under review

தமிழர் திருநாள் (மலேசியா)

From Tamil Wiki
கோ. சாரங்கபாணி
தமிழர் திருநாள், மாதிரி அழைப்பிதழ்

தமிழர் திருநாள் : மலேசியாவில் கொண்டாடப்படும் ஒரு திருநாள். இது தைமாதம், பொங்கலை ஒட்டி கொண்டாடப்படுகிறது. தென்னிந்தியாவிலிருந்து மலாயாவில் குடியேறிய தமிழர்களை மொழியின் வழி ஒருங்கிணைக்க முன்னெடுக்கப்பட்ட வருடாந்திர நிகழ்வு. இத்திருநாளை கோ. சாரங்கபாணி முன்னெடுத்தார். தமிழர் திருநாள் நிகழ்வு சுதந்திரத்திற்கு முன்னும் அதற்கு பின்னும் மலாயாவில் தமிழ்மொழி வளர்ச்சிக்கும் கலைப் பண்பாட்டு வளர்ச்சிக்கும் பெரிதும் உதவியது. நாட்டின் பல ஊர்களிலும் கலை இலக்கிய பண்பாட்டு விழாவாக கொண்டாடப்பட்டது. பல்லாயிரம் இளைஞர்கள் இவ்விழாவில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர்.

தமிழர் திருநாள் செயற்குழு தோற்றம்

தமிழர் திருநாள்

கோ. சாரங்கபாணி தமிழர்களை ஒன்று திரட்டவும் எழுச்சி ஊட்டவும் பல்வேறு சிந்தனைகளை வகுத்து செயல்பட்டார். மலாயா தமிழர்கள் தங்களை இணைத்துக் கொள்ளும் வழிகளில் ஒன்றாக தமிழர் விழா ஒன்றை நடத்த அவர் திட்டமிட்டார். கோ. சாரங்கபாணி மலாயாவில் தமிழர்களுக்கான ஒரு விழாவை நடத்தும் தன் திட்டத்தை 'மலாயா பெரியார்' என்று அழைக்கப்பட்ட ரெ.ரா ஐயாறுவிடம் தெரிவித்ததும் அவர் ஜனவரி 14-ஐ அதற்கான நாளாக இருப்பது சிறப்பு என்று கூறினார். அதன் அடிப்படையில் கோ.சாரங்கபாணி பொங்கல் பண்டிகை தினமான ஜனவரி 14-ஐ தமிழர் திருநாளாக அமைத்துக் கொள்ள இணங்கினார். கோ. சாரங்கபாணி தன் திட்டத்தை பொதுவில் முன்வைத்து அனைத்து தரப்பு தமிழர்களுக்கும், தமிழ் முரசு இதழில் அழைப்பு விடுத்தார். தமிழர் திருநாள் முதல் ஆலோசனைக் கூட்டம் ஜனவரி 6, 1952-ல் இலங்கைத் தமிழர் சங்க கட்டிடத்தில் நடத்தப்பட்டது. அக்கூட்டத்திற்கு எம். கே. பக்ரூதீன் தலைமையேற்றார்.

ஆலோசனைக் கூட்டத்தில் கோ. சாரங்கபாணி ஆற்றிய உரையில் மலாயாவில் தமிழர்களுக்கான ஒரு விழாவை கொண்டாட வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி, அந்த விழா சிங்கப்பூரில் மட்டுமல்லாது தீபகற்ப மலாயாவின் எல்லா ஊர்களிலும் கொண்டாடப்படவேண்டும் என்று பேசினார். மேலும் தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகையோடு தொடர்பற்றது என்பதையும், மத அடையாளம் அற்றது என்பதையும் தன் உரையில் விளக்கினார். தமிழர் திருநாள் என்பது எல்லா மதத் தமிழர்களும் கலந்து சிறப்பிக்கும் பண்பாட்டு திருவிழாவாக அமையவேண்டும் என்றும் விளக்கினார்.

