under review

வே. கலைமணி

From Tamil Wiki
பேராசிரியர் வே. கலைமணி (படம் நன்றி: யாதவர் முகநூல் மீடியா)

வே. கலைமணி (1929-2012) கவிஞர், எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், நாடக ஆசிரியர், திரைக்கதை, வசன எழுத்தாளர், நடிகர். சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றினார். தமிழ்நாடு யாதவ மகாசபையின் கொள்கைப் பரப்புச் செயலாளராகப் பணிபுரிந்தார். ’நமது யாதவம்’ என்ற இதழைத் தொடங்கி நடத்தினார்.

பிறப்பு, கல்வி

வே. கலைமணி, 1929-ல், இன்றைய விழுப்புரம் மாவட்டத்தில் (அன்றைய தென்னாற்க்காடு மாவட்டம்) உள்ள அரியலூரில், வேலாயுதம் பிள்ளை - தாயாரம்மாள் இணையருக்குப் பிறந்தார். இளம் வயதிலேயே பெற்றோரை இழந்தார். உறவினர்கள் உதவியுடன் தொடக்கக் கல்வி முதல் இடைநிலைக் கல்வி வரை பல ஊர்களில் கற்றார். பள்ளி இறுதி வகுப்பை சிதம்பரத்தில் உள்ள ராமசாமிச் செட்டியார் பள்ளியில் படித்தார். சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இண்டர்மீடியட் கற்றார். சென்னை மாநிலக் கல்லூரியில் பயின்று பி.ஏ. ஆனர்ஸ் பட்டம் பெற்றார். தமிழ் இலக்கியத்தில் முதுகலைப்பட்டம் பெற்றார்.

தனி வாழ்க்கை

வே. கலைமணி, ஜூபிடர் திரைப்பட நிறுவனத்தில் பணியாற்றினார். தாம்பரம் கிறித்தவக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார். வே. கலைமணி மணமானவர். இவருக்கு மூன்று மகன்கள்; இரண்டு பெண்கள்.

இலக்கிய வாழ்க்கை

வே. கலைமணி, கல்லூரியில் படிக்கும்போதே இதழ்களில் சிறுகதைகள் எழுதினார். சுதேசமித்திரன், பொன்னி, அமுதசுரபி, கதிரவன் போன்ற இதழ்களில் அவை வெளியாகின. சிறுகதைகள் பின்னர் தொகுக்கப்பட்டு நூல்களாகவும் வெளிவந்தன. சிறுகதைகள், நாவல், நாடகம், கட்டுரை நூல்கள், பயண இலக்கிய நூல்கள் எனப் பொது வாசிப்புக்குரிய பல நூல்களை எழுதினார். ஆய்வு நூல்கள் பலவற்றை எழுதி வெளியிட்டார். சிறார்களுக்கான பல படைப்புகளை ‘அரவிந்தன்’ என்ற புனை பெயரில் எழுதினார்.

இதழியல்

வே. கலைமணி, 1980-ல், 'நமது யாதவம்' என்ற இதழைத் தொடங்கி, 25 ஆண்டுகளுக்கும் மேல் அதன் ஆசிரியராகப் பணியாற்றினார். அதன் ஆங்கிலப் பதிப்பையும் வெளியிட்டார். ‘எங்கள் கண்மணி’ என்ற இதழின் ஆசிரியராகப் பணிபுரிந்தார். ’உரிமை முரசு’ என்ற இதழின் ஆசிரியராகப் பணியாற்றினார். அவ்விதழில் பல கட்டுரைகளை, மதிப்புரைகளை ’கவிஞர் பம்பாய் பார்த்திபன்’ என்ற புனை பெயரில் எழுதினார்.

நாடகம்

வே. கலைமணி, 25-க்கும் மேற்பட்ட முழு நாடகங்களையும், சில ஓரங்க நாடகங்களையும் எழுதினார். சில நாடகங்களைத் தானே இயக்கினார். சிலவற்றை அரங்கேற்றினார். சில நாடகங்களில் நடித்தார். கிறிஸ்தவக் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றியபோது, ஆண்டுதோறும், மாணவர்களைக் கொண்டு புதிய நாடகம் ஒன்றை அரங்கேற்றுவதைத் தனது வழக்கமாக வைத்திருந்தார். கலைமணியின் நாடகங்களில் சில நாடகப் போட்டியில் பங்குபெற்று பரிசுகள் பெற்றன. கலைமணியின் ’சான்றோர் பழிக்கும் வினை’ நாடகம் சிறந்த நாடகமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. கலைமணியின் நாடகங்களில் சில நூல்களாக வெளியாகின.

