under review

ஹிண்ட்ராப்

From Tamil Wiki
270px.jpg

ஹிண்ட்ராப் (HINDRAF) என்பது மலேசியாவில் இயங்கிய இந்து உரிமைகள் போராட்டக் குழு (Hindu Rights Action Force). மலேசியாவின் முப்பது அரசு சார்பற்ற இந்து அமைப்புகளின் கூட்டணியாக ஹிண்ட்ராப் விளங்குகிறது. நவம்பர் 25, 2007-ல் இவ்வியக்கம் மலேசிய அரசாங்கத்துக்கு எதிராக முன்னெடுத்த மாபெரும் பேரணியால் ஹிண்ட்ராப் எனும் அமைப்பு உலக அளவில் அறியப்பட்டது.

பின்புலம்

HINDRAF.jpg

ஹிண்ட்ராப் குழு டிசம்பர் 2005-ல் எவரஸ்ட் வீரர் எம்.மூர்த்தியின் இறப்பு ஏற்படுத்திய தாக்கத்தில் இருந்து தொடங்கியது. எம்.மூர்த்தி இஸ்லாமியர் என உடலைப் பிடுங்கி புதைப்பதற்கு இஸ்லாமிய அமைப்பு (Jabatan Agama Islam) முயல, இந்து அமைப்புகள் அச்செயலை எதிர்த்தன. ராமாஜி அவர்களின் தலைமையில் டிசம்பர் 25 தொடங்கி டிசம்பர் 29 வரை 48 இந்து அமைப்புகளின் கூட்டமைவில் ஒவ்வொரு நாளும் நடத்தப்பட்ட சந்திப்புகள் பயனளிக்கவில்லை. இந்த 48 இந்து அமைப்புகளின் கூட்டமைப்பு ‘ஹிண்ட்ராப்’ என பெயர்கொண்டது.

இக்குழுவின் தலைவர் பி. வேதமூர்த்தி. செயலாளர் வி.கே இரகு. பி. உதயகுமார் இந்த அமைப்பின் வழக்கறிஞராகப் பங்காற்றினார். தொடக்கத்தில் இந்த அமைப்பு சிரம்பான் மாநிலத்தில் அமைக்கப்பட்டது பின்னர் இக்குழு கோலாலம்பூர் பங்சாரில் தன் நடவடிக்கைகளை மேற்கொண்டது.

நடவடிக்கைகள்

பதினெட்டு கோரிக்கைகள்

மலேசியா விடுதலை பெற்று ஐம்பது ஆண்டுகள் ஆகிவிட்டாலும், பல துறைகளில் முன்னேற்றம் அடைந்திருந்தாலும் இந்தியர்களின் வளர்ச்சி நிறைவாக இல்லை என 'ஹிண்ட்ராப்' குழு கருதியது. அதன் அடிப்படையில் மலேசிய இந்தியர்களின் வாழ்வுரிமையைக் காப்பதற்குப் பதினெட்டு கோரிக்கைகள் அடங்கிய மனுவை தயாரித்தது. அந்த மனுவின் தலைப்பு 'காலனித்துவ சாயல் அம்னோ அரசாங்கத்தால் 50 ஆண்டுகளாக ஒடுக்கப்பட்ட, ஓரங்கட்டப்பட்ட பாகுபாட்டுக் கொள்கைக்கு பலியான சமுதாயம்'. ஜூலை 28, 2007-ல் இந்த மனு தொடர்பான விளக்கக் கூட்டம் சீன அசெம்பளி மண்டபத்தில் நடைபெற்றது. இந்த பதினெட்டு கோரிக்கைகள் அடங்கிய மனு பிரதமரிடம் கொடுக்க முடிவெடுக்கப்பட்டது. மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் திரண்டு, ஆகஸ்டு 12, 2007-ல் காலை 10 மணிக்கு பிரதமரின் தனிச்செயலாளர் ஹாஜி யாக்கோப் அவர்களிடம் இந்த மனுவை புத்ராஜெயாவில் உள்ள ஶ்ரீ பெர்டானாவில் வழங்கினர்.

