under review

தன்மை நவிற்சி அணி (இயல்பு நவிற்சி)

From Tamil Wiki

ஒரு பொருளின் தன்மையையோ, நிகழ்வையோ அல்லது உணர்வுகளையோ உள்ளது உள்ளவாறு கூறுவது தன்மை நவிற்சி அணி அல்லது இயல்பு நவிற்சி அணியாகும். இது தன்மை அணி எனவும் வழங்கப்படுகிறது. இதன் தன்மைகள்

  • உள்ளதை உள்ளபடி இயல்பாகக் கூறல்ல
  • உயர்வு நவிற்சி இன்மை
  • உவமையோ உருவகமோ இன்மை
  • இயல்பான அழகு காணப்படுதல்

எவ்வகைப் பொருளும் மெய்வகை விளக்கும் சொல்முறை தொடுப்பது தன்மை ஆகும்-தண்டியலங்காரம்

எடுத்துக்காட்டுகள்

எடுத்துக்காட்டு-1

தோயும் வெண்டயிர் மத்தொலி துள்ளவும்
ஆய வெள்வளை வாடய்விட் டரற்றவும்
தேயும் நுண்ணிடை சென்று வணங்கவும்
ஆய மங்கையர் அங்கை வருந்துவார்.

பொருள்- தோய்ந்துள்ள வெண்மையான தயிரைக் கடைகின்ற மத்தின் ஓசை விட்டுவிட்டு ஒலிக்கவும்,தம் கைகளில் அணிந்துள்ள நுட்பமான வேலைப்பாடுடைய வெண்ணிறச் சங்கு வளையல்கள் வாய்திறந்து கத்துவதுபோல ஒலிக்கவும், மெலிந்த சிறிய இடை முன்புறமாக வளையவும் ஆயர் மகளிர் அழகிய கைகள் வருந்தும்படி கடைவார்கள்.

ஆயர் மகளிர் தயிர் கடையும் காட்சியை உள்ளது உள்ளதைப்போலவே கூறுவதால் தன்மை நவிற்சியாகிறது.

எடுத்துக்காட்டு-2 சிலப்பதிகாரம்

மெய்யில் பொடியும் விரித்த கருங்குழலும்
கையில் தனிச் சிலம்பும் கண்ணீரும் வையைக் கோன்
கண்டளவே தோற்றான், அக்காரிகைதன் சொற்செவியில்
உண்டளவே தோற்றான் உயிர் '- (வழக்குரை காதை வெண்பா)

உடம்பு முழுக்கத் தூசியும்,விரித்த கருங்குழலும் ,கையிலே ஒற்றைச் சிலம்பும், கண்ணீருமாக கண்ணகி பாண்டியன் அவைக்கு வந்த கோலத்தை இயல்பாக மிகைப்படுத்தல் இல்லாமல் அழகுறக் கூறுவதால் இது இயல்பு நவிற்சியாகிறது.

எடுத்துக்காட்டு-3 கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை

தோட்டத்தில் மேயுது வெள்ளைப்பசு - அங்கே
துள்ளிக் குதிக்குது கன்றுக்குட்டி
அம்மா என்குது வெள்ளைப்பசு - உடன்
அண்டையில் ஓடுது கன்றுக்குட்டி
நாவால் நக்குது வெள்ளைப்பசு - பாலை
நன்றாய்க் குடிக்குது கன்றுக்குட்டி.

பசுவையும் கன்றையும் இயல்பாக, அழகாக விவரிப்பதால் இது தன்மை நவிற்சி அணியாகிறது

உசாத்துணை

தமிழ் இணையக் கல்விக் கழகம்


✅Finalised Page