திரை வாழ்க்கை

வே. கலைமணி, ஜூபிடர் திரைப்பட நிறுவனத்தின் கதை இலாகாவில் கதை, வசன ஆசிரியராகப் பணியாற்றினார். ‘புயல்’, ‘கைதி’, ‘அருமை மகள் அபிராமி’ போன்ற படங்களுக்கு வசனம் எழுதினார். ‘மனோகரா’, ‘மர்மயோகி’ போன்ற படங்களின் சில காட்சிகளுக்கு வசனம் எழுதினார். பல படங்களின் கதை விவாதங்களில் கலந்துகொண்டு, திரைக்கதை, வசனங்களைச் செழுமைப்படுத்தினார்.

அமைப்புச் செயல்பாடுகள்

வே. கலைமணி, அமெரிக்காவின் மேரிலாண்ட் பல்கலைக்கழகத்தில் நிகழ்ந்த தமிழ் மாநாட்டில் பங்கேற்றார். அமெரிக்காவின் கொலம்பியா, அலெக்ஸாண்ட்ரியா, ஹாரிஸ்பர்க் போன்ற ஊர்களில் உள்ள தமிழ்ச் சங்கங்கள் நிகழ்த்திய கூட்டங்களில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். தமிழ்நாட்டின் சமூக மேம்பாட்டு அமைப்புகளுடன் இணைந்து பல நற்பணிகளை மேற்கொண்டார்.

பொறுப்புகள்

  • தமிழ்நாடு யாதவ மகாசபையின் கொள்கை பரப்புச் செயலாளர்
  • அகில இந்திய யாதவ மகாசபையின் செயற்குழு உறுப்பினர்
  • தமிழ்நாடு யாதவ மகா சபையின் பொதுச் செயலாளர்
  • யாதவர் பண்பாட்டுக் கழகத்தின் செயற் குழு உறுப்பினர்
  • யாதவ அறக்கட்டளையின் அறங்காவலர்களில் ஒருவர்
  • மொழியாசிரியர் சங்கச் செயலாளர்

மறைவு

வே. கலைமணி, 2012-ல், தனது 83-ம் வயதில் காலமானார்.

மதிப்பீடு

வே. கலைமணி, பொது வாசிப்புக்குரிய பல நூல்களை எழுதினார். சமூக நற்பணிகள் பலவற்றில் ஈடுபட்டார். தமிழ்நாடு யாதவ மகாசபையின் செயல்பாடுகளில் முக்கியப் பங்கு வகித்தார். இலக்கியவாதியாகவும், எழுத்தாளர்களாகவும் செயல்பட்ட அ.சீனிவாசராகவன், டாக்டர் மு.வரதராசன், சி. இலக்குவனார் போன்றோர் வரிசையில் இடம்பெறத்தக்கவராக வே. கலைமணி மதிப்பிடப்படுகிறார்.

நூல்கள்

சிறார் நூல்
  • சினிமாவில் ரங்கன் - சிறுவர் நூல்
  • மாணவன்
  • சி.ஐ.டி.சித்ரா
நாவல்கள்
  • பெண்பிறவி
  • மனிதனின் மறுபக்கம்
  • மனச்சுமை
குறுநாவல்
  • வஞ்சகக் கூட்டம் வாழ்கிறது
சிறுகதைத் தொகுப்புகள்
  • அன்னைபூமி
  • அரவிந்தன் கதைகள்
நாடகம்
  • சான்றோர் பழிக்கும் வினை
  • நகைச்சுவை நாடகங்கள் நான்கு
  • மக்கள் தலைவன்
  • காதல் பித்தன்
  • ஒளரங்கசீப்பின் வீழ்ச்சி
  • கரிகால் வளவன்
  • கண்ணனின் கபட நாடகம்
  • நாட்டுக்கூனன்
  • வீரமார்த்தாண்டன்
கட்டுரை நூல்கள்
  • உண்ணும் உணவில் ஓர் ஒழுங்குமுறை
  • பெண்களை நம்பலாமா?
  • காதற் கடிதங்கள்
  • நல்லதீர்ப்பு வழங்கிய நீதியரசர்கள்
வரலாற்று நூல்கள்
  • விடுதலைக்கு வித்திட்ட வீரர் அழகுமுத்துக்கோன்
  • நடிகவேள் எம்.ஆர்.இராதா - வாழ்க்கைக்குறிப்புகள்
  • வேளிர் வரலாறு
பயண நூல்கள்
  • அமெரிக்க மண்ணில் ஐந்து மாதங்கள்
  • எனது இலங்கைப் பயணம்
  • புத்தன் பிறந்த பொன்னாடு
ஆய்வு நூல்கள்
  • தமிழில் சமூக நாடகம்-தோற்றமும் வளர்ச்சியும்
  • தமிழில் சமூக நாடகம் வகையும்-தொகையும்
  • விடுதலை வேள்வித்தீயில்...
இலக்கிய நூல்கள்
  • இலக்கியம் காட்டும் இணையற்ற நண்பர்கள்

உசாத்துணை


✅Finalised Page