under review

கோ. சாரங்கபாணி

From Tamil Wiki

To read the article in English: G. Sarangapani. ‎

கோ.சாரங்கபாணி.jpg

கோ. சாரங்கபாணி (சாரங்கபாணி கோவிந்தசாமி) (ஏப்ரல் 20, 1903 - மார்ச் 16, 1974) சிங்கப்பூரின் சமூகத் தலைவர். பத்திரிகையாளர், எழுத்தாளர், செயல்பாட்டாளார் என அறியப்பட்டவர். மலேசியாவும் சிங்கப்பூரும் 'மலாயா' என்று ஒரே நாடாக இருந்த காலத்தில், இங்கு வாழ்ந்த இந்திய சமூகத்தின் முன்னேற்றத்திற்காகவும் ஒருமைப்பாட்டுக்காகவும் 40 ஆண்டு காலத்துக்கும் மேலாகப் பாடுபட்டவர். மலாயாவில் நவீனத் தமிழ் இலக்கியம் தழைக்கவும் தமிழ்ப் பண்பாட்டு வேர்களை உருவாக்கவும் வித்திட்டவர்களில் முதன்மையானவர். தமிழ் மக்களின் மொழியையும் பண்பாட்டையும் போற்றி வளர்க்க அவர் ஆரம்பித்த தமிழர் திருநாள் கொண்டாட்டம், மலேசியா, சிங்கப்பூரில் இந்தியக் கலையும் தமிழ் இலக்கியமும் வளர வழிகோலியது. அவர் தொடங்கிய தமிழ் முரசை சமூக மேம்பாட்டுக்கான ஊடகமாக பயன்படுத்தினார்.

தனி வாழ்க்கை

கோ.சாரங்கபாணி தமிழகத்தின் திருவாரூரில் ஏப்ரல் 20, 1903 அன்று பிறந்தார். தமிழ் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் சிறந்து விளங்கினார். திருவாரூர் உயர்நிலைப்பள்ளியில் இறுதி நிலைக் கல்வித் தேர்ச்சியடைந்தார். 1924-ல் தமது இருப்பதோராவது வயதில் பிழைப்புத் தேடி சிங்கப்பூர் வந்தார். அப்போது அவரிடம் இரண்டு வேட்டியும் இரண்டு சட்டையும் மட்டுமே இருந்ததாக அவரது மகள் ராஜம் நேர்காணல் ஒன்றில் குறிப்பிடுகிறார். சிங்கப்பூரில் பெரும் வர்த்தகரான மார்க்கட் ஸ்ட்ரீட் ப. இப்ராகிம்ஷா கடையில் கணக்கராக வாழ்க்கையைத் தொடங்கியதாகவும் உழைப்பாலும் திறமையாலும் வெகுவிரைவில் நிர்வாகியாக உயர்ந்ததாகவும் அவர் குறித்த எழுதப்பட்டுள்ள நூல்கள் தெரிவிக்கின்றன.

கணக்காளராகவும் நிர்வாகியாகவும் இருந்த கோ.சாரங்கபாணி 1930-க்குச் சற்று முன்னரே அசோகா டிரேடிங் கம்பெனி என்ற பெயரில் சிலிகி ரோடில் ஒரு நிறுவனத்தை அமைத்து, அப்போது மிகவும் பிரபலமாகத் திகழ்ந்த ஊக்க மருந்துகளையும் டானிக்குகளையும் இறக்குமதி செய்து விற்றதுடன் புத்தக விற்பனை நடத்தி, அச்சு வேலைகளுக்கு ஏஜண்ட்டாகவும் இருந்து தொழில் நடத்தியிருக்கிறார். 1933-ல் சிலிகி ரோடில் இயங்கிய 'ஸ்டார் பிரஸ்’ என்ற அச்சுக்கூடத்தை வாங்கினார்.