விழாக்குழுவுக்கு கோ. சாரங்கபாணி தலைமையேற்றார். வீ. கு. ஜீவானந்தம் செயலாளராகவும் பொ.வெ வீரமணி பொருளாளராகவும் தேர்வு பெற்றனர். எஸ் ஏ துரை, எஸ். வீராசாமி, வை. திருநாவுக்கரசு, எம்.கே பக்ருதீன், செ. நடராசன், அ.ம துரை, வி.ஆர். குமார், ச. சா. சின்னப்பனார், கோ. இரா மாணிக்கம், முத்துகருப்பன், வ.க. ஆனந்தம், செ. கோவிந்தசாமி ஆகியோர் செயற்குழுவிற்கு தேர்வாகினர்.

தமிழர் திருநாள் வளர்ச்சி

தமிழர் திருநாள் கொண்டாட்டம்

முதல் தமிழர் திருநாள் விழா ஜனவரி 13,1952-ல் சிங்கப்பூர் ஜாலான் புசார் அரங்கில் அரை நாள் கொண்டாட்டமாக நடந்தது. போதிய ஏற்பாடுகள் செய்ய காலம் போதாமையால் முதலாம் தமிழர் திருநாள் விழா எளிமையாக கொண்டாடப்பட்டது. ஆயினும் அதில் ஐயாயிரம் பேர் கலந்து கொண்டனர். காரைக்குடி மணிராஜன், குமாரி எல். விஜயலட்சுமி ஆகியோரின் கச்சேரியும் உரைகளும் இடம்பெற்றன.

தமிழர் திருநாள் கூட்டங்களை தமிழர் பிரதிநிதித்துவ சபை முன்னின்று நடத்தியது என்றாலும் ஒவ்வொரு ஆண்டும் ஒரு விழாக்குழு தனியாக அமைக்கப்பட்டது.

தமிழர் திருநாள் தொடர்ந்து மலாயாவில் மொழி பண்பாடு கலை இலக்கியம் சார்ந்த இயக்கமாக மாற்றம் கண்டு ,நாடெங்கும் ஆண்டு தோறும் கொண்டாடப்பட்டது. அப்போதைய திராவிட அரசியல் முன்னெடுத்து வெற்றி கண்ட மேடைப்பேச்சு கலாச்சாரத்தை தமிழர் திருநாள் மலாயாவில் பிரபலப்படுத்தியது. ஒவ்வொரு ஆண்டு விழாவிற்கும் தமிழக மேடைப் பேச்சாளர்கள் அழைக்கப்பட்டனர். அவர்கள் நாடு முழுதும் சுற்றுலா செய்து பேருரைகள் ஆற்றி மக்களை கவர்ந்தனர்.

ஒவ்வொரு ஆண்டு தமிழர் திருவிழாவை முன்வைத்து தமிழ் முரசு சிறப்பிதழ்களை வெளியிட்டது. பதினைத்து பக்க இலவச இணைப்பு, முப்பது பக்க இலவச இணைப்பு என அவை நாளிதழோடு வெளிவந்தன. அதில் தமிழ் மொழி இனம் பண்பாடு, முன்னேற்றம் தொடர்பான பல இலக்கியப்படைப்புகளும் கட்டுரைகளும் உரைகளும் வெளியிடப்பட்டன. எல்லா ஊர்களிலும் நடக்கும் தமிழர் திருநாள் செய்திகளையும் படங்களையும் தமிழ் முரசு தொடர்ந்து வெளியிட்டது.

1953-ம் ஆண்டு தமிழ் முரசு நாளிதழ், தமிழர் திருநாள் என்ற தலைப்பில் சிறுகதைப் போட்டியை நடத்தியது. அந்த போட்டியில் தைப்பிங் பி. ஆர் முத்தையாவும் சிலேத்தார் அர முருகையனும் முதல் பரிசை வென்றனர். முருகு சீனிவாசன், குளுவாங் மா. இராமையா, கோலா கங்சார் எஸ் ஆர் எம் பழனியப்பன் போன்றோரும் அந்த சிறுகதைப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றனர். அதே ஆண்டில், பி.பானுமதி எழுதி இயக்கி நடித்த 'சண்டிராணி' திரைப்படம் ராயல் திரையரங்கில் சிறப்புக் காட்சியாக காட்டப்பட்டது.

