under review

ஹென்ரி அலெக்சன்டர் விக்ஹம்

From Tamil Wiki
ஹென்ரி அலெக்சன்டர் விக்ஹம்

ஹென்ரி அலெக்சன்டர் விக்ஹம் (Henry Alexander Wickham) (மே 29, 1846 – செப்டம்பர் 27, 1928) ஆய்வுப்பயணி, எழுத்தாளர். நவீன உலகளாவிய ரப்பர் தொழிலின் தந்தை எனக் கருதப்படுகிறார்.

பிறப்பு, கல்வி

விக்ஹம் வடக்கு லண்டன், ஹெம்ஸ்தெடில் (Hampstead) பிறந்தார். விக்ஹம் குடும்பத்தின் மூத்த மகன். விக்ஹமின் தந்தை ஒரு வழக்கறிஞர். விக்ஹமிற்கு நான்கு வயதிருக்கும்போது அவரது தந்தை காலரா தொற்றால் மரணித்தார்.

நன்றி: historyofceylontea

தொழில், திருமணம்

விக்ஹம் தொழில்முறையில் ஆய்வுப்பயணங்களை மேற்கொண்டார். விக்ஹம் தனது இருபதாம் வயதில் நிகாராகுவா, லத்தின் அமெரிக்கா, தெற்கு அமேரிக்கா ஆகிய நாடுகளுக்குப் பயணித்தார். பிரிட்டிஷ் பெண்களின் தொப்பிகளுக்காகப் பறவைகளின் இறகுகளைச் சேகரிக்க ஒன்பது மாதங்கள் செலவிட்டார். 1868-ல் விக்ஹம் ஓரினோகோ டெல்டாவில் (Orinoco Delta) பயணங்களை மேற்கொண்டார். அங்கிருந்த காட்டு ரப்பர் மரங்களைச் சீவியபடியே பயணங்களைத் தொடர்ந்தார். விக்ஹம் நெக்ரோ ஆற்றைக் கடந்து மானாசோஸ்சை (Manaos) அடைந்தார். மனாசோஸ் ஆறு அமேசான் நதியுடன் கலக்கும் துணை ஆறு. விக்ஹம் அமசோனைப் பின்தொடர்ந்து பாராவுக்குச் (Pará) சென்றார். பாராவிலிருந்து தாயகமான இங்கிலாந்து சென்றார். விக்ஹமின் அடுத்த பயணம் தபாஜோஸ் (Tapajos) ஆறும் அமேசான் நதியும் சங்கமிக்கும் சந்தாரமாக (Santarem) இருந்தது.

விக்ஹம் 1871-ல் வயலட் கார்டர் என்பவரை மணமுடித்தார். விக்ஹம் குடும்பத்துடன் சந்தாரேம், பிரேசிலுக்கு 1873 பணி மாற்றம் பெற்றார். விக்ஹம் ஆய்வு பயணங்களில் எழுதிய பயணக்கட்டுரைகளையும் ஆய்வுக் கட்டுரைகளையும் 1872-ல் அவரது மாமனார் கார்டர் (W.H.J. Carter), பிரசுரித்தார். கார்டர் புத்தக்ககடை உரிமையாளர், நூலகர். கார்டர் விக்ஹமின் அனைத்து பயணங்களுக்கும் நிதியுதவி அளித்துள்ளார். 1876-ல் அமேசோனியப் பருவநிலையால் விக்ஹமின் தாயார், தங்கை ஹரியட், தம்பி மாமியார், பதினான்கு வயது வேலைக்கார சிறுமி ஜேன் ஃபெரேட், வேலைக்காரர் ஜோர்ச் மோர்லி அனைவரும் நோய்வாய்ப்பட்டு இறந்தனர்.

