under review

வால்மீகி

From Tamil Wiki
வால்மீகி சீதையின் இரு புதல்வர்களான லவன், குசன் இருவருக்கும் ராமாயணத்தை கற்பித்தல் (ஓவியம்: 1712) (நன்றி: British Library)

வால்மீகி (மகரிஷி, ஆதிகவி) இந்தியாவின் இதிகாசங்களில் ஒன்றான ராமாயணத்தின் ஆசிரியர். ராமாயண காவியத்தின் மூல நூலாகக் கருதப்படும் இந்நூல் சம்ஸ்கிருத மொழியில் எழுதப்பட்டது.

வாழ்க்கைக் குறிப்பு

வால்மீகி முனிவர் உத்திரப்பிரதேசம் மாநிலம் கான்பூரில் கங்கையாறு ஓடும் பித்தூரில் ஆசிரமம் அமைத்து வாழ்ந்ததாக நம்பிக்கை உள்ளது. வால்மீகி வேடர் குலத்தைச் சேர்ந்தவர். வால்மீகியும் ரகு குலத்தைச் சேர்ந்த மன்னன் ராமனும் ஒரே காலகட்டத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என அறிஞர்கள் கருதினர். வால்மீகியின் ஆசிரமத்தில் சீதையின் இரு புதல்வர்களான லவனும், குசனும் பிறந்தனர் என்றும் இவர்களுக்கு வால்மீகி ராமாயணக் கதையைச் சொன்னார் என்றும் நம்பிக்கை உள்ளது.

வால்மீகி பற்றிய குறிப்பு மகாபாரதத்திலும் உள்ளது. இந்திரனின் அரண்மனையில் இருந்த புலவராக, ஹஸ்தினாபுரிக்கு பாண்டவர்களுக்காக தூது சென்ற ஸ்ரீ கிருஷ்ணரை வழியில் சந்திப்பவராக, யுதிஷ்டிரருக்கு சிவனை வழிபடுவதிலுள்ள நன்மையை எடுத்துரைப்பவராக மகாபாரதத்தில் வருகிறார். சாத்யகி மகாபாரதத்தில் பூரிசிரவஸைக் கொன்றபின் வால்மீகியின் கவிதை ஒன்றைச் சொல்வதாக உள்ளது.

தொன்மம்

வால்மீகி கஞ்சுகன் என்ற பறவையைக் கொன்ற வேடனை பார்த்தல், பிரம்மாவிடமிருந்து ராமாயணம் இயற்றுவதற்கான அருளைப் பெறல் (ஓவியம்: 1712) (நன்றி: British Library)

வால்மீகி வருணனின் பத்தாவது மகன். வருணன் ஒரு முறை தன் மகனுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது நாராயண நாமத்தைச் சொல்லிக் கொண்டு நாரதர் வருவதைக் கவனிக்காமல் இருந்தார். நாராயணன் நாமத்தைக் கவனிக்காததால் கோபமடைந்த நாரதர் வருணன் மகனை விட்டுப் பிரியட்டும் என சாபமிட்டார். தன்னை மன்னிக்கும்படியும், சாபவிமோசனம் தரும்படியும் கேட்ட வருணனுக்கு அவரின் குழந்தை பூலோகத்தில் பிறந்து விஷ்ணுவின் அவதாரப் புராணத்தை இதிகாசமாகப் படைக்கும் என்று வரம் அளித்தார். அக்குழந்தையே வால்மீகியாக பூமியில் பிறந்தது.

