under review

தாருல் இஸ்லாம்

From Tamil Wiki
தத்துவ இஸ்லாம் - மார்ச், 1922 இதழ்

’தாருல் இஸ்லாம்' இஸ்லாமிய சமயம் சார்ந்த முன்னோடி இதழ். ஜனவரி 1919 முதல் வெளிவந்த இவ்விதழின் ஆசிரியர் அல்ஹாஜ் பா. தாவூத்ஷா. ’தாருல் இஸ்லாம்’ என்பதற்கு 'இஸ்லாத்தின் வீடு’ என்பது பொருள்.

பதிப்பு, வெளியீடு

இஸ்லாம் சமுதாய வளர்ச்சிக்கு ஓர் இதழ் தேவை என்று 1919-ல் நாச்சியார்கோயிலில் 'தாருல் இஸ்லாம்’ இதழைத் தொடங்கினார் பா. தாவூத் ஷா. இவ்விதழ் தொடங்கப்பட்டபோது "முஸ்லிம் சங்க முதல் கமலம்" என்ற பெயரில் வெளியானது. 12 இதழ்கள் வெளிவந்தன. ஒரு வருடம் முடிந்ததும், 1920-ல், இவ்விதழ் "முஸ்லிம் சங்க மறுகமலம்" என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து 'தத்துவ இஸ்லாம்’ என்ற பெயரில் வெளியானது. ஜனவரி 1923 முதல் "தாருல் இஸ்லாம்" என்ற பெயரில் வெளிவந்தது.

"தாருல் இஸ்லாம்" இதழ், சுமார் 37 ஆண்டுகள் வெளிவந்தது. மாத இதழாகத் தொடங்கி, பின் மாதம் இருமுறை இதழ், வார இதழ், வாரம் இருமுறை இதழ், நாளிதழ் என்று வெளியானது. பின்னர் மாத இதழாக மட்டுமே வெளியாகி 1957-ல் நின்றுபோனது.

தாருல் இஸ்லாம் - ஜனவரி 1927 இதழ்

உள்ளடக்கம்

’தாருல் இஸ்லாம்’ இதழின் முகப்பில் ஆங்கில வருடத்துடன் இஸ்லாமிய வருடக் குறிப்பும் (ஹிஜ்ரி) மாதமும் இடம் பெற்றுள்ளது. ஆரம்பத்தில் கமலம் -1; இதழ் - 1 என்ற வெளியீட்டுக் குறிப்புடன் வெளிவந்தது. பின்னர் மலர், இதழ் என்று மாற்றம் செய்யப்பட்டது. ஆரம்ப காலத்தில் 'இஃதோர் உயர்தர நூதன மாதாரம்பச் செந்தமிழ்ச் சஞ்சிகை’ என்ற வாசகம் முகப்பில் இடம்பெற்றுள்ளது. 'தமிழகத்தில் மிகப் புராதன முஸ்லிம் மாசிகை’ என்ற குறிப்பு பிற்காலத்து இதழ்களின் முகப்பில் காணப்படுகிறது. 48 பக்கங்கள் கொண்ட ’தாருல் இஸ்லாம்’ இதழ், தனிப்பிரதி ஒன்றுக்கு ஆறணா என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்தியா, இலங்கைக்கு ஆண்டு சந்தா நான்கு ரூபாய் எட்டணா. பர்மா, மலாயா போன்ற நாடுகளுக்கு தனிப்பிரதி எட்டணா. ஆண்டு சந்தா ரூபாய் ஆறு.

இதழில் கால், அரை, முழுப்பக்க விளம்பரங்கள் வெளியாகியுள்ளன. அவற்றிற்குத் தனிக் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் புத்தக விளம்பரங்களே வெளியாகியுள்ளன. சில இதழ்களில் பா. தாவூத்ஷா பி.ஏ. என்றும், சில இதழ்களில் அல்ஹாஜ் பா. தாவூத்ஷா பி.ஏ. என்றும், 1927-ம் வருடத்து இதழ்களில் பா. தாவூத் ஷா ஸாஹிப் பி.ஏ. என்றும் காணப்படுகிறது. ஆரம்ப காலகட்டங்களில் திருக்குறள் இதழின் முகப்பில் இடம் பெற்றுள்ளது. இவ்விதழுக்கு பர்மா, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை ஆகிய நாடுகளிலும் சந்தாதாரர்கள் இருந்தனர்.

