ஓம்படை
ஓம்படை பாடாண் திணையின் துறைகளில் ஒன்று. ஓம்படை எனில் பாதுகாப்பு என்பது பொருள். அரசனுக்கு நன்மை தருவனவற்றைக் கூறுதல் ஓம்படை. தீமை நேராமல் காக்கும் நெறிமுறைகளைக் கூறுவது.
விளக்கம்
புறப்பொருள் வெண்பாமாலை
புறப்பொருள் வெண்பாமாலையின் கொளு ஓம்படையின் இலக்கணத்தை
இன்னது செய்தல் இயல்பென இறைவன்
முன்னின்(று) அறிவன் மொழிதொடர்ந் தன்று (கொளு.37)
என வகுக்கிறது. சான்றோர் அரசன் முன்னே நின்று இன்ன செயலைச் செய்தல் அரசர்க்கு இயல்பாகும் என்று மெய்ம்மொழியினைச் சொல்லுதல்' என்பது பொருள்.
ஒன்றில் இரண்(டு) ஆய்ந்து மூன்(று)அடக்கி நான்கினால்
வென்று களம்கொண்ட வேல்வேந்தே - சென்று(உ)லாம்
ஆழ்கடல் சூழ் வையகத்துள் ஐந்துவென்று ஆறுஅகற்றி
ஏழ் கடிந்து இன்புற்(று) இரு
"மெய்யறிவு ஒன்றினால் நன்மை தீமை இரண்டையும் ஆய்ந்து, பகை நட்பு நொதுமல் (உதாசீனம்) என்ற முப்பகுதியையும் கண்டு, தன் நால்வகைப் படையாலே வென்று போர்க்களத்தைத் தனதாக்கிக் கொண்ட வேல் வேந்தனை, இவ்வுலகில் ஐம்பொறிகளையும் அறிவால் வென்று படை, குடி, கூழ், அமைச்சு, நட்பு, அரண் என்ற ஆறு உறுப்புகளையும் பெருக்கி, வேட்டம் (பேராசை), கடுஞ்சொல், மிகுதண்டம் (அளவுக்கு மீறிய தண்டனை), சூது, பொருளீட்டம் (பொருள் சேர்த்தல்), கள், காமம் என்ற ஏழு குற்றங்களையும் நீக்கி, இன்புற்றிருப்பாயாக! என்று கூறுவதை ஓம்படை என வெண்பா காட்டுகிறது.
தொல்காப்பியம்
அச்சமும் உவகையும் எச்சம் இன்றி,
நாளும் புள்ளும் பிறவற்றின் நிமித்தமும்;
காலம் கண்ணிய ஓம்படை
அச்சமோ, மகிழ்ச்சியோ இல்லாமல் நல்ல நாளோ, பறவை போன்ற சகுனமோ பார்ப்பது காலம் கண்ணிய ஓம்படை என்று இலக்கணம் கூறுகிறது.
ஓம்படைக் கிளவி
ஓம்படைக்கிளவி அகத்துறையைச் சார்ந்த ஓர் ஒழுக்க நெறி. தோழி தலைவியைப் பேணிப் பாதுகாக்கக் கூறும் சொற்களைக் குறிக்கும். ஓம்படைக்கிளவி சொல்லப்படும் முறையையும், சந்தர்ப்பங்களையும் தொல்காப்பியம் வகுக்கிறது.
கல்வெட்டுகளில் தானமாகவோ, கொடியாகவோ அளிக்கப்பட்டவற்றைக் குறிப்பிட்டு தானத்திற்கு அழிவு செய்தால் அவர்களுக்கு எவ்வித பாவம் ஏற்படும் என்பதைக் குறிப்பிடும் கல்வெட்டுப் பகுதி ஓம்படைக்கிளவி.
உசாத்துணை
ஓம்படை-தமிழ் இணைய கல்விக் கழகம்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 20-Jan-2025, 22:14:48 IST