1937-ம் ஆண்டு சிங்கப்பூரின் சீனப் பெண்ணான லிம் பூன் நியோவை (Lim Boon Neo) மணந்தார். அவரது திருமண செய்தியை தனது நெருங்கிய நண்பர்களிடமும் அவர் தெரிவிக்கவில்லை. இத்தம்பதியருக்கு ராஜாராம், ஜானகிராம், ஜெயராம், பலராம் ஆகிய நான்கு மகன்களும் ராதா, ராஜம் ஆகிய இரண்டு மகள்களும் என ஆறு பிள்ளைகள். பல ஆண்டுகள் சமூகத் தொண்டாற்றிய கோ.சாரங்கபாணி மார்ச் 16, 1974 திகதி அதிகாலை 4.00 மணிக்குச் சிங்கப்பூர் பொது மருத்துவமனையில், 71-வது வயதில் காலமானார்.

இலக்கிய வாழ்க்கை

கோ.சாரங்கபாணி கட்டுரையாளராகவே அறியப்படுகிறார். அவர் புனைவு முயற்சிகளில் இறங்கியதில்லை என முனைவர் சிவகுமாரன் தன் ஆய்வில் குறிப்பிடுகிறார். எனினும் சிங்கப்பூர், மலேசியாவில் கலை, இலக்கிய வளர்ச்சியில் முக்கிய பங்காற்றியுள்ளார். அவர் ஆசிரியராகவும் நிறுவனராகவும் இருந்த தமிழ் முரசு பத்திரிகை வழியாகவும் 1950-களில் மலாயாவில் தமிழ்ப் பண்பாட்டு எழுச்சியை ஏற்படுத்திய தமிழர் திருநாள் மூலமும் இதனை கோ.சாரங்கபாணி சாத்தியப்படுத்தினார். தமிழ் முரசு மூலமாக ஏராளமான மலேசிய, சிங்கப்பூர் மக்கள் சிறுகதைகள், தொடர்கதைகள், கட்டுரைகள், கவிதைகள் எழுத வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்தார். இலக்கிய விவாதங்களை தமிழ் முரசு நாளிதழில் நடக்க ஊக்குவித்தார்.

மலாயாவின் இலக்கிய ரசனை உருவாக 'ரசனை வகுப்பு' என்ற தமிழ் முரசில் வெளிவந்த பகுதி ஒரு முக்கிய காரணம். ஏப்ரல் 19, 1952-ல் சுப.நாராயணன் (கந்தசாமி வாத்தியார்) வழி அப்பகுதியை தமிழ் முரசு நாளிதழில் உருவாக்கினார் கோ.சாரங்கபாணி. சிறுகதைகளை உள்வாங்கி அறியும் நுணுக்கத்தை இந்த வகுப்பு கற்றுத்தந்தது.

மலாயாவில் தனித்த அடையாளம் கொண்ட எழுத்தாளர்கள் உருவாக மலேசியாவில் பிறந்த இளம் தலைமுறையினரால் மட்டுமே சாத்தியம் என்று உணர்ந்த கோ.சாரங்கபாணி மே 2, 1952-ல் 'மாணவர் மணி மன்றத்தை’ உருவாக்கினார். மாணவர் மணி மன்ற மலர் ஒவ்வொரு வாரம் திங்கட் கிழமையும் தமிழ் முரசு நாளிதழுடன் இணைந்து வெளிவந்தது. இம்மன்றம் தொடங்கிய ஓராண்டிலேயே 7510 உறுப்பினர்கள் அதில் இணைந்தனர். பல்வேறு படைப்புகளை எழுதினர். பல போட்டிகளில் பங்கெடுத்தனர். இந்த மன்றம் வழி உருவான ரெ.கார்த்திகேசு, சை.பீர்முகம்மது, அரு.சு.ஜீவானந்தன், மா.இளங்கண்ணன், ஐ.உலகநாதன், இராம.கண்ணபிரான், அமலதாசன், க.து.மு.இக்பால், சா.ஆ.அன்பானந்தன், சீனி நைனா முகம்மது, மு.அன்புச்செல்வன் போன்றவர்கள்தான் எழுபதுகளில் மலேசியாவில் தனித்த அடையாளத்துடன் இலக்கியம் வளர முக்கியப் பங்காற்றினர்.