மகரிஷி கஷ்யபர் அதிதி தம்பதியருக்கு ஒன்பதாவது குழந்தையாக வருண் பிரசேதஸ் என்பவர் பிறந்தார். அந்த வருண் பிரசேதஸிற்கு ரிக்ஷன் என்கிற ரத்னாகர் பத்தாவது குழந்தையாகப் பிறந்தார். ரத்னாகர் தனது மிகவும் ஏழ்மையான குடும்பத்தைக் காப்பாற்றும் பொருட்டு திருட ஆரம்பித்தான். காட்டு வழியில் வருபவர்களிடம் கத்தியைக் காட்டி மிரட்டி கொள்ளை அடித்தான். அந்த நேரத்தில் முனிவர் உருவில் இருந்த நாரதரைச் சந்தித்தான். அவரிடம் திருட முயன்ற அவனுக்கு நாரதர் பாவத்தைப் பற்றியும், இறப்பிற்குப் பின் இருக்கும் நரகத்தைப் பற்றியும் எடுத்துக் கூறினார். ரத்னாகர் தன் மனைவி, குழந்தைகளுக்காக திருடுவதாகச் சொன்னபோது நாரதர் அவனின் பாவங்களில் அவர்கள் பங்கேற்பார்களா என்று அவர்களிடமே கேட்டு வரச் சொன்னார். அவன் வரும் வரை முனிவர் தன்னைக் கட்டி வைத்துச் செல்ல அனுமதித்தார். ரத்னாகர் வீட்டுக்குச் சென்று மனைவி குழந்தைகளிடம் கேட்ட போது அவர்கள் அவன் பாவத்தை ஏற்கவும், பங்கிட்டுக் கொள்ளவும் மறுத்தார்கள். இந்த நிகழ்வுக்குப் பின் ரத்னாகர் நாரதரைப் பணிந்து பாவத்திலிருந்து விடுபட வழி கேட்டபோது அவருக்கு நாரதர் ராம நாமத்தை உபதேசித்தார். அவனுக்கு அது புரியாததால் அவனிடம் அங்கிருந்த மராமரத்தை சுட்டிக்காட்டி அதன் பெயரை சொல்லச் சொன்னார். பசி தாகத்தை மறந்து அந்த நாமத்தை தியானிக்க ஆரம்பித்தான். அவனைச் சுற்றி வெள்ளை எறும்புகள் புற்று கட்டியதை கூட அறியாமல் ராம நாமத்தை ஜெபித்தபடி இருந்தான்.

சில காலம் கழித்து சப்தரிஷிகள் அந்தப் பக்கம் வந்தார்கள். அங்கே ராம நாம ஜபம் ஒரு புற்றுக்குள்ளிருந்து ஒலித்துக் கொண்டிருப்பதைக் கேட்டு அதற்குள் இருப்பவரை தங்களின் ஞானக்கண்ணால் பார்த்து வால்மீகி என்று அழைத்தனர். சமஸ்கிருதத்தில் வால்மீகி என்றால் புற்றுக்குள்ளிருப்பவன் என்று பெயர். அவர்களின் அழைப்பினால் தவம் கலைந்து புற்றிலிருந்து ரத்னாகர் வால்மீகியாக வெளியே வந்தார். அவர்கள் வால்மீகியை ஆசீர்வதித்தனர். அவருக்கு சிஷ்யர்கள் அமைந்தனர். வால்மீகி தன் ஞான திருஷ்டியில் ராமனைக் கண்டார்.

ஒரு நாள் நாரதர் அவரது ஆசிரமத்திற்கு வந்தபோது தன் ஞான திருஷ்டியில் கண்ட மனிதனை பற்றி நாரதரிடம் கேட்டார் வால்மீகி. இக்ஷ்வாகு வம்சத்தில் வந்த தசரத மன்னனின் குமாரர் ராமரைப் பற்றி நாரதர் எடுத்துரைத்தார். ராம சரித்திரத்தை சுருக்கமாக நூறு சுலோகங்களில் நாரதர் உபதேசித்தார். இது ஸங்க்ஷேப இராமாயணம் எனப்படும். இதுவே வால்மீகி ராமாயணத்தின் முதல் சர்கம்.