பதினெட்டு கோரிக்கைகள்:

1. ஐம்பது ஆண்டுகாலமாக மலேசிய அரசமைப்புச் சட்ட அத்துமீறல்களை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும்.

2. இனவாதம், இஸ்லாமிய தீவிரவாதம், மலாய்க்காரர்களுக்கு மட்டும் கொடுக்கப்படும் சிறப்புச் சலுகை ஆகியவை ஐம்பதாம் ஆண்டு தேசிய தினத்துடன் (ஆகஸ்டு 31, 2007) முடிவுக்கு வர வேண்டும்.

3. சிறுபான்மை இந்தியர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் செயல்திட்டங்களை வகுக்க வேண்டும்.

4. மலேசியாவில் உள்ள அத்தனைத் தமிழ்ப்பள்ளிகளும் முழு அரசு உதவுபெறும் பள்ளிகளாக மாற்றம் காண வேண்டும். 523 பள்ளிகளைச் சீரமைப்பதோடு ஏற்கனவே மூடப்பட்ட 300 பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும்.

5. மலாய் முஸ்லிம்களுக்காக உருவாக்கப்படும் செயல்திட்டங்கள், மேற்கல்வி வாய்ப்புகள் இந்தியர்களுக்கும் வழங்கப்பட வேண்டும்.

6. மலாய் முஸ்லிம் குடிமக்களுக்கு வழங்கப்படும் சொத்துடைமை வாய்ப்புகள், வணிக வாய்ப்புகள், தொழில்துறை வாய்ப்புகள் இந்தியர்களுக்கும் வழங்கப்பட வேண்டும்.

7. இந்தக் கோரிக்கைகள் மலேசிய இந்திய காங்கிரஸ் தலையீடு இன்றி நேரடியாக அம்னோவினால் செயலாக்கம் பெற வேண்டும்.

8. அரசுத் துறையில் நிர்வாக நிலைகளில் 20% வேலை வாய்ப்பு இந்தியர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.

9. இதற்கான செயல்திட்டங்களை அம்னோ அரசாங்கம் வெளிப்படையாகப் பொதுமக்களுக்குத் தெளிவு படுத்த வேண்டும்.

10. இந்தியர்களின் வழிபாட்டுத்தலங்களும் சுடுகாடுகளும் தகர்க்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும்.

11. காவல்துறையினரும் மாநில அதிகாரிகளும் வரம்பு மீறி நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது.

12. அரசாங்கம் விசாரணை கமிஷனை ஏற்படுத்தி 'கம்போங் மேடான்' கலவரத்தை விசாரிக்க வேண்டும்.

13. மிகவும் வறிய நிலையில் இருக்கும் மக்களுக்கு, கடந்த ஐம்பது ஆண்டுகளாக அரசமைப்பைத் தவறாகப் பயன்படுத்தியதற்குரிய இழப்பீட்டை அரசாங்கம் வழங்க வேண்டும்.

14. சொந்த வீடுகளின்றி வாழும் மலேசியர்களுக்கு அரசு வீடுகள் வழங்க வேண்டும்.

15. அம்னோ அரசின் அத்துமீறல்களை விசாரிக்க ஒரு கமிஷன் உருவாக்கப்பட வேண்டும்.

16. அரசு துறைகளிலும் தனியார் துறைகளிலும் இந்தியர்களுக்கும் இந்துக்களுக்கும் நிகழ்த்தப்படும் ஒடுக்குமுறைகள், பாகுபாடுகள் நிறுத்தப்பட வேண்டும்.

17. இந்தியர்கள் எதிர்நோக்கும் வாழ்வியல் சிக்கல்களைத் தீர்க்க குறிப்பிட்ட சட்டவிதிகள் இயற்றப்பட வேண்டும்.

