சக்கரவர்த்தித் திருமகன்
சக்கரவர்த்தித் திருமகன் (1954 ) ராமாயணக் கதைச்சுருக்கம். சி.ராஜகோபாலாச்சாரியார் எழுதிய இந்நூல் தமிழில் ராமாயணக் கதைச்சுருக்கங்களில் புகழ்பெற்றது.
வெளியீடு
சக்கரவர்த்தித் திருமகன் ராஜாஜி (சி. ராஜகோபாலாச்சாரி) எழுதிய நூல். வால்மீகி எழுதிய ராமாயணக் கதையின் சுருக்கமான மறுஆக்கம். கம்பராமாயணம் இந்நூலில் விரிவாக எடுத்தாளப்படுகிறது.
இந்நூல் கல்கி வார இதழில் மே 23, 1954 முதல் நவம்பர் 6, 1955 வரை தொடராக வெளிவந்தது. 1956ல் பாரி நிலையம் இந்நூலின் முதல் பதிப்பை வெளியிட்டது.
உள்ளடக்கம்
சக்கரவர்த்தித் திருமகன் முகவுரை, முடிவுரை தவிர 92 அத்தியாயங்கள் கொண்டது. இந்நூலில் ராமாயணக் கதையை வால்மீகி, கம்பன் ஆகியோரை சார்ந்து சுருக்கமாகச் சொல்கிறார்.
தனித்தன்மைகள்
ராஜாஜி வால்மீகி, கம்பன் இருவரும் உருவாக்கிய உச்சகட்டங்களை முழுக்க தன் நூலில் மீண்டும் எடுத்தளிக்கிறார். கம்பனிடமிருந்து உணர்ச்சிகரமான உச்சங்களை எடுத்துக் கொள்கிறார். உதாரணம், பரதன் ராமனைப் பார்க்க வரும்போது முதலில் பரதன் மேல் ஐயம் கொள்ளும் குகன் பரதனுக்கும் ராமனுக்கும் உள்ள உருவ ஒற்றுமையைக் கண்டு ராமனின் உருவம் கொண்ட ஒருவன் தவறிழைப்பானோ என எண்ணும் இடம் கம்பனில் இருந்து எடுத்தது. அதேபோல வால்மீகியிடமிருந்து மனித குணங்களின் சாமானியத் தன்மையைப் பற்றிய சித்தரிப்புகளை எடுத்துக் கொள்கிறார். உதாரணம், மாரீசனின் குரல் கேட்டு லட்சுமணனை சீதை வசைபாடும் இடம் வால்மீகியின் அடியொற்றியது.
- ராஜாஜி தொன்மங்களுக்கு அறிவியல் சார்ந்த நடைமுறை விளக்கங்களை அவ்வப்போது அளிக்கிறார். பகீரதன் தவத்தால் வானில் இருந்து மண்ணுக்கு இறங்கிய கங்கை சிவனின் தலைமுடியில் சிறைப்பட்டாள் என்றும், அதை மீண்டும் பகீரதன் தவம் செய்து நதியாக ஓட வைத்தான் என்றும் சொல்லப்படும் தொன்மத்தை, கங்கை பனிப்பாறைகளாக இமயமலையின் குகைகளில் இருந்தாள், அதை ஆறாக மாற வைத்ததை குறிப்பிடுவதாக விளக்குகிறார்.
- நுணுக்கமான சித்தரிப்புகளை மூல நூல்களை மேற்கோள் காட்டி அளிக்கிறார். உதாரணமாக, காட்டுக்குச் செல்லும்போது சீதை மரவுரியை எப்படிக் கட்டிக் கொள்வது என்று தெரியாமல் ராமனை கேட்கிறாள், ராமன் அவள் அணிந்துள்ள பட்டாடைக்கு மேலாகவே மரவுரியைக் கட்டி விடுகிறான்
- ராமன், சீதை ஆகியோரை மனிதர்களாக எல்லா பலவீனங்களுடனும் ராஜாஜி காட்டுகிறார். அதற்கு வால்மீகியை சார்ந்துள்ளார். உதாரணம், மாரீசனைத் தேடி ராமன் சென்றிருக்க, அம்புபட்ட மாரீசன் ராமனின் குரலில் 'லட்சுமணா' என அழைக்கிறான். சீதை லட்சுமணனிடம் ராமனை தேடிச்செல்லச் சொல்லும்போது, சீதைக்கு காவலாக இருக்கும்படி ராமன் சொன்ன ஆணையை எண்ணி லட்சுமணன் தயங்க; சீதை 'ராமன் இறந்தால் நீ என்னை அடையலாம் என்று பார்க்கிறாயா, இதற்காகத்தான் வனத்திற்கு எங்களுடன் வந்தாயா, பரதனோடு சேர்ந்து சூழ்ச்சியா?' என்று கேட்கிறாள். இங்கே சீதை ஒரு சாமானியப் பெண்ணாக இருக்கிறாள். அந்தக் கணத்தில் லட்சுமணனை தூண்ட என்ன சொல்ல வேண்டுமோ அதைச் சொல்கிறாள். பரதன் நேரில் வந்து பாதுகை வாங்கி சென்ற பின்னரும் சீதை பரதன் மேல் கசப்புடன் தான் இருக்கிறாள்.
