under review

தமிழ்நாடன்

From Tamil Wiki
தமிழ்நாடன்

தமிழ்நாடன் (ஜூலை 1, 1941 - நவம்பர் 09, 2013) சேலம் தமிழ்நாடன். தமிழ்க் கவிஞர். மொழிபெயர்ப்பாளர். வரலாற்றாய்வாளர். இலக்கிய நூல்கலை பதிப்பித்தவர். வானம்பாடி இதழுடன் இணைந்து செயல்பட்டவர். வானம்பாடி கவிதை இயக்கம் உருவாக்கிய கவிஞர்களில் ஒருவர்.

பிறப்பு, கல்வி

தமிழ்நாடனின் இயற்பெயர் ஏ.சுப்ரமணியன். ஜூலை 1, 1941-ல் ஆறுமுகம் -இருசாயி(எ) கமலபூபதி அம்மையார் இணையருக்கு சேலம் மாவட்டம் ஏர்வாடியில் பிறந்தார். தொடக்க, உயர்நிலைப் பள்ளி வகுப்புக் கல்வியைச் சேலத்தில் படித்தபின் 1959-ல் சேலம் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார். 1962-ல் ஆசிரியர் பயிற்சி முடித்தார்.

தனிவாழ்க்கை

தமிழ்நாடன் 1960-ல் கல்லூரிப் படிப்பை முடித்ததும் வேளாண் துறையில் ஓர் ஆண்டு பணியாற்றினார். அதன் பின்னர் ஆசிரியர் படிப்பை முடித்து செப்டம்பர் 17, 1964-ல் ஆசிரியர் பணியில் இணைந்தார். 1968-ல் கலைவாணியை மணந்தார். ஒரு மகன், ஒரு மகள் ரம்யா. மகன் மறைந்துவிட்டார். ஜூன் 30, 1999-ல் ஆசிரியர் பணியிலிருந்து ஓய்வுபெற்றார். ஓய்வுக்குப்பின் பெரியார் பல்கலையில் கலைஞர் கருணாநிதி ஆய்வுமைய இருக்கையின் சிறப்புப் பேராசிரியராகப் பணியாற்றினார். தமிழ்நாடு அரசு வரலாற்று ஆவணக்குழுவின் மண்டல உறுப்பினராக இருந்தார்.

அரசியல் வாழ்க்கை

தமிழ்நாடன்

தமிழ்நாடன் 1963 முதல் சி.பா.ஆதித்தனார் நடத்திவந்த நாம் தமிழர் இயக்கத்தில் ஈடுபாடு கொண்டு செயல்பட்டார். பின்னர் அதிலிருந்து விலகி திராவிட முன்னேற்றக்கழக ஆதரவாளரானார். 1965-ல் இந்தி எதிர்ப்புப் போராட்ட மாணவர் தலைவர்களுடன் தொடர்பு ஏற்பட்டு போராட்டங்களில் ஈடுபட்டார். 1967-ல் திராவிட முன்னேற்றக்கழகம் ஆட்சிக்கு வந்தபோது அதன்மேல் விலகல் கொண்டு இடதுசாரி கட்சிகளின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டார். மார்க்ஸிய கம்யூனிஸ்ட் கட்சியின் இலக்கியச் செயல்பாடுகளுடன் இணைந்திருந்தார். 1972-ல் வானம்பாடி இதழ் தொடங்கப்பட்டபோது அதில் ஈடுபட்டு தீவிர இடதுசாரிக் கருத்துக்கள் கொண்டவராக ஆனார். 1975-ல் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டபோது தமிழ்நாடன் இந்திராகாந்தியை ஆதரித்து இந்திரா இந்தியா என்னும் நூலை ஆங்கிலத்தில் வெளியிட்டார். அதனால் அரசியல் - இலக்கிய நண்பர்களுடன் தொடர்பு குறைந்தது. அதன் பின்னர் அரசியல் ஈடுபாடற்றவரானார்.

இலக்கியவாழ்க்கை

ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது பள்ளி மலரில் வெளியான கவிதைதான் அச்சில் வந்த முதல் படைப்பு. அப்போதே தமிழ்நாடன் என்ற பெயரில்தான் எழுதியிருக்கிறார். திராவிட இயக்க ஆதரவாளராக கண்ணதாசனின் தென்றல் முதலிய இதழ்களில் எழுதினார். 1966-ல் எழுத்து சி.சு. செல்லப்பா தொடர்பு ஏற்பட்டு அவரை அழைத்துவந்து சேலத்தில் கூட்டம் நடத்தினார். 1972-ல் வானம்பாடி கவிதை இயக்கம் அவர் மேல் தாக்கம் செலுத்தியது. அதில் தீவிரமாக ஈடுபட்டார். வானம்பாடிக் காலத்திலேயே அவர் இலக்கியத்தில் தீவிரமாகச் செயல்பட்டார். பின்னர் ஆய்வுப்பணிகளுக்குச் சென்றார். தமிழ்நாடன் எழுதிய காமரூபம் என்னும் கவிதைநூல் அதன் பாலியலை வெளிப்படைத்தன்மைக்காக பேசப்பட்டது. அல்குல் என இன்னொரு நூலும் எழுதியிருக்கிறார்.மனுநீதி நூலின் தொன்மையான அசல்வடிவத்தை குறிப்புகளுடன் அச்சுக்குக் கொண்டுவந்தார்.அம்மா அம்மா' என்ற இவரது கவிதைத் தொகுப்பில் உள்ள கவிதைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு நாட்டைப் பற்றியது.