சிங்கப்பூரில் தமிழர் பிரதிநிதிச்சபை தமிழர் திருநாளை ஒருங்கிணைக்கும் நிரந்தர அமைப்பாக இருப்பதுபோல கோலாலம்பூரிலும் ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும் என்று கோ.சாரங்கபாணி நினைத்தார். அதற்கான ஆலோசனை கூட்டத்தில் கோ.சாரங்கபாணியோடு, ம.இ.கா தலைவர் கே. எல். தேவாசர் (கொண்டன் லால் தேவாசர்), தமிழ் நேசன் ஆசிரியர் ரா. வேங்கடராஜுலு, நேசன் உரிமையாளர் மலையாண்டி செட்டியார், தொழிற்சங்க தலைவர் பி.பி நாராயணன், ம.இ.கா பிரமுகர் ஆதி.நாகப்பன் போன்றவர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் இன அடிப்படையில் அமைப்புகளை உருவாக்க வேண்டாம் என்று கே.எல் தேவாசர் வேண்டிக் கேட்டுக் கொண்டார். மலாயாவில் இந்திய வம்சாவளிகளிடையே இன அடிப்படையில் பிரிவினைகள் தோன்றுவது அவர்களை மேலும் பலகீனமாக்கிவிடலாம் என்று அவர் நினைத்தார். ஆனால் தமிழர்கள் தங்களுக்குள் ஒற்றுமையாகவும் பண்பாட்டு உணர்வுடனும் வாழ தமிழர் திருநாள் கொண்டாடப்படுவது முக்கியம் என்றே முடிவெடுக்கப்பட்டது

மூன்றாம் ஆண்டு கோலாலம்பூர் தமிழர் திருநாள் விழா செயலாளராக கா. அண்ணாமலை செயல்பட்டார். இரண்டு நாள் விழாவாக நடந்த இந்த திருநாள் விவேகானந்தர் தமிழ் வித்தியாசாலை மண்டபத்தில் நடைபெற்றது. பல்வேறு இசை நிகழ்ச்சிகளுடன் கு. அழகிரிசாமி வடிவமைத்த முக்கூடல் பள்ளு நாட்டிய நாடகமும் இடம்பெற்றது. முக்கூடல் பள்ளு நாட்டிய நாடகமாக நிகழ்த்தப்படுவது அதுவே முதல் முறை. பத்மா தனம் நாட்டிய குழுவினர் நடனம் ஆடினர்.

1954-ம் ஆண்டில் நாடு முழுவது 80 இடங்களில் தமிழர் திருநாள் கொண்டாடப்பட்டதாக தமிழ் முரசு அறிவித்தது. சொற்பொழிவுகள் குறைவாகவும் போட்டிகள் அதிகமாகவும் அந்த ஆண்டு தமிழர் திருநாள் கொண்டாடப்பட்டது. இரண்டு வாரகாலம் நடைபெற்ற காற்பந்து போட்டிகள், பூப்பந்து போட்டிகள், நடனப்போட்டி, பேச்சுப் போட்டி, பாடல் போட்டி என பல்வேறு போட்டிகளில் 800 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அவர்களில் வென்ற இருநூறு பேருக்கு கோப்பைகள் வழங்கும் பெருநிகழ்வாக தமிழர் திருநாள் கொண்டாட்டம் நடந்தது.

1955-ம் ஆண்டில் தமிழர் திருநாள் கொண்டாட்டத்தின் முக்கிய அங்கமாக இலங்கைப் பல்கலைக்கழக விரிவுரையாளர் தனிநாயக அடிகள் அழைக்கப்பட்டார். ஹெப்பி வெர்ல்ட் அரங்கில் சுமார் எட்டாயிரம் பேர் திரண்ட கூட்டத்தில் தனிநாயக அடிகள் பேருரையாற்றினார். 1956-ல் பேராசிரியர் டாக்டர் முகம்மது உசேன் நயினாரை (சீதக்காதி புராணம் எழுதியவர்) அழைத்து தமிழர் திருநாள் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் தமிழர் திருவிழா சிறப்பாக நடந்தது. பண்பாட்டு நிகழ்ச்சிகளுடன் தமிழறிஞர்களும் மேடை பேச்சாளர்களும் தமிழகத்திலிருந்து தொடர்ந்து அழைக்கப்பட்டனர்.

