under review

ச.விஸ்வநாதன்

From Tamil Wiki

To read the article in English: S. Viswanathan. ‎

விஸ்வநாதன்

ச. விஸ்வநாதன் (24 செப்டம்பர் 1955) மலேசியாவைச் சேர்ந்த நாடகாசிரியர், எழுத்தாளர்.

பிறப்பு, கல்வி

ச. விஸ்வநாதன் 24 செப்டம்பர் 1955 அன்று கோலாலம்பூரில் மலையாளக் குடும்பத்தில், சங்குன்னி, ஜானகி தம்பதியினருக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தார். தன்னுடைய மூன்றாவது வயதில் தந்தையின் பூர்வீக இடமான பாலக்காட்டுக்குத் திரும்பி சில ஆண்டுகள் அங்கு இருந்தார். பின்னர், மலேசியாவுக்குத் திரும்பி பந்திங் நகரின் அருகில் இருந்த மெத்தடிஸ்ட் ஆங்கிலத் தொடக்கப் பள்ளியில் 1962-ம் ஆண்டு முதல் 1967 வரை பயின்று தொடக்கக்கல்வியை நிறைவு செய்தார். அதன் பின், மெத்தடிஸ்ட் ஆங்கில இடைநிலைப்பள்ளியில் 1968 முதல் 1972 வரையில் இடைநிலைக்கல்வியை நிறைவு செய்தார். ஆங்கிலப்பள்ளிகளில் நடக்கும் தாய்மொழிக் கல்விக்கான குறுகிய பாடநேரத்திலே தமிழ்மொழியைத் தம்முடைய சொந்த முயற்சியில் கற்கத் தொடங்கினார் விஸ்வநாதன். 1976-ம் ஆண்டு முதல் தொடங்கி 1978 வரையில் ஸ்ரீ கோத்தா ஆசிரியர் பயிற்சிக்கல்லூரி நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட விடுமுறைக்கால ஆசிரியர் பயிற்சியைப் பெற்றார்.

குடும்பம், தொழில்

திருமணம்

1981-ம் ஆண்டு விமலாதேவியை மணம் புரிந்தார். இவருக்கு 1 ஆண் 2 மகள்கள் இருக்கின்றனர்.

ஆசிரியர் பணி

மெத்தடிஸ்ட் ஆங்கில இடைநிலைப்பள்ளியிலே தற்காலிக ஆசிரியராக 1973 ஆண்டு முதல் 1975 வரை பணியாற்றினார். 1976 முதல் 1978 வரையில் புக்கிட் ஜாலில் தமிழ்ப்பள்ளியில் தற்காலிக ஆசிரியராகவும் 1979-ம் ஆண்டு முதல் 1989 ஆண்டு வரையில் அதே பள்ளியில் நிரந்தர ஆசிரியராகவும் பணியாற்றினார். 1989-ம் ஆண்டு முதல் 1997 வரையில் எடின்பெர்க் தமிழ்ப்பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார். 1997 முதல் 2002 வரையில் புக்கிட் ஜாலில் தமிழ்ப்பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார். 2004 முதல் 2015 வரையில் குவாங் தமிழ்ப்பள்ளியில் மாணவர் நலப்பிரிவு துணைத்தலைமை ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றார்.

இலக்கிய வாழ்க்கை

வாசிப்பு

ச. விஸ்வநாதனின் தந்தை சிறுவயதில் மகாபாரதம், ராமாயணம் ஆகிய இலக்கியங்களை நடித்துக் காட்டிக் கதையாகச் சொல்வார். விஸ்வநாதன் தொடக்கப்பள்ளியில் எனிட் பிளைட்டன் போன்ற ஆங்கில சிறுவர் நாவலாசிரியர்களின் கதைகளை வாசிக்கத் தொடங்கினார். தொடர்ந்து டாக்டர் ஷிவாகோ, போரும் அமைதியும் போன்ற ரஷ்ய இலக்கியத்தின் சிறந்த படைப்புகளை வாசித்தார்.