இந்த மாணவர் மணி மன்றத்தின் தொடர்ச்சியாக தமிழ் இளைஞர் மணிமன்றங்கள் தோற்றம் கண்டன. மலேசியாவின் மிகப் பழமையான, முன்னணி இந்திய இளைஞர் அமைப்புகளில் ஒன்றாகத் திகழ்ந்தது.

ஜூலை 5, 1952 வை.திருநாவுக்கரசு அவர்களின் தலைமையில் எழுத்தாளர் பேரவை ஒன்றை தொடங்கினார் கோ.சாரங்கபாணி. சிதறி இருந்த படைப்பாளிகளை ஒன்றிணைக்க அவர் இம்முயற்சியை மேற்கொண்டுள்ளார் என பேரவை தொடங்கிய மறுதினமே அவர் தமிழ் முரசில் எழுதிய முன்னுரை வழி அறிய முடிகிறது. அதோடு மாதாந்திர சிறுகதைப் போட்டி, வெண்பாப் போட்டி, விருத்தப்பாப் போட்டி என ஏற்பாடு செய்து, கவர்ச்சிகரமான பரிசுகளை வழங்கி பலரையும் எழுத ஊக்குவித்தார்.

ஜனவரி 13, 1952 அவர் தொடக்கி வைத்த 'தமிழர் திருநாள்' மொழி, இலக்கியம், கலை ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து குறிப்பிடத்தக்க பண்பாட்டு நிகழ்வாக மாறியது. அதோடு தமிழ் முரசு அவ்வப்போது வெளியிட்ட ஆண்டு மலர்களில் அதிகமான புனைவிலக்கியங்களுக்குத் தரும் முக்கியத்துவம், எழுத்தாளர்களின் நூல் வெளியீடுகளுக்கு கொடுத்த ஆதரவு என மலாயாவில் நவீன இலக்கியம் வேர்விட கோ.சாரங்கபாணியின் பங்களிப்பு ஆழமானது.

1964-ல் சி.கமலநாதனின் 'கள்ள பார்ட்டுகள்' என்ற முதல் புதுக்கவிதை மலேசிய - சிங்கை நிலத்தில் இடம்பெறவும் தமிழ் முரசு நாளிதழே தொடக்கமாக இருந்தது.

ஈ.வெ.ராமசாமி அவர்களுடன்

இதழியல் துறை

சிங்கப்பூருக்கு வருவதற்கு முன்னரே தமிழகத்தில் ஈ.வே.ராமசாமி (பெரியார்) ஏற்படுத்திய சுயமரியாதை இயக்கத்தினால் ஈர்க்கப்பட்டிருந்த கோ.சாரங்கபாணி, சிங்கப்பூரில் சுயமரியாதை சிந்தனையை பரப்புவதில் முக்கிய பங்காற்றியுள்ளார்.

மே 2, 1925 அன்று ஈ.வே.ராமசாமி குடி அரசு பத்திரிகையைப் பிரசுரிக்கத் தொடங்கினார். அதற்கு சிங்கப்பூரில் விநியோகிப்பாளராக இருந்தவர் கோ.சாரங்கபாணி. தொடர்ந்து ஜனவரி 16, 1929-ம் திகதி சிங்கையில் 'முன்னேற்றம்' வார இதழ் தொடங்கப்பட்டது. அதில் கோ.சாரங்கபாணி துணையாசிரியராகப் பணியாற்றினார். 1930-ல் முன்னேற்றம் வார இதழின் ஆசிரியராகப் பொறுப்பேற்றார். டிசம்பர் 20, 1929-ம் திகதி ஈ.வே.ரா அவர்களின் முதல் மலாயா வருகையைத் தொடர்ந்து கோ.சாரங்கபாணி தமது நண்பர் அ.சி.சுப்பையா மற்றும் பலருடன் இணைந்து 1930-ல் சிங்கப்பூரில் 'தமிழர் சீர்திருத்தச் சங்கத்தை' தொடங்கினார்.