1963-ல் தமிழர் திருநாள் விழாவில் தெ. பொ. மீனாட்சிசுந்தரனார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவர் சிங்கப்பூர் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப்பிரிவு தொடங்கும்படி ஒரு கருத்தை முன் மொழிந்தார், மேலும் தமிழ் செவ்விலக்கியங்களை மலாயிலும் சீனத்திலும் மொழி பெயர்ப்பதோடு பிற இன மாணவர்களுக்குத் தமிழ் கற்பிக்க வேண்டும் என்றும் கூறினார். தெ. பொ. மீனாட்சிசுந்தரனார் தமிழர் திருநாளும் பொங்கலும் ஒன்றல்ல என்று வலியுறுத்தி பேசினார்.

1965-ம் ஆண்டு சிங்கப்பூர் பிரதமர் லீ குவான் யூ கலந்து கொண்ட தமிழர் திருநாள் விழாவில் கோ.சாரங்கபாணி தமதுரையில், சிங்கப்பூர் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பகுதி தொடங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார். அந்த கோரிக்கையை பிரதமர் கொள்கை அளவில் ஒப்புக் கொண்டார் என்று கூட்டத்திலேயே அறிவித்தார்.

தமிழர் திருநாள் வீழ்ச்சி

கோ. சாரங்கபாணி

மார்ச் 16, 1974-ல் கோ.சாரங்கபாணி மறைந்தார். ஆனாலும் தமிழர் திருநாள் கொண்டாட்டங்கள் தொடர்ந்து நடந்தன. ஆயினும் அவை ஆடல் பாடல் நிகழ்ச்சிகளாகவும் கேளிக்கை கூட்டங்களாகவும் மாறின. மேலும் தை திங்கள் முதல் நாளில் தமிழர் திருநாள் கொண்டாடும் வழக்கமும் மெல்ல மாற்றங்கண்டது. மார்ச் அல்லது ஏப்ரல் மாதங்களில் வசதியான ஒரு நாளில் தமிழர் திருநாளைக் கொண்டாட விழா குழுவினர் முடிவு செய்து நடத்தினர். இன்றும் அதுவே தொடர்கிறது. ஆயினும் பொங்கல் பண்டிகையை தமிழர் திருநாள் என்ற அடைமொழியுடன் கொண்டாடும் வழக்கத்தையும் சிலர் தொடர்ந்தனர். இதனால் கோ. சாரங்கபாணி முன்னெடுத்த பண்பாட்டு விழாவான தமிழர் திருநாள் பற்றிய குழப்பங்கள் தொடர்ந்தன.

மலாயா தமிழர்களை ஒன்றிணைக்க வேண்டும் எனும் கோ. சாரங்கபாணியின் நோக்கத்தில் இருந்து வழுவி, தமிழர் திருநாள் கொண்டாட்டங்கள் அரசியல் மயமாகி அரசியல்வாதிகள் அங்கு கூடும் பெருங்கூட்டத்தை தங்களுக்கான களமாக பயன்படுத்திக் கொண்டனர். விளைவாக, அரசியலால் பிரிந்திருக்கும் தரப்புகள் தனித்தனியாக கட்சி சார்பில் தமிழர் திருநாளை கொண்டாட தொடங்கினர். இது தமிழர் நடுவே பிளவுகளை உருவாக்கியது.

தமிழர் திருநாளின் முக்கியத்துவம்

தமிழ் மொழி தொடர்பாகவும் பண்பாடுகள் தொடர்பாகவும் நாடுதழுவிய இயக்கமாக தமிழர் திருநாள் செயல்பட்டது. மொழி உணர்வையும் கலைத்துறைகள் மீதான ஆர்வத்தையும் தமிழர் திருநாள் கொண்டாட்டங்களின் வழி பெற்றுக் கொண்ட பல நூறு இளஞர்கள் மலேசிய எழுத்துத்துறையிலும் இலக்கியத்திலும் ஈடுபாடு காட்டினர். ஆய்வாளர் பாலபாஸ்கரன், தமிழர் திருநாள் வழி 'தமிழ் முரசு' நாளிதழ் இளையோருக்கான இலக்கிய இதழாக அடையாளம் பெற்றதையும், தமிழர் திருநாள் கொண்டாட்டங்களின் இலக்கிய பேருரைகளும் இலக்கிய போட்டிகளும் இளையோரை இலக்கிய ஆர்வளர்களாக மாற்றியதையும் அதன் பிரதான பங்களிப்பாகக் குறிப்பிடுகிறார்.