ரப்பர் விதைகள் கடத்தல்

1873-ல் விக்ஹம் ரப்பர் விதைகளைப் [Hevea Brasilinisis] பெற, அமேசான் நதியின் நுழைவுத் துறைமுகமான பாராவில் உள்ள பிரிட்டிஷ் தூதரிடம் உதவி கேட்டதால் லண்டனிலுள்ள கியூ அரச தாவரவியல் தோட்டத்திற்கு (ROYAL BOTANICAL GARDEN, KEW-LONDON) ரப்பர் விதைகள் வந்து சேர்ந்தன. அதில், பன்னிரெண்டு ரப்பர் விதைகள் முளைத்து உடனே இறந்தன. விக்ஹம் 1876-ல் பிரெசிலில் ஆய்வுப்பயணத்தை மேற்கொண்டிருக்கும் போது ஒரு வருட காலம் Hevea Brasiliensis எனும் ரப்பர் விதைகளை ஆய்வு செய்து சேகரித்தார். அப்போது, உலகளாவிய ரப்பர் ஏற்றுமதியின் ஏகபோக உரிமை பிரேசிலிடம் இருந்ததால், ரப்பர் விதைகளை ஏற்றுமதி செய்வதற்கு சட்டத் தடைகள் இருந்தன. பிரெசிலின் அன்றைய ஏற்றுமதி சட்டங்களின்படி ஆய்வு மாதிரிகளில் இறந்த விலங்கு அல்லது தாவரங்கள் மட்டுமே அடங்கும். பிரெசிலின் அசல் ரப்பர் விதைகளை சாந்தாரம் பிரேசிலிருந்து (Santarém, Brazil) கியூ அரசு தாவரவியல் தோட்டத்திற்குக் கடத்த முயற்சிகளை விக்ஹம் மேற்கொண்டார். 70,000 ரப்பர் விதைகளை 'ஆய்வு மாதிரிகள்' (Academic Specimens) என்ற பெயரில் பிரிட்டனுக்குக் கப்பலேற்றினார். ஜூன் 15, 1876-ல் எழுபதாயிரம் ரப்பர் விதைகள் லண்டனின் கியூ அரசு தாவரவியல் தோட்டத்தில் இறக்குமதி செய்யப்பட்டன. பின்னர் இந்த விதைகளை பிரிட்டிஷ் சிலோன் (இலங்கை), பிரிட்டிஷ் மலாயா, சிங்கப்பூர், ஆப்ரிக்கா, இந்தியா, பதாவியா(ஜகார்த்தா, இந்தோநேசியா) ஆகிய நாடுகளுக்கு கியூ விநியோகித்து நடச்செய்தது.

கடத்தல் நடந்து முப்பது வருடங்கள் கழித்து 1908-ல் விக்ஹம் தான் எழுபதாயிரம் ரப்பர் விதைகளை 1876-ல் சந்தாரம், பிரெசிலிருந்து திருடியதாக ஒப்புக்கொள்கிறார். அந்த நேரத்தில் விதைகளை ஏற்றுமதி செய்யச் சட்டங்கள் இல்லை என்றும் தான் தவறான முறையில் ஏற்றுமதி உரிமையைப் பெற்றதாகவும் ஒப்புக்கொண்டார்.

கிழக்கில் ரப்பர் விதைகள்

1876-ல் விக்ஹம் பிரெசிலிருந்து 70,000 ரப்பர் விதைகளைக் கியூ தாவரவியல் தோட்டத்திற்குக் கப்பலேற்றினார். எழுபதாயிரம் விதைகளில் துளிர்விட்ட 2397 விதைகளில் 1700 விதைகள் இலங்கைக்கு அனுப்பப்பட்டன. 1800-ல் இலங்கையில் ஹெனெராட்கொடா தோட்டத்தில் முந்நூறு விதைகளே உயிருடன் இருந்தன. அதே சமயம் சிங்கப்பூருக்கு அனுப்பியிருந்த ஐம்பது விதைகள் இறந்திருந்தன. செப்டம்பர் 1876-ல் புதிய நூறு விதைகளை இலங்கைக்கு அனுப்பினார். அரசு தாவரவியல் தோட்டத்திற்கு விக்ஹமின் விதைகள் போதவில்லையெனக் கருதியது. அதனால், ரோபட் கிரோஸ் என்பவரை அமேசோனுக்கு அனுப்பி அங்கிருந்து விதைகளை அனுப்ப அவருக்கு கியூ கட்டளையிட்டிருந்தது.