பகுத்தறிவுப் பிரசாரம், மேடை நாடகங்கள், விளையாட்டுத் துறை, தொண்டர் படை, இரவு வகுப்பு எனப் பல்வேறு துறைகளில் சங்கத்தின் நடவடிக்கைகளை விரிவாக்கினார் கோ.சாரங்கபாணி. ஜூலை 6, 1935 அன்று சனிக்கிழமை சங்கத்தின் வார இதழாக தமிழ் முரசு வெளிவரத் தொடங்கியது. தமிழர் சீர்திருத்தச் சங்க இல்லத்தில் (கிள்ளான் ரோடு) தமிழ் முரசின் முதல் இதழ் வெளியிடப்பட்டது.

ஒரு காசு விலையில் வார இதழாகத் தொடங்கப்பட்ட தமிழ் முரசு 200 இதழ்கள் விற்பனை ஆயின. ஓராண்டு காலத்துக்குள் வாரத்தில் மூன்று நாள் வெளிவரத் தொடங்கி 3,000 பிரதிகளாக விற்பனை உயர்ந்தது.

அத்துடன் தமிழறியாதவர்களுக்காக 'ரிஃபார்ம்’ (Reform) என்னும் ஆங்கில மாத இதழையும் சங்கம் வெளியிட்டது. அன்றைய சீர்திருத்தச் சங்கத்தின் செயலாளரான கோ. சாரங்கபாணி இரு இதழ்களுக்கும் ஆசிரியராகப் பணியாற்றினார். தமிழ் முரசு நாளிதழ் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னரே, 'ஸ்டார் பிரஸ்’ எனும் அச்சகத்தை தொடங்கியிருந்தது, பத்திரிகைத் துறையின் நெளிவுசுளிவுகளை அறிந்து செயல்பட அவருக்கு உதவியது.

சில வாரங்களில் தமிழ் முரசு செய்தித்தாளை கைவிட சங்கம் முடிவு செய்தபோது, மே 2, 1936 அன்று முதல் தமிழ் முரசைத் தமது பொறுப்பில் ஏற்றார் கோ.சாரங்கபாணி. மூன்று காசு விலையில் பெரிய அளவில் எட்டுப் பக்கங்களுடன் அன்று முதல் தமிழ் முரசு வெளிவரத் தொடங்கியது. டிசம்பர் 1, 1937-ல் தமிழ் முரசு நாளிதழாகியது.

இந்திய சமூகத்தின் குரலை அதிகாரவர்க்கத்துக்கு எட்டுமாறு செய்வதையும் தமிழர் அல்லாத இந்தியரை ஒன்றிணைப்பதையும் நோக்கமாகக்கொண்டு 1939-ல் 'இந்தியன் டெய்லி மெயில்’ (Indian Daily Mail) எனும் ஆங்கில நாளிதழைத் தொடங்கினார் கோ.சாரங்கபாணி. பல ஆண்டுகள் பொருளிழப்பிலேயே நடைபெற்ற அந்த ஆங்கில நாளிதழ் 1956-ல் நிறுத்தப்பட்டது.

சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் தமிழ் முரசு மிக அதிகமாக விற்பனையான நாளிதழாக 50-களிலும் 60-களிலும் ஓங்கி இருந்த காலத்தில் கோலாலம்பூரில் இருந்து 'தேச தூதன்’ எனும் மாலை நேர நாளிதழையும் சாரங்கபாணி சில ஆண்டுகள் நடத்தினார்.

சமூக செயல்பாடுகள்

கோ.சாரங்கபாணி தமிழ் முரசு நாளிதழை தன் சமூக செயல்பாட்டுக்கான ஊடகமாக பயன்படுத்திக்கொண்டார். வசதிக் குறைந்தவர்கள், விளிம்புநிலையில் உள்ளவர்கள் மீது கோ.சாரங்கபாணியின் கவனம் இருந்தது. காலனி ஆதிக்கத்தின்போது தோட்டத் தொழிலாளிகள், நாட்சம்பள ஊழியர்களின் உரிமைகளுக்காக ஆட்சியாளர்களிடமும் முதலாளிகளிடமும் பேசும் குரலாக அவர் இருந்தார்.

இந்துத் திருமணங்களைச் சட்டபூர்வமாகப் பதிவு செய்ய வேண்டும் எனும் இயக்கத்தை 1930-களிலிருந்து 1961 வரை மாதர் சாசனம் நடைமுறையாகும் வரை விடாப்பிடியாக நடத்தினார்.