தமிழர் திருநாள் சர்ச்சைகள்

கோ. சாரங்கபாணி பெரியார் ஈ.வெ.ராவுடன்

தை முதல் நாளும் பொங்கல் பண்டிகையுமான ஜனவரி 14-ல் தமிழர் திருநாள் கொண்டாட முடிவெடுக்கப்பட்டமை தமிழர் திருநாளின் மேல் தொடர்ந்து பல சர்ச்சைகள் உருவாகக் காரணமானது. இஸ்லாமியர்களும் கிருஸ்துவர்களும் தமிழர் திருநாளில் முழுமையாக ஈடுபடாமல் தவிர்த்துக் கொள்ள அதைக் காரணம் காட்டினர். கோ. சாரங்கபாணி ஒவ்வொரு ஆண்டும் தமிழர் திருநாள் என்பது பொங்கல் பண்டிகை அல்ல என்று கூறி வந்தாலும் அதை பலரும் ஏற்க தயங்கினர். ஜனவரி 14, பொங்கல் பண்டிகை என்பதால் அதில் இந்துக்களே அதிகமும் கலந்து கொண்டனர். இஸ்லாமியரும் கிருஸ்தவர்களும் கலந்து கொள்ளாமல் ஒதுங்கிக் கொண்டனர்.

அதே காலகட்டத்தில் மலாயாவில் தீவிரமாக சமூகப் பணிகள் ஆற்றி வந்த திராவிடக் கழகங்கள் தமிழ் நாட்டை பின்பற்றி பொங்கல் பண்டிகையை மலாயாவில் சிறப்பித்துக் கொண்டாடும் திட்டங்களை முன்னெடுத்துக் கொண்டிருந்தன. திராவிட கழகத்தவர்கள் பொங்கலை அனைத்துத் தமிழருக்கான விழாவாக முன்னிறுத்த முயன்றனர். ஆகவே கோ. சாரங்கபாணி முன்னெடுத்த தமிழர் திருநாளை தனித்த விழாவாக அவர்கள் ஏற்கவில்லை. 'பொங்கலும் தமிழர் திருநாளும் வேறு வேறு என்று கூறுபவர்கள் ஏன் அதை தை முதல் நாளில் பொங்கல் தினத்தில் கொண்டாட வேண்டும்?’ என்பதே திராவிட கழகத்தார் முன்வைத்த கேள்வியாக இருந்தது.

திராவிட கழகத்தவர்கள் தமிழர் திருநாள் கொண்டாட்டங்களை பொங்கல் விழா கொண்டாட்டத்துக்கான போட்டியாக சுட்டிக்காட்டினர். 1952-ம் ஆண்டு கோ. சாரங்கபாணி தமிழர் திருநாளை நடத்திய அதே நாளில் (ஜனவரி 13) திராவிட கழத்தவர்கள் கோலாலம்பூர் ஈப்போ போன்ற நகரங்களில் பொங்கல் விழாவையும் திருவள்ளுவர் தினத்தையும் கொண்டாடினர்.

கேளிக்கைகளுக்கும் அலங்கார மேடைப் பேச்சுகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து சாமானிய மக்களை உணர்ச்சியில் தள்ளும் செயலை தமிழர் திருநாள் தொடர்ந்து செய்வதாக கல்விகற்றோர் மத்தியில் விமர்சனங்கள் எழுந்தன.

மலாயாவில் தமிழர்களின் உணர்ச்சிமிகு சூழலை எதிர்கொள்ளும் வகையில் இந்நாட்டு தெலுங்கரும் மலையாளிகளும் தங்கள் தாய்மொழியை வளர்க்கவும் தங்கள் பண்பாடுகளை மேம்படுத்தவும் தீவிரமாக செயல்பட்டனர். உகாதி பண்டிகை, ஓணம் பண்டிகை போன்ற சிறப்பு தினங்களை அவர்கள் ஒன்றுகூடும் பெரும் விழாவாக நடத்தத் தொடங்கினர். இது மலேசிய இந்திய வம்சாவளியினர் தனித்தனியான மொழிக்குழுக்களாக ஆக வழிவகுத்தது.

உசாத்துணை


✅Finalised Page