under review

இந்து மதாபிமான சங்கம்

From Tamil Wiki
ஹிந்து மதாபிமான சங்கம்
ஹிந்து மதாபிமான சங்கம்: படம் நன்றி: பழ. கைலாஷ்

இந்து மதாபிமான சங்கம் (ஹிந்து மதாபிமான சங்கம்) (செப்டம்பர் 10, 1917 ) காரைக்குடியில் திருவாசக மடத்தில் உள்ள தொன்மையான பண்பாட்டு நிறுவனம். பாரதியார் இச்சங்கத்தை வாழ்த்திப் பாடியிருக்கிறார்.

தொடக்கம்

இதழாளர், சமூக சீர்த்திருத்தவாதி சொ. முருகப்பா, எழுத்தாளர், சொற்பொழிவாளர் ராய.சொக்கலிங்கன், வை.சு.சண்முகம் செட்டியார் மற்றும் பல நண்பர்கள் இணைந்து, செப்டம்பர் 10, 1917-ல், காரைக்குடி திருவாசக மடத்தில் தோற்றுவித்த சங்கம், இந்து மதாபிமான சங்கம் (ஹிந்து மதாபிமான சங்கம்). ராய.சொக்கலிங்கம் இதன் தலைவராக இருந்தார்

சங்கத்தின் நோக்கம்

ஹிந்து மதத்தையும், தமிழையும் வளர்ப்பதுடன் நாட்டு விடுதலையையும் முக்கிய நோக்கமாகக் கொண்டு இச்சங்கம் செயல்பட்டது. 1952 முதல் காரைக்குடி சிவன் கோவில் அருகில் சொந்தக் கட்டிடத்தில் செயல்படத் தொடங்கியது.

ஹிந்து மதாபிமான சங்கத்தில் பாரதி-1
ஹிந்து மதாபிமான சங்கத்தில் பாரதி-2

செயல்பாடுகள்

தமிழ்ப்பெரும்புலவர் மு.ரா. கந்தசாமிக் கவிராயர் மறைந்தபோது அவர் திரட்டி வைத்திருந்த நூல்களை இச்சங்கம் விலை கொடுத்து வாங்கி 1918-ம் ஆண்டு அக்டோபர் 27-ம் நாள் 'விவேகானந்தா நூல் நிலையம்' என்ற பெயரில் ஒரு நூல் நிலையத்தை அமைத்தது. அந்நூலகம் இன்றுவரை செயல்பட்டு வருகிறது.

ஹிந்து மதாபிமானி இதழ்

இந்து மதாபிமான சங்கத்தின் சார்பாக ‘ஹிந்துமதாபிமானி’ என்ற இதழும் வெளியிடப்பட்டது. சொ. முருகப்பா அதன் ஆசிரியராக இருந்தார். உ.வே.சா., வ.உ. சிதம்பரம் பிள்ளை, சுப்பிரமணிய சிவா, வ.வே.சு.ஐயர், ராஜாஜி, திரு.வி.க., ஞானியார் சுவாமிகள், விபுலானந்தர், டி.கே.சி., ந.மு.வேங்கடசாமி நாட்டார், பண்டிதமணி மு. கதிரேசன் செட்டியார், ரா.பி.சேதுப்பிள்ளை, உமாமகேசுவரம் பிள்ளை, என பல தமிழறிஞர்கள், சான்றோர்கள் இந்துமதாபிமான சங்கத்துக்கு வருகை தந்து சிறப்புரையாற்றியுள்ளனர். கானாடுகாத்தான் வை.சு.சண்முகம் செட்டியார், கடையத்திலுள்ள பாரதியாருடன் கடித தொடர்பு கொண்டு கானாடுகாத்தானுக்கு அழைக்க, பாரதியும் அதனை ஏற்றுக் கொண்டார். கானாடுகாத்தானுக்கு வரும் வழியில், 1919-ம் ஆண்டு நவம்பர் 9-ம் நாள், மகாகவி பாரதியார் இந்து மதாபிமான சங்கத்துக்கு வருகை தந்தார். சங்கத்தின் மீது ஏழு கவிதைகளை இயற்றி அதன் பணிகளைப் போற்றினார்.

பாரதி தன் வாழ்நாளில் எடுத்துக்கொண்டதாகக் கிடைத்துள்ள படங்களுள் இரண்டு படங்கள், இங்கு எடுக்கப்பட்டவை.

முதல்வராக இருந்த சி.என். அண்ணாதுரை இந்து மதாபிமான சங்கத்தின் பொன்விழாவில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றி உள்ளார்.

