under review

வேலுச்சாமிப்பிள்ளை

From Tamil Wiki
வெண்பாப்புலி வேலுச்சாமிப்பிள்ளை (நன்றி: தமிழம்.நெட்)

வேலுச்சாமிப்பிள்ளை (1854 - மே 11, 1926) (மற்ற பெயர்கள்: வெண்பாப்புலி வேலுச்சாமிப்பிள்ளை) தமிழ்ப்புலவர், வெண்பா செய்யுள்களை விரைவாகவும், இலக்கண சுத்தமாகவும் இயற்றுவதில் தேர்ச்சி பெற்றிருந்தார்.

பிறப்பு, கல்வி

இவர் தமிழ் மூவரில் ஒருவரான தில்லைவிடங்கன் மாரிமுத்துப் பிள்ளை வழிவந்த சுப்பிரமணிய பிள்ளை -சுந்தரம்மாள் இணையருக்கு 1854-ம் ஆண்டு பிறந்தார்.

இவர் சென்னை மில்லர் கல்லூரியில் ஆங்கிலம் பயின்றார், அங்கு தமிழ்ப் பேராசிரியராக இருந்த இவருடைய உறவினர் சின்னசாமிப் பிள்ளை என்பவரிடம் தமிழ் கற்றார். அதன் பின் அஷ்டாவதானம் சபாபதி முதலியாரிடம் மூன்று ஆண்டுகள் தமிழ் நூல்களை பாடங்கேட்டார். இதற்குப்பிறகு அஷ்டாவதனம் சபாபதி முதலியாரின் உதவியுடன் திருவாவடுதுறை மீனாட்சி சுந்தரம் பிள்ளையிடம் ஐந்து ஆண்டுகள் தமிழ் பயின்றார். இவர் உ.வே.சாமிநாதையரின் வகுப்புத்தோழர். திருவாவடுதுறை மீனாட்சி சுந்தரம் பிள்ளை மறைந்த பின் சுப்பிரமணிய தேசிகரிடம் சில தமிழ் நூல்களைப் பாடம் கேட்டார்.

தமிழின் மிகவும் சிக்கலான வெண்பா செய்யுள் வகைகளை மிக எளிதாகவும், விரைவாகவும் பாடும் திறம் பெற்றிருந்தார். இவரின் திறமையைப் பாராட்டி திருவாவடுதுறை மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள் வெண்பாப்புலி என்ற சிறப்புப் பெயரை அளித்தார்.

தனிவாழ்க்கை

இவர் சென்னைக்கு குடிபெயர்ந்து பல மாணவர்களுக்கு தமிழ் நூல்களை பாடம் சொல்ல ஆரம்பித்து, பின் காஞ்சிபுரம் பச்சையப்பன் உயர்நிலைப்பள்ளியில் 1890-ம் ஆண்டு தலைமைத் தமிழாசிரியராகப் பணியில் அமர்ந்தார், 1920-ம் ஆண்டு வரை 30 ஆண்டுகள் இங்கு பணியாற்றினார் என்று சொல்லப்படுகிறது.

மறைவு

இவர் மே 11, 1926-ல் தமது 72-ஆவது வயதில் மறைந்தார்.

படைப்புகள்

இவர், கந்தபுராணத்தை 5665 வெண்பாக்களில் பாடியுள்ளார். இந்நூலை மே 22, 1907- ல் காஞ்சி குமரகோட்டத்தில் அரங்கேற்றினார்.

இவர் தேவாரம் பாடப்பெற்ற 32 சிவப்பதிகளில் ஒன்றான, காஞ்சிபுரத்தின் அருகே உள்ள திருக்கச்சூர் ஆலக்கோயில் என்று அழைக்கப்படும் கச்சபேஸ்வரர் கோவிலுக்கு திருக்கச்சூர் ஆலக்கோயில் புராணம் என்ற நூலை இயற்றி ஏப்ரல் 30, 1923-ம் ஆண்டு அரங்கேற்றம் செய்தார்.

படைப்புகள் பட்டியல்
  • அநீதி நாடகம்
  • ஐயனார் நொண்டி
  • கந்தபுராண வெண்பா
  • சிதம்பரேசுவரர் விறலிவிடு தூது
  • திருக்கச்சூர் ஆலக்கோயில் புராணம்
  • திருவேட்டக்குடிப் புராணம்
  • தில்லைவிடங்கன் நிரோட்டக யமக அந்தாதி
  • தில்லைவிடங்கன் புராணம்
  • தேவார சிவதல புராணம்
  • தேவார வைப்புத்தலக் கட்டளைக் கலித்துறை
  • புலியூர் வெண்பா உரை
  • வருணாபுரிக் குறவஞ்சி

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 19-Dec-2022, 19:05:03 IST