இரண்டாவது உலகப் போருக்குப் பின் சிங்கப்பூரிலிருந்த 35-க்கும் மேற்பட்ட தனியார் தமிழ்ப் பள்ளிகள் செயல்பட முடியாமல் தத்தளித்தபோது, அரசாங்கத்துடன் வாதாடி அவற்றுள் 23 பள்ளிகளை அரசாங்க உதவி பெறும் பள்ளிகளாக மாற்றி நிலைபெறச் செய்தார். அவற்றை மேற்பார்வையிட 1948-ல் தமிழ்க் கல்விக் கழகத்தை அமைத்து அதனைத் தலைமை ஏற்றும் நடத்தினார்.

50-க்கும் மேற்பட்ட சிறு சிறு சங்கங்களாகச் சிதறி, செய்வதறியாது தவித்த தமிழர்களைத் தமிழ்க் கூட்டமைப்பின் கீழ் ஒன்றுபடுத்தி, ஆகஸ்ட் 1, 1951-ல் தமிழர் பிரதிநிதித்துவ சபையை உருவாக்கினார் (இதுவே பின்னர் தமிழர் பேரவை என பெயர் மாற்றம் கண்டது). சமூகத்தின் பொது நலனுக்குரிய திறமிக்கச் செயல் கருவியாக அந்த அமைப்பை அவர் பயன்படுத்தினார். இந்த மன்றம் அமைக்கப்பட்ட பிறகு அவர் உருவாக்கிய பேரியக்கமே தமிழர் திருநாள்.

தமிழர் திருநாளை, சமய பேதங்களின்றி தமிழர்களை ஒன்றிணைத்த ஒற்றுமைத் திருநாளாகத் தமிழர்களின் ஆற்றல்களை வளர்க்கும் பட்டறையாக, பயிற்சிக் களமாக, உருவாக்கினார். சிங்கப்பூரில் மூன்று நாட்கள் நடைபெற்ற தமிழர் திருநாள் நிகழ்ச்சிகள் 10,000-க்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்கும் பெருவிழாவாக இருந்துள்ளது.

தமிழ்க் கல்வியின் முன்னேற்றம், மலாயாப் பல்கலைக் கழகத்தில் இந்தியக் கல்வித்துறையின் அமைப்பு, அதற்கான தமிழ் நூல் நிலையம் ஆகியவற்றுக்கு ஆதரவு தேடிப் போராடினார் கோ.சாரங்கபாணி. தமிழர் மக்களின் உயர்வுக்கு கல்வியே ஆதாரமாக இருக்கமுடியும் என்பதில் உறுதியாக இருந்த சாரங்கபாணி, தமிழ் உயர்நிலைப் பள்ளியும் பின்னர் பல்கலைக்கழகத்தில் தமிழ்த் துறையும் வேண்டும் என்று தொடர்ந்து குரல் எழுப்பி வந்துள்ளார். அதன் பயனாக, சிங்கப்பூரின் உமறுப் புலலர் தமிழ் உயர்நிலைப் பள்ளி மார்ச் மாதம் 30, 1960 அன்று துவங்கப்பட்டது.

