under review

திருக்கண்ணப்ப தேவர் திருமறம்

From Tamil Wiki

திருக்கண்ணப்ப தேவர் திருமறம் பதினொன்றாம் திருமுறையில் இடம்பெறும், மறம் என்னும் வகைமையில் அமைந்த சிற்றிலக்கியம். பதினோராம் திருமுறையில் கல்லாட நாயனார், நக்கீரதேவ நாயனார் இருவரும் இயற்றிய இருவேறு திருக்கண்ணப்ப தேவர் திருமறங்கள் இடம் பெறுகின்றன.

பார்க்க: திருக்கண்ணப்ப தேவர் திருமறம்(கல்லாடதேவர்)

ஆசிரியர்

திருக்கண்ணப்ப தேவர் திருமறத்தை இயற்றியவர் நக்கீரதேவ நாயனார். திருமுருகாற்றுப்படை இயற்றிய நக்கீரரும் இவரும் ஒருவர் அல்லர் என்பதும், சொல் வழக்கு முதலியவற்றாலும் பொருள் அமைதியாலும், தேவார திருவாசகக் கருத்துக்களும் சொற்றொடர்களும் இடம் பெற்றிருப்பதாலும் சமயக் குரவர்க்குப் பின் பொ.யு. 9-ம் நூற்றாண்டில் வாழ்ந்த நக்கீரர் என்ற ஒருவரால் இயற்றப்பட்டிருக்க வேண்டும் என்பதும் ஆய்வாளர்களின் கருத்து.

நூல் அமைப்பு

மறம் என்ற சிற்றிலக்கியம் வீரத்தை, துணிவைப் பேசுபொருளாகக் கொண்டது. வீரனுடைய கொடையைப் பாடுவது கொடைமறம். வீரனுடைய பக்தியைப் பாடுவது 'திருமறம்' . கண்ணப்பரின் பக்தி பேசுபொருளாக அமைவதால் இந்நூல் 'திருமறம்' என்ற வகைமையில் வரும். கண்ணப்ப நாயனாரைப் பற்றிய வரலாற்றுக் குறிப்புக்கள் தேவார திருவாசகங்களில் சுருக்கமாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. கண்ணப்பரது வரலாற்றை முதன்முதலாக விரித்துக்கூறிய நூல் திருக்கண்ணப்ப தேவர் திருமறம். சேக்கிழாருக்கு பெரிய புராணத்தில் கண்ணப்பரின் கதையைப் பாடுவதற்கு இது ஆதார நூலாக இருந்தது.

இந்நூல் நீண்ட ஆசிரியப்பாவாக, இறுதியில் நூற்பயனைக் கூறும் வெண்பாவுடன் அமைந்தது. கண்ணப்பதேவரின் வீரம், துணிவு, வில்திறம், விலங்குகளால் ஏற்பட்ட காயத்தழும்புகளோடு கூடிய கொடிய தோற்றம், தன் வாயில் நீரைத் தேக்கி வைத்து அதனால் நீராட்டல், தன் தலையில் செருகி வைத்திருந்த பூக்களால் பூசித்தல், மாமிச உணவைப் படைத்தல், பூசகர் சிவனிடம் முறையிடல், கண்ணப்பனின் பக்தியை உலகுக்கு அறிவிக்க சிவனின் கண்ணில் ரத்தம் வழிதல், கண்ணப்பன் தன் கண்களைக் கொய்து வைத்தல், சிவன் தோன்றி அருளல் ஆகிய நிகழ்வுகள் கூறப்பட்டுள்ளன.

பாடல் நடை

பூசகர் சிவனிடம் முறையிடுதல்

ஈங்கொரு வேடுவன்
நாயொடும் புகுந்து மிதித் துழக்கித்
தொடுசெருப் படியால் நீக்கி வாயில்
இடுபுனல் மேனியில் ஆட்டித் தன்தலை
தங்கிய சருகிலை உதிர்த்தோர் இறைச்சியை
நின்திருக் கோயிலில் இட்டுப் போமது
என்றும் உன்தனக் கினிதே எனையுருக்
காணில் கொன்றிடும் யாவ ராலும்
விலக்குறுங் குணத்தன் அல்லன் என்உன்
திருக்குறிப் பென்றவன் சென்ற அல்லிடைக்

நில்லு கண்ணப்ப!

இத்தனை தரிக்கிலன் இதுதனைக் கண்டஎன்
கண்தனை இடந்து கடவுள்தன் கண்ணுறு
புண்ணில் அப்பியும் காண்பன் என்றொரு கண்ணிடைக்
கணையது மடுத்துக் கையில் வாங்கி
அணைதர அப்பினன் அப்பலுங் குருதி
நிற்பதொத் துருப்பெறக் கண்டுநெஞ் சுகந்து
மற்றைக் கண்ணிலும் வடிக்கணை மடுத்தனன் மடுத்தலும்
நில்லுகண் ணப்ப நில்லுகண் ணப்பஎன்
அன்புடைத் தோன்றல் நில்லுகண் ணப்பஎன்
றின்னுரை அதனொடும் எழிற்சிவ லிங்கம்

உசாத்துணை


✅Finalised Page