- ராஜாஜி ராமனை நியாயப்படுத்த முயலவில்லை. வாலிவதம் ராமன் செய்த தவறு என்று சொல்கிறார். மறைந்திருந்து தாக்கியதற்காக வாலி ராமனைக் குற்றம்சாட்டிச் சொன்னது சரியே என்கிறார். "வாலியின் இந்தக் குற்றச்சாட்டுக்கு ராமன் என்ன பதில் சொல்ல முடியும்? ஏதோ சொன்னதாகவும், அதைக் கேட்டு வாலி சமாதானப்பட்டதாகவும் வால்மீகி ராமாயணத்தில் சொல்லப்படுகிறது. அதில் சாரம் இல்லை என்று விட்டுவிட்டேன். பெரியோர்கள் மன்னிப்பார்கள். ராமாவதாரத்தில் ஆண்டவனும் தேவியும் சகிக்க வேண்டிய துக்கங்களில் இந்தத் தவறும் பழியும் ஒன்று" என்று சொல்கிறார்.
விவாதம்
- ராஜாஜி எழுதிய இந்நூலுக்கு மு. கருணாநிதி 1958ல் 'சக்கரவர்த்தியின் திருமகன்' என்ற பெயரில் முரசொலி இதழில் ஒரு மறுப்புக் கட்டுரைத் தொடர் எழுதினார். அது நூலாகத் தொகுக்கப்பட்டுள்ளது. அந்நூலில் "ஆட்டு மந்தைபோலக் கூடி, 'கோவிந்தா' போட்டு பயனில்லை. நாம் கூறும் கருத்துக்களை நேர்மையாக எதிர்த்திடும் நாகரீகமுள்ளவர்கள் முன்வர வேண்டும்" என்று அறைகூவல் விடுத்தார்.
- 1958ல் சக்கரவர்த்தித் திருமகன் நூலுக்கு கேந்திரிய சாகித்ய அக்காதமி விருது அறிவிக்கப்பட்டபோது, அதற்கு இலக்கிய உலகில் கடும் கண்டனம் உருவாகியது. அந்நூல் 1954ல் வெளிவந்தமையால் விருதுக்குரிய நிபந்தனைக்குள் வரவில்லை என்றும், அது அசல் ஆக்கம் அல்ல மறுஆக்கமே என்பதனால் புனைவிலக்கியம் அல்ல என்றும் குற்றம் சாட்டப்பட்டது. சாகித்திய அகாடமியின் செயலைக் கண்டித்து, விஜயபாஸ்கரன் மார்ச் 10, 1959 சரஸ்வதி இதழில் 'நோக்கமும் செயலும்' என்ற ஆசிரியர் குறிப்பை எழுதினார். அது கண்டனக் கடிதத்துடன் சாகித்ய அக்காதமி அமைப்புக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சரஸ்வதி ஏப்ரல் 19, 1959 இதழில் எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய கண்டனக் கட்டுரை வெளியாகியது. ரகுநாதன் 'சாகித்ய அக்காதமியும் தமிழும்' என்ற தலைப்பில் கடுமையான விமர்சனக் கட்டுரையை சரஸ்வதி அதே இதழில் எழுதினார்.
விருது
1958-ம் ஆண்டுக்கான கேந்திர சாகித்ய அக்காதமி விருது இந்நூலுக்காக ராஜாஜிக்கு வழங்கப்பட்டது.
ஆசிரியர் கருத்து
'நாட்டுக்கு நான் நல்ல பணிகள் பல செய்ததாக நண்பர்கள் போற்றுவதுண்டு. அவற்றிலெல்லாம் வியாசர் விருந்தும் சக்கரவர்த்தித் திருமகனும் எழுதி முடித்ததுதான் மேலான பணி என்பது என் கருத்து. எல்லாவற்றையும் விட அதுவே என் மனதுக்கு மகிழ்ச்சியும் அமைதியும் தந்தது' என்று ராஜாஜி 1956-ல் வெளிவந்த முதற்பதிப்பின் முன்னுரையில் சொல்கிறார்.
இலக்கிய இடம்
சக்கரவர்த்தித் திருமகன் ராமாயணத்தின் இரண்டு மாபெரும் காவிய வடிவங்களான வால்மீகி, கம்பன் எழுதிய படைப்புகளை மிக எளிய அன்றாட மொழியில் தொகுத்தளிக்கிறது. வால்மீகி எழுதியது தொல்காவியம், கம்பன் எழுதியது செவ்வியல் கற்பனாவாத காவியம். வால்மீகியில் இருந்து அன்றாடத்தன்மை கொண்ட மனித கதையையும், கம்பனில் இருந்து மனித உணர்வுகள் மற்றும் விழுமியங்களின் உச்சங்களையும் ராஜாஜி எடுத்துக்கொண்டு ஒரே கதையாக தொகுத்தளிக்கிறார். இந்நூலில் தன் தேர்வுகள் மற்றும் முடிவுகளுக்கு அடிப்படையாக உள்ள தன் பார்வையையும் ராஜாஜி கூடவே சொல்லிச் செல்கிறார்.
ராமாயண காவியங்களை ஒரு சாதாரண வாசகன் எந்த வகையிலும் அவற்றின் சுவையும் தீவிரமும் முழுமையும் குறைவுபடாமல் வாசிப்பதற்குரிய முதன்மையான தொடக்க நூல் என்று இந்நூலை மதிப்பிடலாம். ராஜாஜியின் தனிப்பட்ட ஆய்வு நோக்கு, காவிய அழகியல் சார்ந்த பார்வை ஆகியவற்றை வெளிப்படுத்தும் ராமாயண ஆய்வு நூலாகவும் இது முக்கியமான படைப்பு.
உசாத்துணை
- சக்கரவர்த்தி திருமகன் ராஜாஜி இணைய நூலகம்
- சக்கரவர்த்தியின் திருமகன் - மு கருணாநிதி இணையநூலகம்
- சிலிக்கான் ஷெல்ப் ஆர்வி மதிப்புரை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 25-May-2026, 19:58:45 IST