ஓவியம் சிற்பம்

தமிழ்நாடன் ஓவியக்கலையிலும் தோல்சிற்பங்கள் செய்யும் கலையிலும் ஈடுபாடுள்ளவர். 1973-ம் ஆண்டு எழுத்தாளர் ஓவியர் மன்றம் என்ற அமைப்பைத் தொடங்கி அதன்மூலம் சேலத்தில் கலைக்காட்சியகம் ஒன்றை தொடங்கினார். இந்த அமைப்பின் மூலம் பத்துக்கும் மேற்பட்ட ஓவியக் கண்காட்சிகள் நடத்தியதோடு ஓவியம் மற்றும் நாட்டார்கலைகள் பற்றி பத்துக்கும் மேற்பட்ட நூல்களும் வெளியிட்டுள்ளனர்.

தமிழ்நாடன் ஒரியா நூல்

ஆய்வுப்பணிகள்

வரலாறு

சேலம் தமிழ்நாடன் எண்பதுகளுக்கு பின் இலக்கிய வரலாற்றாய்விலும் சேலத்தின் உள்ளூர் வரலாற்றாய்விலும் தீவிரமாக ஈடுபட்டார். சேலம் வட்டாரத்தின் நாட்டார் கலைகளை ஆராய்ந்து தரவுகளை தொகுத்தார். பரவலாக அறியப்படாத நடுகற்கள் போன்றவற்றைப் பற்றிய செய்திகளை சேகரித்து முறைப்படுத்தினார். பன்னாட்டார் பட்டயம் எனும் செப்பேட்டைக் கண்டறிந்து பதிப்பித்தார். கர்னல் ரீடு அறிக்கையை (கி.பி. 1800) முதன் முதலாக தமிழில் முழுவடிவத்தில் அச்சேற்றினார் (2000).

கொங்கு மண்டலத்தின் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் வரலாற்றுப் பண்பாட்டு ஆய்வரங்குகள் நடத்திய கொங்கு ஆய்வகத்தின் பொதுச் செயலாளராக இருந்தார் (1980). கொங்கு ஆய்வகம் கல்லூரி மாணவர்க்கு நடத்திய முகாம்களில் வரலாற்று வகுப்புகளை நடத்தினார். கொங்கு ஆய்வக வெளியீடுகளின் தொகுப்பாளர், பதிப்பாளர். கொங்கு களஞ்சியம் பதிப்பாசிரியர் குழுவில் பணியாற்றினார். த

ருமபுரி மாவட்டத்தில் இயங்கும் விவேகானந்தா அறக் கட்டளைச் செயற்குழுவில் பணியாற்றினார். கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று மையத்துடன் இணைந்து ஆய்வுகளில் ஈடுபட்டார்.புலவர் இராசு ஆவர்களுடன் இணைந்து கொங்கு வரலாற்றாய்வுகளில் ஈடுபட்டார். கொடுமணல் தொல்சான்றுகள் பற்றிய தரவுகளை சேகரித்து வெளியிட்டார். பெரியார் பல்கலையில் கலைஞர் கருணாநிதி ஆய்வுமைய இருக்கையின் சிறப்புப் பேராசிரியராகப் பணியாற்றினார்.

இலக்கியம்

தமிழ் மொழியின் முதல் அச்சுப் புத்தககமான தம்பிரான் வணக்கம் நூலை (ஹென்ரிக் ஹென்ரிக்கஸ் )முழுமையாக மறுஅச்சு செய்தார் (1995). தஞ்சையில் நடைபெற்ற உலகத் தமிழ்மாநாட்டின் சிறப்பு வெளியீடாக அது வெளிவந்தது. அந்நூல் தமிழ் அறிவுலகில் தமிழ் உரைநடையின் தோற்றம் பற்றிய புதிய பார்வை ஒன்றை தொடங்கிவைத்தது.

பாரதிதாசனின் "குமரகுருபரன்' நூலின் கையெழுத்துப் படியை கண்டுபிடித்து பதிப்பித்தார்.

