under review

ஹா.கி. வாலம்

From Tamil Wiki
ஹா.கி. வாலம்

ஹா.கி. வாலம் (ஹாலாஸ்யம் ஐயர் கிருஷ்ணசாமி வாலம்) (ஆகஸ்ட் 24, 1922 - ஆகஸ்ட் 11, 1976) கவிஞர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், இதழாளர். தமிழிலிருந்து சம்ஸ்கிருதம், ஹிந்தி, ஆங்கிலத்திற்கும், சம்ஸ்கிருதம், ஹிந்தியிலிருந்து தமிழுக்கும் பல நூல்களை மொழிபெயர்த்தார். ’மோகனா’ என்ற ஆன்மிக இதழைத் தொடங்கி நடத்தினார். தனது இலக்கியப் பணிக்காகப் பல்வேறு விருதுகளைப் பெற்றார்.

பிறப்பு, கல்வி

ஹாலாஸ்யம் ஐயர் கிருஷ்ணசாமி வாலம் என்னும் ஹா.கி. வாலம், ஆகஸ்ட் 24, 1922 அன்று, திருச்சியில், தேசபக்தரும், வழக்குரைஞருமான என். ஹாலாஸ்யம் ஐயர் - சுயம்பிரகாசம் இணையருக்குப் பிறந்தார். ஏழாம் வகுப்பு வரை படித்தார். திருமணத்திற்குப் பின் பஞ்சாப் பல்கலையில் தத்துவம் மற்றும் வேதாந்தம் பயின்று பட்டம் பெற்றார். ஹிந்தியில் ‘விஷாரத்' பட்டமும், சம்ஸ்கிருதத்தில் ‘பிரபாகர்’ பட்டமும் பெற்றார்.

தனி வாழ்க்கை

ஹா.கி. வாலம் தனது 14-ம் வயதில், எஞ்சினியர் பி.எஸ். கிருஷ்ணசாமியைத் திருமணம் செய்துகொண்டார். கணவர், பி.எஸ். கிருஷ்ணசாமி எழுத்தாளர். கவிஞர். ‘கடல் துமி’ என்ற தலைப்பில் ஒரு கவிதைத் தொகுப்பை எழுதினார். ’ Sea Drops' என்ற தலைப்பில் அது ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியானது.

ஹா.கி. வாலம் நூல்கள்

இலக்கிய வாழ்க்கை

கவிதை

ஹா.கி. வாலம் சிறு வயது முதலே கவிதைகளால் ஈர்க்கப்பட்டார். பாரதியாரின் கவிதைகள் இவரை மிகவும் கவர்ந்தன. 1946-ல், மீரட்டில் வசித்தபோது நாடெங்கும் ஏற்பட்ட ஹிந்து- முஸ்லிம் கலவரங்களால் மனம் பாதிக்கப்பட்டார். தனது எண்ணங்களைச் சிறு சிறு கவிதைகளாக எழுதினார். தொடர்ந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகளை எழுதினார். அவற்றில் பெரும்பாலானவை தேசியத்தையும், தெய்வீகத்தையும் அடிப்படையாகக் கொண்டவை. வாலத்தின் கவிதைகள், கணவரது முயற்சியால் நூல்களாக வெளிவந்தன. 20-க்கும் மேற்பட்ட கவிதை நூல்ளை வெளியிட்டார் வாலம். சந்திரசேகரேந்திர சரஸ்வதி, சுத்தானந்த பாரதி டி.கே. சிதம்பரநாத முதலியார் உள்ளிட்ட பலர் வாலத்தின் கவிதைகளைப் பாராட்டி, ஊக்குவித்தனர்.

சிறார் இலக்கியம்

ஹா.கி. வாலம், தான் நடத்தி வந்த ‘மோகனா’ என்ற இதழில் சிறுவர்களுக்காகப் பல கதைகளை, தொடர்களை எழுதினார் ‘அத்தை கதை சொல்கிறாள்’ என்ற தலைப்பில் ஹாலம் எழுதிய சிறார் தொடர், பின்னர் அதே பெயரில் நூலாக வெளிவந்தது.

மொழிபெயர்ப்பு

ஆன்மிக ஆர்வம் கொண்டிருந்த ஹாலம், லலிதா சஹஸ்ரநாமம் நூலை, தமிழில், ‘வடிவழகி திரு ஆயிரம்’ என்றும், ஆதிசங்கரரின் ‘சௌந்தர்ய லஹரி’யை, ’அழகின் அலைகள்’ என்ற தலைப்பிலும், ஸ்ரீமத் பாகவதத்தை ‘மோகன லீலை’ என்ற தலைப்பிலும் கவிதை நூல்களாகப் படைத்தார். பஜகோவிந்தம், வேங்கடேச சுப்ரபாதம், விஷ்ணு சகஸ்ரநாமம் போன்ற துதிகளைத் தமிழில் மொழிபெயர்த்தார். பாரதியின் குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம் போன்றவற்றை ஹிந்தியிலும் ஆங்கிலத்திலும் மொழி பெயர்த்தார். தமிழிலிருந்து சம்ஸ்கிருதம், ஹிந்தி, ஆங்கிலத்திற்கும், சம்ஸ்கிருதம், ஹிந்தியிலிருந்து தமிழுக்கும் பல நூல்களை மொழிபெயர்த்தார்.

மோகனா இதழ்

இதழியல்

ஹா.கி. வாலம், 1970 முதல் ‘மோகனா’ என்னும் ஆன்மிக மாத இதழைத் தொடங்கி நடத்தினார்.

