under review

உயர்வு நவிற்சியணி

From Tamil Wiki

பாடல் பொருளை உள்ளது உள்ளபடி அழகுபடுத்திக் கூறல் தன்மை அணி. அதிசய அணி (உயர்வு நவிற்சி அணி) என்பது ஒன்றை மிகைப்படுத்திக் கூறுவது. ஒரு பொருளினது அழகையோ, சிறப்பையோ மிகவும் அதிகப்படியான கற்பனைத் திறன் கலந்து, கேட்போர் வியக்கும்படி அழகாக வர்ணித்துக்குக் கூறுவது அதிசய அணி. இவ்வணியை 'உயர்வு நவிற்சி அணி' என்று கூறுவர். உயர்வு நவிற்சி அணியின் இலக்கணத்தை தண்டியலங்காரம்

                  மனப்படும் ஒருபொருள் வனப்பு உவந்து உரைப்புழி
                  உலகுவரம்பு இறவா நிலைமைத்து ஆகி
                  ஆன்றோர் வியப்பத் தோன்றுவது அதிசயம்

என்று வகுக்கிறது.

விளக்கம்

ஒரு பொருளின் தன்மையை மிக உயர்த்திச் சொல்வது உயர்வு நவிற்சியாகும்.

மேலாடை வீழ்ந்த தெடுவென்றான் அவ்வளவில்
நாலாறு காதம் நடந்ததே - தோலாமை
மேல்கொண்டான் ஏறிவர வெம்மைக் கலிச்சூதின்
மால்கொண்டான் கோல்கொண்ட மா

ருதுபர்னன் தன் தேரை ஓட்டும் நளனிடம் கீழே விழுந்த தன் மேலாடையை எடுக்கச் சொன்னான். சொல்லி முடிப்பதற்குள் தேர் நாலாறு(24) காதம் ஓடிவிட்டிருந்தது என நளனின் தேரோட்டும் திறனை மிகைப்படுத்தி உயர்வாகக் கூறியதால் இது உயர்வு நவிற்சி அணியாகும்.

உயர்வு நவிற்சியணி ஆறு வகைப்படும்

  • பொருள் அதிசயம் (ஒரு பொருளின் இயல்பை விளக்குமாறு உயர்த்திக் கூறுவது.
  • குண அதிசயம் (ஒரு குணத்தின் இயல்பை விளக்குமாறு உயர்த்திக் கூறுவது.
  • தொழில் அதிசயம் (ஒரு தொழிலின் இயல்பை விளக்குமாறு உயர்த்திக் கூறுவது.
  • ஐய அதிசயம்
  • துணிவு அதிசயம் (ஐயம் தெளிந்து கூறுவதன் மூலம் ஒருபொருளை உயர்த்திக் கூறுவது.
  • திரிபு அதிசயம் (ஒரு பொருளை வேறுவேறு பொருளாக மாற்றி (திரிபுற்று) வியக்குமாறு உயர்த்திக் கூறுவது

எடுத்துக்காட்டுகள்

உழுந்து இட இடம் இலை உலகம் எங்கணும்,
அழுந்திய உயிர்க்கும் எலாம் அருட் கொம்பு ஆயினான்
எழுந்திலன்; எழுந்து இடைப் படரும் சேனையின்
கொழுந்து போய்க் கொடி மதில் மிதிலை கூடிற்றே

பொருள்:

இராமனின் திருமணச் செய்தியும் சனகரின் அழைப்பும் வந்து அயோத்தி மக்களும் படைகளும் மிதிலை நோக்கிச் செல்கிறார்கள். தசரத மன்னன் இன்னும் புறப்படவில்லை (தன் சேனைக்குப் பின் செல்லக் காத்திருப்பதால்). மேலிருந்து உளுந்து போட்டால், அது மண்ணில் விழா வண்ணம் நெருக்கமாகத் திரண்டிருந்த சேனையின் கொழுந்து முதல் வரிசை மிதிலையைச் சென்றடைந்துவிட்டது.

அணிப்பொருத்தம்

தசரதனின் சேனைப் பெருக்கத்தைக் கூறும் கம்பர், வரிசை அயோத்தியிலிருந்து மிதிலை வரை நீண்டதாக மிகைப்படுத்திக் கூறியதால் இது உயர்வு நவிற்சியாகிறது.

பொருள் அதிசயம்

ஒரு பொருளின் இயல்பை அதிசயம் தோன்றக் கூறுவது 'பொருள் அதிசயம்' எனப்படும்.

எடுத்துக்காட்டு

பண்டு புரம்எரித்த தீ மேல்படர்ந்து, இன்றும்
அண்ட முகடு நெருப்பு அறாது - ஒண்தளிர்க்கை
வல்லி தழுவக் குழைந்த வடமேரு
வில்லி நுதல்மேல் விழி

பொருள்:

ஒளிமிக்க தளிர் போன்ற கைகளை உடைய மலைமகள் தழுவியதால் குழைந்த திருமேனியையும், வட மேருமலையாகிய வில்லினையும், நெற்றியின் மேல் கண்ணினையும் உடைய சிவபெருமான் முன்னொரு காலத்தில் திரிபுரத்தை நகைத்து எரித்த தீயானது மென்மேலும் படர்ந்து ஓடுதலால், இன்றும் அண்டத்து உச்சியில் நெருப்பு நீங்காமல் உள்ளது.

அணிப் பொருத்தம்:

இப்பாடலில் கூறப்படும் பொருள் 'திரிபுரத்தை எரித்த தீ' ஆகும். சிவபெருமான் நகையிலிருந்து புறப்பட்ட தீயானது இன்றும் அண்டமுகட்டில் அணையாமல் உள்ளது என்று யாவரும் வியக்கும்படி கூறியதால் இப்பாடல் பொருள் அதிசயம் ஆயிற்று.

திரிபு அதிசயம்

ஒப்புமையாலே ஒரு பொருள் மற்றொரு பொருள் போலத் தோன்றுவது திரிபு அதிசயம் அல்லது மயக்க அணியாகும்

எடுத்துக்காட்டு

வழகிதழ்க் காந்தள்மேல் வண்டிருப்ப ஒண்தீ
முழுகியதென் றஞ்சிமுது மந்தி பழகி
எழுந்தெழுந்து கைநெரிக்கும் ஈங்கோயே திங்கட்
கொழுந்தெழுந்த செஞ்சடையான் குன்று.

பொருள்: திருஈங்கோய்மலையில் வழுவழுப்பான இதழ்களுடன் அழகிய செங்காந்தள் மலர்கள் மலர்ந்துள்ளன. காந்தள் மலர்களை நாடி வண்டினம் தேன் சேகரிக்க வருகிறது. செங்காந்தள் மலருக்குள் வண்டுகள் செல்வதைக்கண்ட முதிய மந்தி "ஐயோ, வண்டுகள் நெருப்பில் மூழ்கி விட்டனவே” என்று கைகளை நெறித்துக்கொள்கிறது.

அணிப்பொருத்தம்

இப்பாடலில் பயின்று வருவது மயக்க அணி அல்லது திரிபு அதிசயம். இங்கு குரங்கு காந்தளை நெருப்பாகக் கருதி மயங்கியது.

உசாத்துணை

உயர்வு நவிற்சி-தமிழ் இணைய கல்விக்கழகம்



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Dec-2022, 09:10:17 IST