பெண்கள் விடுதலையை வலியுறுத்தி ’தாருல் இஸ்லாமி’ல் "நம் சகோதரிகள்" என்ற தலைப்பில் தொடர் கட்டுரை வெளியாகியுள்ளது. முதல் இஸ்லாமியப் பெண் எழுத்தாளர் என அறியப்படும் நாகூர் சித்தி ஜுனைதா பேகம் எழுதிய முதல் சிறுகதை, 1929-ம் ஆண்டு தாருல் இஸ்லாமில் வெளியாகியுள்ளது.

'தாருல் இஸ்லாம்’ முதலில் மாத இதழாகவே வெளிவந்தது. சென்னையில் "கார்டியன்' அச்சகத்தை தாவூத்ஷா விலைக்கு வாங்கினார். சொந்த அச்சகம் வந்ததும் ’தாருல் இஸ்லாம்’ வார இதழாக மாற்றப்பட்டது. அக்டோபர் 1, 1927 முதல் வார இதழாக வெளியானது. அது குறித்து அவ்விதழில், "இஸ்லாத்தின் தற்காப்புக்காகவும் ஒற்றுமை முன்னேற்றத்துக்காகவும் தமிழில் வெளிவரப்போவது இதுதான் முதல் முஸ்லிம் தேசிய வாரப்பத்திரிகையாகும். இதை இத்தமிழ் நாட்டிலுள்ள ஒவ்வொரு முஸ்லிமும் ஆதரிப்பார் என்றே ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். எல்லோருக்கும் இப்பத்திரிகையானது இதமாகவே நடந்துகொள்ளுமென்பதில் கிஞ்சித்தும் சந்தேகமில்லை. இப்பத்திரிகையைப் படிப்பதால், ஏன் முஸ்லிம்கள் எல்லோரும் ஒற்றுமையாயிருக்கவேண்டும் என்பதையும் எதிரிகளின் வலையில் சிக்கிக்கொள்ளாமல் நாம் எவ்வாறு தப்பிக்கொள்ள வேண்டும் என்பதையும் நன்குணர்ந்து கொள்வீர்கள். ஆரிய சமாஜிகளையும் அன்னவரின் விஷமப் பிரசாரங்களையும் முஸ்லிம் இல்லங்களிலிருந்து தடுத்துவைக்கப் போவது இந்த ஒரே பத்திரிகைதான்." என்ற குறிப்பு காணப்படுகிறது.

தாருல் இஸ்லாம் - மார்ச் 1955 இதழ்
பா. தாவூத் ஷா

தாருல் இஸ்லாம் இதழின் பங்களிப்புகள்

'தாருல் இஸ்லாம்’ இதழ்களில் விரிவான தலையங்கங்கள் இடம் பெற்றுள்ளன. 'ஹலாலா, ஹராமா?’, 'இஸ்லாம் மதத்திற்கு ஐரோப்பாவின் கடன்’, 'பாகிஸ்தானின் எதிர்காலம்’, 'திராவிட இயக்கமும் முஸ்லிம்களும்’ என இஸ்லாமிய சமயம் சார்ந்த பல கட்டுரைகள், கருத்து விளக்கங்கள் காணப்படுகின்றன. குர் ஆன் செய்திகள், அதை மையமாகக் கொண்ட கதைகளும் இடம் பெற்றுள்ளன. ஆசிரியர் பா.தாவூத்ஷா பீ.டீ.ஷா என்ற பெயரில் சில குறிப்புகளை, செய்திகளை எழுதியுள்ளார். முகமது நபியின்அமுத மொழிகளையும் (ஹதீஸ்கள்) குர்ஆன் வசனங்களையும் வெளியிட்டுள்ளார். இஸ்லாமியர்களிடையே இருந்த மூட நம்பிக்கைகளைச் சாடிப் பல கட்டுரைகளை எழுதியிருக்கிறார். தர்கா வழிபாடு கூடாது என்பதை வலியுறுத்தியும் எழுதியிருக்கிறார்.

