under review

ஹெரான் ராமசாமி

From Tamil Wiki
ஹெரான் ராமசாமி

ஹெரான் ராமசாமி (எஸ். ராமசாமி) (1933 - மார்ச் 24, 1993) நாடக, திரைப்பட நடிகர், நாடகத் தயாரிப்பாளர், இயக்குநர். தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றார்.

வாழ்க்கைக் குறிப்பு

ராமசாமி என்னும் இயற்பெயர் கொண்ட ஹெரான் ராமசாமி, 1933-ல், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஆயக்குடி கிராமத்தில், சுடலை முத்து - கருப்பாயி இணையருக்குப் பிறந்தார். ஐந்தாம் வகுப்பு வரை கல்வி கற்றார். திருமணமானவர். மனைவி: சரோஜா. மகன்கள்: முத்துராமன், முரளி. மகள்: கீதப்ரியா.

நாடக வாழ்க்கை

ராமசாமி, இளம் வயது முதலே நாடக ஆர்வம் கொண்டிருந்தார். எஸ்.வி. மனோகர் முதலியோரிடம் நாடகப்பயிற்சி பெற்றார். முதன் முதலாக 'தியாகி யார்?' என்ற சமூக நாடகத்தில் கதாநாயகியின் அண்ணனாக நடித்தார். தொடர்ந்து 1950 முதல் பல பயில் முறை நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். தமிழ்வாணன் கதை-வசனம் எழுதி, நடிகர் ஈ.ஆர். சகாதேவன் நடத்திவந்த 'புலித்தேவன்' என்ற நாடகத்தில் 'ஹெரான்' என்ற ஆங்கில துரையாகச் சிறப்பாக நடித்தார். அதனால் 'ஹெரான் ராமசாமி' என்று அழைக்கப்பட்டார்.

நாடகப் பங்களிப்புகள்

ஹெரான் ராமசாமி, தனித்துவமான குரலமைப்பு உடையவர். வசனங்களை அழுத்தம், திருத்தமாக, தெளிவாக உச்சரிக்கக் கூடியவர். அதனால் அவருக்குப் பல புராணக் கதாபாத்திரங்களிலும், வரலாற்று நாடகங்களிலும் நடிக்கும் வாய்ப்புகள் வந்தன. ஆர்.எஸ். மனோகர் நடத்திய பல புராணம் சார்ந்த நாடகங்களில் முக்கிய வேடமேற்று நடித்தார். மனோகரின் சூரபத்மன் நாடகத்தில் சுக்கிராச்சாரியார் வேடத்தில் திறம்பட நடித்து ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றார். ஹெரான் ராமசாமி மேடை நாடகங்களில் பல்வேறு பாத்திரங்களேற்று நடித்தார்.

ஹெரான் ராமசாமி, 'ஹெரான் தியேட்டர்ஸ்' என்ற நாடகக் குழுவை நிறுவினார். 'சனீஸ்வரர்', 'மாவீரன் அலெக்சாண்டர்', 'திருமலை நாயக்கர்' என பதினைந்துக்கும் மேற்பட்ட பல புராண, சமூக, வரலாற்று நாடகங்களைத் தயாரித்தார். திருமலை நாயக்கர் நாடகத்தில் திருமலை நாயக்கராக நடித்து மக்களின் பாராட்டைப் பெற்றார். பலருக்கு நடிப்புப் பயிற்சி அளித்தார். 'பண்ணோடு பிறந்து', 'அமுதும் தேனும்' என்ற இரு நாடகங்களை இயக்கினார். பல நாடகக் குழுக்களுடன் இணைந்து தமிழகம் முழுவதும் சென்று நாடகங்களில் நடித்தார். 17 வருடங்கள் தனது நாடகக் குழுவை நடத்தினார். ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட முறை மேடை நாடகங்களில் நடித்தார்.

மு. கருணாநிதி எழுதிய 'தென்பாண்டி சிங்கம்' நாடகத்தை அரங்கேற்றினார்.

ஊடகம்

ஹெரான் ராமசாமி, வானொலி, தொலைக்காட்சி நாடகங்களில் பல்வேறு வேடங்களேற்று நடித்தார். 'சனீஸ்வரர்', 'மாவீரன் அலெக்சாண்டர்', 'திருமலை நாயக்கர்' போன்ற நாடகங்கள் சென்னைத் தொலைக்காட்சியில் அகில இந்திய அளவில் ஒளிபரப்புச் செய்யப்பட்டன.

திரைப்படத்தில் ஹெரான் ராமசாமி

திரைப்படம்

ஹெரான் ராமசாமி நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் புராணக் கதாபாத்திரங்களிலும், குணச்சித்திரக் கதாபாத்திரங்களிலும் நடித்தார். கீழ்க்காணும் திரைப்படங்களில் பங்களித்தார்.

  • அக்கரைப் பச்சை (1974)
  • நவக்கிரக நாயகி (1985)
  • தராசு (1984)
  • கண்காட்சி (1971)
  • எடுப்பார் கைப்பிள்ளை (1975)
  • ஞானக்குழந்தை (1979)
  • சமயபுரத்தாளே சாட்சி (1985)
  • சிவபாலன் (1974)
  • இதயக்கனி
  • ரோசாப்பூ ரவிக்கைக்காரி
  • ஊர்க்காவலன்
  • நாயக்கரின் மகள்
  • உருவங்கள் மாறலாம்
  • ஜானகி சபதம்
  • அன்னை அபிராமி
  • கை வரிசை
  • மீனாட்சித் திருவிளையாடல்

மற்றும் பல.

விருதுகள்

  • மயிலாப்பூர் அகாடமி அளித்த சிறந்த நடிகர் விருது
  • சிறந்த நாடகத் தயாரிப்பாளருக்கான தமிழக அரசின் விருது மற்றும் கேடயம்
  • தமிழக அரசின் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் அளித்த கலைமாமணி விருது
  • நாடக பாரதி
  • நாடக வேந்தன்
  • சொற்சிலம்பர்
  • கலா பாரதி

மறைவு

ஹெரான் ராமசாமி, மார்ச் 24, 1993-ல், தனது 58-ம் வயதில் காலமானார்.

மதிப்பீடு

ஹெரான் ராமசாமி, தமிழ்நாட்டின் நாடகக் கலைஞர்களுள் ஒருவர். தனித்துவமான நடிப்புடன், திருத்தமான தமிழ் வசன உச்சரிப்போடு பல நாடகங்களில் நடித்துப் புகழ்பெற்றார். நாடகத் தயாரிப்பாளராகவும், இயக்குநராகவும் பங்களித்தார். திரைப்படங்களிலும் பல்வேறு வேடங்களேற்று நடித்தார். வரலாறு மற்றும் புராணக் கதாபாத்திரங்களை ஏற்று நடிப்பதில் வல்லவராக அறியப்பட்டார். தமிழ்நாட்டின் குறிப்பிடத்தகுந்த நாடக நடிகர்களில் ஒருவராக மதிப்பிடப்படுகிறார்.

உசாத்துணை

  • நாடகக் களஞ்சியம் தொகுதி ஒன்று, முதன்மைப் பதிப்பாசிரியர்: பேராசிரியர், முனைவர் சி. நயினார் முகம்மது, தமிழ்ப் பல்கலைக்கழகம் தஞ்சாவூர், முதல் பதிப்பு: டிசம்பர் 1994.
  • அன்று கண்ட முகம் தளக் கட்டுரை


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 24-Feb-2026, 12:30:11 IST