18. நாடாளுமன்றத்தின் உயர் அரசியல் நிலையில் தங்களைப் பிரதிநிதிக்கும் 20 எதிர்க்கட்சி உறுப்பினர்களைத் தேர்வு செய்ய மலேசிய இந்தியர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும்.

பிரிட்டிஷ் அரசு மீது வழக்கு
HINDRAF 02.jpg

இந்நாட்டு இந்தியர்களின் இன்றைய நிலைக்குப் பொறுப்பேற்க வேண்டிய கடப்பாடு பிரிட்டிஷ் அரசுக்கு உள்ளது என 'ஹிண்ட்ராப்' குழு கருதியது. எனவே பிரிட்டிஷ் அரசிடம் இரண்டு லட்சம் கோடி பவுண்ட் கோரிக்கை வைத்து இலண்டன் உயர்நீதிமன்றத்தில் ஆகஸ்ட் 30, 2007-ல் சிவில் வழக்கை ஹிண்ட்ராப் பதிவு செய்தது.

வெளிநாட்டில் அமைதிக்கூட்டம்

இலண்டனில் உள்ள மலேசியத் தூதரகத்திற்கு வெளியே பி. வேதமூர்த்தி தலைமையில் அமைதிக்கூட்டம் நடத்தப்பட்டது. இலண்டன், நியூயார்க், வாஷிங்டன் முதலிய பகுதிகளில் அரசு சாரா அமைப்புகளுடன் அமெரிக்க வெளியுறவுத்துறையைச் சார்ந்த செனட்டர் பார்பரா பொக்ஸீடனும் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் சந்திப்புக்கூட்டம் நடத்தப்பட்டது.

ஒரு லட்சம் கையெழுத்து
HINDRAF 03.jpg

பிரிட்டிஷ் அரசின் பொறுப்பற்ற தனத்தால் மலேசிய இந்தியர்கள் பல்வேறு இன்னல்களை எதிர்நோக்கியுள்ளனர். இதன் தொடர்பாக ஒரு லட்சம் இந்தியர்களின் கையொப்பத்துடன் கூடிய மனுவை மலேசியாவில் உள்ள பிரிட்டிஷ் தூதரகத்தில் வழங்க ஹிண்ட்ராப் முடிவு செய்து கையெழுத்து பெறும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டது. இதற்காக நாடு முழுவதும் நடத்தப்பட்ட பொதுக்கூட்டங்களுக்கும் விளக்கக் கூட்டங்களுக்கும் மக்கள் அதிகம் திரண்டனர். தங்களின் நிலையை அறியவும் ஒன்று சேரவும் இக்கூட்டங்கள் வாய்ப்பை ஏற்படுத்தின.

கூட்டம் நடைபெற்ற நிரல்
  • ஜூலை 28, 2007 - சிலாங்கூர் சீன அசெம்பளி மண்டபம்
  • அக்டோபர் 12, 2007 - புத்ரா ஜெயா
  • அக்டோபர் 06, 2007 - தேசிய மாதிரி சீனப்பள்ளி மண்டபம், செமிஞ்சே
  • அக்டோபர் 20, 2007 - காந்தி மண்டபம், தெலுக் இந்தான்
  • அக்டோபர் 24, 2007 - தெலுக் இந்தான்
  • அக்டோபர் 24, 2007 - ச்சா ஆ, குளுவாங்
  • அக்டோபர் 27, 2007 - தாமான் அங்சா மாஸ், சிரம்பான்
  • அக்டோபர் 27, 2007 - தெலுக் புலாய் ஶ்ரீ சுப்பிரமணியம் கோயில், கிள்ளான்
  • அக்டோபர் 28,, 2007 - மிங் தேக் தேசிய மாதிரி சீனப்பள்ளி மண்டபம், சுங்கப்பட்டாணி
  • அக்டோபர் 28, 2007 - சிம்பாங் அம்பாட் ஶ்ரீ மீனாட்சி அம்மன் கோவில், பட்டர்வெர்த்
  • அக்டோபர் 28, 2007 - தேசிய நிலநிதிக் கூட்டுறவு மண்டபம், குளுவாங்
  • அக்டோபர் 28, 2007 - தேசிய நிலநிதிக் கூட்டுறவு மண்டபம், ச்சா ஆ
  • அக்டோபர் 28, 2007 - லுக்குட், போர்ட்டிக்சன்
  • நவம்பர் 11, 2007 - குவாலா குபு பாரு, தஞ்சோங் மாலிம்
  • நவம்பர் 16, 2007 - யூஹே உணவக மண்டபம், கோலசிலாங்கூர்
  • நவம்பர் 17, 2007 - பெய் உவா தேசிய மாதிரி சீனப்பள்ளி, சிரம்பான்
  • நவம்பர் 18, 2007 - ஶ்ரீ மாரியம்மன் கோயில் மண்டபம், பட்டர்வெர்த்
  • நவம்பர் 18, 2007 - சீனர் கிளப், கூலிம்
  • நவம்பர் 18, 2007 - கேர்ல் கைட்ஸ் மண்டபம், பிரிக்பீல்ஸ்ட், கோலாலம்பூர்
  • நவம்பர் 18, 2007 - சீன நகர மண்டபம், பினாங்கு

