

ஆறு

செய்யவாய்ப் பைஞ்சிறகிற் செல்வீநஞ் சிந்தைசேர்
ஐயன் பெருந்துறையான் ஆறுரையாய் - தையலாய்
வான்வந்த சிந்தை மலங்கழுவ வந்திழியும்
ஆனந்தங் காணுடையான் ஆறு.

சிவந்த வாயினையும் பசுமையான சிறகினையும் உடைய செல்வியே, பெண்ணே, மேன்மை பொருந்திய, சிந்தையிலேயுள்ள, குற்றங்களைப் போக்க வந்து இறங்குகின்ற எம்மை ஆளாகவுடையவனது ஆறாகும்,நமது சிந்தையைச் சேர்ந்த தந்தையாகிய, திருப்பெருந்துறையையுடைய ஆற்றினை உரைப்பாயாக.

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 22-Sep-2023, 09:50:33 IST