மறைவு

சேலம் தமிழ்நாடன் நவம்பர் 09, 2013-ல் மறைந்தார்

இலக்கிய இடம்

சேலம் தமிழ்நாடன் வானம்பாடி மரபின் கவிஞர்களில் இரண்டாம் அணியைச் சேர்ந்தவர். உரத்த அரசியல்குரலை வெளிப்படுத்தியவர். அவருடைய இலக்கியப் பங்களிப்பு என்பது வெவ்வேறு காலகட்டங்களில் அவர் மொழியாக்கம் செய்தோ எழுதியோ வெளியிட்ட நூல்கள் உருவாக்கிய பரபரப்பின் விளைவாக நிகழ்ந்தது. காமரூபம் அவர் காலகட்டத்தில் பாலியலை இலக்கியத்தில் பயன்படுத்துவதில் இருந்த எல்லையை கடந்த நூல். அவருடைய மனுநீதி உண்மைவடிவ மொழியாக்கமும் இலக்கியச் சூழலில் பேசப்பட்டது. முதல் அச்சுநூலும் ஒரு புதிய ஆர்வத்தை உருவாக்கியது.

தமிழ்நாடனின் வரலாற்றாய்வுகள் தமிழில் உள்ளூர்வரலாறு எழுதப்படும் முயற்சியின் முன்னோடிப் பணிகள் என்னும் அளவில் முக்கியமானவை. வரலாற்றாய்வை கல்விநிலையங்களில் தொடங்கி ஒரு மக்களியக்கமாக ஆக்கவும் முயன்றார்.

விருதுகள்

  • 1985-ல் சேலத்துச் செம்மல் விருது
  • 1995-ல் திருப்பூர்த் தமிழ்ச்சங்க விருது
  • இந்திய அரசின் நல்லாசிரியர் விருது
  • தமிழ்நாடு அரசின் பாரதிதாசன் விருது
  • கவிஞர் சிற்பி அறக்கட்டளை இலக்கிய விருது
  • 1999 மொழி பெயர்ப்பிற்காக சாகித்திய அகாதமியின் விருது (ஏழுகார்ட்டூன்களும் ஒரு வண்ண ஓவியமும் - ஒரிய கதைகள்)

நூல்கள்

கவிதை
  • அம்மா அம்மா
  • காமரூபம்
  • மண்ணின் மாண்பு
  • நட்சத்திரப்பூக்கள்
  • தமிழ்நாடன் கவிதைகள்
நாவல்
  • சாரா
சிறுகதை
  • மசா
  • நிவேதனம்
பதிப்பு
  • தமிழ்மொழியின் முதல் அச்சுப் புத்தகம் (1995)
  • பாரதிதாசனின் குமரகுருபரன் நாடகம் (2000)
மொழியாக்கம்
  • மனுதர்மம்
  • அர்த்தசாஸ்திரம்
  • ஏழுகார்ட்டூன்களும் ஒரு வண்ண ஓவியமும்
  • ஜப்பானியக் கவிதைகள்
ஆய்வு
  • வள்ளல் கந்தசாமிக் கவுண்டர் (பரமத்தி வேலூர்) (1995)
  • பரமத்தி அப்பாவு (1800-ல் வெள்ளையரை எதிர்த்த வீரைன் வரலாறு)
  • சேலம்: கலையும் இலக்கியமும் (1995)
  • சேலம் திருமணிமுத்தாறு (2006, 2010)
  • கொங்கு நாட்டில் கும்பினி ஆட்சி, புதுமலர், ஈரோடு (2009)
  • அன்புள்ளம் அருணாசலம் (2005)
  • சேலம் மையப்புள்ளி (2010)
இலக்கியக் கட்டுரைகள்
  • புதுமையின் வேர்கள்
  • எழுத்தென்ப
  • கலைகள் உறவும் உருமாற்றமும்
  • உயிர் ஒன்று உடல்நான்கு
  • திருக்குறள் புதிர்கள்
தன்வரலாறு
  • ஒரு வானம்பாடியின் இலக்கிய வானம்
  • என் மொழி என் மக்கள் என் நாடு

ஆங்கிலம்

  • 2000 yeas of Salem (1976)
  • The Story of India Indra (1975)
தொகுத்த நூல்கள்
  • சேலம் மாவட்டம்: சில ஆய்வுகள், காவ்யா (1988)
  • தருமபுரி மாவட்டம்: புதிய ஆய்வுகள், விவேகானந்தா (1996)
  • தமிழ்நாட்டு மலைவாழ் பழங்குடி மக்கள் (1996)
  • தாரமங்கலம் கெட்டி முதலி அரசர்கள் (1996)
  • கொங்குக் களஞ்சியம், மெய்யப்பன் (2008)
  • "அல்குல்"

ஆங்கிலம்

  • South Indian Studies (1981)

உசாத்துணை


✅Finalised Page