பதிப்பு

ஹா.கி. வாலம், தனது நூல்களைப் பதிப்பித்து வெளியிடுவதற்காக மோகனா டிரஸ்ட் பதிப்பகம் என்ற பதிப்பகத்தைத் தொடங்கி நடத்தினார். தனது நூல்கள் பலவற்றையும், ‘மோகனா’ இதழையும் அப்பதிப்பகம் மூலம் அச்சிட்டு வெளியிட்டார்.

அமைப்புப் பணிகள்

கணவரின் பணி நிமித்தம் தன் வாழ்நாளின் பெரும் பகுதியை வட நாட்டில் கழித்த ஹா.கி. வாலம், அங்குள்ள தமிழ் அமைப்புகளுடன் இணைந்து பல்வேறு தமிழ் இலக்கியப் பணிகளை முன்னெடுத்தார். மகாராஷ்டிராவில் உள்ள டியோலாலி தென்னிந்திய சங்கத்தின் தலைவியாகப் பணிபுரிந்தார். பூனா கலைக் கழகத்தின் தலைவியாகச் செயல்பட்டார். பூனா பண்டர்கார் ஆராய்ச்சி மையத்தின் உறுப்பினராகப் பணிபுரிந்தார். P.E.N. உறுப்பினர். தமிழ் எழுத்தாளர் சங்க உறுப்பினர்.

விருதுகள்

  • வித்யா ரத்னம்
  • வித்யா விசாரதா
  • பிரவசன சிரோமணி
  • பிரசங்க ரத்னாகரம்
  • அருளரசி
  • மும்மொழி வித்தகி
  • மங்கையர் திலகம்
  • கவிக்கடல்
  • கவிதா ரத்னம்
  • விக்ஞான சிந்தாமணி
  • பாஷண கேசரி
  • இலக்கிய எரிமலை

மறைவு

ஹா.கி. வாலம், ஆகஸ்ட் 11, 1976-ல். தனது 54-ம் வயதில் காலமானார்.

இலக்கிய இடம்

ஹா.கி. வாலம் அடிப்படையில் கவிஞர். மொழிபெயர்ப்பாளர். நவீன இலக்கியப் பரிச்சயம் கொண்டவர். ஆங்கில இலக்கியம் கற்றவர். ஆனாலும், மரபின் வழியே இயங்கினார். வாலம், ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ‘The Vow of Panchali' நூல், அதன் சிறப்பான மொழியாக்கத்திற்காக அக்கால அறிஞர்கள் பலரது பாராட்டைப் பெற்றது. தேசியமும், தெய்வீகமும் கொண்ட பல கவிதைகளை எழுதியவராக, தமிழில் பல துதி நூல்களை மொழிபெயர்த்தளித்தவராக ஹா.கி. வாலம் மதிப்பிடப்படுகிறார்.

நூல்கள்

கவிதை/கட்டுரை நூல்கள்
  • வடிவழகி திரு ஆயிரம் (லலிதா சஹஸ்ரநாமத் தமிழாக்கம்)
  • திருமால் திரு ஆயிரம் (விஷ்ணு சகஸ்ரநாமத் தமிழாக்கம்)
  • அழகின் அலைகள் (ஆதி சங்கரரின் சௌந்தர்ய லஹரி தமிழாக்கம்)
  • மோகன அலை (சிவானந்த லஹரி தமிழாக்கம்)
  • மோகன வாணி (பால பகவத் கீதை)
  • மோகன அமுதம் (லீலா சுகர் – கிருஷ்ண கர்ணாம்ருதத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு)
  • இராமாயண ரத்னாகரம் (வால்மீகி, கம்பர், துளஸிதாசர் இராமாயண ஒப்பீட்டு ஆய்வு நூல்)
  • பாரத சுப்ரபாவம் (பாரதம் ஆயிரம்)
  • பஜகோவிந்தம் (தமிழாக்கம்)
  • வேங்கடேச சுப்ரபாதம் (தமிழாக்கம்)
  • தேவி மஹாத்மியம் (தமிழாக்கம்)
  • மோகன முரளி
  • மோகன லீலை
  • காந்தியம் கமழுகின்ற மோகன முறுவல்
  • திருவேங்கடவன் திருமலைப் பாடல்கள்
  • நவரத்தினங்கள் பதிக்கப்பட்ட நல்லாரம்
  • வாலம் ஆயிரம் என்னும் மோகன மாமலை
  • மன அமைதி தரும் பாராயணத் தமிழ் மந்திரங்கள்
  • அத்தை கதை சொல்கிறாள்
  • அத்தை சொன்ன நல்ல கதைகள்
  • கற்புக்கரசிகளின் சிறப்பு
ஆங்கில நூல்கள்
  • The Vow of Panchali
  • Kuyil Pattu
ஹிந்தி நூல்கள்
  • பஜகோவிந்தம் (சம்ஸ்கிருதம் - ஹிந்தி மொழிபெயர்ப்பு)
  • ஸ்ரீ வேங்கடேச சுப்ரபாதம் (சம்ஸ்கிருதம் - ஹிந்தி மொழிபெயர்ப்பு)
  • மோஹன லதிகா (ஆண்டாளின் வாழ்க்கை வரலாறு)
சம்ஸ்கிருத நூல்
  • மோஹன மாதுர்யம்

உசாத்துணை


✅Finalised Page