தடைகள்

பிரிட்டிஷ் தூதரகத்தில் மனுவை ஒப்படைக்க ஹிண்ட்ராப் அமைப்பினால் கோரப்பட்ட அனுமதியை வழங்க காவல்துறையினர் மறுத்தனர். திட்டமிட்டபடி நவம்பர் 11, 2007-ல் பேரணி கூட்டப்பட்டு பிரிட்டிஷ் தூதரகப் பொறுப்பாளரிடம் கொடுக்கப்படுமென ஹிண்ட்ராப் பொறுப்பாளர்கள் தெளிவு படுத்தினர். ஹிண்ட்ராப் பொறுப்பாளர்கள் மீது காவல்துறையினர் நீதிமன்றத் தடையுத்தரவு பெற்றனர். பேரணியில் பொதுமக்கள் கலந்துகொள்ளக்கூடாது என அரசு முன்னெச்சரிக்கை கொடுத்தது.

ஹிண்ட்ராப் பேரணி

ஹி.jpg

நவம்பர் 25, 2007-ல் நாடெங்கிலும் இருந்து கோலாலம்பூரில் இந்தியர்கள் கூடினர். 50,000க்கு குறையாத இந்தியர்கள் கோலாலம்பூரை மையமிட்டனர்.

காவல்துறை எதிர்ப்பு

பேரணியைத் தோல்வியுறச் செய்ய காவல்துறை கூட்டத்தார் மீது அமில நீரை பாய்ச்சியடித்தது. கண்ணீர் புகை குண்டுகளை வீசியது.

கைது

வழக்கறிஞர் பி. உதயகுமார், வழக்கறிஞர் எம். மனோகரன், வழக்கறிஞர் வீ. கணபதிராவ், வழக்கறிஞர் ஆர். கங்காதரன், முன்னால் வங்கி அதிகாரி கே. வசந்தகுமார் ஆகிய ஐந்து முக்கியப் பொறுப்பாளர்கள் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தைப்பிங் கமுண்டிங் தடுப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டனர். தொடர்ந்து வழக்கு நடைபெற்று 2013 – 2014 ஆகிய இரு ஆண்டுகள் தேச நிந்தனை குற்றத்துக்காக காஜாங் சிறைச்சாலையில் கழித்தனர்.

விளைவுகள்

  • மலேசிய அரசின் ஒடுக்குமுறை பல நாடுகளிலும் பேசப்பட்டது.
  • மலேசியா ஒற்றுமையான நாடு எனும் பிம்பம் பாதிக்கப்பட்டது.
  • மலேசியாவில் ஒரு சிறுபான்மை இனம் ஒடுக்குமுறைக்குள்ளாவது உரையாடலானது.

உசாத்துணை


✅Finalised Page