மலாயாப் பல்கலைக் கழக இந்திய ஆய்வியல் துறை, மலாயாப் பல்கலைக் கழக இந்திய ஆய்வியல் துறை நூலகமும் கோ.சாரங்கபாணியின் அயராத முயற்சியால் அமைக்கப்பட்டவை. மலாயாப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பிரிவும் அதன் நூலகமும் உருவாவதில் பலரும் பலவகைகளில் செயல்பட்டிருந்தாலும்கூட அக்காலப்பகுதியில் முதன்மை ஊடகமாக இருந்த தமிழ் முரசு அச்சு இதழ்வழி கோ. சாரங்கபாணி மேற்கொண்ட நடவடிக்கைகள் இந்நாட்டில் மிகப் பெரிய அதிர்வலைகளைத் தோற்றுவித்தது குறிப்பிடத்தக்கது. 'தமிழ் எங்கள் உயிர்' எனும் நிதியை உருவாக்கி மலாயா பல்கலைக்கழகத்தின் இந்தியப் பகுதியின் நூலகத்திற்கு தமிழ் புத்தங்களை வாங்க வகை செய்தார். சிங்கப்பூர் – மலேசியா இணைந்திருந்த மலாயாவில் 1949-ல் மலாயாப் பல்கைக்கழகம் தோற்றுவிக்கப்பட்டது. சமூகத்தில் தொடர் அழுத்தங்களைத் தொடர்ந்து 1956-ல் இந்திய துறை தொடங்கப்பட்டது. மலாயாவில் வாழும் இந்தியர்களில் பெரும்பான்மையினர் தமிழர்கள் என்றும் இந்தியவியல் துறையில் தமிழ் மொழி இடம்பெறு வேண்டும் என்றும் தமிழ் முரசு மூலம் தொடர்ந்து குரல் எழுப்பி, தமிழ் மக்களின் உணர்வைத் தட்டியெழுப்பி, மலாயாப் பல்கலைக்கழகத்தில் தமிழ் இடம்பெறவும் அத்துறை செயல்பட நிதிதிரட்டவும் கோ.சாரங்கபாணி அயராது முயன்றுள்ளமைக்கும் 1950-களின் தமிழ் முரசில் வெளிவந்த தலையங்கங்களும் செய்திகளும் சான்றாக உள்ளன.

கோ.சாரங்கபாணி சிங்கப்பூரில் ஆற்றிய முக்கிய சமூகப்பணிகளில் ஒன்று, இங்கு வாழ்ந்த தமிழ் மக்களை சிங்கப்பூர் குடியுரிமை பெறச் செய்தது. இங்கு வாழ்ந்த பாட்டாளி மக்கள் பலரும் இந்நாட்டுக் குடியுரிமையைப் பெறத் தயங்கியபோது, பத்திரிகையில் அதுகுறித்து எழுதியதுடன், குடியுரிமை பெறுவோருக்கு விண்ணப்பம் பூர்த்த செய்ய உதவியும் வழங்கினார்.

நினைவுகள், வாழ்க்கை வரலாறுகள்

தவத்திரு குன்றக்குடி அடிகளார் 1955-ல் கோலாலம்பூர் வந்திருந்தபோது கோ.சாரங்கபாணிக்கு "தமிழவேள்" எனும் சிறப்புப் பட்டமளித்துப் பாராட்டினார். மலாயாவில் அவரை தமிழவேள் என்றே மரியாதையுடன் குறிப்பிடுகின்றனர்.

மலாயாவில் அவர் தமிழுக்கும் தமிழ் மக்களுக்கும் ஆற்றிய அரும்பணிகளுக்காக 2003-ம் ஆண்டு நூற்றாண்டு விழா மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் கொண்டாடப்பட்டது. அவர் பெயரில் "கோ.சாரங்கபாணி கல்வி அறநிதி" அமைத்து அதற்கு 1.1 மில்லியன் சிங்கப்பூர் வெள்ளியைச் சமூகம் நன்கொடையாக அளித்தது.

மலேசியாவில் அவரைக் குறித்த மாநாடுகள் ஆய்வுகளும் நடத்தப்பட்டதுடன், கெடா மாநிலத்தில் புதிதாக 2015-ல் கட்டப்பட்ட ஒரு தமிழ்ப் பள்ளிக்கு அவரது பெயரே சூட்டப்பட்டுள்ளது.

தஞ்சை தமிழ்ப்பல்கலையில் செப்டெம்பர் 1, 2007-ல் எம்.ஏ.முஸ்தபா அறக்கொடையின் சார்பில் கோ.சாரங்கபாணி தமிழ் இருக்கை அமைக்கப்பட்டுள்ளது.

உசாத்துணை

  • கோ.சாரங்கபாணியும் தமிழ் முரசும் - ந.பாலபாஸ்கரன்
  • சிங்கப்பூர் தமிழ் படைப்பிலக்கிய வளர்ச்சியில் கோ.சாரங்கபாணியின் பங்கு - ரா.சிவகுமாரன்

இணைப்புகள்


✅Finalised Page