1877-ல் கியூ தென்கிழக்காசியாவில் மூவாயிரம் விதைகளை விநியோகம் செய்திருந்தது. 1877-ல் இலங்கையிலிருந்து இருபத்திரண்டு ரப்பர் விதைகள் வெற்றிகரமாக சிங்கப்பூர் வந்து சேர்ந்தன. மலேசியாவில் நட்ட ரப்பர் மரங்களில் 75% இந்த இருபத்திரண்டு விதைகளைக்கொண்டு நட்ட மலேசியாவின் ரப்பர் மரங்களின் ஒட்டு நாற்றுகளென ஹென்ரி நிக்கோலஸ் ரிட்லி பின்னர் அறிவித்தார்.

தேசிய கண்காட்சி, கோலாலும்பூர் (நன்றி: britishmalaya.home)

முக்கியத்துவம்

விக்ஹம் பிரெசிலிருந்து கொண்டு வந்த ரப்பர் விதைகளை வெற்றிகரமாக தென்கிழக்காசிய நாடுகளான இலங்கை, இந்தியா, மலாயா, சிங்கையில் விநியோகித்தார். இதனால் தென் கிழக்காசிய நாடுகளில் ரப்பர் தோட்டங்கள் வளர்ந்தன. பத்தொன்பதாம் நூற்றாண்டில் தென்கிழக்காசிய நாடுகளின் ரப்பர் ஏற்றுமதி அமேசான் பிரெசிலின் ரப்பர் தனியுரிமையை (monopoly) முறியடித்து நிறுத்தியது. இதற்கான காரணம், பெருவிலும், பிரெசிலிலும் ரப்பர் மரங்கள் காட்டு மரங்களாக இருந்தன. தென்கிழக்காசிய நாடுகளில் ரப்பர் வணிக நோக்கத்திற்கு உகந்த முறையில் நடவு செய்யப்பட்டது. உலகளாவிய பொருளாதார வரலாற்றில் தென்கிழக்காசிய நாடுகளையும் மலேசியாவையும் உருவாக்கியதில் விக்ஹமின் பங்கு குறிப்பிடத்தக்கது. விக்ஹம், ஹென்ரி நிக்கோலஸ் ரிட்லியின் முன்னோடி.

விமர்சனங்கள்

வரலாற்றாசிரியரான வாரன் டீன் (Warren Dean) "பிரெசிலின் உள்ளூர் அதிகாரிகளின் உதவியில்லாமல் அங்குள்ள தொழிலாளிகளைக் கொண்டு பட்டப்பகலில் ஒரு பிரிட்டிஷ்காரர் விதைகளை சேகரித்திருக்கவோ, கடத்தியிருக்கவோ முடியாது. பிரெசிலின் ரப்பர் தோப்பு உரிமையாளர்களின் அனுமதியுடன்தான் விதைகளைச் சேகரித்திருக்க வேண்டும்” எனக் குறிப்பிடுகிறார்.

பெருவில் இருக்கும் Ayapua Boat பொருட்காட்சியகம் (Museo Barco Historicos) விக்ஹமின் செயலை பத்தொன்பதாம் நூற்றாண்டின் அல்லது வரலாற்றிலேயே மிகப் பெரிய 'உயிர்மைக்கடத்தல்' (the greatest act of biopiracy in the 19th century, and maybe in history) எனக் குறிப்பிடுகிறது. அதோடு, விக்ஹமின் கடத்தலுக்கு கியூ அரசு தாவரவியல் தோட்டம் பணம் வழங்கியதென்றும் குறிப்பிட்டது.

படைப்புகள்

Rough Notes of a Journey Through The Wilderness from Trinidad to Pará, Brazil,by way of the Great Cateracts of the Orinoco, Atabapo Rio Negro (1872)

ஓவியம்

விக்ஹம் வரைந்த ஓவியம்
விக்ஹம் வரைந்த ஓவியம்

விக்ஹம் இயற்கை நிலப்பரப்புக் காட்சிகளைப் படமாக வரையக்கூடியவர். அவர் கையெழுத்திட்ட ஓவியங்கள் கிடைக்கின்றன.

மரணம்

விக்ஹம் செப்டம்பர் 27, 1928-ல் பெடிங்டன், இங்கிலாந்தில் தனது 82-ம் வயதில் காலமானார்.

உசாத்துணை


✅Finalised Page