கேள்வி-பதில் பகுதி, இளைஞர் பக்கம், பெண்கள் பக்கம் என வெவ்வேறு தலைப்புகளில் செய்திகளும் தகவல்களும் இவ்விதழில் வெளியாகியுள்ளன. சிறுகதைகளுக்கும் இவ்விதழ் இடமளித்துள்ளது. சிறுவர்களுக்கான பக்கங்களும் அவ்வப்போது வெளியாகியுள்ளன. ’ஷஜருத்துர்’ என்ற தொடர்கதையும் இடம் பெற்றுள்ளது. எழுதியவர் என்.பி.ஏ. என்னும் என்.பி. அப்துல் ஜப்பார். இவர், தாவூத் ஷாவின் மூத்த மகன். பல்வேறு புனைபெயர்களில் தாருல் இஸ்லாம் இதழில் எழுதிய அவர், பிற்காலத்தில் இதழின் பொறுப்பாசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.

’பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம்’ என்ற காப்பு வாசகத்தின் பொருள், இதழின் ஒரு கட்டுரையில் மிக விரிவாக விளக்கப்பட்டுள்ளது. 'சத்திய இஸ்லாமும் சமாதி வணக்கமும்’, ’இன்னமுமா உங்களுக்கு வீண் சந்தேகம்?’, 'தமிழும் ஹிந்தியும்’, 'காந்திப்பெரியார் எப்படிப்பட்டவர்?’, 'பெண்மணிகள் பேதையரல்லர்’ போன்ற பல தலைப்புகளில் கட்டுரைகள் வெளியாகியுள்ளன. வாசகர் கடிதங்கள், அஞ்சலிக் குறிப்புகள், மாதாந்த விசேஷங்கள் என்ற தலைப்பில் மாதா மாதம் நடந்த, நடக்கும் நிகழ்வுகள், நூல் மதிப்புரை போன்றவையும் 'தாருல் இஸ்லாம்’ இதழில் இடம் பெற்றுள்ளன. சமாச்சாரக் கொத்து, சமாச்சாரத்திரட்டு, விஷயத்திரட்டு, கலம்பகம், மாதாந்திர விசேஷம், பிரபஞ்ச விலாசம் எனப் பல்வேறு தலைப்புகளில் செய்திகள் வெளியாகியுள்ளன. ஆரம்ப காலத்தில் சமயம் சார்ந்த செய்திகளைத் தாங்கி வந்தாலும் பிற்காலத்தில் பொதுவான பல செய்திகள், இலக்கியம் சார்ந்த குறிப்புகள் ’தாருல் இஸ்லாம்’ இதழில் இடம் பெற்றன.

1934-ல் 'தாருல் இஸ்லாம்’ இருமுறை இதழாக வெளிவந்தது. பின்னர் நாளிதழாக மாற்றப்பட்டது. 1941-ல், சென்னையில், முஸ்லிம் லீக் மாநாடு நடந்தபோது காலை, மாலை என இரு வேளைகளில் இவ்விதழ் வெளியானது. 1947-ல் மாத இதழாக வெளிவந்தபோது, சினிமா விமர்சனம், சினிமா செய்திகள், கலைஞர்களின் பேட்டிகள் இவ்விதழில் வெளிவந்தன. 1957 வரை 'தாருல் இஸ்லாம்’ வெளியானது.

வரலாற்று இடம்

மாத இதழாய்த் தோன்றி, பின்னர் மாதமிருமுறை இதழாகப் பரிணமித்து, வார இதழாகி, வாரமிருமுறை இதழாகி, நாளிதழாகி, பின் மீண்டும் மாத இதழாகி என ஏறக்குறைய 37 வருடங்கள் வெளிவந்த, இஸ்லாம் சமயம் சார்ந்த முன்னோடி இதழ் ’தாருல் இஸ்லாம்’

"இசுலாமிய இதழ்கள் மத்தியில், கொடி கட்டிப் பறந்த இதழ், 'தாருல் இஸ்லாம்’. முசுலிம்களிடம் நல்ல வரவேற்பு இருந்தது. இதழின், தெளிந்த இனிய தமிழ் நடைதான் அதற்கு காரணம். பிற சமயத்தவர்களும்கூட இவ்விதழை வாங்கிப் படித்தார்கள்" என்று இதழாளர் அ.மா.சாமி குறிப்பிட்டுள்ளார்.

ஆவணம்

பா. தாவூத் ஷாவின் பேரர் நூருத்தீன் அவர்களது முயற்சியில் 'தாருல் இஸ்லாம் இதழ்கள்’ சில வலையேற்றம் கண்டுள்ளன.

உசாத்துணை


✅Finalised Page