ஹிந்து மதாபிமான சங்கத்தாரை வாழ்த்தி பாரதி பாடிய பாடல்: படம் நன்றி: பழ. கைலாஷ்

பாரதி, இந்து மதாபிமான சங்கத்தை வாழ்த்திப் பாடிய கவிதை

1919-ம் ஆண்டு நவம்பர் 9-ம் நாள், மகாகவி பாரதியார் இந்து மதாபிமான சங்கத்தை வாழ்த்திப் பாடிய கவிதை:

மண்ணுலகின் மீதினிலே எக்காலும்
அமரரைப் போல் மடிவில் லாமல்
திண்ணமுற வாழ்ந்திடலாம் அதற்குரிய
உபாயமிங்கு செப்பக் கேளீர்!
நண்ணிஎலாப் பொருளினிலும் உட்பொருளாய்ச்
செய்கைஎலாம் நடத்தும் வீறாய்த்
திண்ணியநல் அறிவொளியாய்த் திகழும் ஒரு
பரம்பொருளை அகத்திற் சேர்த்து,
செய்கைஎலாம் அதன்செய்கை, நினைவெல்லாம்
அதன்நினைவு, தெய்வ மேநாம்
உய்கைஉற நாமாகி நமக்குள்ளே
ஒளிர்வதென உறுதி கொண்டு
பொய், கயமை, சினம், சோம்பர், கவலை, மயல்,
வீண் விருப்பம், புழுக்கம், அச்சம்
ஐயம்எனும் பேயைஎலாம் ஞானம் எனும்
வாளாலே அறுத்துத் தள்ளி
எப்போதும் ஆனந்தச் சுடர் நிலையில்
வாழ்ந்து உயிர்கட்கு இனிது செய்வோர்
தப்பாதே இவ்வுலகில் அமரநிலை
பெற்றிடுவார். சதுர்வே தங்கள்
மெய்ப்பான சாத்திரங்கள் எனும் இவற்றால்
இவ்வுண்மை விளங்கக் கூறும்
துப்பான மதத்தினையே ஹிந்துமதம்
எனப்புவியோர் சொல்லு வாரே.
அருமைஉறு பொருளில்எலாம் மிக அரிதாய்த்
தனைச்சாரும் அன்பர்க் கிங்கு
பெருமைஉறு வாழ்வளிக்கும் நற்றுணையாம்
ஹிந்துமதப் பெற்றி தன்னைக்
கருதி, அதன் சொற்படி இங்கு ஒழுகாத
மக்கள்எலாம் கவலை என்னும்
ஒருநரகக் குழியதனில் வீழ்ந்துதவித்து
அழிகின்றார் ஓய்வி லாமே.
இத்தகைய துயர்நீக்கிக் கிருதயுகம்
தனை, உலகில் இசைக்க வல்ல
புத்தமுதாம் ஹிந்துமதப் பெருமைதனைப்
பாரறியப் புகட்டும் வண்ணம்
தத்துபுகழ் வளப்பாண்டி நாட்டினில் கா
ரைக்குடியூர் தனிலே சால
உத்தமராம் தனவணிகர் குலத்துதித்த
இளைஞர்பலர், ஊக்கம் மிக்கார்
உண்மையே தாரகம்என்று உணர்ந்திட்டார்,
அன்பொன்றே உறுதி என்பார்,
வண்மையே குலதர்மம் எனக்கொண்டார்,
தொண்டொன்றே வழியாக் கண்டார்
ஒண்மைஉயர் கடவுளிடத்து அன்புடையார்,
அவ்வன்பின் ஊற்றத் தாலே
திண்மைஉறும் ஹிந்துமத அபிமான
சங்கமொன்று சேர்த்திட் டாரே.
பலநூல்கள் பதிப்பித்தும், பல பெரியோர்
பிரசங்கம் பண்ணு வித்தும்
நலமுடைய கலாசாலை புத்தகசா
லைபலவும் நாட்டி யும்தம்
குலம்உயர நகர்உயர நாடுயர
உழைக்கின்றார்; கோடி மேன்மை
நிலவுறஇச் சங்கத்தார் பல்லூழி
வாழ்ந்துஒளிர்க நிலத்தின் மீதே.

சங்கம் இன்று

நாடு, சமயம், மொழி ஆகியவற்றின் மீதான பற்றினை இளைஞர்களிடம் வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டு செயல்பட்ட இச்சங்கம், நூறாண்டுகளைக் கடந்து இன்றும் காரைக்குடியில் செயல்பட்டு வருகிறது.

உசாத்துணை


✅Finalised Page