ச. விஸ்வநாதன் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றும் போது, மாணவர்களைக் கதை, கட்டுரை, நாடகப் போட்டிகள் போன்றவற்றுக்குப் பயிற்றுவிக்கத் தொடங்கினார். தொடக்கப்பள்ளிகளுக்கான ஆறாம் ஆண்டு தேர்வான யூ.பி.எஸ்.ஆர் தமிழ்மொழித் தேர்வுத்தாளின் படைப்பிலக்கியப் பகுதியில் கதைகள் எழுத அழைக்கப்பட்டார். 1991 முதல் 2015 வரையில் தொடர்ந்து பல்லாண்டுகள் தேர்வுத்தாளில் இவரின் கதைகள் இடம்பெற்றிருக்கின்றன.

சிறுவர் நாவல்
விஸ்வா
விஸ்வநாதன்

ச. விஸ்வநாதன் 2019-ம் ஆண்டு மலேசிய அரசுத் தேர்வுதாட்களில் சிறுவர் இலக்கியம் அங்கம் பெற பெரும் முயற்சி எடுத்தார். மலேசியத் தேர்வுத்தாள் வாரிய முன்னாள் உறுப்பினர் பி.எம்.மூர்த்தியுடன் இணைந்து சிறுவர் நாவல் தொடர் ஒன்றை எழுதத் தொடங்கினார். மலேசியச் சூழலைப் பிரதிபலிக்கும் வண்ணம் 14 மாநிலங்களைக் கதைப் பின்னணியாகக் கொண்டு பல்லின, பல மொழி பேசும் சிறுவர்களைக் கதைமாந்தர்களாகக் கொண்டு சிறுவர்களே கதைப்போக்கை நகர்த்துவதாய் அமைந்த நாவல் தொடரின் முதல் நாவலான முதல் பயணம் நாவலை வெளியீட்டார்.

visva
பொன்னியின் செல்வன் நாடக இயக்குநர்
நாடகம்

விஸ்வநாதன், ஆங்கிலத் தொடக்கப்பள்ளியில் பயிலும் போது கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது நடக்கும் இசைநாடகங்களில் ஆர்வத்துடன் பங்கேற்றார். அதன் பின்னர், 1985-ம் ஆண்டு மலேசியத் தமிழர் கலைமன்றத்தில் இணைந்தார். அவ்வியக்கம் ஏற்பாடு செய்த பல மேடைநாடகங்களில் முன்னணிப் பாத்திரமேற்று நடித்தார்.

2015-ம் ஆண்டு மலேசியத் தமிழர் கலைமன்றமும் டான்ஸ்ரீ சோமா தமிழ் அறவாரியமும் இணைந்து முன்னெடுத்த பொன்னியின் செல்வன் நாடகப் பணிக்கும் முழுநாடகத்தையும் வசனங்களையும் எழுதிக் கொடுத்தார். ச. விஸ்வநாதன் ஈராண்டுகள் பெரும் முயற்சிக்குப் பின் 2017-ம் ஆண்டு 48 கலைஞர்களைக் கொண்டு பொன்னியில் செல்வன் நாவலை மூன்று மணி நேர நாடகமாக கோலாலம்பூர் தோட்ட மாளிகை மண்டபத்தில் அரங்கேற்றினார். அதன் பின்னர், மெந்தகாப், கூலிம் ஆகிய பகுதிகளிலும் ‘பொன்னியின் செல்வன்’ நாடகத்தை அரங்கேற்றம் செய்தார். தொடர்ந்து, மலேசியாவில் மரபான மேடை நாடகங்களை இயக்கி அரங்கேற்றும் மலேசியக் கலைமன்றத்தில் துணைத்தலைவராகவும் செயற்பட்டு வருகிறார்.

விஸ்வநாதன்

பங்களிப்பு

விஸ்வநாதன் மலேசியாவில் சிறுவர்களுக்கான இலக்கியம் வளர இடைவிடாது சிறுவர்களின் உலகை மையப்படுத்திய சிறுகதைகளையும் நாவல்களையும் எழுதி வருகிறார்.

படைப்புகள்

  • முதல் பயணம் – 2020

உசாத்துணை

  • முதல்பயணம், 2020 பி.எம்.எம் பதிப்பகம்


✅Finalised Page