ஒரு நாள் வால்மீகி முனிவர் தமஸா நதியில் குளிக்க செல்கிறார். அப்போது அங்கு இரண்டு அன்றில் பறவைகள் மகிழ்ச்சியுடன் விளையாடிக் கொண்டிருந்தன. அப்போது வேடன் ஒருவன் அம்பால் ஒரு அன்றில் பறவையை அடித்தான். ஒரு பறவை இறந்தவுடன் இன்னொரு பறவை தன்னுடைய ஜோடி பறவை இறந்த துக்கத்தில் ஓலமிட்டது. பறவையின் துக்கத்தை கண்ட வால்மீகி தன் ஞான திருஷ்டியில் கண்ட ராமனும் இப்படி தானே சீதையை பிரிந்து துக்கப்பட்டிருப்பான் என்று எண்ணி திரேதாயுக விஷ்ணுவின் அவதாரமான ராமாயண இதிகாசத்தை 24000 சுலோகங்கள் கொண்டதாக முழுமையாக இயற்றினார். 'யோக வாசிஷ்டம்', 'அத்புத ராமாயணம்', 'கங்காஷ்டகம்' ஆகிய நூல்களும் இவரால் இயற்றப்பட்டவையே என்பர்.

இலக்கிய வாழ்க்கை

வால்மீகி ராமாயணம் என்ற இதிகாசத்தை சம்ஸ்கிருத மொழியில் எழுதினார். ராமாயணத்தின் மூல நூலாக இது உள்ளது. ராமாயணம் எழுதப்படுவதற்கு முன்பாகவே வாய்மொழியாக அவை நாட்டார் வழக்காக இருந்ததாக அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். வால்மீகி ராமாயணத்தை மூல நூலாகக் கொண்டு பல்வேறு காலகட்டங்களில் ராமாயணம் எழுதப்பட்டது.

பிற
  • சம்ஸ்கிருதத்தில் ராமாயணத்தை எழுதிய மூவர் வால்மீகி, வசிஷ்டர், வியாசர் ஆகியோர். இம்மூவரின் முந்தையவர் வால்மீகி.
  • போதாயனர் எழுதியது போதாயன ராமாயணம்.
  • பொ.யு. 13 அல்லது 15-ம் நூற்றாண்டில் வாழ்ந்த ராமானந்தர்/ ராமசர்மா என்பவர் சம்ஸ்கிருதத்தில் எழுதிய ராமாயணம் அத்யாத்ம ராமாயணம் என அழைக்கப்பட்டது.
  • பொ.யு. 12-ம் நூற்றாண்டில் கம்பர் என்ற தமிழ்க் கவிஞர் வால்மீகி எழுதிய ராமாயணத்தைத் தழுவி தமிழில் ராமாவதாரம் எழுதினார். இது கம்பராமாயணம் என அழைக்கப்பட்டது.

இலக்கிய இடம்

இந்தியாவில் தோன்றிய இரு இதிகாசங்களில் முதன்மையானது ராமாயணம். மற்றொரு இதிகாசம் மகாபாரதம். இந்திய தத்துவ சிந்தனை மரபை அறியப் பயன்படும் புனைவு நூல்.

வழிபாடு

அஷ்வினி(ஐப்பசி) மாதத்தின் முழு நிலவு நாளில் வால்மீகி ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.

பல முனிவர்கள் வால்மீகி என்கிற இதே பெயரில் இருந்து சித்தி அடைந்திருக்கிறார்கள். எட்டுகுடியில் ஒரு வால்மீகியின் சமாதி இருக்கிறது. அவர் எழுதிய பாடல்கள் மூலம் அவர் பிற்காலத்தவர் என்று தெரிந்து கொள்ளலாம். திருவாரூர், சங்கரன்கோவில், குடவாசல், திருவெற்றியூர், காஞ்சீபுரம் இப்படிப் பல கோவில்களில் வால்மீகநாதர் சந்நிதியும் வேறுபாடான திரு உருவங்களும் காணப்படுகின்றன.

நூல் பட்டியல்

  • ராமாயணம்

இணைப்புகள்

உசாத்துணை

‎


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 30-Jul-2025, 19:02:12 IST